Pages

Thursday, April 25, 2013

எக்மோர் மியூசியம் தியேட்டரில் சுஜாதா வந்திருந்தார்- இருக்காதா பின்னே? சுஜாதா is God அல்லவோ?

தலைப்பு கொஞ்சம் நீளமோ? பரவாயில்லை... இருந்துட்டு போகட்டும்!
நேத்திக்கு கார்த்தால, எப்பவும்  போல பக்கித்தனமா ட்ரெஸ் பண்ணிண்டு அஃபீஸுக்கு வந்தேன். ஆஃபீஸ் மெயில் ஓப்பன் பண்றேனோ இல்லையோ முகப்புத்தகம் முதல்லே ஓப்பன் பண்ணிடுவேனாக்கும். நெக்ஸ்டு ஜி மெயில், ஸ்கைப், இப்படி ஆஃபீஸுக்கு அத்தியாவசிய பல அப்ளிகேஷன்களை எல்லாம் திறந்துட்டு கடைசியா போனாப்போறதுன்னு ஆஃபீஸ் மெயிலை திறப்பது வழக்கம். (சில நாள் திறப்பதே கிடையாது.)

நேத்திக்கும் அப்படித்தான் 'எங்கள் ப்ளாக்’ கெளத்தமன்ஜி நாடக ரசிகர்களுக்குன்னு போட்டு, கடவுள் வந்திருந்தார் நாடகத்தை பத்தி போட்டிருந்தார். நேரம், இடம் எல்லாம் பார்த்துண்டேன். உடனே ரங்குவை ரிக்வெஸ்ட் பண்ணேன்.இவருக்குத்தான் இந்த ’ஈள் பூள்’ அழுகை மெகா சீரியல் எல்லாம் இஷ்டமாச்சே? அதுனால ”ஃபேமிலி சப்ஜெக்டாம்ன்னா”ன்னு சொல்லி வெச்சேன். பின்னே மடிசார் மாமியெல்லாம் இருந்தா ஃபேமிலி சப்ஜெக்ட் தானே?

இவர் தான் எங்கேயும் சாமான்யமா கிளம்ப மாட்டாரே! நாற்காலியில் பிஷின், காதுல  ப்ளூடூத்தில் பிஷின், கையில் Laptop / Tab / Smart Phone ஆகியவற்றுடன் பிஷின். என்னத்த சொல்ல? ஆனாலும் அவருக்கு என்னை எங்கேயும் கூட்டிண்டு போறதில்லைன்னு ரொம்ப குறை. அதுனால சட்டுன்னு ஒத்துண்டுட்டார்! எனக்கே ஆச்சரியம்! 

சுஜாதாவின் கடவுள் வந்திருந்தார் நாடக வடிவில் பாதி படிச்சிருக்கேன்.  அதை அசை போட்டுண்டே எக்மோரில் இறங்கி நடக்கலாம்ன்னு தான் நினைச்சோம். ஆனா அங்கே இருந்த கடமை தவராத  போலீஸ்காரர், ”17ஈ பஸ் வரும் அதில் தான் போகணும், 10 நிமிசத்துல போயிரலாம்”ன்னு ரொம்பவே வற்புறுத்தினார்.விட்டா, எங்க கூட வந்து நாங்க அந்த பஸ்ஸில் ஏறறோமான்னு செக் பண்ணுவார் போல இருந்தது! சரின்னு ஒப்புத்துண்டேன். ரயில்வே ஸ்டேஷனுக்கும் தியேட்டருக்கும் வெறும் 1.2 கிமி தான்னு கூகிள் மேப்பில் பார்த்தாச்சு, இருந்தாலும் வெக்கமே இல்லாம காலி பஸ்ஸுல உக்காண்டு போனோம். ரங்குவின் கடமை உணர்ச்சியால் நான் நெகிழ்ந்தேன். பின்னே? டிக்கெட்டெல்லாம் வாங்கினார்! 

மியூசியம் தியேட்டரில் போய் உக்காண்டப்போ ஜில்லுன்னு இருந்தது. படு அமைதி. அரங்கம் மெதுவாக நிரம்பிக்கொண்டு இருந்தது. யாரையும் தெரியாது. ஜஸ்டு நாடகம் பார்த்து எஞ்சாய் பண்ணிட்டு போகலாம்ன்னு தான் நான் நினைச்சுண்டு இருந்தேன். திடீர்ன்னு பார்த்தா RVS அண்ணா குடும்பத்தோட வந்திருக்கார். மாதங்கியை சங்கீதா மன்னி தான் ஃபர்ஸ்ட் பார்த்தா. எல்லாரும்  அடுத்தடுத்த ரோக்களில் சேர்ந்து உக்காண்டோம். ஒரு ஃபேமிலியா உக்காண்டு பார்த்தாப்புல பார்த்து ரசிச்சோம். அதிலும் RVS அண்ணாவின் பெண்கள் படுசுட்டி. கூர்மையா கவனிச்சுண்டு இருந்தார்கள். 

இப்போ நாடகத்தை பத்தி: 

நான் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் போனேன். நாடகம் முடிஞ்சப்போ திரு பாரதி மணி அவர்களுக்கு Standing ovation கொடுத்திருக்கணும்ன்னு தோணித்து. Hats off to his efforts! இதெல்லாம் பண்றது சாதாரண விஷயம் இல்லை! சொந்தக்காசு போட்டு ஆஃபீஸுக்கு ஒரு பேனா வாங்கினாலே ரீஇம்பர்ஸ்மெண்ட் கேட்கும் இந்த கால கட்டத்துல, கைக்காசு போட்டு நாடகம் நடத்தறது, அதுவும் இப்போ இருக்கும் விலைவாசிக்கு, க்ரேட் சார் நீங்க! அம்ஜத் அப்படீங்கறவருக்கும் இதில் நிறைய பங்களிப்பு இருக்கு. வாழ்க!

பாரதி மணி அவர்கள், தன்  அருமையான நடிப்பால் நம்மை கவர்கிறார். ஒரு டிப்பிகல் மிடில் க்ளாஸ் அச்சு பிச்சு மாமாவாக அருமையாக நடித்திருந்தார். நான் அமரர் பூர்ணம் விசுவனாதன் அவர்களின் டிராமாவை பார்த்ததில்லை. 

வரிக்கு வரி Stand up comedian மாதிரி அவரின் டயலாக் டெலிவரியும் எக்ஸ்ப்ரெஷனும், சிரிப்பொலியால் அரங்கமே அதிர்ந்தது. அவருடைய மனைவியாக வரும் பத்மஜா மாமியும் அடிபொளி, அச்சு அசலாக அந்த கதா பாத்திரத்தில் பொருந்துகிறார். 

சுந்தராக வந்த பையன் படு சூட்டிகை. சுந்தரின் துறுதுறுப்பும், மாறும் முகபாவங்களும் படு சுவரஸ்யம்! Remember, there are no closeup shots in a drama! இன்னும் கொஞ்சம் ப்ராக்டீஸ் பண்ணினால் பிராமண பாஷையும் சுலபமா கத்துண்டுடலாம். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.

 தசாவதாரத்தில் வரும் பல்ராம் நாயுடுவைப் போல கதாநாயகி வைஷாலி தமிழ் பேசினாலும், நல்ல எக்ஸ்பிரஷன்களால் நம்மை கவர்கிறார். She needs to work on her Tamil spoken skills. Not a big deal I guess.

ஜோ என்னமொ நம்ம பக்கத்தாத்து பையனாட்டம் படு ஜோவியலாக சீனு மாமாவின் வீட்டில் உலாத்துகிறார் அப்படியே நம் மனதிலும் தான்!லேசாக சுஜாதா ஜாடை வேறு!

டாக்டர், இன்ஸ்பெக்டர், பேய் விரட்டுபவர், ஏட்டு, சேஷகிரிராவ், ராமமூர்த்தி, அவர் அப்பா எல்லாருமே கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார்கள். 

அந்த நிச்சியதார்த்தப் படலம் = a huge laugh riot! என்னதான் தலைவர் எழுதியிருந்தாலும் அதன் execution எவ்வளவு முக்கியம் என்பதை நினைவு படுத்தியது. RVS அண்ணா - நீங்க சேஷகிரிராவாக நடித்திருந்தாலும்  ஜோராக இருந்திருக்கும்! இதில் நடித்தவருக்கும் நல்ல Comical features. அந்தக்கால விகடனில் போடுவார்களே குடுமி வெச்சுண்டு ஒரு கார்டூன் அதே ஜாடை! அவரைப்  பார்த்தாலே சிரிப்பு பொத்துண்டு வரது. குடு குடுன்னு பஞ்சகச்சத்தை பிடிச்சுண்டு மேடையெல்லாம்  ஓடி சிரிப்புச் சரவெடிகளை கொளுத்திப் போடுகிறார். காட்சி முடியும் தருவாயில் லேசான வயிற்றுவலி, சிரிச்சு சிரிச்சு.

என்னுடைய கவலையெல்லாம் ரங்குவை பத்தி தான். நான் தான் சுஜாதாவின் விசிறி! இவர் இல்லையே.. என்ன நினைப்பாரோ, செய்வாரோன்னு ஒரே கவலை. ஃபேமிலி ட்ராமான்னு சொல்லிட்டு ஒரு ஈள் பூள் காட்சி கூட இல்லையேன்னு கேட்பாரோன்னு நினைச்சுண்டே வந்தேன். ஒவ்வொரு காட்சியின் முடியும் போது நன்னா இருக்கான்னு கேட்டுண்டே இருந்தேன். அந்த 2 மணி நேரத்தில,  ஒரு வாட்டி கூட கடிகாரத்தை பார்க்கலை, மொபைலை எடுக்கலை, SMS அனுப்பலை, ஈமெயில் பார்க்கலை, மிஸ்ட்கால்ஸ் செக் பண்ணலை! He was completely stuck to the play!

மாதங்கி, RVS அண்ணா, மாதங்கி அப்பா எல்லார்கிட்டேயும் பேசி சிரிச்சுண்டே பார்த்தேன். சுகானுபவம்!

இண்டர்வெல்லுக்கு சொல்லும்போது கூட ”எங்க காலத்துல இந்த உபாதையெல்லாம் கிடையாது. இருந்தாலும் உங்களுக்காக ஒரு 10 நிமிஷம் இடைவேளை”ன்னு எதிர்கால மனிதன் சொல்றச்சே படு சூப்பர்.. ஊபா.. ஊபா.. ஊபா...

”ஜோ, எங்கே சுந்தருக்காக ஒரு ஏப்பம் விடுன்னு சீனு மாமா கேட்க, ஜோ முயற்சித்து, வரலை”ன்னு சொல்வது, நச் சுஜாதா அக்மார்க் இல்லையோ?


சீனு மாமா, சுந்தர் & ஜோ மூணு பேரும் ப்ளான் பண்ணும் காட்சி முடியும் போது RVS அண்ணாவின் மானசா, ”ரெண்டு வாட்டி மணி அடிக்காமலே ஜோ போயிடுத்தே ”என்றாள் பளிச் மானஸா, வெல் டன்! வெரிகுட் அப்ஸர்வேஷன். 

RVS அண்ணா இண்டர்வெல்லில் வெளியே போயிட்டு வந்தப்போ யாருடனோ பேசிட்டு வந்தார். மாதங்கியிடம் நான் சொன்னேன்,” நிச்சியம் அவர் பிக் ஷாட்டாத் தான் இருக்கும் பாரேன்”னு.” யார் அவர்?”ன்னு அப்பாவியா கேட்டா, நான் சொன்னேன், ”தெரியாது அண்ணா வரட்டும் கேட்கலாம்”ன்னு. மாதங்கி என்னை ரொம்ப கேவலமா பார்த்தா.. ”யார்ன்னு தெரியாமலேயே பில்டப்பா”ன்னு ஹி ஹி. அப்புறம் அண்ணா வந்தப்புறம் தான் தெரிஞ்சது அவர் ப்ரியா கல்யாணராமன் குமுதம் குழும எடிட்டர்! நான் தான் சொன்னேனோல்லியோ? :) 

நேத்திக்கி கார்த்தால திண்டுக்கல் தனபாலன் அனுப்பின ஏதோ ஒரு லின்கில் போலிச்சாமியார்கள் பத்தி படிச்சுண்டு இருந்தேன். ஆனா கண் முன்னே நிதர்சனமா சில உண்மைகளை புரியறமாதிரி சொன்னது எனக்கு double impact! கடவுளாக இருந்தாலும் இருக்கலாம்ன்னு நான் அரை குறையா நினைச்சவர் உண்மையில் பெரிய hoax என்பது மனதை மிகவும் பாதித்த விஷயம். அதை ஊர்ஜிதப்படுத்தியது இந்த நாடகம்! சுஜாதாவோ, சீனு மாமாவோ, சுந்தரோ, லக்ஷ்மி மாமியோ.. உண்மை இதுதான்னு புரிஞ்சது இல்லையா? ஒரு 20% எனக்குள் இருந்த அசட்டு நம்பிக்கைக்கு சரியான சாட்டையடி!

”அப்போ உண்மை சொன்னேன், எல்லோரும் பைத்தியம்ன்னு சொன்னா, இப்போ பொய் சொல்றேன், கடவுள்ன்னு சொல்றா! ”Ironic, but how very true! 

 கடவுளா இருக்கும்போது, சொம்பில் விபூதி வரவழைப்பது, 4 வருஷத்துக்கு ஒரு வாட்டி மேஜிக் பண்ணி காட்டிக்கலாம்ன்னு சுந்தர் சொல்வது,” நிறைய நல்ல விஷயங்களுக்கு நிதி பயன்படுறது” எல்லாமே - it rings a bell. doesn't  it? இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, Nothing was missed at all. Every single dialogue made an impact! 

”இவன் இங்க்லீஷுல ஏமாத்தறான், அவன் தமிழ்ல ஏமாத்தறான்”னு டாக்டரையும் பேய் விரட்டுபவனையும் சொல்வது சுஜாதாவின் டிப்பிகல் நையாண்டி! அதே மாதிரி டாக்டரே, சீனு மாமா கடவுள்ன்னு ஊர்ஜிதப்படுத்திண்ட உடனே, ”எனக்கு 6 வருஷமா குழந்தையில்லை”ன்னு சரண்டர் ஆறது = ultimate class!

பாரதி மணி சார், நீங்க இன்னும் நூறாண்டு வாழ்ந்து, உங்க ட்ரூப்போட  நிறைய நாடகங்கள் போடணும் சார்.Of course with due sponsorship. இவ்வளவு சிறப்பான நாடகத்தை இலவசமா பார்த்த குற்ற உணர்ச்சியிலிருந்து நாங்க விடுபட சீக்கிரமே இன்னொரு நாடகம் போடுங்க.. காசு கொடுத்து தான் பார்ப்போம். இது சத்தியம்! 

எக்மோர் மியூசியம் ஹாலுக்கு போனப்போ ரெண்டு கேட் இருந்தது, மெயின் கேட் மாதிரி தெரியலை. வரும்போது ரங்கு அதே கேட் வழியா போயிடலாம் ஷார்ட்(!!) அப்படீன்னு சொன்னார். எனக்கு அந்த ஐடியா அவ்வளவா பிடிக்கலை. அவ்ளோ தூரம்(!) போயிட்டு பூட்டி இருந்தா கஷ்டம்ன்னு சொன்னேன். சரின்னு மனம் மாறிட்டார். நான் நம்ப முடியாமல், ”எப்படின்னா?”ன்னு கேட்டேன், ”ஒரு வேளை அந்த கேட் பூட்டியிருந்தா நீ அதை வீட்டுக்கு வர வரைக்கும் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி காட்டுவே”ன்னு சுஜாதாவால் எழுதப்பட்ட சீனு மாமாவின் அதே டயலாக்கை எடுத்து விட்டாரே பார்க்கலாம்!  நான் சொன்ன மாதிரியே அந்த உபரி கேட்டு பூட்டித்தான் இருந்தது. இதுக்கு தான் சொல்லறோம், பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்ன்னு!

Wednesday, April 24, 2013

முப்பத்து மூணு ரூபாயும், எஸ்.எம்.எஸும், பின்னே ஈமெயிலும்!


தெரியாம ஒரு Data Card USB Modem எடுத்துட்டேன்!! என்ன ரகளைங்கறேள்? யப்பா!

ஏப்ரல்14 தேதி வாக்கில ஒரு தோழிக்காக ஒரு டேட்டாகார்ட் வாங்கினேன். என்னுடைய மொபைல் நம்பர், ஆஃபீஸ் ஈமெயில் ஐடி எல்லாம் கொடுத்திருந்தேன். பத்தே நாளில் அதுக்கு பில் வந்தாச்சு. Billing cycleஆம்! சரி இருக்கட்டும். இன்னும் ஆரம்பிக்கவேயில்லையேன்னெல்லாம் சொல்லலை! ஒரு தரம் “பொன்னு ரங்கம் வந்திருக்கேன், மாது வந்திருக்கேன்”ன்னு சொன்னா போறாதா? வித விதமா  அது படுத்தின பாடு இருக்கே! உஸ்ஸ்!

இனிவரும் பத்திகளில் ப்ராக்கெட்டுக்குள் இருப்பது என்னுடைய மைண்ட் வாய்ஸ் என்பது உங்களுக்கு சொல்லித்தெரியவேண்டியதில்லை.

  • ஏப்ரல் 20 - உங்க யூஸேஜுக்கான பில் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது - SMS - (ஓ.. அதுக்குள்ளேயா?)

  • ஏப்ரல் 21 - உங்கள் கோரிக்கையின் படி(??? நான் கோரவேயில்லையே)  இனிமேல் உங்களுக்கு ஈபில் மட்டும் தான் வரும்!- SMS ( க்கும்.. சரி சரி நல்ல விஷயம் தானே? ரெண்டு பேப்பர் மிச்சம், மரம் வளர்ப்போம் (கோடை) மழை பெறுவோம்)

  • ஏப்ரல் 21- உங்கள் ஈபில் உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பியாச்சு.(அப்புடி ஞாபகப்படுத்துறாங்களாமா!) - SMS

  • ஏப்ரல் 21 - ஈ பில் - ஈமெயில் ( ஓக்கே!)

  • ஏப்ரல் 22-உங்கள் பில் அமெளண்ட் 33 ரூபாய், அதை மே ஐந்துக்குள் செலுத்தவும். SMS (சரி செலுத்திருவோம். )

  • ஏப்ரல் 23 - மே-5ஆந்தேதிக்குள் உங்க 33 ரூபாயை செலுத்திடுங்க - ரிமைண்டர் - SMS  (இன்னிக்கு 23 தானே? நற நற)

  • ஏப்ரல் 23 - மே 5ஆந்தேதிக்குள் நீங்க கட்ட வேண்டிய 33 ரூபாயை கீழ்க்கண்ட முகவரிகளிலும் கட்டலாமே - SMS (மறுபடியும் ரிமைண்டர், உன் தலையில தீயை வெக்க)

  • ஏப்ரல் 24 - உங்கள் கோரிக்கைக்கு நாங்க கொடுத்திருக்கும் ரெஃபரன்ஸ் எண் - xxxxxxx. SMS (என்ன கோரிக்கை? ஒரு எழவும் புரியலையே?ஓ அந்த ஈ பில்லுக்கா, அதுக்கெதுக்கு இப்போ கோரிக்கை எண்ணெல்லாம்? நாராயணா.. கட்டித்தொலைச்சுடலாம் இன்னிக்கே!)

33 ரூபாய்க்கு பில் கட்டியவுடன் ஒரு ரெஸீட் கொடுத்தார்கள். அப்பாடி இனிமே இந்த தொல்லை இருக்காதுன்னு நினைச்சுண்டேன்!

அடுத்த செகண்ட் SMS ”நீங்கள் கட்டின தொகையை நாங்கள் பெற்றுக்கொண்டோம், நன்றி” (நீங்க திருந்தவே மாட்டீங்களாடா?)

நேற்று மிகவும் முக்கியமான ஒரு மெயிலை எதிர்ப்பார்த்திருந்தேன். சதா ஆஃபீஸ் மெயிலை ரிஃப்ரெஷ் பண்ணிக்கொண்டும் மற்ற விண்டோக்களில் ஏதோ வேலை செய்தபடி இருந்தேனா.. திடீரென்று வெப் மெயிலில் New Email என்று காட்டிற்று! அடடே.. அவாகிட்டே இருந்து தான் ரிப்ளை வந்திருக்கோன்னு ஓ......டிப்போய் பார்த்தா, மீண்டும் 33 ரூபாய்! இவாளுக்கு ஈமெயில் முகவரி கொடுத்தா பெரிய பிரச்சனைன்னு, யாருமே இல்லாத கடையான என் ஆஃபீஸ் மெயில் ஐடியை கொடுத்தது தவறாச்சு. 

ஈ ரெஸீட்டாம்! நேர்லேயும் ஃபோன்லேயும் ரெஸீட் அனுப்பியாசோல்லியோ? இப்போ ஆகாசமார்க்கமாவும் ஈமெயில் ரெஸீட் அவசியமா? ஏண்டா இப்படி உயிரை வாங்கறேள்? மூதேவிகளா!

இதைப்பற்றி ரங்குவிடன் புலம்பின போது, அவர் சொன்ன விஷயம் மஹா ஆச்சரியமாக இருந்தது.இதே மாதிரி இன்னொரு சர்வீஸ் ப்ரொவைடரின் போஸ்ட் பெய்ட் ஃபோன் கனெக்‌ஷன் வெச்சுண்டு இருக்கார். அந்த பில் கட்டும்போது, ஒவ்வொரு நிலையிலும் SMS வருமாம்! அடக்கஷ்டகாலமே! Payment process initialized, processing, successful இப்படி! கொடுமை! இந்தக் கண்றாவியெல்லாம் முடிஞ்சுட்டு, கடைசியில் மறுபடியும் ஒரு SMS, Email வருமாம்! சுத்தம்!

பேசாம FD மாதிரி ஒரு பல்க் அமவுண்டை கட்டிட்டா இந்த பிரச்சினையில இருந்து விடுபட முடியுமான்னு யோசிச்சேன், அதுக்கும் தொல்லை தான்.. “நீங்கள் கட்ட வேண்டிய 33 ரூபாயை மொத்தத் தொகையிலிருந்து நாங்கள் கழித்து விட்டோம் இப்போ உங்கள் பாக்கிப் பணம் ____ எங்களிடம் தான் இருக்கிறது, உங்கள் யூஸேஜுக்குக் தகுந்தபடி தினசரி எவ்ளோ பணம் குறைந்துள்ளதுன்னு உங்களுக்கு அப்டேட்ஸ் கொடுத்துண்டே இருப்போம்.  நீங்கள் நிம்மதியாகவும்(??!!!) இருக்கலாம் ப்ளஸ் ஆனந்தமாக பிரவுஸ் செய்யலாம்” ன்னு ஆகாசமார்க்கமாவும், சூக்ஷ்மரூபம் எடுத்தும் வந்து என்னை டார்ச்சர் செய்வார்கள்! கஷ்டம் கஷ்டம்!

Wednesday, April 10, 2013

ரயில் பயணங்களில்...



இது கொஞ்சம் நீளமான பஜிவு. அதுனால ரெண்டு பார்ட்டா வந்து படிக்கவும்..

ஃபேஸ்புக்கில் இன்னைக்கு கார்த்தால கீழ்க்கண்ட ரயில் ஃபோடோவை பார்த்துட்டு ஒரே சிரிப்பு.

ஏப்ரல் மேன்னாலே வெக்கேஷன் டைம் தானே. ரயிலில் லீவுக்கு ஊருக்கு போறதுன்னா எவ்ளோ சந்தோஷம்? வழக்கமா விஜயவாடாவில் இருந்து, தி நைனா சென்னைக்கு ஏப்ரல் மாசம் போறதுக்கு ஃபிப்ரவரியிலேயே டிக்கெட் புக் பண்ணிடுவார். பரீட்சையெல்லாம் முடிச்சுட்டு, தாத்தா, பாட்டி , மாமாகூட என்ஜாய் பண்றதுக்கு நாங்களும் ரெடியாயிடுவோம்.

ரயில்னாலே அம்மா டின்க்கிள், சம்பக் எல்லாம் வாங்கித்தருவா. அடுத்த சிக்னல் வரதுக்குள்ளே அதை படிச்சு முடிச்சுடுவோம். அப்புறம் வழியெல்லாம் ரயில் ஆராய்ச்சி, குரங்கு சேஷ்டை, திட்டு, திங்கறது எக்ஸெட்ரா.. எக்ஸெட்ரா.. அட லீவுல இதெல்லாம் ஜகஜமப்பா...

ரயிலில் போகும்போது எல்லாக்குழந்தைகள் மாதிரியே நாங்களும் பக்கிகளாகத் தான் இருந்தோம். அதுக்கப்புறம் தான் - அது பழகிடுத்து. எது வந்தாலும் வாங்கித்தாங்கம்மான்னு பக்கித்தனமா கேட்போம்.. அம்மாவும் கண்களாலேயே பதிலைச்சொல்லுவார். மாட்டாராம். :)

அந்த காலகட்டத்துல தனியா பயணம் பண்றவங்க மட்டும் தான் ரயிலில் பேண்ட்ரியில் வாங்கி சாப்பிடுவாங்க. ரயில்லே எப்போவுமே வீட்டு சாப்பாடு தான்.. இட்லி, புளியோதரை சர்வ சாதாரண ரயில் உண்டிகள். மத்த சமயத்தில் திங்கணும்னா இருக்கவே இருக்கு போன தீபாவளிக்கு பண்ணின பட்சணங்கள் முறுக்கு, தேன்குழல் இத்யாதிகள். ”சூடானே.. கட்லே…..ட்”ன்னு வித்துண்டு வருவா.. நானும் தங்கை மணியும்,”அம்மா”ன்னு திரும்பினாப் போச்சு, ஏதாவது ஒரு சம்படம் வெளியே வரும் அதிலிருந்து அம்ருத துல்யமான ஏதாவது ஒரு தட்டையின் உடைந்த பீஸ் வரும். அத்ருப்தியாக மூஞ்சியை வெச்சுண்டு அதை சாப்பிட்டு தீருவோம். எதிர்த்துப் பேசினால் அடி தான். அடுத்த  படியாக ”வேடி வேடி செனககாயலு”ன்னு வித்துண்டு வருவா(சுடச்சுட வறுத்த வேர்க்கடலையாம் சொல்லும்போதே ஜொள்ளு கொட்டலை? நேக்கு கொட்றதே!) .. மீண்டும் ”அம்மா”ன்னு திரும்பினா ஆத்துல பண்ணின ’சிட்டி பூஸலு’வை கொடுப்பா.(எல்லா தானியங்களையும் எண்ணெயில்லாமல் வறுப்பது.. கரகரன்னு இருக்கும்.. ஆனா சுத்தமா டேஸ்டே இருக்காது அல்லது அந்த வயதில எங்களுக்கு பிடிக்காது) இப்படி ஒவ்வோரு டிஷ்ஷுக்கும் ஏதாவது ஒரு ஹோம் மேட் ஆல்டர்னேட்டிவ்ஸ் வெச்சுண்டு இருப்பா. ரொம்ப மோசம்!

அம்மா அதையெல்லாம் ஏன் வாங்கித்தரலைன்னு பிற்காலத்துல தான் தெரிஞ்சுண்டோம்! நாங்க பண்ணின ரயில் பயணங்களுக்கு அதையெல்லாம் அம்மா வாங்கித்தந்திருந்தால், பாதியிலேயே நானும் தங்கைமணியும் ஃபணால் ஆகியிருப்போம்!

டின்க்கிள், பேண்ட்ரிகார் கட்லட், தண்ணி காஃபி, தண்ணி டீ, மட்கா சாய்(கோரக்பூர்), சிக்கி(லோனாவாலா, கண்டாலா), புலிஹோரன்னம்(குண்டக்கல்),ஆவின் பால் (சென்னை செண்ட்ரல்)  இதெல்லாம் தவிற நினைவுக்கு வரும் சில நிகழ்ச்சிகள் கீழ்க்கண்டவாறு:

ஒரு வாட்டி மாமாவும் அத்தையும் குடும்ப சஹிதம் திருச்சியிலிருந்து வந்திருந்தார்கள். லக்கேஜ் கொஞ்சம் அதிகம். பார்க்கிலிருந்து குரோம்பேட்டை வர லக்கேஜுகளுடன் ஒவ்வொருத்தராக  ஏறுவதற்குள் (அவர்கள் கொன்ன்ன்ன்ன்ச்சம் ஸ்லோவாக்கும்) ரயில் கிளம்பிவிட, மாமா மட்டும் இன்னும் ஏறவில்லை. உடனே அவர் தங்கள் ஊர் சிட்டி பஸ் ஞாபகத்தில் “ஹோல்டான் ஹோல்டான்” என்று கத்த, அந்த ரணகளத்திலேயும் மை நைனா சிரிச்சுண்டே நக்கலடிச்சுண்டே மாமாவை இழுத்து உள்ளே போட்டிருக்கார். அப்புறம் என்ன? ஹோல்டான் ஜோக்கை வர்றவா போறவா எல்லார்கிட்டேயும் சொல்லி சிரிச்சுண்டு இருப்போம். கொஞ்ச நாளைக்கு அவர் பேரே ஹோல்டான் மாமான்னே ஆயிடுத்து.இருக்காதா பின்னே?

இதே குடும்பத்துடனான இன்னோரு ரயில் ஜோக் என்னன்னா, நாங்கள் சப்தகிரி ரயிலேறி திருப்பதி போகலாம்ன்னு ப்ளான் பண்னி இருந்தோம். 1995 டிஸம்பர் - 24ந்தேதி.. நியூ இயர், கிறிஸ்மஸ் லீவு வேற.. கூட்ட்ட்ட்ட்டமான கூட்டம்.. உட்காரவும் இடமில்லை.. ரயில் ஏறியாச்சு. ”ஆனாலும் வெங்கி எப்போவுமே இப்படி சோதிப்பான், பரவாயில்லை போயிட்டு வந்துடலாம்.” அப்படீன்னு அம்மாவும் அத்தையும் பேசிண்டு இருக்க, நைனா, மாமா அண்டு கடைக்குட்டி திவ்ஸ்(திவ்யா) மட்டும் கீழே இறங்கி (ஸ்டையிலாம்) வண்டி கிளம்ப காத்துண்டு இருந்தா. நைனா,” வண்டி இப்போ போகாது, எஞ்சின் மாத்திண்டு இருக்கான்”னு சொன்னார். நாங்கள் இறங்கிப் பார்த்தப்போ சிக்னல் பச்சையா இருந்தது. அப்பா க்ரீன் போட்டாச்சு ஏறிடுங்கன்னு சொன்னோம். இல்ல்லேடீ.. எஞ்சின் மாத்திண்டு இருக்காங்கன்னு அவர் விடாப்பிடியா அதையே சொல்லிண்டு இருந்தார். “அம்மா நாமளும் இறங்கிடலாம்மா, அடுத்த வாட்டி திருப்பதி போயிக்கலாம்”ன்னு நானும் பிரியாவும் சொல்லிண்டு இருந்தோம். தங்கைமணி மட்டும் நியூட்ரல் கியர்ல இருந்தா.

“சிக்னல் இன்னும் போடலை,  இறங்கறதுன்னா இப்போவே இறங்குங்க”ன்னு மை நைனா சொல்ல,ஷாப்பர் பேக் எல்லாம் கைல எடுத்துண்டு  இறங்கிடலாம்ன்னு ஆயித்தம் ஆனோம். ட்ட்ட்ட்டங்ன்னு சத்தத்தோட சப்தகிரியான் கிளம்பிட்டான்! ”அடேடே.. ரயில் கிளம்பிடுத்தே”ன்னு மை நைனா வாயால் சொன்னாலும் பயத்தாலும், முஞ்சியில் பல்பு அடிச்ச அதிர்ச்சியாலும்  அசந்து போய், பிறகு சுதாரிச்சுண்டு (ஹீரோவாக்கும்) ரயிலில் எகிறி ஏறிவிட்டார்.. ஹோல்டான் மாமா பயத்தில் நடுங்கி,தி நைனாவை பிடித்துக்கொண்டு தாவி எறிட்டார். திவ்ஸ் மட்டும் (அவளுக்கு ஒரு 8 வயசு இருக்கும்) பாவம் திரு திருன்னு முழிச்சுண்டு பயந்துண்டு ஸ்டேஷன்லேயெ நின்னுண்டு இருந்தா. எங்க கூட நின்னுண்டு இருந்த ஒருவர் படியில இருந்து இறங்கி குழந்தையை ஒரே கவ்வாக கவ்வி வண்டிக்குள் இறக்கினார். அதற்கப்புறம் அவர் சொன்ன வார்த்தைகள் சரித்திரத்தில் இடம் பெறும் அளவுக்கு பாப்புலர் ஆகிவிட்டது    ” பாப்பா பயந்துருச்சு”

ஆனா பாருங்க, திவ்ஸ் இதெயெல்லாம் பத்தி கவலையே படாமல் அவள் காது தோடு கீழே விழுந்துடுச்சாம். அதை நினைச்சு புலம்பிண்டே வந்தா. அக்காடிங் டு ஹர், உலகத்திலேயே மிகக்கொடுமையான விஷயம் காதில் தோடே இல்லாமல் திருப்பதிக்கு சப்தகிரி ரயிலில் போவதுதானாம்! ஏடுகொண்டலவாடா! காப்பாடு!

இது நடந்தது எண்பதுகளில். 87என்பதாக நினைவு. ஹைத்ராபாதிலிருந்து சென்னைக்கு எண்பது வயதான சுப்பிஅவ்வாவுடன் என்னை அனுப்பினார்கள்(துணைக்காம்!!!??). எனக்கு ஒரு 10 வயசு இருக்கும்.(அடேங்கப்பா என்ன ஒரு மெச்சூரிட்டி?) அப்பெல்லாம் ஒரு  மண்ஜாடியில் தான் தண்ணீர் எடுத்துப்போம். அதுடைய மூக்கில் ஒரு தம்பளரை கவிழ்த்தி எடுத்துண்டு போவோம். படு மோசமான வெயிலாதலால் ரொம்ப தேவையாக இருக்கும். அந்தப்பானைத்தண்ணியின் வாசனையே அலாதி தான். பகல் ட்ரெயின்.

சுப்பி அவ்வாவுக்கு டயாபட்டீஸ் இருந்தது. பாவம் ரொம்ப தாகம் எடுக்கும், தண்ணி ஜில்லுன்னு இருக்குமேன்னு நம்ம்ம்ம்பி அந்த மண் ஜாடியை எடுத்துண்டோம். வழக்கம்போல என் ஊழ்வினை தூண்ட அந்த மண் ஜாடியில் ஓட்டை விழுந்துடுத்து. கம்பார்ட்மெண்ட் பூரா நாங்க கொண்டு போன தண்ணி லீக் ஆகி எல்லாரும் வந்து நமக்கு தெரியாத விஷயத்தை புதுசா கண்டுபிடிச்சு சொல்ற மாதிரி ”தண்ணி லீக் ஆகுதுங்க, பாருங்க” ”நீள்ளு படுதுந்தத்ண்டி” ”ஜக் டூட் கயாஹை க்யா? கித்னா பானி கிரா தியா ஹை?”அப்படீங்கற ஃப்ளாஷ் ந்யூஸை சொல்லிட்டு போயிண்டு இருந்தாங்க. அதுவும் எங்க சீட்டு டாய்லெட்டுக்கு பக்கத்துல இருக்கும் ஃபர்ஸ்ட் சீட் வேறையா, டாய்லெட்ல தண்ணி வராட்டி கூட இந்த தண்ணி இருக்கேன்னு நினைக்கற அளவுக்கு அந்த 3 லிட்டரும் வடிந்து முடிஞ்சுது.

கம்பார்ட்மெண்ட் பூரா ஒரு ஓடை மாதிரி அந்த தண்ணி அடுத்த டாய்லெட்டையும் சேர்த்தி சுத்தம் பண்ணிண்டு இருந்தது. ஒரே கேவலம் ஹைன்னு நினைச்சுண்டேன். ஹி ஹி.. இதெல்லாம் நமக்கு சாதாரணம் தானே? தண்ணி இல்லை.. நல்ல சம்மர் வேற, பாட்டி பாவம்.  ஏதோ ஒரு ஊரில் ரயில் நிற்க, அதிகப்பிரசங்கித்தனமா நான் இறங்கி ஒரு சின்ன வாட்டர் கேன் வாங்கினேன். அதில் ரெண்டு சொட்டு தண்ணி நிறைச்சேனோ இல்லையோ, ரயிலுக்கு மூக்குல வேர்த்து face book chat செய்யும்போது பாதியிலேயே அப்பீடாகும் நண்பர்களைப்போல "அந்ன்ஸ், டாட்டா பை பைன்னு சொல்லிட்டு அப்பீட் ஆயிடுத்து.. “ஐய்யோ குழந்தை குழந்தை”ன்னு சுப்பி அவ்வா டென்ஷனோட கத்த, கூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து வந்துட்டாங்க. நானா அஞ்சுவேன்?

 தண்ணி அடுத்த ஸ்டேஷன்ல நிறைச்சுக்கலாம்ன்னு மறக்காம குழாயை மூடிட்டு கேனையும் மூடிட்டு, சங்கிலி தம்ப்ளரை சபீனா போட்டு அலம்பி வெச்சுட்டு, சின்கை ப்ரஷ் போட்டு நல்லா தேய்ச்சு அலம்பிட்டு, அந்தப்பக்கம் சொட்டிண்டு இருந்த குழாயை ப்ளம்பிங் ஒர்க் பார்த்துட்டு ஒரு க்ஷண நேரத்தில் ஓ…..டிப்போய் ஏறிட்டேனே! (பின்னே என்னங்க? இதையே தமிழ்ப்படத்துல சொன்னா ஒத்துப்பீங்க.. நான் சொன்னா தப்பா?) அந்த நிகழ்ச்சியை அவ்வா ‘அவள் ஒரு ஜான்ஸிராணியாக்கும்” ரேஞ்சுக்கு எங்க குடும்ப வட்டத்துல பரப்பிட்டா! அதுக்கப்புறம் எங்கே போனாலும் எனக்கு மாலை, மரியாதி, பரிவட்டம், ரயில்வண்டி, ச்ச்சே சாரி வில்லுவண்டி.. ஏன் கேக்கறீங்க போங்க!

1996ல் காசி கயா தில்லி போகலாம்ன்னு அப்பா ப்ளான் பண்ணினார். 12 நாள் ட்ரிப். குடும்ப உறுப்பினர்கள் 8 பேர். மொத்தம் லக்கேஜுகள் 26. தெலுங்கில் ‘சாலந்தானிகி சக்கிலால கெம்ப’ன்னு சொல்லுவாங்க. பின்னே என்ன? முள்ளு முறுக்கு ,தேன்குழல்,தட்டை,மிக்சர், அப்புறம் க்ராண்ட் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ்ல கிடைக்கும் அத்தனை பதார்த்தங்களையும் சேர்த்து ஏகப்பட்ட ஐட்டம்ஸ் அவ்வாவும் அத்தையும் அம்மாவுமாக பண்ணி எடுத்துண்டு ஆளுக்கு துணி மணிகள், டாய்லடரீஸ்,  இதர சாமானங்களெல்லாம் எடுத்துண்டா இத்தனை லக்கேஜுகள்! எங்களை வழியனுப்ப வந்த சின்ன மாமா சொன்னார் “இவா என்னமோ கழைக்கூத்தாடிகள் மாதிரி டூர் கிளம்பி இருக்கா” . இத்தனை சாமானங்களையும் வெச்சுண்டு வாரணாஸியில் ட்ராஃபிக்கில் சிக்கிண்டு ரயிலை மிஸ் பண்ண இருந்தோம். எப்படியோ லின்க் ரயிலை பிடிச்சு தில்லி போறதுக்குள்ளே பெரும் பிரயத்னம் ஆயிடுத்து.

இப்பெல்லாம் தான் இந்த லக்கேஜ் பிரச்சினையில்லாம பிரயாணம் பண்ணறொம். முன்னாடியெல்லாம் சீடை முறுக்கு எல்லாம் ஒரு நாலு பை நிறையச எடுத்துண்டு தாறுமாறா லக்கேஜ் ஆயிடும். இப்போ நோ சீடை நோ முறுக்ஸ். 

இப்போ லேட்டஸ்டு ட்ரெயின் நிகழ்ச்சிக்கு வருவோம். எங்க கல்யாணம் முடிஞ்ச நாலாவது நாள், நானும் இவரும் பாலக்காட்டுக்கு கிரஹப்பிரவேசத்துக்கு மற்ற குடும்பத்தினரோட போகணும். அங்கிருந்து இதர கோவில்கள், கடைசியில் கோடைக்கானல் போறதா ப்ளான். அடுத்த ஒரு வாரத்துக்கு  டைட் ஷெட்யூல்  இருந்தது. அதனால் ஏகப்பட்ட துணிமணிகளுடன் கிளம்பிட்டோம்.

 போரூரிலிருந்து செண்ட்ரலுக்கு போறதுக்குள்ளே அப்படி ஒரு டென்ஷன். பின்னே வேகம்னா வேகம் அப்படி ஒரு ஆமை வேகம். செம்மத்தியான  ட்ராஃபிக் ஜாம்! நாங்க இப்படி படு ஃபாஸ்டா சென்னையில் தெருக்களையெல்லாம் சுத்தி பார்த்துண்டு இருந்த (அ)சமயத்துல ரயிலுக்கு டைமாச்சுன்னு என் மச்சினர்கள்ஃபோன் பண்ணிண்டே இருந்தாங்க.  நாங்களோ தமிழ் சினிமா மாதிரி பாதி வழியில் இருக்கோம்! (ட்ராஃபிக், ரயில், ரயில் ட்ராஃபிக் இதெல்லாம் மாத்தி மாத்தி இப்போ ஜூம் பண்ணி காட்டணும். )மறுநாள் பாலக்காட்டு வீட்டில் எனக்கு கிரஹப்பிரவேசம். எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு! அவ்ளோ லக்கேஜும் எடுத்துண்டு அப்படியே செண்ட்ரல் போய்ச்சேர்ந்தாலும் அதையெல்லாம் ட்ரெயினில் வைப்பது அசாத்தியம்,. எப்படியோ 2 நிமிஷம் முன்னாடி ட்ரெயின் கிளம்பறதுக்குள்ளே செண்ட்ரல் வந்தோம். கோபால் அண்ணா ப்ளாட்ஃபார்ம் பூரா எங்களுடன் லக்கேஜுகளை தூக்கிண்டு ஓடி வந்தார். வேர்த்து விறுவிறுத்து கோச்சிலேயே ஏறிட்டோம்! இப்போ நினைச்சாலும் எப்படி ஏறினோமோன்னு ஆச்சரியப்படுவேன்! மன்னி கேட்டா, ”ஏன் மோஹன் இவ்ளோ லக்கேஜ்?” இங்கே இவ்ளோ ரணகளம் ஆயிண்டு இருக்கு, இதுக்கு ரங்குவின் பதில், மன்னி நாங்க ஹனிமூன்ல விதவிதமா ட்ரெஸ் பண்ணிண்டு டூயட் பாடப்போறோம்.. க்க்கும்.. பாடிட்டாலும்!

Sunday, April 7, 2013

ஃபேஸ்புக்கில் கல்லா கட்டுவது எப்படி?


”ஃபேஸ்புக்கில் கல்லா கட்டுவது “ அப்படீன்னா என்ன?

சும்மாங்காச்சுக்கும் ஒரு ஸ்டேட்டஸ் போட்டுட்டு அதுக்கு கமெண்ட் வாங்குறது தான் கல்லா கட்டுவது..இது ப்ளாக்கர்களுக்கு புதிதில்லை என்றாலும் ஃபேஸ்புக்கில் பெரிய இம்சையாக இருக்கு. இப்போ வகை வகையான ஸ்ட்டேட்டஸ்களை பத்தி பார்ப்போம்.

1. புதிர் ஸ்டேட்டஸ்:  யாருக்குமே விளங்காமல் ஸ்டேட்டஸ் போடுறது தான் இந்த புதிர் ஸ்டேட்டஸ்.
தன் வாழ்க்கையில் மட்டுமே பல கஷ்டங்கள்ன்னு புதிர் ஸ்டேட்டஸ் போடும் மக்கள்ஸ் இருக்கும் வரை அதில் கமெண்டுக்களுக்கு பஞ்சமே இருக்காது. பொதுவாக கீழ்க்கண்டவாறு இருக்கும்:
  1.  "why me? why only me?" -ஹை.. ஜாலி.. உனக்கெல்லாம் நல்லா வேணும்!
  2. It happened to me again (என்ன எழவு நடந்ததுன்னு சொல்லலாம் இல்லே? மாட்டாங்க, நாம போய் என்னாச்சுப்பான்னு கேக்கணும் இல்லே? அப்போத்தானே கல்லா நிறையும்?)
  3. ”எனக்கு விமோசனமே இல்லையா?” - டேய் எருமை, இப்படியெல்லாம் ஸ்டேட்டஸ் போட்டா உனக்கெப்படி டா விமோச்சனம் கிடைக்கும்?
  4. எங்க வீட்டுல மட்டும் தான் பவர் போயிருக்கு sent from blackberry phone என்று வரும்! அந்த த்ரெட்டை முழுவதும் எக்ஸ்பாண்ட் பண்ணி பார்த்தா, எல்லாருமே, ”ஆமா, எங்க வீட்டுலேயும் இல்லே”ன்னு சொல்லி இருப்பாங்க! யாரு வீட்டுலேயுமே எப்பவுமே பவரே இல்லைடா வெண்ணைகளா!. 
இந்த புதிர் ஸ்டேட்டஸின் ஸிக்னிஃபிக்கன்ஸ் என்னன்னா, நாம என்ன சொல்றோம்ன்னு யாருக்குமே புரியக்கூடாது.. என்னாச்சு என்னாச்சுன்னு அவங்களை நாம கேக்க வைக்கணும்- அதான் இருக்கு விசேஷம்.

2. சினிமாப் புதிர் ஸ்டேட்டஸ் - இதை அரட்டைக்கச்சேரி என்றும் சொல்லலாம். கி.மு வில் வந்த மிக சொதப்பலான ஆனால் அதிக பில்டப்புடன் வந்து பல்பு பலதும் வாங்கிய படங்களின் பெயர்களை புதிர்களாக வெளியிட்டு - அதாவது முதல் எழுத்து , கடைசி எழுத்து, மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை போட்டோம்னா கமெண்டு கல்லா கட்டலாம்!  (எங்கள் ப்ளாகின் கவனத்துக்கு : - இது யாரையும் குறிப்பிட்டு சொல்வது அல்ல!ஐ.பி.எல் வந்தததனால் என்னை அரட்டைக் கச்சேரியில் சேர்த்துக்கொள்வதில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் இது எழுதப்படவில்லை ;-))


3.மடத்தனமாக உளறும் ஸ்டேட்டஸ் - ஏதாவது ஒரு  ஃபோட்டோவின் நெகட்டிவ்வை எடுத்துக்கணும். ஏதாவது ஒரு பகுதியை பெயிண்டில் போட்டு வட்டமாகவோ செவ்வகமாகவோ வரைஞ்சு சிவப்பில் ஒரு புள்ளி வெச்சுக்கணும். அப்புறம் அது பக்கத்திலேயே இப்படி எழுதணும் “உலகத்திலேயே.. அவ்ளோ ஏன் இந்த யூனிவர்ஸ்லேயே முதல் தரமா அதிசியத்தை பார்க்கப் போறீங்க. என்னவா? கீழ்க்கண்ட  படத்தை(?!!!) உடனடியாக லைக்குங்கள். அப்படியே ஷேர் செய்யுங்கள். அப்புறம் “நான் லூஸ்” என்று கமெண்டுங்கள். இப்போ என்ன ஆகுதுன்னு மட்டும் பாருங்க..நீங்க அசந்துருவீங்க.. சான்ஸே இல்லே” போல பேத்தலாக ஏதாவது எழுதவும். அப்புறம் என்ன, சும்ம்மா களை

கட்டும் கமெண்டு கல்லா!

4. ஃபோட்டோ ஸ்டேட்டஸ் -  அடுத்தபடியாக ஏதாவது ஒரு பழைய ப்ளாக் அண்டு ஒயிட் ஃபோட்டோவை ஸ்கான் செய்யவும்.. அதுல யார் இருக்காங்கங்கறதெல்லாம் முக்கியம் இல்லே.. அது உங்க பக்கத்து வீட்டு பையனின் கஸினாகக்கூட இருக்கலாம். அதை அப்லோட் பண்ணிட்டு, "இது யாருன்னு கண்டுபிடிங்க"ன்னு போடணும்.. அப்புறம் என்ன, எல்லாருமே சச்சின் தான்/ தோனி தான்னு சொல்லி சண்டை போட்டுப்பாய்ங்க.. அப்புறம் நமக்கென்ன? கல்லா கன ஜோர் தானே? 

5. சிம்ப்பதி ஸ்டேட்டஸ் - இந்த கல்லா கட்டுவதற்கு முக்கியமான தேவை சக நண்பர்களின் கருத்தொருமித்த கன்ஸெண்ட்.. அதுனால ஜெனரிக்கா ஏதாவது சாதா ஸ்டேட்டஸ் போட்டாலும் போதும்.. சண்டே அன்னிக்கி ப்ரைம் டைமில் டீ.வியில் போடும் த்ராபையான சினிமாக்கள்/ நிகழ்ச்சிகள் பத்தி போட்டா, வீட்டில் டீ.வியினால் நொந்து போய் ஃபேஸ்புக்கில் வரும் சக விக்டிம்ஸ் எல்லாம் வந்து கமெண்டி புலம்புவார்கள். அப்புறம் என்ன? சில்லறை நிறை நிறை தான். 

6. செலிப்ரிட்டி ஸ்டேட்டஸ் -  டீ.வியில் கமலஹாசன், இளையராஜா, பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ் போன்றோர் வேலை செய்த படங்களை போட்டால், அதைப் பற்றி சிலாகித்து உடனே ஒரு டிஸ்கஷனை ஆரம்பியுங்க.. கல்லா... படு ஃபுல்லா கலெக்ட் ஆகும்.

போதும்ன்னு நினைக்கறேன்.. இதுக்கே எத்தனை கல்லு வந்து விழப்போறதோ தெரியலை! இத்துடன் இந்த கல்லா நிறைவடைகிறது... மீண்டும்... அய்யோ அடி தாங்கலை.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்...
 
Related Posts with Thumbnails