ஹேப்பி ... ஹேப்பி தீபாவளி
முன்னெல்லாம் தீபாவளி என்றால் குஷி தான். சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன்பிருந்தே தீபாவளிக்கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். புத்தாடை, பட்டாசு, விதவிதமான தின்பண்டம் இத்யாதிகள். சுற்றம் சூழ மகிழ்ந்து குதூகலமாக கொண்டாடிய நாட்களை இப்போது நினைத்து ஏங்க வேண்டியதாக தான் இருக்கிறது.
பண்டிகை நாள் என்றால் நான்கு பேரை பார்த்து, பேசி, உண்டு, மகிழ்ந்து இருந்த நாட்கள் எல்லாம் மலையேறி போய்விட்டது போலும். சதா சர்வகாலமும் டிவி முன்னாடி அமர்ந்து அமர்ந்து பழகிவிட்ட நமக்கு இனி தீபாவளி என்றால் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் தான் நினைவுக்கு வரும் போலும். கஷ்டம்.
நாங்கள் அரபு நாடுகளில் இருந்தாலும், இந்த மாதிரி பண்டிகை நாட்களில், முடிந்த வரை உறவினர், நண்பர்களை சந்திப்போம். சென்னையில் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்து நினைத்து வருத்தப்படுவோம். பட்டாசுக்கள் இங்கே வெடிக்க முடியாது. அதனால், அதுவும் இல்லை. புத்தாடைகள் அணிவோம், தின்பண்டங்கள் எல்லாம் அம்மாவை நினைத்து கொண்டு செய்து இங்கே பில்டிங்கில் இருக்கும் அக்கம்பக்கதாற்கு பகிர்ந்தளிப்போம். அவ்வளவு தான் இங்கே தீபாவளி. இம்முறை சனிக்கிழமை தீபாவளி அதனால் என் கணவருக்கு விடுமுறை. இல்லாவிட்டால், வழக்கம்போல இந்த வருடமும் தனியாக கொட்ட கொட்ட உக்கார்ந்துகொண்டு சன் தொலைகாட்சி பார்த்துக்கொண்டு இருப்பேன். எனக்கு தான் சன் தொலைகாட்சி ஆகாதே, இருந்தும் தீபாவளி அன்று மட்டும் என்ன விசேஷம்? ஏன் பார்கிறேன் என்று கேட்கிறீர்களா?
தீபாவளி அன்று வரும் விளம்பரங்களை பார்க்கத்தான்.விளம்பரங்களைப்பார்த்து அந்த பண்டிகை கோலாகலத்தை உணரலாமே. அதனால் தான்.வழக்கமான கெக்கே பிக்கே பேட்டிகள், பட்டிமன்றங்கள், திரைக்கு வந்து சில வாரங்களே ஆன மெகா மொக்கை திரைப்படங்கள் எல்லாம் ஏனோ என்னை ஈர்த்ததில்லை.
தீபாவளி திருநாளில் அப்பா அதிகாலை 3.30 மணிக்கு எழுந்திருந்து முதல் சரவெடி வெடிப்பார். இதைச்சொல்லி தான் அம்மா எங்களை தூக்கம் எழுப்புவார். புலம்பிக்கொண்டே சுமார் 4 மணிக்கு எழுந்து, அம்மா அல்லது பாட்டி கைய்யால் கௌரி கல்யாண வைபோகமே பாடிக்கொண்டே தலைக்கு எண்ணெய் வைத்து கங்காஸ்நானம் பண்ணி, புது துணி உடுத்தி, நலங்கு இட்டுக்கொண்டு, முதல் நாள் இரவு வைத்துக்கொண்ட மருதாணியை அழகு பார்த்துக்கொண்டே வீடெல்லாம் நடந்து, பட்டாசு விட்டு, இனிப்புகளுடன் சிற்றுண்டி இட்லி தின்று, முடிந்த வரைக்கும் நேரில் சொந்த பந்தங்களை சென்று வாழ்த்திவிட்டு வந்து, 11 மணிக்கே பசித்து, கன ஜோராக எழுகறிக்குழம்பு(7 வித காய்கறிகளால் செய்யப்பட விசேஷ சாம்பார்), அவியல், காய், ரசம் போன்ற ஐட்டங்களை ஒரு வெட்டு வெட்டி, படுத்தோமானால் சுமார் நான்கு மணிக்கு தான் முழிப்பு வரும்.. அதன் பின்னர், மட்டிதனமாக இருக்கும். முறுக்கெல்லாம் தின்ற பிறகு, சாயந்தரம் கொஞ்சம் பட்டாசு வெடிப்போம், அதிலும் நான் பிஜிலி மட்டும் தான் விடுவேன்.அதுவும் என் தம்பி பாலாஜி திரி பிய்த்து வெடிக்க பழக்கி என் பயத்தை களைந்தான் . மத்தபடி மத்தாப்பெல்லாம் தைரியமாக தான் விடுவேன். Nice Memories.. sigh..
இந்த பண்டிகைக்கு மட்டும் அப்படி ஒரு மவுசு எங்களுக்கு. பல முறை, "ஹையய்யோ, தீபாவளி முடிஞ்சு போச்சாம்மா?" என்று புலம்பி இருக்கிறோம்.
எதுவாக இருந்த போதும், தீபாவளி பண்டிகை குதூகலத்தை கூட கொண்டு வரும் பண்டிகை. அதனால் இந்த புலம்பலை மத்தாப்பு போல எரித்து விட்டு சிரித்த முகத்துடன் இப்பண்டிகையை வரவேற்கலாம். சென்ற வருட தீபவளிக்கு என் மாமியார் கூட இருந்தார். சூப்பர் லட்டு செய்து கொடுத்தார்.ஆனால் முறுக்கு சரியாக அமையவில்லை. நான் இம்முறை தேன்குழல், ஓமப்பொடி, முள்ளு முறுக்கு, ரிப்பன் பக்கோடா செய்தேன். இனிப்பு இல்லாமல் தீபாவளியா.. அதனால் பால் அல்வா & குலாப் ஜாமுன் செய்தேன்.
நிற்க.
பால் அல்வா நான் kamalascorner என்ற வலைத்தளத்தில் பார்த்து செய்தேன். சும்மா சொல்லக்கூடாது, சுவை பிரமாதம் போங்கள்! நன்றி கமலா அவர்களே!!!
இவர்தம் வலைத்தளத்தில் பல புதிய சுவையான பதார்த்தங்களின் செய்முறையை படங்களுடன் விளக்குகிறார். முடிந்தால் சென்று பாருங்களேன்.
எல்லாமே ஓரளவுக்கு பரவாயில்லாமல் வந்திருப்பதாக தான் நன் நினைக்கிறேன். எனக்கு தற்பெருமை அடித்துக்கொள்ள பிடிக்காது பாருங்கள்.. அதான்... ஹீ ஹீ
எல்லோருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி நல வாழ்த்துக்கள்..
Have a D'Lightful Diwali. :-)
5 comments:
அக்கா, நீ நினப்பது போல அபுதாபியில் பெரிதாக எல்லாம் தீபாவளியை மிஸ் செய்யவில்லை. நம்மூரில் மக்களுக்கு தீபாவளி என்றால் கூத்தாடிகளின் (நடிகர்கள்) பேட்டிகளும், ‘இந்திய தொலைகாட்சிகளில் முதல்முறையாக’ என்ற அடைமொழியோடு போடப்படும் பாடாவதிகளும் தான். Atleast நீ மனதளவிலாவது ‘நல்ல’ தீபாவளியை நினைத்துக் கொண்டாயே, அதுவே போதும்
மகேஷ்
நீ ஆயிரம் தான் சொல்லு,
ஒரு சம்படத்தில் லட்டு, மிக்சர், வடை, அல்வா போன்ற அயிட்டங்களை சுமந்து கொண்டு பெரியம்மா வீட்டுக்கு போய் உக்கார்ந்து வம்படித்து விட்டு, பெரியம்மாவின் கைப்பக்குவத்தை சுவைத்து விட்டு,
பார்சல் கட்டி வாங்கிக்கொண்டு சின்ன மாமா வீட்டுக்கு போயி , புதிய ஆடைகளை காட்டி, லதாவுடன் அளவளாவி, கண்ணா அண்ணாவின் டயம்லி ஜோக்ஸ் எல்லாம் ரசித்து சிரித்து இப்படி கழிந்த தீபவளிகளை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. டிவியின் ஆதிக்கம் அவ்வளவாக இல்லாத நாட்கள் அவை. தீபாவளி அன்று டிவி பாப்போம் ஆனால் அதில் அளவான பொழுக்கு அம்சங்கள் நிறைந்து இருந்ததால் இது போன்ற பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் இருந்தது.. but now, gone are those days..
விருமாண்டி படத்துல கமல்காசன் சொல்ற மாதிரி "சந்தோசம்னா என்னானு நாம சந்தோசமா இருக்கும் போது நமக்கு தெரியறது இல்லை"
absolutely correct mama.. When I used to be a child, I always wanted to grow up because I can skip school, exams etc(like balamani). Now I am longing to get back my lost childhood.
வீட்டை விட்டு வந்த பலருக்கு இதே புலம்பல் தான். நான் என் பதிவை எழுத்தும் போதே உங்களுடைய பதிவை படித்துவிட்டேன்.
Post a Comment