Pages

Tuesday, April 6, 2010

சில நேரங்களில் சில மனிதர்கள்


ஹைதராபாத்தில் நாங்கள் குடிபோன போது நாராயண்கூடாவில் வீடு கொடுத்திருந்தார்கள். உயரமான காம்பவுண்டுள்ள வீட்டில் ஃப்ர்ஸ்டு ஃப்ளோரில் எங்கள் அபார்ட்டுமெண்டு. மெஸனைன் ஃப்ளோரில் ஒரு ஸ்டுடியோ ஃப்ளாட் இருந்தது. கீழே வசித்த வீட்டுக்கார பாட்டி, கண்களை உருட்டியபடியே அந்த ஸ்டுடியோ ஃப்ளாட்டில் டீவீ நடிகை ஒருவர் வசிப்பதாக கூறினார். ’வென்னெலவேடா’ என்ற ஆந்திர தூர்தர்ஷனில் இடம் பெறும் தொடரில் நடிப்பதாகவும் கூறினார். பொதுவாக அந்த காம்பவுண்டுக்காரர்கள் யாரும் அந்த பெண்ணிடம் பழகுவதாக தெரியவில்லை.எனக்கென்னமோ பயங்கர குஷி! அதெப்படி டீவீயில் வரும் பெண்ணை கண்டு கொள்ளாமல் இருப்பது?அந்த பெண்ணை நேரில் பார்த்த போது பயங்கர குதூகலம்! அவர் பெயர் ப்ருந்தா என்றார். மிக எளிமையானவராய் தென்பட்டார். யாரும் பேசாத அந்த காம்பவுண்டில் ஒரு குடும்பம் நம்மிடம் பழகுகிறதே என்று மகிழ்ச்சி கொண்டவராய் தென்பட்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அவருடன் நட்பு வளர்ந்தது. அவுட்டோர் ஷூட்டிங் போய்விட்டு வந்தால் அம்மா அவரை, பரிவுடன் விசாரிப்பார். அவருக்கு சாய் என்று ஒரு மகன். கணவரை பிரிந்து வாழ்ந்தார். எங்கள் இருவரையும் கண்டால் கொள்ளை பிரியம் அவருக்கு. விஜ்ஜீ, ஜோதீ என்று ஆசையுடன் விளிப்பார். அவர் அக்கா குழந்தைகள் பெயர்கள் அவை. நாங்கள் இருவரும் அவர்கள் இருவர் மாதிரியே இருப்பதால் அப்படி கூப்பிடுகிறாராம். பூஜா ஹாலிடேஸில் அவர்கள் சென்னையிலிருந்து வந்த போது சந்தித்தோம். எங்கள் இருவருக்கும் - அவர்கள் இருவருக்கும், நாங்கள் பெண் குழந்தைகள் என்பதைத்தவிர வேறு ஒரு ஒற்றுமையும் இருப்பதாக தெரியவில்லை!

ப்ருந்தா ஆன்ட்டி, எங்கள் குடும்பத்துடன் இப்படி நட்பு பாராட்டி வந்தார். தமது நாடக வாய்ப்புகளைப்பற்றி எங்களிடம் விலாவாரியாக டிஸ்கஸ் செய்வார். ரொம்ப தூரம் அவுட்டோர் எல்லாம் போக மாட்டார். சாயி படிப்பு பாதிக்கும் என்று அவருக்கு கவலை. எங்களை ஒரு வாட்டி அவுட்டோர் கூட்டிக்கொண்டு போகிறேன் காலை போய்விட்டு மாலை வந்து விடலாம் என்று கெஞ்சி கூட்டிக்கொண்டு போனார். நானும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணித்தான் போனேன் என்று சொல்லித்தெரிய வேண்டாமே! நிறைய குணச்சித்திர நடிகர்களை பார்த்தோம். முக்கியமாக நினைவில் நின்றவர் ராள்ளபள்ளி என்ற நடிகர். இவர் பம்பாயில் அரவாணியாக நடித்தார். பேசும் படத்தில் பிச்சைக்காரனாக நடித்தவரையும் பார்த்து பேசினோம். எப்பேர்ப்பட்ட கலைஞர்கள். எல்லோருக்கும் நன்கு தமிழ் தெரிந்தது. அவர்கள் எல்லோருமே சென்னையில் தான் வசிப்பதாக தெரிவித்தார்கள். ஏதோ ஒரு ஷாட், கூட்டமாக நிற்க வேண்டும் என்று எங்கள் இருவரையும் நிற்க வைத்தார்கள். மறு வாரம் அந்த எபிசோடு டீவீயில் வந்தது. இதைப்பார்த்த நைனா, ”இவங்க ரெண்டு பேரும் டீவீ ட்ராமாவுல ஆக்டு பண்ணிட்டு வந்துட்டாங்க” என்று யாரிடமோ பீத்தினார்!!!

ப்ருந்தா ஆன்ட்டியுடன் நாட்கள் இனிதே கழிந்தன. அவருடன், கோட்டீ என்ற கடைத்தெருவில் ஷாப்பிங் சென்றோம். ”அஹா நா பெள்ளண்டா” என்ற அருமையான காமெடி படத்துக்கு போய் இருந்தோம். ப்ருந்தா ஆன்ட்டிக்கு நம்மூர் பாக்கியராஜ், பாண்டிய ராஜன் என்றால் ரொம்ப பிடிக்கும். இருவரின் திருட்டு முழிதான் காரணம் என்று சொல்லி சிரிப்பார். சிக்கட்பள்ளி, ஓடியன்-சுதர்ஷன் தியேட்டரில் ’எங்க சின்ன ராஜா’ என்ற பாக்கியராஜ் படத்தின் தெலுங்கு டப்பிங் வந்திருந்தது. அவருடன் அந்த படம் போய் பார்த்தோம். ரவீந்திர பாரதியில் நடந்த மிகப்பெரிய கலை விழாவில் அவர் நடனம் ஆட, அதைக்காண எங்களுக்கு ஸ்பெஷல் டிக்கெட் ஏற்பாடு பண்ணி இருந்தார்.
ஷூட்டிங்கிலிருந்து களைத்து வரும் ப்ருந்தா ஆன்ட்டிக்கு அம்மா சமைத்து தருவார். மிகவும் பிரியமாக பேசியதால் இவர்கள் இருவரிடையே மிக ஆரோக்கியமான நட்பு இருந்தது..

எங்கள் காம்பவுண்டில் கீழ் வீட்டில் லக்ஷ்மி என்று ஒரு பெண் 8வது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள். அந்தப்பெண் வேறு பள்ளியில் படித்ததால் அவளுடன் எங்கள் இருவருக்கும், அவ்வளவாக பழக்கம் இல்லை . எங்கள் பக்கத்து ஃப்ளாட்டில் வசித்த ஹரிதா அமிதா என்ற இருவருடன் மட்டும் நல்ல நட்புடன் இருந்தோம்.

திடீரென்று ஒரு நாள் அந்த லக்ஷ்மி என்ற பெண்னைக்காணோம்! அவர்கள் வீட்டார் அலறிப்புடைத்துக்கொண்டு, போலீஸில் புகார் கொடுத்து, வீட்டிற்கு போலீஸ் வந்தது. எனக்கு ஒரே ஆச்சிர்யம். எப்படி தொலைந்து போனாள்? பெரிய பள்ளியில் படித்தாள். ஸ்கூல் பஸ் இருந்தது. அப்படி இருக்கும்போது எப்படி காணாமல் போனாள் என்று எல்லோருக்கும் ஒரே குழப்பம். போலீஸ் அவள் பெற்றோரிடம்,”உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் இருக்கா?” என்று கேட்க, கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல் அவர்கள் ப்ருந்தா ஆன்ட்டியை சுட்டி இருக்கிறார்கள். போலீஸூம் கடமையைச்செய்ய, ஆன்ட்டியை கேள்வி மேல் கேள்விகள் கேட்க, கை கால் வெலவெலத்து விட்டது அவருக்கு. அவளை கடத்தி இருக்கிறீர்கள், எங்கே மறைத்து வைத்துள்ளீர்கள்? எவ்வளவு கேட்க திட்டம் போன்ற கேள்வி அம்புகளால் காயப்படுத்தி இருக்கிறார்கள்!

பாவம் ஆன்ட்டி . நிராதரவான ஒரு பெண். கணவனை பிரிந்து வாழும் கிட்டத்தெட்ட ஒரு அபலைப்பெண், தன் சம்பாத்தியத்தைக்கொண்டு தன் மகனை படிக்க வைக்கும் ஒரு தாய், ஹைதராபாத்தின் வெப்பத்தையும் பொருட்படுத்தாது கடுமையாக உழைக்கும் ஒரு பெண்மீது தாருமாறாக இப்படி ஒரு பழி!

ப்ருந்தா ஆன்ட்டி அம்மாவிடம் அழுதார். மிகவும் வருத்தப்பட்டார். அப்போது தூர்தர்ஷனில் வந்து கொண்டிருந்த தெனாலிராமன் என்ற சீரியலில் நடித்த மிகப்பிரபலமான நடிகர் அஷோக்குமார் எங்கள் வீட்டில் வந்து அம்மாவிடம் பேசினார். அவருக்கு சப்போர்டாக அவர்கள் நடிகர் சங்கம் வேண்டிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.

மூன்று நாட்களில் அந்தப்பெண் கிடைத்தாள். ”எங்கே போயிருந்தாளாம்? கடத்தப்பட்டாளா? எப்படி கிடைத்தாள்? என்ன விஷயம்?” என்று காம்பவுண்டுக்குள் ஒரே சலசலப்பு.உண்மை என்னவென்றால், அந்தப்பெண் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் தன் அபிமான நட்சத்திரமான கிருஷ்ணாவை சந்திக்க சென்னை செல்லும் ரயிலில் ஏறி இருக்கிறாள். எப்படியோ போலீஸின் கிடுக்குப்பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கிறாள்! என்ன ஒரு துணிச்சல் அவளுக்கு என்று எங்கள் இருவருக்கும் ஒரே ஆச்சர்யம்! நிலமை இப்படி இருக்க அனாவஸ்யமாக ப்ருந்தா ஆன்ட்டியை எதுக்கு இதில் வம்புக்கு இழுக்க வேண்டும்? என்று ஒரே கோபம். என்ன தான் இருந்தாலும் அவருக்கு என்மேலும் எனக்கு அவர் மேலும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பாசம் இருந்தது!

”ஒரு பெண் தானே, அதுவும் ஒரு டீ வீ நடிகை தானே?” என்று துச்சமாக நினைத்து, அவர்களும் ப்ருந்தா ஆன்ட்டியிடம் மன்னிப்பு எதுவும் கேட்டதாக தெரியவில்லை! எவ்வளவு நெஞ்சுறத்துடன் தூஷணை செய்தார்கள்? ஒரு நிமிஷத்தில் போட்டார்களே அபாண்டமாக அவர் மீது பழி? அதை சரிசெய்ய முடியவே முடியாது என்றாலும்,  ஒரு வார்த்தை மன்னிப்பு கேட்கவில்லையே என்று நினைத்து நினைத்து, இன்று வரை என் மனசு வலிக்கிறது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள்  துபாயில் இருந்த போது சப்தகிரி சானலில் ப்ருந்தா ஆன்ட்டியை பார்த்தேன். வயதான பாட்டி வேடத்தில் தன் பேரனின் மேல் அன்பை பொழிந்து கொண்டிருந்தார். அவசரமாக அம்மாவுக்கு ஃபோன் பண்ணி தெரிவித்துவிட்டு, முழு நாடகமும் பார்த்து முடித்தேன். நிஜமாகவே அந்த கதையில் வரும் பேரனைப்போல் அவரிடம் உண்மையான அன்பைப்பெற்றதால் எனக்கு என்னமோ ஆன்ட்டி நடித்த மாதிரியே தெரியவில்லை! உண்மையாக அவரை பார்த்து நலம் விசாரித்தது போன்ற உணர்வு! அவர் மீது சுமத்தப்பட்ட பழியை நினைத்து மெளனமாக அழுதேன். என் பிரார்த்தனையில் அவர் என்றும் இடம் பெறுவார் என்பது மட்டும் சத்தியமான உண்மை!

19 comments:

Chitra said...

அவளும் பெண்தானே......!!! ஒரு நடிகையின் மறுபக்கத்தை காட்டியதற்கு நன்றி.

sriram said...

என்ன இன்னிக்கு ஒரே பீலிங்க்ஸா இருக்கு..
உங்க ஆண்டி தனியாக இருந்து பையனை வளர்த்த விசயம் பாராட்டுக்கு உரியது
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

முகுந்த்; Amma said...

Very touching Ananya. Actress endrale ivangalukellam mattam thaan. enna seiyya. avalum penthannu eppo thane ninaikka porangalo.

எல் கே said...

@அனன்யா
ரொம்ப ரொம்ப டச்சிங் .. இப்படிலாம் கூட எழுதுவியா நீ ?

Cable சங்கர் said...

nice

தக்குடு said...

//என் பிரார்த்தனையில் அவர் என்றும் இடம் பெறுவார் என்பது மட்டும் சத்தியமான உண்மை!// very good

R.Gopi said...

ஒரு நடிகையின் கதை .... நல்லா இருந்தது...

இன்னமும் நம் சமூகத்தில் நடிக, நடிகையர்கள் இது போன்றதொரு நிலையில் தான் வைக்கப்ப்ட்டு உள்ளார்கள்...

ரொம்பவே நெகிழ்வாக இருந்தது...

குட்டிசாத்தான் சிந்தனைகள் said...

தலைப்புக்கு ஏற்றவாறு இருந்தது. பாராட்டுக்கள்
இவர்கள் மட்டும் அல்ல நாம் சமூகத்தின் பார்வையில், அதிக மாற்றங்கள் தேவை.
சமுகம் என்பது நம்மால் ஆனது தானே, நாம் மருவோமா? நம்பிக்கையுடன்.

pudugaithendral said...

நடிகை என்றாலே இளப்பம் தான். இதில் நல்லவர்களும் இருக்காங்க. மக்களின் எண்ணம் மாறணும்.

துபாய் ராஜா said...

'அனு'பவப் பகிர்வு அருமை.

settaikkaran said...

நடிப்பு என்பது ஒரு தொழில். அவர்களை உயர்த்துவதும் தாழ்த்துவதும் மக்கள் தான்!

விக்னேஷ்வரி said...

ரொம்ப நெகிழ்வா இருந்தது அநன்யா.

ஹுஸைனம்மா said...

நல்ல அனுபவம்; பாமா விஜயத்தில் பாமாவின் எளிமை நினைவுக்கு வருகிறது.

Vidhoosh said...

//LK said...

@அனன்யா
ரொம்ப ரொம்ப டச்சிங் .. இப்படிலாம் கூட எழுதுவியா நீ ?
////

repeating.:(

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//”ஒரு பெண் தானே, அதுவும் ஒரு டீ வீ நடிகை தானே?” என்று துச்சமாக நினைத்து, அவர்களும் ப்ருந்தா ஆன்ட்டியிடம் மன்னிப்பு எதுவும் கேட்டதாக தெரியவில்லை//

இந்த கண்ணோட்டம் கொஞ்சம் கொஞ்சமா எப்போ மாறிட்டு இருக்கு. மத்த தொழில் மாதிரி சினிமாவும் ஒரு தொழில்னு இயல்பா பாக்க ஆரம்பிச்சா இந்த நிலை மாறும். நல்லா பதிவு செஞ்சு இருக்கீங்க அனன்யா

அண்ணாமலையான் said...

ரொம்ப பிரபலம் ஆயிட்டீங்க.... வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

கலங்கிய கண்களுடன் வோட்டுப் பெட்டியை அமுக்கினால் வாக்கு வேறு ஏதோ இடத்துக்கு - இதே தலைப்பில் - போகிறதே..எப்படி? (enganeshan)

Prathap Kumar S. said...

அட பல மொக்கைகளக்கு நடுவில் இப்படிக்கூடவா... நடிகைஎன்றாலே வேறுமாதிரியான சிந்தனைகள் நம்மக்கள் மனதில் அதான் பிரச்சனை. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Ananya Mahadevan said...

@சித்ரா, கருத்துக்கு நன்றி!

@ஸ்ரீராம் அண்ணா, கருத்துக்கு நன்றி!

@முகுந்த் அம்மா, கருத்துக்கு நன்றி!

@LK, எல்லாம் அப்படியே பிரவாஹமா வருது. என்ன பண்ண?

@கேபிள் சங்கர், முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

@தக்குடு, நன்றி!

@கோபி, கருத்துக்கு நன்றி.

@குட்டிச்சாத்தான், தலைப்பு கர்டஸி - திரு.ஜெயகாந்தன். :-)

@தென்றல் அக்கா, கருத்துக்கு நன்றி

@துபாய் ராஜா, ரொம்ப நன்றி!

@சேட்டைக்காரன், கருத்துக்கு நன்றி.

@விக்நேஷ்வரி, கருத்துக்கு நன்றி.

@ஹூஸைனம்மா, ஆமா, ப்ருந்தா ஆன்ட்டி ரொம்ப எளிமையானவங்க தான். ஒரே வித்தியாசம், பாமா விஜயம் கதை காமெடி, இங்கே ட்ராஜடி! கருத்துக்கு நன்றி!

@விதூஷ்,
கருத்துக்கு நன்றிங்க.

@அப்பாவிதங்கமணி,
கருத்துக்கு ரொம்ப நன்றி.

@அண்ணாமலையான்,
ஏன்.. ஏன்? நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு? ஏன் இந்த கொலை வெறி?

@’எங்கள்’ அண்ணா,
நான் இந்த கட்டுரையை தமிழிஷில் போடவில்லை. படித்தவர்கள் யாராவது அனுப்பி இருப்பார்கள். அதனால் இந்த குளறுபடி. மன்னிக்கவும்.

@நாஞ்சில்,
கருத்துக்கு நன்றி!

Related Posts with Thumbnails