Pages

Friday, October 9, 2009

என் அடுக்களை - அம்மணி கொழுக்கட்டை

என் அடுக்களை
அம்மணி கொழுக்கட்டை
வரலக்ஷ்மி விரதம் அன்று காலை மூன்றரை மணி அளவில் எழுந்து , குளித்து, அம்மாவுக்கு சுத்து வேலை செய்து, நிவேத்யங்கள் தயாரிக்க உதவி, பூஜை முடிந்து, நோன்புச்சரடு கட்டிக்கொண்டு, பெருந்தீனி தின்று , சற்று உண்ட களைப்பாறி சிறு துயில் கொண்டு எழுந்தால் மணி நான்கு ஆகி இருக்கும். எங்களை விட அதிகம் உழைத்திருந்தாலும் அம்மா எங்களுக்கு முன்னர் எழுந்து சுடச்சுட இந்த அம்மணி கொழுக்கட்டை பண்ணி வைத்திருப்பார் . நேற்று நான் தயாரித்த இந்த அம்மணி கொழுக்கட்டை என் அம்மா செய்த அளவு சுவையுடன் கூடியதாக இல்லாத போதிலும் இந்த இனிய நினைவுகளுடன் அதை உண்ணும்போது மனம் மகிழ்கிறது.
முழுவதும் ஆவியில் வேக வைக்கிற படியால் இது மிக குறைந்த கலோரிகளையே கொண்டதாகும்
இதை தயாரிக்கும் முறை பற்றி இதோ

தேவையான பொருட்கள்
கொழுக்கட்டை மாவு செய்ய
  • அரிசி மாவு - ஒரு கப்
  • வெந்நீர் - இரண்டு கப்
  • நல்லெண்ணெய் - இரண்டு சொட்டு
  • உப்பு - தேவைக்கேற்ப

உளுந்து கலவை செய்ய
  • உளுந்து - ஒரு கப்
  • காய்ந்த மிளகாய் - ஆறு (அ) எழு
  • பெருங்காயம் - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க
  • கடுகு- ஒரு தேக்கரண்டி
  • உ பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • க பருப்பு - ஒரு தேக்கரண்டி
  • கறிவேப்பிலை- ஒரு ஆர்க்

அலங்கரிக்க
  • தேங்காய் துருவல் - இரண்டு தேக்கரண்டி
  • எலுமிச்சம் பழ சாறு - சிறிதளவு


  • முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.
  • ஊறிய உளுந்தை நன்கு வடித்து விட்டு காய்ந்த மிளகாய் உப்பு பெருங்காயத்துடன் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரையுங்கள்.
  • அரைத்த விழுதை ஒரு தட்டில் பரப்பி பிரஷர் குக்கரில் மூன்று விசில் வர வேக விடுங்கள்.
  • வெந்த விழுதை ஆற விட்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றி பூப்பூவாக உதிர்துக்கொள்ளுங்கள்.

பாதி வேலை முடிந்தது

  • இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதி வரும் வரை காத்திருக்கவும்.
  • நல்லெண்ணெய் சொட்டுக்களை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தேவையான உப்பையும் போட்டுவிடவும்
  • தண்ணீர் கொதித்ததும் அடுப்பின் தணல் குறைத்து , ஒரு கப் அரிசி மாவை அதில் கொட்டி கட்டி தட்டாமல் கிளர வேண்டும்
  • மாவு விரைவில் வெந்து ஒரு பளபளப்பாiன வெண்மை நிறத்தில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். பாத்திரத்தில் இந்த மாவை எடுத்துக்கொண்டு நன்றாக அடித்து பதப்படுதவேண்டும்.
  • கையில் அரிசிமாவு தொட்டுக்கொண்டு சிறிய உருண்டைகளாக பிடிக்க வேண்டும். கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யும் சீடை அளவில் இருக்க வேண்டும். இது தான் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்படி இருக்கும். பொறுமை மிக அதிக அளவில் கிடைக்கப்பெற்றவர்கள் இன்னும் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டலாம். (அப்படி செய்தால் இந்த ஸ்டெப் முடிப்பதற்குள் வயதாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். )
  • சுமார் நாற்பது உருண்டைகள் பிடித்த பின்னர் இதை ஒரு தட்டில் பரப்பி ஆவியில் வைக்க வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு , கறிவேப்பிலை போட்டு வேக வைத்த மிக்சியில் உதிர்த்த உளுந்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  • இந்தக்கலவையில் வேக வைத்த சிறு சிறு கொழுக்கட்டை உருண்டைகளைப்போட்டு மெதுவாக கலக்கவும்..
  • ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை இதில் பிழியவும்
  • தேங்காய்த்துருவல் மேலே தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்

No comments:

Related Posts with Thumbnails