Pages

Showing posts with label lift. Show all posts
Showing posts with label lift. Show all posts

Wednesday, April 14, 2010

இறுக்கம்

அவசரமாக கடுகு வேண்டி இருந்தது. எப்போவும் இரண்டு பாக்கெட்டுகள் வாங்கி வைத்திருப்பாள். இன்று எதிர்பாராமல் தீர்ந்து விட, பக்கத்திலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிக்கொள்ளலாம் என்று கிளம்பினாள். இன்னும் ஒரு மணி இருக்கிறது அவள் கணவன் சாப்பிட வருவதற்கு. அதற்குள் வாங்கிக்கொண்டு வந்து விடலாம். தலையை சரிபண்ணிக்கொண்டு மீண்டும் ஒரு கீற்று குங்குமம் வகிட்டில் தீற்றிக்கொண்டாள். கதவைப்பூட்டிக்கொண்டு வெளியில் லிஃப்ட் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தாள்.

ஒரு சில நொடிகளில் லிஃப்டு காலியாக வந்தது. புகுந்து கொண்டாள். 12வது மாடியில் மீண்டும் நின்றது. ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் வந்து சேர்ந்து கொண்டார்கள். எப்படியும் லிஃப்டு போகிறதே, இன்னும் இரண்டு பேர் வந்தால் ஒரே மின் செலவில் இத்தனை பேருக்கு உபயோகமாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டாள். அப்படி நினைத்தாலும், ஏதோ ஒரு அந்நிய உணர்வு! டெலிக்கேட்டாக இருக்கும். சில மைக்ரோ நொடிகள் தான் என்றாலும், முகம் தெரியாதவர்களுடன் செய்யும் இந்த லிஃப்டு பயணம் அவளுக்கு கிட்டத்தெட்ட மரணாவஸ்தையாக இருப்பதென்னமோ உண்மை தான்.

ஒரு வேளை தான், தான் கொஞ்சம் பட்டிக்காட்டுத்தனமாக இவ்வாறு உணர்கிறாளோ. இதோ இப்போது குழந்தையுடன் வந்தாளே, இந்த அராபிய பெண்மணி எப்படி உணர்கிறாள் என்று கூர்ந்து ஒரு நொடி கவனித்தாள். தண்ணீரில் இருந்து வெளியில் விழுந்த மீன் போல துடித்துக்கொண்டிருந்தாள். பாவம் என்ன கஷ்டமோ என்னமோ என்று நினைத்துக்கொண்டாள்.

லிஃப்டு இப்போது மீண்டும் 6வது மாடியில் நின்றது. இன்னேரம் பயங்கர பிஸி நேரம் போலுள்ளதே.. நிறைய பேருக்கு லிஃப்டு வேண்டியதாக இருக்கிறது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள். ஒரு பிலிப்பினோ இளைஞன் ஏறிக்கொண்டான். அவன் லிஃப்ட் கதவு மூடியதிலிருந்து, அந்த மேலே ஒளிரும் ஆரோ பட்டனையே பார்த்தவாறு ஜி எப்போது வரும் என்று நிம்மதி இல்லாமல் நின்று கொண்டு இருந்தான்.

சரிதான் எல்லோருக்கும் அதே நிலை தான் போலுள்ளது என்று நினைத்து சிரித்துக்கொண்டாள். இந்த பில்டிங்கில் எப்போதும் ஆட்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். புதிய முகங்கள், பரிச்சயப்படாத மொழி, நிறம், கலாச்சாரம். யாரும் மற்றவருடன் பேசுவதில்லை.

எப்போது தான் ஜி வரும் என்று காத்திருந்தவர்கள் போல கீழ்த்தளம் வந்தவுடன் வெளியில் சிதறினார்கள். வெளியில் வந்தாளே ஒழிய, சோர்வாக இருந்தது. ஏன் இவ்வளவு இறுக்கம். சில மைக்ரொ வினாடிகள் தான் என்றாலும், எதற்கு இவ்வளவு சக்தி உடலில் விரயமாகிறது என்று எண்ணியவாறே நடந்தாள்.

கடுகு வாங்கிக்கொண்டு உள்ளே பில்டிங்கினுள் நுழையும் போது லிஃப்டுக்காக ஒரு மலையாளி பெண்ணும் அவள் மகனும் காத்துக்கொண்டு இருந்தார்கள். லிஃப்டு வந்தவுடன் மெதுவாக கதவை பிடித்தவாறே அவ்விருவரையும் உள்ளே அனுமதித்துவிட்டு இவளும் புகுந்து கொண்டாள். 14ஐ அமிழ்த்திவிட்டு “விச் ஃப்ளோர்?” என்று சிரித்தவாரே கேட்டாள். 10 என்றான் அந்த சிறுவன் பளிச்சென்று. ஒரு புன்னகையுடன், 10ஐ அமிழ்த்திவிட்டு, அந்த பெண்ணை நோக்கி சிநேகமாக சிரித்தாள்.


அந்த பெண்ணும் பதிலுக்கு புன்னகைத்தாள். அந்த சிறுவனை நோக்கி சிரித்துக்கொண்டே, ”வாட் ஈஸ் யூவர் நேம்?” என்றாள். “நிகில்” என்றே வெட்கத்துடன் சொன்னான். ஒரு சில கேள்விகளும் அந்த குழந்தையின் அழகு பதில்களும் அந்த லிஃப்ட் பயணத்தை இனிமையாக்கின. அவர்கள் இறங்கி போகும்போது,” பாய் ஆன்டீ” என்றான் நிகில். லிஃப்டு கதவை மூடி விட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள்.

எதனால் போகும்போது இருந்த இறுக்கம் இப்போது இல்லை? மிகவும் குதூகலத்துடன் இருக்கிறோமே? ஏன்? அந்த சிறுவனா? இல்லை அவன் தாயா? இல்லை அவன் மழலைப் பேச்சா? என்ன? என்று யோசித்தாள்? விடை தெரிந்தது. அது - சிரிப்பு.


இனி லிஃப்டு பயணங்கள் அந்த பட்டனை நோக்கிய, இறுகிய முகப்பயணங்களாக இருக்காது என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டாள்.

அவள் வீட்டுக்கதவை திறக்கும்போது தான் அதை உணர்ந்தாள். இப்போது அவள் மனக்கதவும் திறந்து இருந்தது.
Related Posts with Thumbnails