Pages

Wednesday, November 22, 2017

Biiiiiiiigg fun!

Duday's memareez on paacebuk
1985ன்னு ஞாபகம். விஜயவாடா வாசம்.  பிக்ஃபன் வாங்கி சாப்பிடுவோம். bubble விட தெரியாது ரெண்டு பேருக்கும். ஆனா மேக்ஸிமம் மென்னுட்டுத்தான் அதை கட்டிலுக்கடியில, ட்ரெஸ்ஸிங் டேபிள் ஸ்டூலுக்கு சைடுல ஒட்டி வைக்கறது. ஸ்கூல்லன இருக்கவே இருக்கு பெஞ்சு!

எனக்கு செம்ம்ம்மையா அடி கிடைக்கும்போது மை லைஃப் எனிமி, “வேணுங்கட்டிக்கி வேணூம்”ன்னு கத்திண்டே குதிச்சு, கை தட்டி ரகளை பண்ணுவா.  ஆனா நான் இருக்கேனே.. பரம சாது.. மனசுல கல்மிஷம் ஒண்ணும் இல்லை எனக்கு. கை தட்டி குதிச்சு வேணுங்கட்டிக்கி வேணும்ன்னு எல்லாம் சத்தம் போட மாட்டேன்.. உள்ளூர ரசிச்சு சிரிச்சுப்பேன். அப்படிப்பட்ட மனித குல மாணிக்கமாகிய நான்... யாருய்யா மூஞ்சிக்கி நேரா வந்து துப்பறது? போங்கய்யா தள்ளி!

இந்த பப்பிள்கம்மை மெல்லும்போது, இடையில் வேறு ஏதாவது திங்கவோ குடிக்கவோ நேர்ந்தால், அதை ஒரு தட்டில் ஒட்டி வைச்சுட்டு, அந்த வேலையை முடிச்சப்புறம் அதை திருப்பி எடுத்து போட்டு மெல்லுவது..  அதுல என்ன பிரச்சினைன்னா ரெண்டு பேரும் ஒரே பச்சைக்கலர் பிக்ஃபன்னை ஒரே தட்டுல மென்னுட்டு வைப்போம். அப்படி ரெஸ்யூம் பண்ணப்படும் போது”அம்மா இவ என் பப்பிள்கம்மை எடுத்துண்டுட்டாம்மா” என்ற பழிச்சொல்லுக்கு நான் கிட்டத்தெட்ட அடுத்த 20 வருஷம் வரை ஆளேனேன்னு உங்களுக்கு எல்லாம் சொல்லியா தெரியணும்? நானா இருக்கக்கொண்டு அந்த மாதிரி ஒரு கிராதக தங்கையுடன் ஒரே குடும்பத்தில் இருந்தேன். வேற யாராவது இருந்திருந்தால், உடனே டிக்கெட் வாங்கிண்டு செல்வராகவன் படத்துக்கு போயிருப்பாங்க!

இப்படித்தான் ஒரு நாள் சாயந்திரம் பப்பிள்கம் வாங்கிண்டு வந்து மென்னுண்டு இருந்தோம்.. டீவீ பார்த்துட்டு, டின்னர்க்கப்புறம் நான் துப்பிட்டு படுத்துண்டேன். இது என்ன பண்ணித்துன்னு தெரியலை. காத்தால இது முடியெல்லாம் தலைகாணியில ஒட்டிண்டு .. ஹாஹா..ஹேஹே.. ஹூ ஹூ.. ஹைய்ய்ய்ய்யா.. ஜாலி! அப்படீன்னு பி.எஸ் வீரப்பா ரேஞ்சுக்கு சிரிச்சுண்டேன்(மனசுக்குள்ளே தான்).

தி மதர் தெரஸா பயந்து ஓடி வந்து பார்த்தாங்க. என்னம்மா ஆச்சுன்னு ஒரே கவலை துக்கம். அது தலைகாணியை தலைமுடியில இருந்து பிய்க்க முயற்சி பண்ணிண்டு இருந்தது. ஒரே அழுகை. அது தூங்கறதுக்கு முன்னாடி பப்பிள் கம்மை துப்பலை. அதனால வாயில இருந்த பபிள் கம் தூக்கத்தில வெளியில வந்து ஈஷ் பூஷ்ன்னு தலைகாணிக்கும் அவள் தலைக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடுத்து! இவள் முடியும் அந்த தலைகாணியும் இணை பிரியா கணவன் மனைவி ஆயிடுத்து.

ஆனா அம்மாக்கு கெட்ட புத்தி. அந்த அன்பு ஜோடியை பிரிச்சே தீரணும்ன்னு கத்திரிக்கோலை எடுத்துண்டு வந்து நறுக் நறுக்குன்னு சைடு வாக்குல தலைகாணியிடம் அன்பு கொண்ட முடியை வெட்டி விட்டுட்டாங்க.. மீதம் உருப்படியா இருந்த முடியில ஒரே ஈஷ் பூஷ்ன்னு பப்பிள்கம் ஒட்டிண்டு இருக்க, அதையெல்லாம் மஞ்சள் ஹேலோ ஷாம்பூ கொண்டு மூணு நாலு வாட்டி அலசி, இனிமேல் பப்பிள்கம்மே வாண்டாம்ன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டாங்க.

அப்பெல்லாம் நாங்க ரெண்டு பேருமே ரொம்ப முடி கான்ஷியஸ். அய்யிய்யே.. என்ன இப்படி இருக்கு இவ முடின்னு ரொம்ப கிண்டல் அடிச்சேன். இதைக் கவனிச்சு ஆறே வயசுதான்னாலும் குமுறிக்குமுறி அழுதா.. என் நீண்ட முடியை பாத்து ஒரே வயத்தெரிச்சல் ஆஃப் தி! இத இத இதத்தானே நான் எதிர்ப்பார்த்தேன்?

நாள் பட, சைட்ல கொஞ்சூண்டு முடி ரொம்பவே அழகா காதுக்கிட்ட விழ ஆரம்பிச்சு அது ஒரு ஸ்டைலா ஆயிடுத்து. அப்புறம் என்ன பழைய படி அவளுக்குத்தான் மவுஸு.. நான்ஸென்ஸ்!!!
Related Posts with Thumbnails