Pages

Tuesday, July 13, 2010

குழலினிது யாழினிது என்பர்....

இரண்டரையே வயது தான். குழந்தைகள் எவ்ளோ பேச்சு பேசுறாங்க? ஆச்சரியமா இருக்கு!
அருண் வருண் பேசும் சில பேச்சுக்கள் இங்கே உங்களுக்காக

1.வருண் எப்போவும் டீ.வீ வைத்திருக்கும் டேபிள் மேல் ஏறி துஷ்டத்தனம் செய்வான். அவனை அங்கிருந்து தூக்கி இறக்கிவிட்டுண்டே இருந்தார் என் மச்சினர். ஒரு பொம்மை டெலிஃபோனை எடுத்து, வருண் சொல்றான்,” ஹலோ போலீஸா? எங்கப்பா இங்கே ரொம்ப வெஸனம்(!!!) பண்றார், அவரை வந்து பிடிச்சுண்டு போங்கோ”

அருஞ்சொற்பொருள்:

வெஸனம் = விஷமம்


2.அம்மா:”அருண்,  இப்போ பாரேன், வருண் பாப்பா தோசை சாப்பிட போறான்....”
அருண்: “நானக்கு????”

அருஞ்சொற்பொருள்:
நானக்கு = எனக்கு

3.நான்: “வருண் அதை அங்கே வைக்கக்கூடாது. ”
வருண்: ”அதை அங்கே வைய க்கூடணும்”

4.நான்: ”அருண் அதை எடுக்காதே!!! அங்கேயே வெச்சுடு.
அருண்: ”அதை அங்கே வைக்கக்குடாது”


5.அருண் பாப்பாவுக்கு சட்டை பட்டன் போடுறதுன்னா ரொம்ப பிடித்தமான வேலை. தாத்தா வெளீல கிளம்பினா அவன் தான் சட்டை பட்டன் போட்டு விடுவான். அன்னிக்கி அப்படித்தான் தாத்தாவுக்கு பட்டன் போட்டு விட்டுண்டு இருந்தான். தாத்தா இவனுக்கு உதவிண்டு இருந்தார். இவனுக்கு முன்னாடி தாத்தாவே ஒருவேளை பட்டன் போட்டுடுவாரோன்னு கோவிச்சுண்டு தாத்தாவை, டாய் டாய் டாய்ன்னு கத்திண்டே இவன் பட்டன் போட்டுக்கறான்!!!


6.தாத்தா: ”ஐய்யோ, என் கண்ணாடி.. அதை என்கிட்டே குடுத்துடு வருண், வேண்டாம்மா”
வருண்: இந்த கண்ணாடி வேண்டாம் தாத்தா, இது ஆய், நான் உங்களுக்கு வேற வாங்கித்தரேன். (!!!???!!!)

Monday, July 5, 2010

வருண லீலைகள்

சென்ற பதிவில் என் தங்கை மணியின் ரெட்டை வால்ஸ் அருண் வருண் பத்தி சொல்லி இருந்தேன். ரெண்டரை வயது ரெட்டை வாண்டுக்கள். இவங்களைப்பத்தி ஒரு பழைய பதிவு கூட எழுதி இருக்கேன்.

இந்த ரெண்டு பேருக்கும் என்னிடம் ரொம்ப பிடித்த விஷயமே என்னுடைய எக்கோலேக் பெட்டி தான். அவர்கள் உயரத்தை விட சற்றே உயரமான தள்ளும் வசதியுடன் கூடிய பெட்டி. அதுக்கு பெய்யப்பா பெட்டின்னு பேர் வெச்சிருக்காங்க. .

அந்த பெட்டி மேல வருணுக்கு பயங்கரமான கண். எப்போப்பார்த்தாலும் அதை உருட்டி விளையாடுவான். இல்லாட்டி கீழே படுக்க போட்டு இருந்தா, அதன் மேல ஏறி குதி குதின்னு குதிப்பது. இதே தான் வேலை.
அன்னிக்கு எங்கேயோ போயிட்டு வந்து உடை மாற்றிக்கலாம்ன்னு பெட்டியை திறந்தப்போ ரெண்டு வாண்டும் என்கூடவே வந்திடுத்து. நானும் அதை லாக் பண்ணாம மூடி வெச்சுட்டு, சமர்த்தா இருங்கோன்னு இவர்களை வார்ன் பண்ணிட்டுத்தான் ட்ரெஸ் சேஞ்சு பண்ணிக்க போனேன். வந்து பார்த்தப்போ என் தலை 360 டிகிரியில சுத்திடுத்து!

என் பெட்டி அலங்கோலமா திறந்து கிடக்கு.
ட்ரை வாஷ் பண்ணி வெச்சிருந்த பட்டுப்புடவை எல்லாம் கீழே சிதறி கிடக்கு. மாத்திரைகள் ஒரு பக்கம் இறைஞ்சு கிடக்கு.
துணிகள் எல்லாம் இங்கொண்ணும் அங்கொண்ணுமாக வீடெல்லாம் பரப்பப்பட்டு சிலது நைனா சுருணைத்துணி போல இருக்குன்னு சொல்லிட்டு கொல்லைப்புறத்துக்கு எடுத்துண்டு போயிண்டு இருக்கார்.
பெட்டியை காலி பண்ணின சந்தோஷத்தில் வருண் அதுக்குள்ளே இறங்கி கன கார்யமா மூச்சா போயிண்டு இருந்தான்!!!. அருண் அந்தப்பக்கம் என் நகைப்பெட்டியில் இருந்த மாலையை எடுத்து அழகு பார்த்துண்டு இருந்தான்!!!
எனக்கு அழுகை அழுகையா வந்துடுத்து.
அம்மாஆ.......ன்னு கத்தினேன். என்னாச்சுன்னு அம்மா ஓடி வந்து பார்த்து, ச்சீ அசடு, இதெல்லாம் இவங்க திறமைக்கு ஒண்ணுமே இல்லை. இன்னும் பாருன்னு சொல்லிண்டே குழந்தையை நகர்த்தி டயப்பர் கட்டி மூச்சா துடைத்து, வீடு பூரா இரைஞ்ச துணிகளை எல்லாம் தேடி எடுத்துண்டு வந்து மடிச்சு வைச்சு உஸ்ஸ்ஸ்!! தாவு தீந்து போயிடுத்து!
இதே மாதிரி கிச்சனில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கீழே ஒரு ஸ்வீப்பில் இறைத்தது, அம்மா சாப்பிடும் போது 270 டிகிரியில் கையை சுத்தி தட்டை கீழே தள்ளி விடுவது, பூவை ஒரே செகண்டில் பிய்த்துப்போடுவது, புத்தும் பது சினேகிதி அவள் விகடனைக்கொண்டு எப்படி வீடு துடைப்பது உட்பட பல ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் தெரிஞ்சு வெச்சிருக்கான் வருண். இதுக்கெல்லாம் சப்போர்டிங் சிங்கிடி அருண். தம்பி செய்யறது எதுவா இருந்தாலும் சரியாத்தான் இருக்கும்ன்னு ஓடி வந்து கூட நின்னுப்பான். ஏதாவது ஹெல்ப் வேணுமா என்பது போல நின்னுண்டு கனகார்யமா துஷ்டத்தனத்துக்கு துணை போவான்.
வருணுக்கு ஷவர், போலீஸ் இது ரெண்டும் தான் பயம். எப்போவும் போலீஸ் வரப்போறதுன்னு சொல்லியாச்சுன்னா போதும், அடங்கி ஒடுங்கி அமைதி ஆயிடுறான். மத்தபடி ஃபுல் ஃபார்ம்ல ரகளை தொடருது!

போன வருஷம் வாஷ் பேசின்கிட்டே மூஞ்சி அலம்பிண்டு இருக்கும்போது எங்கம்மாவின் அழுகுரல் கேட்டது. என்னன்னு கொஞ்சம் காதைத்தீட்டிண்டு கேட்டா, வருண் வருண்ன்னு சொல்லி ஏதோ பேசிண்டு இருக்காங்க.
கிச்சனுக்குள்ளே எட்டிப்பார்த்தா 1 வயசு வருண் பாப்பாவுக்கு இணையா எங்கம்மா கீழே முட்டி போட்டு உக்காந்துண்டு ”என்னால முடியலை டா வருண், நீ ரொம்ப துஷ்டத்தனம் பண்றே”ன்னு சொல்லி கண்ல தண்ணி! என்னம்மா ஆச்சுன்னு கேக்கறேன், பாருடீ, டம்ளர் டம்ளரா  தண்ணி எடுத்துண்டு வந்து திறந்திருக்கும் அரிசி மூட்டைக்குள்ளே கொட்டிண்டு இருக்கான்னு சொன்னாங்க. இதெல்லாம் ஒண்ணுமே புரியாம வருண் திரு திருன்னு முழிச்சுண்டு இருக்கான். இந்த சம்பவத்தை இப்போ நினைச்சாலும் களுக்குன்னு சிரிச்சுடுவேன்.

சென்னை விஜயம்

சென்னைக்கு எப்போடா வருவோம், அருண் வருணை எப்போடா பார்ப்போம்ன்னு துடியா துடிச்சுண்டு இருந்தேன்.நான் சென்னை வருவதே எங்கம்மா அப்பாவுக்கு தெரியாது. தங்கைமணியிடம் அடுத்த வாரம் தான் வரேன்னு சொல்லி இருந்தேன். அதுனால எங்க மாமாவும் பாலாஜியும் என்னை ஏர்ப்போர்ட்டுல வந்து பிக்கப் பண்ணினது இவங்களுக்கு தெரியாது.சென்னை விமான நிலையத்துல இறங்கிட்டு, பயண நேரத்தை விடவும் அதிக நேரம் பேக்கேஜ் க்லெயிமுக்காக காத்துண்டு இருந்துட்டு வெளியே போனப்போ லேசா ஜிலு ஜிலு காத்து. மழையாம். ரோடுகள்ல அங்கங்கே தண்ணி.
"புத்தும் புது காலை பொன்னிற வேளை"ன்னு பாட்டெல்லாம் பாடிண்டே தான் கால் டாக்ஸியிலே ஏறினேன். அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை பாதி வழியிலே கார் நின்னு போயிடுத்து.கொஞ்ச நேரம் அர்த்த ராத்திரி ஏதோ ஒரு பூட்டப்பட்ட கடை வாசல்ல உக்காந்து ராவணனை பத்தி விவாதிச்சுட்டு, மறுபடியும் வண்டியில ஏறினா வீட்டுக்கு ரெண்டு ஃபர்லாங்குக்கு முன்னாடி மறுபடியும் ரிப்பேர். மாமா கோபத்தோட ட்ரைவரை திட்டிட்டு, பெட்டியை இழுத்துண்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சுட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. தூக்கக்கலக்கம். பாலாஜி (வழக்கம் போல) என் ஹாண்டு பேக்கை (ஹேண்ட் லக்கேஜ் இல்லை, வானிட்டி பேக்)மட்டும் எடுத்துண்டு வந்தான். ஹிஹி.. அவன் என் டைப்பு. நான் அதுவும் இல்லாம நடந்தேன்.

வாசலில் செல்லவ்வா தூக்கம் வராம ஒரு சேர் போட்டுண்டு உக்காந்து இருந்தாங்க. அத்தைக்கு முதல் நாள் ராத்திரி தான் நான் வரதைப்பத்தி  சொல்லி இருக்காங்க. அவ்வாவுக்கு இன்னமும் தெரியாதாம். மாமாவும் பாலாஜியும் தியேட்டரில் ராவணன் பார்க்க போயிருப்பதாக அத்தை அளந்து விட்டு இருந்தார் போல இருக்கு. அவ்வாவுக்கு என்னைப்பார்த்து, ஒண்ணுமே புரியலை. அவ்வா நாங்கள் பெட்டியும் வருவதைப்பாத்துட்டு,  எழுந்து நின்னு கண்ணைச்சுருக்கிண்டு யாரு யாருன்னு பார்த்து இவளா? இவளான்னு ஒரே சந்தோஷக்கூக்குரல். கட்டிண்டு கொஞ்ச நேரம் அவ்வாகிட்டே செல்லம் கொஞ்சிட்டு உள்ளே போனோம். ஒரு அரை மணி நேரம் நாங்க பேசிண்டு இருந்தோம். பாலாஜிக்கு பசி முத்தி வயலின் வாசிக்க ஆரம்பிச்சுட்டான். (அதாவது மூக்குலேயே பேசி புலம்புறது) மெதுவா அவனுக்காக கொண்டு வந்திருந்த வெஜிட்டபிள் புலாவை எடுத்து கொடுத்து சூடாக்கி தர சொன்னேன். நான் பண்ணி எடுத்துண்டு போன பட்சணத்தை எல்லாம் செல்லவ்வாவும் மாமாவும் வேலிடேட் பண்ணிண்டு இருந்தாங்க. இது சூப்பர் இது சுமார் தான்.. இப்படி மாமா சொல்ல, என்ன இருந்தாலும் இவ்ளோ எல்லாம் தனியாளா பண்ணி எடுத்துண்டு வந்திருக்காளே பாவம்ன்னு அவ்வா நெஞ்சுருக, எனக்கு ஒரே ஜாலியா இருந்தது. சுமார் 3.30 மணி அளவுல கண் இதுக்கும் மேல என்னால முடியாதுன்னு கதற, நான் போய் படுத்துண்டேன். இட்லி சாப்பிட சொல்லி தூக்கத்துக்கு நடுவுல கூட அவ்வா எழுப்பினதா நினைவு. சரியா தெரியலை!
படுத்துண்ட உடனே அவ்வா ஸ்கிரீனை ஒரு காரணம் சொல்லி இழுக்க அத்தை, வேறு காரணம் சொல்லி மூட.. ஒரே ரகளை.. கொஞ்ச நேரம் விவாதிச்சுண்டு இருந்தாங்க.. அதுக்குள்ள நான்.. ஹா....வ்...

ஒரு 7 மணி இருக்கும். படார்ன்னு எழுந்தேன். இந்த வீட்டுல இருந்து அங்கே போகணுமே! எத்தனை மணிக்கு புறப்படலாம்னு யோசிச்சு குளிச்சு சாப்பிட்டு வயலின் பாலாஜியை கிளப்பி உஸ்ஸ்....அவ்வா அத்தை தடபுடலா சமைச்சு வெச்சிருந்தாங்க. நான் நினைக்கிறேன் அவங்க 4 மணில இருந்து தூங்கியே இருக்க மாட்டாங்க. முதல் நாள் ராத்திரி ஆரம்பிச்சாக்கூட இவ்ளோ ஐட்டம்ஸ் செஞ்சிருக்க முடியாதுப்பா!

 9.30 மணிக்கு சுபயோக சுப முஹூர்த்தத்திலே கிளம்பினோம். அது ஒரு குட்டியூண்டு இண்டிக்கா வண்டி, பக்கத்து சீட்டில் என் எக்கோலேக் பெட்டியை சாயாம பார்த்துண்டே ஞாயிறு ட்ராஃபிக்கில் பிரேக் போட்டு போட்டு
சுமார் 2 மணி நேரத்துல தங்கை மணி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

மெதுவா வண்டியை லிஃப்டு கிட்டே நிறுத்த சொல்லிட்டு, சாமானத்தை எல்லாம் மெதுவா லிஃப்டுக்குள்ளே ஏத்தி, முதல் மாடியில இறக்கி வெச்சு, சத்தமில்லாம பாலாஜியை அனுப்பினேன். சாமான் எல்லாம் எடுத்து வைக்கும்போதே வீல் வீல்ன்னு வருண் சத்தம் காதைப்பிளந்தது. ஒரே ரகளை போல இருக்குன்னு நினைச்சுண்டேன்.

கதவு திறந்தது, முதல்ல பாலாஜி உள்ளே போயிட்டான். நான் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு, மெதுவா மறுபடியும் தட்ட, தங்கைமணி கணவர் பாலாஜியுடன் யாரோ வந்திருப்பார்களோன்னு நினைச்சுண்டு, சாரி சாரின்னு சொல்லிண்டே கதவை திறக்க, ஆன்னு ஒரு சத்தம் போட்டார்.

எங்கம்மா வந்து எட்டிப்பார்த்து,  நீயான்னு ஒரே கத்தல்! நைனா ஓடி வந்து நீ அடுத்த வாரம் தானே வரேன்னு சொன்னே? எப்படி இப்போவே வந்தேன்னு கேள்வியின் நாயகன் மாதிரி கேக்க ஆரம்பிச்சுட்டார். தங்கை மணி ஏதோ உலக அழகி பட்டம் கிடைச்ச சுஷ்மிதா சென் மாதிரி கைகளை ரெண்டு கன்னத்திலும் வெச்சுண்டு ”ஆ”ன்னு கத்திண்டே இருந்தா.. யாரும் அவளை கண்டுக்கலை.

இவ்ளோ களேபரத்திலும் நான் யாரையுமே பொருட்படுத்தலை. நான் பாட்டுக்க என் கடமையை செஞ்சுண்டு இருந்தேன். நான் வந்ததே அருண் வருணை பார்க்கத்தான். அவங்க ரெண்டு பேரையும் கண்ணிமைக்காமல் பார்த்துண்டு இருந்தேனா, முதல்ல கொஞ்சம் பயம், சந்தேகம், கொஞ்சூண்டு செல்லம், சிரிப்பு, ஒரு வருஷம் கழிச்சு பார்க்கறதுனால ஒரு அன்னிய உணர்வு எல்லாமாக ரெண்டு பேரும் என்னை பார்த்துண்டே இருந்தாங்க.
நான் உள்ளே வரும்போது அதுல ஒருத்தன் சைக்கிளை ஓட்டிண்டு இருந்தான். இன்னொருத்தன் சோஃபா மேல குதிச்சுண்டு இருந்தான். இறங்கி அவங்க அம்மா பின்னாடி ஒளிஞ்சுண்டான். எங்கம்மா விடாம அரிச்சு பிடுங்கி எப்படி வந்தே, எப்போ வந்தே.. என்ன சர்ப்ரைஸ் இப்படி எல்லாம்ன்னு ஒரே நச்சு.

ஒரு பத்து கேள்வி கேட்டுட்டு டேரி மறுபடியும் தன் வேலையை பார்க்க போயிட்டார். என்ன கேள்வியா? அதாங்க என்ன ஃப்ளைட்? கூட எத்தனை பேர் வந்தாங்க?எனக்கு எத்தனாவது ’ரோ’ல சீட்? ஹெட்செட்டுக்கு எவ்ளோ குடுக்கணும், கேபின் க்ரூவுக்கு என்ன கலர் யூனிஃபார்ம் போன்ற அரிய கேள்விகளா தொடுத்து கேட்டுட்டு போயிட்டார்.

ரெண்டு நாள் ஆகியும் அம்மா தான் நம்பவே இல்லை! ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தி அருண் அண்ட் வருண் இப்போ பெய்யம்மா வோட பெஸ்டு ஃப்ரென்ட்ஸ்!!!!
Related Posts with Thumbnails