எல்லாரும் மூக்கை நன்னா சிந்திட்டு கண்ணை துடைச்சுக்கோங்கோ.
போலாமா? ரெடியா?
இவரிடம் (என் கணவரிடம்)ஒரு வினோத பழக்கம். நம்ம ஊர் பொதிகை தொலைக்காட்சியில அந்தக்காலத்துல மறுஒளிபரப்புன்னு போர்டு போட்டுட்டு போட்ட நாடகங்களே திருப்பி திருப்பி போட்டுண்டு இருப்பாங்க. சமீபமா கூட துபாய்ல இருக்கும்போது 25 வருஷம் முன்னாடி நாங்க பார்த்த ‘பப்பெட்’ ஜோக் நாடகத்தை போட்டாங்க. என்ன ஒரு செட்டிங்ஸ், என்ன ஒரு தெளிவு படம், ஆஹா.. அஸாத்யம் போங்கோ.. அட்லீஸ்ட் பொதிகையாவது போர்டு போட்டுட்டு பண்ணினா. இப்பெல்லாம் முக்கால்வாசி தொலைக்காட்சிகள் போர்டெல்லாம் போடாமலேயே போட்டதையே தான் திருப்பி திருப்பி போடுறாங்க.
இதே ரேஞ்சுல இவர் ரொம்பத்தான் மொக்கை போடுவார். கல்யாணத்துக்கு முன்னாடி என்னை இம்ப்ரஸ் பண்றதுக்கு ஊரில் நடந்த காமெடிகள் சொல்லுவார். தூர்தர்ஷன் மாதிரி சொன்னத்தையே சொல்லிண்டு இருப்பார்.
அதுனால் இவரை தூர்தர்ஷன்னு தான் கூப்பிட்டுண்டு இருந்தேன்.
என்னதான் சில விஷயங்கள் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காது இல்லையா? அந்த மாதிரி சில ஜோக்ஸ் இங்கே.
கோவிந்தராஜபுரம் வரதராஜர் கோவில்ல, பிரஹாரம் எல்லாம் கிரானைட்டால இழைச்சு வெச்சிருக்கா. மழை நாள்ல அங்க ஒரு வயசான பாட்டி வந்திருக்கா. இவர்(என்னவர்) கோவில் வாசல்ல வழக்கம்போல யார் கிட்டையோ நின்னு பேசிண்டு இருந்துருக்கார். அந்த மாமி இவர் கிட்டே பேசிட்டு உள்ளே போயி, பலம்மா, “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” ன்னு ஜபிச்சுண்டே பிரஹாரம் சுத்தி இருக்கா. இவா வெளீல நின்னுண்டு கேட்டுண்டு இருந்திருக்கா, திடீர்ன்னு மந்திரம் பாதியிலேயே நின்னுடுத்து, மாமி “ஹரேஏஏஏஏஏஏய்” ந்னாளாம்.இவாள்ல்லாம் வெளீல நின்னுண்டு கேட்டுண்டு இருந்திருக்கா. என்ன கொழுப்பு பார்த்தேளா?
அடுத்து, கல்பாத்தி மந்தக்கரை கோவில்ல ஸ்பெஷல் நெய்வேத்யம் மைசூர் பாகு பண்ணிண்டு இருந்திருக்கா. நெய் விட்டு கிளரி, பாகு வந்த நேரத்தில், தெருவுல ஏதோ சண்டை சச்சரவு, உடனே கிராம வழக்கம்படி ’வம்பு உந்துதலால்’ சமயல் மக்கள் எல்லாரும் மை.பா வை விட்டுட்டு வெளீல போய் பார்த்திருக்கா. அதுக்குள்ள அந்த மைசூர்பாகு ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரி ஆயிடுத்து. உள்ள போயி இந்த விஷயத்தை டிஸ்கஸ் பண்றதுக்குள்ள வெளீல நோட்டீஸ் போர்டுல யாரோ ஒரு விஷமி, இன்றைய நிவேத்யம் - மைசூர் பாகுன்னு எழுதி இருந்ததை அழிச்சுட்டு, மைசூர் ’பாறை’ன்னு மாத்தி எழுதிட்டு ஓடிட்டானாமே? பேஷ் பேஷ்..
இவரும் இவருடைய சேட்டை குரூப்பும் சேர்ந்தால் ஒரே ரகளை தான். நண்பர்களுடன் ஹாஹாகாரம் அடிச்சுட்டு விஷேஷ நாட்கள்ல சாப்பாட்டு நேரத்தில எல்லாரும் வேலை செய்யற மாதிரி பில்டப் குடுத்துண்டுருப்பாங்களாம். அதெல்லாம் முடிஞ்சதும் கடைசிப்பந்தியில நம்பியார்க்குழு ச்சே சாரி, நண்பர்க்குழு சாப்பிட உட்காருமாம். சரியாக சாதம் பரிமாறுரச்சே, வேணும்ன்னே என்னமோ ரொம்ப முக்கியமா டிஸ்கஸ் பண்ணற மாதிரி அடுத்தவன் கிட்டே திரும்பி பேச வேண்டியது. பரிமாறரவா, புரியாம போட்டுண்டே இருப்பாளே, ஒரு 3-4 நிமிஷம் கழிச்சு மெதுவா திரும்பி, அச்சிச்சோ, நிறைய போட்டுட்டேளே, (இத, இத இதத்தான் நான் எதிர்ப்பார்த்தேன்னு மனசுக்குள்ள சிரிச்சுண்டு)சரி, வீணாக்க முடியுமா என்னன்னு ஃபுல் கட்டு கட்டுறது. என்னா பக்கித்தனம்!!!
உஷா மன்னிக்கு ஸ்கூட்டி ஓட்டும்போது கொஞ்சம் கான்ஃபிடன்ஸ் கம்மி. அதுக்கோசம் இந்த வாண்டு இப்படி எல்லாம் பேசறதா? ரொம்ப தெளிவா சஞ்சய் அப்படி என்ன சொன்னான்? ”உங்களுக்கெல்லாம் ஸ்பீடோமீட்டரே ஆவஷ்யமில்லை(அவசியம் இல்லை), இந்த பூலோகத்துக்கே தெரியும் நீங்கள்ளாம் 15 ல தான் போவேள்ன்னு, நடந்து போறவாகூட உங்களை கடந்து போறா பாருங்கோ”. இன்னும் வரும் பாலக்காட்டு ஹாஸ்யங்கள்....