Pages

Thursday, June 13, 2019

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

மருத மல்லி மருத மல்லி

நமக்கு தான் பூ கட்ட வராதே, இப்போ ஜூன் மாசம் பூ மலிவா இருக்கேன்னு பத்து ரூபாய்க்கி, (ஆமா, கொஞ்சம் அதிகம் தான், நான் கட்டுற அழகுக்கு) கட்டி பளகுவோமேன்னு சொல்லிட்டு உதிரிமல்லி வாங்கினேன்

அதுல பாருங்க, பூ வாங்கினேனேயொழிய பூ கட்ட நல்ல நூல் இல்லை வீட்டுல. அம்மாவோட ஒய்ட் டப்பாவுக்குள்ள இன்னும் பேரே கண்டுபிடிக்கப்படாத கலர்களில கோடிக்கணக்கான நூல்கண்டுகளும் பாபின்களும் இருக்கும். இருந்தாலும் நான் பூ கட்டி பழக ஒரு நூல் கூட ஸ்லாக்கியமா கிடைக்கலை! இதுவே வாழை நாரா இருந்தா அந்த ஃப்ரிக்‌ஷனுக்கு ஜோரா கட்டமுடியும்ங்கற பேஸிக் திங்க்கிங் இருக்கா இந்த பூ விக்கறவாளுக்கு? கும்மோணத்துல எல்லாம் என்னா சவரணை? அவாளே நூலும் கொடுத்துடறா.
இந்த ஒரு காரணத்துனால தான் என்னால  பூ சரியா கட்ட முடியலை.

(ஏய், யாரது ஆடதெரியாதவளுக்குன்னு கிகீக்கீன்னு சிரிச்சிண்டு? ஐ ஸீ யூ கெட்டவூட், ப்ளடி பிட்பாக்கேட்ஸ்)

இப்போ புதுசா என்ன பிரச்சினைன்னா நூல்கண்டு டப்பாவையே காணும். நம்மாத்துல ஒரு கரும்பச்சை பூ கட்டற நூல்கண்டு உண்டு. ஆனா அது வருஷா வருஷம் வீடு ஷிஃப்ட் பண்ணும்போது மட்டும் தான் கிடைக்கும். அப்பறம் அந்த மெஷின் ட்ராவுல த்ரெட் கட்டர், தையல் பிரிச்சிட்டர் (நானே சிந்திச்சு பேர் சூட்டினேன்) இதெல்லாம் கூட ஒரு கருப்பு நூல் இருந்தது. அதை யூஸ் பண்ணிண்டேன்.

பூ கட்டும் வைபவம் ஆரம்பிச்சேன்.ஸ்ட்ராஜிக் திங்கிங் முக்கியம் முதல்ல. அப்பறம் ப்ளானிங். தொராயமா எவ்வளோ பூ இருக்கலாம்ன்னு யோசிச்சேன். மேத்ஸ்ல ரொம்ப வீக் நான். அதுனால நூல் நீளம் ப்ளான் பண்ணிண்டு கட் பண்ணி மூணா மடிச்சு ரெடி பண்ணிண்டேன்.
அதென்னவோ நூலை வைச்சு கட்ட ஆரம்பிச்சப்போவே நாலு மணி நேரம் நான் ஏஸி காரில் நானூறு குலோமீட்டர் வேகத்தில்  பயணிச்சு ஹோட்டலுக்குள் லஞ்ச் சாப்பிட நுழையும் லேடீஸ் மாதிரி ஒரே குருவிச்சிக்கு.

பூவை மெள்ளமாவும் ஃபர்ம்மாவும் பிடிச்சுண்டு மேல்கீழா முதல்ல அரேஞ்ச் பண்ணி கெட்டி பண்ணிண்டேன். நூலை ஒரு சுழற்று சுழற்றி இன்னும் டைட் பண்ணிண்டு ஒரு நாட் போடணும். அவ்வளவ்தான். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் இல்லியோ?இதென்ன பிரமாதம்? எல்லாம் வந்துரும்.

முதல் ரெண்டு பூவை மேலும் கீழுமா வைச்சுண்டு ஒரு சுத்து சுத்தி, டைட் பண்ணினேனோ இல்லியோ, ரெண்டு பூவும் பாவம் நூலால் கழுத்து சரக்ன்னு  அறுக்கப்பட்டு, கில்லட்டீன்(Guillotine) பனிஷ்மெண்ட் கொடுத்தாப்புல இறந்து என் மடியில விழுந்துடுத்து. வேகமா அதை எடுத்து உச்சி மண்டையில தொராயமா சொருகி வைச்சுண்டேன். பின்னாடி வைச்சுக்க முடியில்லை, ஹேர்பின் தேடமுடியாது.

”இப்போ learn from your mistakes. Don’t overdo. மெதுவா சுத்தினாப்போறும். டைட்டா சுத்தினா கில்லட்டீன்
பனிஷ்மெண்ட் பூவுக்கு. அதுக்கு நீயே தொங்கேன்”னு மைண்ட்வாய்ஸ் பேட்வேட்ஸ்ல திட்டித்து.

சரி. இப்போ மெதுவா சுத்தி சர்வ ஜாக்கிரதையா பூவை பேலன்ஸ் பண்ணி நாட் போட்டேன். சக்க்ன்னு நின்னது பூ.”ஆஹ்ஹா.. தட்ஸிட். ஸோ ஸிம்பிள். ஆயிரம் பேரைக்கொன்னாத்தான் அரை வைத்தியன் ஆகமுடியும். அப்படித்தான் ரெண்டு பூவை தூக்குல போட்டாலும் சமர்த்தா கத்துண்டாச்சே நீ? வெல் டன். உன்னாலாகாததுமுண்டோ?” ன்னு சித்த முன்னாடி கழுவி ஊத்தின மைண்ட்வாய்ஸ் புகழாரம் சூட்ட,  உச்சி குளுந்தேன். எதுக்கும் உச்சி மண்டையில தொட்டுப்பார்த்துண்டேன். ரெண்டு மல்லியும் கரகம் மாதிரி ஏதோ நின்னுண்டு இருந்தது.

”இனி தினமும் ஒவ்வொரு பூ வாங்கிண்டு வந்து கட்டி பழகிடு. ஒரு நாள் சம்பங்கி, ஒரு நாள் சாமந்தி, ஒரு நாள் முல்லை, ஒரு நாள் ஜாதி, ஒரு நாள் ரோஜா, ஒரு நாள் வாழைப்பூ... தேவைப்பட்டா கோயம்பேடு கூட போய் வாங்கிக்கலாம். நோ பிராப்ளம். ஆனா தினமும் கட்டணும். எவ்ளோ தெரப்யூட்டிக் பாரேன்? நல்லது, கிறுக்கெல்லாம் தெளிஞ்சிரும். உனக்கு நட்டு டைட் ஆயிடும் ”அப்படீன்னெல்லாம் மைண்ட் வாய்ஸ் ஏகப்பட்ட லெக்சர். ”ச்சை! கேட்டனா இப்போ உன்னைய? ஒரு ஜதை பூவை பாலன்ஸ் பண்ணி நிக்க வைச்சிருக்கேன். அதுக்குள்ள கோயம்பேடா? சம்பங்கியா? சாமந்தியா? முதல்ல கிளம்பு நீய்யி! ”

அடுத்த ரெண்டு பூவை பக்கத்துல நிக்க வைச்சு பாலன்ஸ் பண்ணி நூல் சுத்தி கொண்டு வர்லாம்ன்னா நூல் சுத்த இடமில்லை. சரி பழைய ஃப்ரென்ட்ஸ் ரெண்டு பேரையும் அல்லேக்கா சேர்த்து நாலு பூவுக்கும் சேர்த்து நூல் சுத்தி நாட் போட்டேன். திக்கா அழகா இருந்தது. நடுவுல இடம் விட்டா சென்னையில பூ வியாபாரிகள் கட்டின மாதிரி ஆயிடும். மூணாவது ஜதை பூவை அட்ஜஸ்ட் பண்ணி நிக்க வைச்சேன். கொஞ்சூன்ன்ன்ண்டு இடம் விட்டு  நூலை சுத்தி மெதுவா நாட்ட் போட்டுண்டே இருக்கேன்.... அதுக்குள்ள என்ன தோணித்தோ, உணர்ச்சி வசப்பட்டு ஃபர்ஸ்ட் கட்டினேனோல்லியோ அந்த ரெண்டு பூவும் ஆண்டிக்ளாக்வைஸ் அன்வைண்ட் ஆகி, ரிவர்ஸ் கியர்ல தானா திரும்பி மேலேந்து தொபுக்கடீர்ன்னு கீழ குதிச்சு தற்கொலை பண்ணிண்டுடுத்து.

அட ராமா.. நாட் டைட்டா போட்டா கில்லடைன் பனிஷ்மெண்ட். நாட்டை கொஞ்சம் நிதானமா போட்டா தானா  குதிச்சு தற்கொலை! எப்படி இருந்தாலும் இந்த மல்லிப்பூவின் நான் கோஆப்பரேஷன் மூவ்மெண்ட் என்னை ரொம்பவே பாதிச்சது. ஒரு வேளை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மிருகம் இருக்கறாப்புல ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பூ இருக்குமோ? ஒரு வேளை என் ராசிக்குரிய பூவைக் கண்டுபிடிச்சு கட்டத்தான் என்னால முடியுமோ? ஒரு வேளை என் ராசிக்குரிய பூ காலிஃபிளவரானால்? ஓ மை காட்! ஏன் எதுவுமே ஒர்க்கவுட் ஆகறதில்லை?

குத்து மதிப்பா ஒரு எட்டு  பூ கட்டிப் பார்த்தேன். நவக்கிரஹம் மாதிரி ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு திசையில இருந்தது. (பார்க்க படம்)

நாட் பேட் ஆக்சுவலி!

அடப்போங்கைய்யா..

மரியாதையா டிராவை குடாய்ஞ்சு பெரிய ஊசி எடுத்தேன். அதே நூலை போட்டு கடகடன்னு கோர்த்துட்டேன். செண்டு மல்லி ரெடி. ”போறும்போ. தினமும் நாலு பூ மட்டும் கட்டு. உன்னால எல்லாம் எதுவும் முடியாது. நீ ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை” - மறுபடியும் மைண்ட் வாய்ஸின் கழுவி ஊத்தல்!

No comments:

Related Posts with Thumbnails