உன் காலடி மட்டும் தருவாய் தாயே .. ஸ்வர்க்கம் என்பது பொய்யே...
லக்ஷ்மி என்ற பெண், மும்பயில், புதிதாக அந்த குடியிருப்பில் வந்திருந்தார். அக்கம்பக்கம் யாரையும் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.கணவரின் ஆஃபீஸ் குவார்ட்டர்ஸில், ஏழாவது மாடியில் அந்த பெரிய வீடு. டபுள் பெட்ரூம் வீட்டில் தனித்து இருந்த ஒரு மதிய வேளையில் வெளியில் அழும் குரல் கேட்டு கதவைத்திறந்து பார்த்தார். அங்கு அதே பக்கம் படிகளுக்கு அப்பால் இருந்த வீட்டின் பெண் மிகவும் பயந்து அழுதுகொண்டிருந்தார்.
மொழி தெரிந்ததால், என்ன ஏது என்று அந்தப்பெண்ணிடம் விசாரித்தார். அவருடைய 7 வயது மனநிலை குன்றிய மகனை வீட்டில் விட்டு விட்டு இவர் காய்கறி வாங்க இறங்கி இருக்கிறார். ஆனால் சாவியை உள்ளே வைத்து கதவை வெறுமனே சாத்தி இருக்கிறார்.அது ஆட்டோலாக் ஆகிவிட்டது. இனி அந்த சிறுவன் எழ வேண்டும். அவன் எழுந்தால் எழலாம், இல்லாவிட்டால் இல்லை, பால்கனி கதவு திறந்து இருந்தது. அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் நான் என்ன செய்வேன். அவனுக்கு ஒண்ணும் தெரியாதே என்று பரிதாபமாக அழுதார் அந்தப்பெண். இன்னொறு சாவி அவள் கணவனிடம் இருந்த்து அவர் மும்பாயின் இன்னோர் கோடியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவர் வரும்வரை இந்தச்சிறுவன் எழாமல் இருக்க வேண்டும். கதவை வெளிப்புறம் சாத்தி தவறு செய்துவிட்டேன் என்று அந்தப்பெண் அழுது புரண்டாள். அனைவரும் கூடி, வாட்சுமேனைக்கூப்பிட்டு என்ன செய்யலாம் என்று புலம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால் லக்ஷ்மி மட்டும் எதுவும் பேசாமல் வீட்டுக்குள் போய்விட்டார்.
தனது பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தார். ஏழாவது மாடியில் இந்தப்பக்கம் இவர் வீட்டின் பால்கனி, அந்தப்பக்கம் அந்த மனவளம் குன்றிய சிறுவன் தூங்கிக்கொண்டிருக்கும் வீட்டின் பால்கனி. இடையில் ஒரு அடி அகலமேயுள்ள ஒரு குறுகலான ஒரு கான்கிரீட் பாத்தி இணைத்தது. கீழே பார்த்தால் தலை சுற்றும், தடுக்கி விழுந்தால் கோவிந்தா தான். ஆனால் லக்ஷ்மியோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் அந்த சிறுவனை நினைத்தபடி அந்த குறுகலான பாத்தியின் மேல் நடந்து சென்று அவர்கள் வீட்டு பால்கனியில் இறங்கி, உள்ளே சென்று உட்புறமாக பூட்டி இருந்த கதவைத்திறந்தார்.
வாசலில் குழுமி இருந்த அனைவரும் ஸ்தம்பித்தனர். அழுதுகொண்டிருந்த அந்த தாயின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ஓடி வந்து லக்ஷ்மியைக் கட்டித்தழுவினார். அந்தச்சிறுவன் அமைதியாய் உறங்கிக்கொண்டு இருந்தான். ஒரு ஆபத்தும் இல்லை. விஷயம் குடியிருப்பு முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இந்த வீர பெண்ணின் கணவருக்கு வெவ்வேறு கிளைகளிலிருந்து போன்கால்கள் வந்தன. எல்லோரும் வீரப்பெண்ணின் புகழ் பாடினர். பில்டிங் முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் பக்கத்து வீட்டுப்பெண் கண்ணீர் விட்டார். நன்றியுடன் அவர் ஒரு அழகான ஒளிநீரூற்று (Light fountain) பரிசளித்தார்.
சரி இப்போ விஷயத்துக்கு வர்றேன். அந்த வீரப்பெண் வேறு யாருமல்ல, என் அம்மா திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி தான். யாரோ ஒரு சிறுவனுக்காக தாய்மையின் உந்துதலால் தன்னுயிரையும் துச்சமாக நினைத்த இவர், பெற்ற குழந்தைகள் எங்களை எப்படி பார்த்துக்கொண்டிருப்பார்?
பதினாறே வயதில் திருமணம், வாழ்க்கையை ரசிக்கவேண்டிய வயதில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக சென்னையில் வாசம். தனியாக குடும்ப நிர்வாகம்,பொருளாதார தட்டுப்பாட்டிலும் ஒரு நிறைவு, இப்படித்தான் வளர்ந்தோம். சமயல்திறன்,பாட்டு, கோலம், தையல்,ஹிந்தி, இப்படி இவருக்கு பன்முகம். முழுக்க முழுக்க இவர் ஒரு செல்ஃப் மேட் வுமன். வாழ்க்கையில் தனக்கும் ஒரு மதிப்பு வேண்டும் என்று வயதுத்தடையின்றி பலவற்றைக்கற்றார். அதில் மிக முக்கியம் ஹிந்திப்பயிற்சி. எங்களுக்கு சொல்லித்தர படிக்க ஆரம்பித்தார். எங்களை விட முன்னேறி, பல குழந்தைகளுக்கு பிரியமான ஹிந்தி மிஸ் ஆனார். அம்மாவின் பயிற்சித்திறமையும் அன்பான கண்டிப்பும் பலரை கட்டிப்போட்டது.
இதே மாதிரி தன் போக்குவரத்தை பார்த்துக்கொள்ள தானே சைக்கிள் கற்றார். நான், என் தங்கை, அம்மா வீட்டைச்சுற்றி ஒரு ரவுண்டு போய்விட்டு வந்து அடுத்தவருக்கு தரவேண்டும். நாங்கள் மூவரும் இப்படித்தான் தெருவைச்சுற்றி ஓட்டி, சைக்கிள் கற்றுக்கொண்டோம். அது அம்மாவின் முறை. அம்மா போனார், இந்தப்பக்கமாக வருவார் என்று காத்திருந்தோம் அம்மாவைக்காணவில்லை. அபிரத்க்ஷிணமாகப்போய் தேடிப்பார்த்தால், அம்மா தெருவிற்கப்பால் இருந்த ஒரு மேட்டில் விழுந்து காலில் ரத்தம் கொட்டிக்கொண்டு இருந்தது. அப்படியாவது சைக்கிளை விட்டாரா? விழுந்துட்டா சைக்கிளை விட்டுடக்கூடாது, முயற்சி பண்ணித்தான் எல்லாம் கத்துக்கணும்ன்னு அட்வைஸ் பண்ணுவார்.மீண்டும் பயிற்சிதான். கலக்கோ கலக்கென்று கலக்கி, நான்கு வருடத்தில் அம்மாவிற்கு பிரமோஷன் கிடைத்தது.அப்பா டிவிஎஸ் 50 வாங்கித்தந்தார்.
மற்றவர்களுக்காக பிரார்த்திப்பது, சிரித்தமுகத்துடன் இருப்பது, தைரியமாக எதிலும் களமிறங்குவது, எதுவும் சாத்தியம் என்ற தீவிர நம்பிக்கை வைப்பது,விருந்தினர் வந்தால் உபசரிப்பது இப்படி எல்லா விஷயங்களுக்கும் எங்கம்மா தான் எங்களுக்கு முன்னோடி.
நான் இன்று என்னவாக இருக்கிறேனோ அதை உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறேன், அம்மா. என்னைப்பற்றிய என் கணவரின் புகழ்மொழிகளெல்லாம் உங்களைச்சார்ந்தவையே.
எனக்காக நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கும் சிந்திய கண்ணீருக்கும் நான் என்ன செய்துவிடப்போகிறேன் அம்மா? நான் இதுவரை தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை மன்னியுங்கள் மா. இதற்குமேல் என்னிடம் வார்த்தைகள் இல்லை மா. I love you ma, always..
பிறந்த்நாள் வாழ்த்துக்கள் மா...