குருவாயூர் தரிசனம்
ரூமில் செக்கின் பண்ணிட்டு 1 மணிக்கு அலாரம் வெச்சுண்டு படுத்தால், ஒரு சொக்கு சொக்குவதற்குள் அது 1 மணின்னு அலறித்து.தலையில பச்சை தண்ணிய விட்டுண்டு அவசர அவசரமா ஒரு குளியல். சீல் ஆயிருந்த கண் மைக்கோசம் கூட திறக்க மறுத்தது. மையிட்டுண்டு கண்ணாடி பார்த்தா, நம்ம மனீஷா கொய்ராலா மாதிரி தக்குனூண்டா இருக்கு கண்ணு. நம்ம எதுக்கு வந்துருக்கோம்? படுத்து தூங்கறதுக்கான்னு என்னை நானே அதட்டி சரிபண்ணிண்டேன். ஒரு மாதிரி ரெண்டு பேரும் குளிச்சு ரூமைப்பூட்டிண்டு வெளீல வந்தப்போ மணி அதிகாலை 1.30. இவ்வளோ சீக்கிரம் யார் எழுந்துக்கபோறான்னு ஒருமாதிரி செருக்கோட கோவிலை நோக்கிபோன எனக்கு கண்ணபிரான் அதிகாலை பல்பு அதிக வாட்சில் குடுத்தான்.
கடல் மாதிரி சபரிமலை பக்தர்கள் கூட்டம். பாவம், நாங்கள் ஹோட்டல் செக்கின் பண்ணினப்போவே இவாள்ளாம் இங்க கியூவில வந்து நின்னுண்டு இருப்பா போல இருக்கு. என்ன ஒண்ணு, ஒரு சாமி கூட குளிக்கலை.இப்போ குருவாயூரிலும் செல்போன்,ஹாண்ட்பேக் எல்லாம் எடுத்துண்டு கோவிலுக்குள் போக முடியாதாம்.திருட்டு ஜாஸ்தியாம். நிராயுதபாணியாக ரெண்டுபேரும் கியூவில் போய் நின்னப்போ இவர் என்னை லேடீஸ் தனி Q இருக்கே அதுல போய்க்கோ என்றார். அதுல பார்த்தப்போ 30 -40 வயதான பெண்கள் இருந்தா. எனக்கு தான் இந்த சபரிமலைக்கூட்டத்தை பார்த்து ஒரே பயம். கையில போன் கூட இல்ல. வேண்டாம்னா, நான் உங்க கூடவே வந்துக்கறேன்னேன். முதல் மூவாயிரம் சாமிகளில் நான் மட்டும் தான் பெண் போல இருக்கு. நிக்கறதுக்கே ஸ்ரமமாஇருந்தது. பின்னே, சாமியெல்லாம் கீழே உக்காந்தாச்சே. சொன்னாலும் புரியலை. ஒரு மாதிரி மாங்காடு காமாக்ஷியம்மன் மாதிரி ஒத்தைக்காலில் நின்னு பாலன்ஸ் பண்ணிண்டு கண்ணனின் நிர்மால்ய தரிசனத்திற்கு காத்திருந்தோம். ல சாமிகள் வெளிப்புறத்தில் இருந்து கியூவுக்குள் குதிச்சுண்டிருந்தா. எனக்கு தான் எங்கே போனாலும் பொலம்பறதுக்கு ஒரு விஷயம் கெடைச்சுடுமே. சே, தப்பு பண்ணிட்டோம், பெண்கள் கியூவில் நிம்மதியா நிக்கறதை விட்டுட்டு இப்படி பழம் சாப்படணுமான்னு யோசிச்சுண்டு இருந்தேன். இப்போ போய் நின்னா என்னன்னு திரும்பிப்பார்த்ததுதான் குறை, ஆடிப்போயிட்டேன். எங்களுக்கு அப்பால் ஒரு 2000 சாமிகள் தள்ளிண்டு நிக்கறாங்க. கஷ்டம். சரி, இது ஒரு பாடம்னு மனசைதேத்திண்டேன்.
சுமார் 3.10க்கு நடை திறக்கப்பட்டதும் சர சரன்னு கியூ நகர்ந்தது. சில சமயம் திருப்பதி மாதிரி ஓடினோம். ஒருவழியா கோவில் பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சோம்.ஏதோ ஒரு தமிழ்ச்சாமி புலம்பிண்டு வந்தார். ”ரொம்ப மோசஞ்சாமி, எப்படி தள்றாங்க பாருங்க”. கோவில்கள்ல தள்ளறது ஒரு டிசிப்ளின். இதுக்கு போயி அலட்டிக்கலாமான்னு நினைச்சுண்டேன். எதிரில் ஒவர்பிரிஜ் இருந்தது. இதன் மேல் ஏறி இறங்கினால் உள்பிரகார வாசலில் போய்விடலாம். பிரிஜ் பூராவும் புலம்பல் விடவில்லை. பொறுமை என்னை விட்டு மெதுவாக கிளம்பிக்கொண்டு இருந்தது.அதிகாலை 3.45மணி. இது விடாமல் மத்த சாமிகளை குறைசொல்லிக்கொண்டு வந்தது. பிரிஜ் ஏறி, இறங்கி தோ, வந்தாச்சு, உள் பிரகார வாசலிலும் அதே புலம்பல் இப்போது இன்னும் பலமாக. விஜயசாந்தி மாதிரி அது கன்னத்துல ஒரு பளார் விடலாமான்னு தோணித்து. நம்ம வாய்ல இருந்து வர்ற சொற்கள் மத்தவாளை எப்படி பாதிக்கறதுன்னு கொஞ்சம் யோசிக்கணும் இல்லையா? எனக்கு நற நறன்னு எரிச்சல். க்ருஷ்ணா, நாராயணா, குறையொன்றுமில்லையப்பான்னு நிம்மதியா மனசு பிரார்த்திக்க முயற்சி பண்ணித்து. yes, here we are.. உள் பிரகாரம். அழகான குட்டி கிருஷ்ணன் மேல் தயிரை அபிஷேகம் பண்ணிக்கொண்டு இருந்தாங்க. முடிஞ்ச வரை ஓம் நமோ நாராயணான்னு சொல்லிண்டு இருந்தேன். ”ஏஞ்சாமீ இப்புடி புடிச்சு தள்றீங்க” மட்டும் தரிசனம் முடிந்து பிரத்க்ஷிண்ம் வைக்கும்போதும் கேட்டுக்கொண்டு தான் இருந்தது. அந்த புலம்பல் சாமி தரிசனம் பண்ணித்தா தெரியலை.ஸ்வாமி எதிரில் இருக்கும்போது கூட பின்னாடி திரும்பி பெனாத்திக்கொண்டு இருந்திருக்கும்.
கர்ப்பகிரஹத்தைச்சுற்றி கேரள மியூரல் பெயிண்டிங்ஸ். அனந்தசயனம் என்னை ரொம்பவே கவர்ந்தது. தரிசனம் முடிஞ்சு வெண்டிங் மெஷினில் ஒரு கண்றாவியான காப்பி குடிச்சு திருப்பியும் ரூம்ல போய் அனந்தசயனம் பண்ணினோம். 7 மணிக்கு மீண்டும் கிளம்பி மம்மியூர் மஹாதேவ ஸ்தலத்திற்கு போனோம். அங்கே 11 நாள் அதிருத்ர மஹா யக்ஞம் நடக்கறதாம். ரொம்ப விசேஷமாம். நல்ல வேளை இந்த அய்யப்ப சேவார்த்திகளுக்கு இந்தக்கோவிலைப்பத்தி தெரியலை போலிருக்கு.இல்லாட்டி இங்கேயும் அடிதடி சண்டை கலாட்டா தான்.
எதிரில் இருந்த பாட்டுக்கடைக்கு போய்,சும்மாங்காச்சுக்கும் சித்ரா அம்மையார் பாடிய ஸ்ரீமன்நாராயணீயம் இருக்கான்னு கேட்டு வெச்சேன். எங்களுக்கு தெரியாதா, சித்ரா ஒரு ரெண்டு தசகமும் ராசக்கிரீடையும் தான் பாடி இருக்காங்கன்னு, ஹம்மா ல கேட்டுட்டோம்ல? கோவில் பக்கத்துல இருக்கற கடைகளுக்குள்ள போகாட்டி சாமிக்குத்தம் ஆயிடுமோல்யோ?
மீண்டும் நடந்து கோவில் வந்து சேர்ந்தோம்.” நான் கோவில் பிரகாரத்துல போய் உக்காந்து ஜபிச்சுக்கரேன், நீ வேணும்னா இன்னொறுவாட்டி தரிசனத்துக்கு போயிட்டு வா”ன்னு இவர் சொல்லிட்டார். எனக்கு ஒரே குஷி. லேடீஸ் கியூவில போய் கடைசியில அப்பெண்டு ஆயிண்டேன். இதில் பல வயது பெண்கள். சிலர் நிக்க முடியாமல் ஜகா வாங்கினார்கள். பலர் புலம்பினார்கள். என்னாலான உபகாரம்,நிற்கும் பெண்களை ஊக்குவிக்கற நோக்கத்தோடு, நிர்மால்யத்தில் பெண்களை தான் முதலில் விட்டதாக வெளிப்பிரகாரத்தில் நின்னுண்டு தைரியமா ஒரு திரி கொளுத்திப்போட்டேன்.(நிர்மால்யத்துல யாரை விட்டாங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாது. ஸ்வாமி கார்யம், பொய்மையும் வாய்மையிடத்துன்னு நம்ம காட் ஸ்காலர்(தெய்வப்புலவர்) சொல்லி இருக்கார்ல? அதான் அப்படி சொன்னேன்) மலையாளிப்பெண்கள் பலருக்கு நான் மைக்கில்லாமல் சொன்ன தமிழ் வரி நன்னாவே புரிஞ்சதுபோல, கிளம்ப நினைச்ச பெண்கள் கண்கள்ல பளிச் பிரகாசம். காலை நிர்மால்யத்தில் நின்னு எனக்கு நல்ல பொறுமை கிடைச்சிருந்தது. சுமார் 1.20 மணி நேரம் ஆச்சு. திருப்பதி எல்லாம் ஒப்பிட்டு பாக்கறச்சே இதெல்லாம் ஜுஜுபீ. இளம் பெண்களை எல்லாம் விட்டுட்டு, (என் வயசையொத்த) பாட்டிமார் கூட போய் நின்னுண்டேன். இஸ்கான் புண்ணியத்தில் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபிச்சுண்டே இருக்க கியூ மெதுவா நகர்ந்தது. 3 பாட்சா விட்டாங்க. இப்போ நங்க நின்ன இடத்துல கொஞ்சம் distraction ஜாஸ்தி. வித விதமான வஸ்த்ரகலா புடவைகள், வண்ணமயமான சுடிதார்கள், கண்ணைக்கவரும் நகைகள் எல்லாம் போட்டுக்கொண்டு வெள்ளை முதுகு பெண்கள் பிரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.
இதையெல்லாம் விட என்னை அதிகமா அட்ராக்ட் பண்ணினது ஆறிலிருந்து 12 மாதக்குழந்தைகள் தான். குருவாயூர் கோவிலில் அன்னப்பிராஸம் ரொம்பப்பிரபலம். அழகா குட்டியூண்டு முண்டு கட்டி விட்டு, கழுத்துல நெத்தீல சந்தனம் இட்டுண்ட குழந்தைகள் எல்லாம் அவ்வளோ அழகு.அப்படியே அள்ளிக்கொஞ்ச ஆசையா இருந்தது. இந்த stage ரொம்ப அழகா இருக்கும். portable and handy. அருண் வருண் இப்படி அவசர அவசரமா வளரணுமா? கொஞ்சம் நிதானிச்சுக்க கூடாதா?
கியூ இப்போ அடுத்த நிலைக்கு போயாச்சு. நிலைப்படி கிட்டக்க நிறுத்தப்பட்டோம். மனசு தெளிவா இருந்தது. ஜெனரல் கியூவின் வயத்தெரிச்சலைக்கொட்டிண்டு, எங்களை உள்ளுக்கு விட்டப்போ, எல்லாரும் ஓம் நமோ நாராயணான்னு ஒரே குரல்ல சொல்லிண்டே நுழைஞ்சோம். கண்கள்ல நீர் மல்க அந்த குட்டி கிருஷ்ணனின் உருவத்த மனசுல பதிய வெச்சுண்டேன். அந்த உணர்வை என்னன்னு சொல்ல தெரியல. ஒரு வேளை அது என் கூட இருந்த அந்த மூதாட்டிகளின் உண்மையான உருக்கமான பக்தியின் synergy யாகக்கூட இருக்கும். இதே நடையில நிறைய வாட்டி வந்து இதே கண்ணனை பாத்து இருக்கேனே, அப்பெல்லாம் இல்லாத ஒரு மகோன்னத அனுபவம் எனக்கு இந்த தடவை கிடைச்சது. வழக்கமாக வைரல் இன்ஃபெக்ஷன் போன்ற கெட்ட இன்ஃபெக்ஷன் மட்டும் தொற்றும் எனக்கு இந்த வாட்டி இப்படி ஒரு நல்ல synergical இன்ஃபெக்ஷன் தொற்றியது பெருமகிழ்ச்சியா இருந்தது. அந்த ஆனந்த அனுபூதியை எழுத்துல எழுதி சொல்லிட முடியாது. அந்த க்ஷணம் நிச்சயமா சொல்லுவேன், கண்ணனைத்தவிற வேறு எதையும் பத்தி யாருமே யோசிக்கலை. அப்படி ஒரு கடவுளோட ஒன்றிய நிலை.
அக்கம்பக்க சன்னிதிகளில் வீற்றிருந்த சுவாமிகளை வேகமாக நிராகரித்து, அந்த நல்ல சக்தியை எடுத்துண்டு புக்ஸ்டால் கிட்டக்க பிரம்மம் ஒக்கட்டேன்னு உக்காண்டு ஜபம் பண்ணிண்டு இருந்த இவர் பக்கத்துல உக்காந்து கொஞ்சம் இவருக்கும் கொடுத்தேன். பஜனம் இருக்க வந்ததுனால கோவிலுக்குள்ள பிரார்த்தனை பண்ணிண்டு இருக்க சொல்லி இருந்தாங்க. முடிஞ்ச வரைக்கும் வேற சிந்தனைகளை விட்டுட்டு (பிரகாரம் சுத்தறவாளை எல்லாம் வேடிக்கை பார்த்துண்டே!!!) ஸ்லோகம் சொல்லிண்டு இருந்தேன். ஹீஹீ. 1 மணிக்கு கோவிலை விட்டு வெளீல வந்துட்டோம். மீண்டும் ராமகிருஷ்ணா சாப்பாடு, ஹோட்டல், ஊர் திரும்புதல்.
(தொடரும்)
10 comments:
பூரா ஸ்வாமி பதிவா அதனால சும்ம ஒரு கமெண்ட் மட்டும்.. அடுத்ததுல சந்திப்போம்..
ஏதோ நானே குருவாயூர் போயிட்டு வந்தாப்புல ஒரு familiarity.... Hats off அக்கா!!! அடுத்த அத்தியாயத்துக்கு காத்திட்டு இருக்கேன்...
எண்ட குருவாயூரப்பா, சேச்சி அருமை...
டைம் மெஷீன் இதுதானோ...
நீங்க பாத்துட்டு வந்தத எங்கள இன்னிக்கு கூட்டிண்டு போய் காமிச்சுடேளே...
இனிமேல் நீங்கள் அனைவராலும் 'டைம் மெஷீன் அனன்யா' என்று அன்புடன் அழைக்கப்படுவீர்கள்.
அண்ணாமலையான்,
கண்டிப்பா. இந்த பயணக்கட்டுரை முழுதும் ஸ்வாமி தான் இருக்கும்ங்றதை இங்கே சொல்லிடறேன்.
மஹேஷ்,
என்னை ரொம்பவும் பாதிச்ச கோவில் தரிசனம் இதான்.அதான் கொஞ்சம் விஸ்தாரமா எழுதிட்டேன். பாக்கியெல்லாம் சுருக்கமா எழுதப்படும்.
தாராளமாக புகழுரை அள்ளி வீசும் ’கொடைவள்ளல்’ கார்த்திக்கே,
நன்றிடாப்பா.
அனன்யா, நான் ஊருக்குப் போக இன்னும் ஒரு வருஷம் ஆகும், நீங்க வேற ஏன் வயத்தெரிச்சல கொட்டிக்கறீஙக.. lucky you..
ரொம்ப கோவில் மேட்டரா இருக்கறதால (நானெல்லாம் லிமிடெட் ஆத்தீகவாதி) அடுத்த பதிவில் சந்திப்போம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நல்ல பதிவு, குருவாயூர் தரிசனத்திற்கு நன்றி! ஆனாலும் கொஞ்சம் பெரிய பதிவா இருக்கு.
ம்.. நல்லா அனுபவிச்சு எழுதிருக்கீங்க, நான் 17 வருடம் முன்பு 7வது வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலாவின் போது சென்றோம்.. காலை 3 மணிக்கு கட்டுக்கடங்காத கூட்டம், அதனால் தரிசிக்க வைக்காமல் அழைத்து வந்து விட்டனர் :(
உங்க பதிவு மீண்டும் செல்லத்தூண்டுகிறது.. குட்டிக் கண்ணனை தரிசிக்க முடிகிறதா பார்ப்போம்.
நிச்சியம் போயிட்டு வாங்க ராகவ், கண்ணன் கருணையே வடிவானவன். தரிசனம் தருவான்.தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
வித விதமான வஸ்த்ரகலா புடவைகள், வண்ணமயமான சுடிதார்கள், கண்ணைக்கவரும் நகைகள் எல்லாம் போட்டுக்கொண்டு வெள்ளை முதுகு பெண்கள் பிரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.
idhukagavadhu naan antha koviluku poganumda sami............
//வித விதமான வஸ்த்ரகலா புடவைகள், வண்ணமயமான சுடிதார்கள், கண்ணைக்கவரும் நகைகள் எல்லாம் போட்டுக்கொண்டு வெள்ளை முதுகு பெண்கள் பிரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.// hmm, pooka veendiya sthalamthaan...;) LOL
Post a Comment