என் ப்ளாக் ஆரம்பிச்சு சுமார் ஒரு வருஷம் ஒரு வாரம் ஆயிடுத்து. ஆனிவர்ஸரி(?!!?) அன்னிக்கி மறந்துட்டேன்.. அதுக்குள்ளே, ஏகப்பட்ட பொக்கேக்கள், வாழ்த்து அட்டைகள், ஈ மெயில்கள், கிஃப்டுகள் என்று ...... யாருமே எதுவும் அனுப்பலை.. ஹிஹி.. நன்னி ஹை..
அதிருக்கட்டும். என்னத்தை எழுதறதுன்னு ஒண்ணுமே புரியலை. சென்னை புழுக்கத்தை பத்தியா, இல்லை எந்திரனை பத்தியா, இல்லை காமன்வெல்த் போட்டிகளை பத்தியா இல்லை, அமரர் சுஜாதா அவர்களின் ’ஒரே ஒரு துரோக’த்தை பத்தியான்னு குழம்பிண்டு இருந்தேன்.
நேத்திக்கு இந்த குழப்பத்தை தீர்க்க நவராத்திரிக்கு அழைக்க, குங்குமச்சிமிழை எடுத்துண்டு ஒரு மாமி வந்தா வீட்டுக்கு. உடனே தெரிஞ்சு போயிடுத்து சரி அடுத்த போஸ்டும் அருண் வருண் தான்னு..
மாமி வந்த உடனே, அருண் வருண் மாமியிடம் போய்,” அண்ட அங்கிள் ரோபோ மேல ஜூஸ்(!?) ஊத்திட்டா, அப்போம் என்னாச்சு, ஒடைச்சு தூக்கி டஃப்பின் ல போட்டுட்டா.. உடனே குப்படிக்கிட் வன்னு, ரோபோவை தூக்கிண்டு போயிடுத்து” ன்னு ஆரம்பிச்சு ரொம்ப தெளிவா எந்திரன் கதையை மஹா சுருக்கமாக சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. வந்த மாமிக்கு ஒண்ணுமே புரியலை. ”எங்காத்துல கொலு வெச்சுருக்கோம் நீங்க கொழந்தைகளையும் கூட்டிண்டு வரணும்”ன்னு சொல்லி, சொந்த செலவுல சூன்யம் வெச்சுண்டு, குங்குமம் கொடுத்து அழைச்சா.
இதான் சாக்குன்னு அம்மா அந்த மாமியை கோழி அமுக்ற மாதிரி அமுக்கி, ”ஒரே நிமிஷம் ஒக்காருங்கோ இதோ, இப்போ வந்துடறேன்”னு அவசரமா தாம்பூலம் அரேஞ்ச் பண்ண ஆரம்பிச்சுட்டா.. இது ஃப்ளாட்ஸ், இங்கே தாம்பூலம் வாங்கிக்க வாங்கோன்னு போய் கூப்பிட யாரும் இல்லை.. அவங்களே வந்தா நிர்பந்தம் பண்ணி கொடுத்துடலாம்ன்னு அம்மா ஐடியா பண்ணி இருக்காங்க. இங்கேயும் அங்கேயும் ஓடி தேடி ரவிக்கை துணி, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், ஒரு ரூபாய் எல்லாம் எடுத்து வெச்சா திடீர்ன்னு வருண் அந்த இடத்துக்கு வந்து தன் கைவரிசையை காட்டிட்டான்! என்னவா? அதான் இருந்த ஒரே...... ஒரு ஆப்பிளை நறுக்குன்னு கடிச்சுட்டான்.. அதை சாதாரண நாள்லே எல்லாம் ஏக கருப்பா சுருங்கி, எலந்தைப்பழம் மாதிரி ஆகி தூக்கி போடுற வரைக்கும் சீந்தினதே இல்லை.. இன்னைக்கு என்னம்மோ கன காரியமா மாமிக்கி தாம்பூலத்துக்கு வெச்சிருந்த ஆப்பிளை கடிச்சு இருக்கான்!
நல்ல வேளை ஒரே ஒரு கொய்யா இருந்ததோ அம்மா தப்பிச்சாங்க. அதை வெச்சு சமாளிச்சோம்.
அடுத்து, நம்ம ஹீரோ அருண் ரேஷன்ல வாங்கிய ஏதோ ஒரு மாவை தூக்க முடியாமல் தூக்கிண்டு போய் ’கன்னானிடி’ன்னு அடித்தொண்டையில் சொல்லி மாமியிடம் காட்டிண்டு இருந்தான்! கன்னானிடின்னா என்னவா?
கருணாநிதியாம்! :))
அந்த மாமியின் வீட்டுக்கு போனோம். இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்கும் ஓடி ஓடி சுத்தி பார்த்துண்டே இருந்தாங்க. இவங்க பின்னாடியே இவங்க பேபிசிட்டரும்! இங்கே பாரு வருண் பொம்மையெல்லாம். எவ்ளோ அழகா இருக்கு பாரேன்னு சொன்னப்போ தான் ஓஹோ இதை பார்க்கத்தான் வந்திருக்கோம் போல இருக்குன்னு புரிஞ்சுண்டு என் பக்கத்துல வந்தான். (உட்காருவதெல்லாம் அவன் டிக்ஷனரியிலேயே இல்லை!) ”இடு என்ன?” ”வெளவெளவா?” ன்னான். (நாய்). ”ஆமா இது வெளவெள”ன்னு சொன்னேன். ”இடு”? அப்படீன்னான். ”இது செட்டியார், செட்டியாரம்மா.. கடை வெச்சுண்டு இருக்காங்க”ன்னு சொன்னேன். உடனே, ”இடு?” இது பொண்ணு மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிண்டு இருக்காங்க”ன்னேன். உடனே, ”உனக்கு கல்யாணம் பண்ணலாமா? நீ பண்ணிக்கிறயா”ன்னு கேட்டேன். பண்ணிக்கறேன்னு (அப்பாவியா!!! அப்பாவி ரங்கமணி அல்ல) சொன்னான். உடனே வருண் திருமண மஹோற்சவத்தை கற்பனைக்குதிரையில் தட்டி விட்டு பார்த்தேன்.. என்ன ஒரு கண்கொள்ளாக்காட்சி!
மாப்பிள்ளையை வரச்சொல்லுங்கோ, மாங்கல்ய தாரண சடங்கு இருக்குன்னு சாவதான் சொல்லிண்டு இருப்பா.. இவன் வேஷ்டியெல்லாம் அவுந்து டயப்பரோட மண்டபம் பூரா பூவை பிச்சு போட்டுண்டு ஓடிண்டே இருப்பான். மையெல்லாம் ஈஷிண்டு வேர்த்து வழியும். இவனுக்கு பின்னாடியே துரத்திண்டு இவனோட பேபி சிட்டர்,” வருண் வாம்மா, மாங்கல்ய தாரணம் இருக்கு கண்ணா.. கூப்படறா பாரு”ன்னு சொல்லிண்டு இருப்பா. இவன் ரகளை பண்ணி தாலி கட்டிட்டு மறுபடியும் பந்தியில் பேப்பர் ரோல் போட்டு இலை போடுறதை ஆவலா பார்க்க போயிடுவான். இல்லையோ பின்னே? இலையெல்லாம் இழுத்து கீழே தள்ள வேண்டாமா?
அடுத்தபடியாக அருண் வந்து,” நானக்கு கல்யாணம்?”ன்னு கேப்பான். உடனே ”இந்தா நீ இந்தப்பாப்பாவை கல்யாணம் பண்ணிக்கோ”ன்னு நாம சொல்லுவோம். அதுவும் அழகா பேபி ஷாமிலி மாதிரி மூக்கும் முழியும் ரெண்டு சிண்டு போட்டுண்டு கொழு கொழுன்னு இருக்கும். ஆனா இவன், ”நானக்கு அன்ன பாப்பானா வேணும்”ன்னு உதட்டை பிதுக்கி அழுவான். இவனுக்கும் அதே பொண்ணு தான் வேணுமாம்! எப்போவுமே இப்படித்தான்.. அவன் வெச்சுண்டு இருக்கறதே தான் இவனுக்கும் வேணும்.
இதை அந்த மாமிகிட்டே சொன்னப்போ விழுந்து விழுந்து சிரிக்கறா!
அந்த மாமிகிட்டே போய் சுண்டல் வேணும் சுண்டல்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு இருக்காங்க. மொத்தத்தில் செம கலாட்டா நேத்திக்கி.
நாங்க வெளியேறும்போது, மாமி கண்ணில் ஆனந்தம். குழந்தைகள் வந்ததுனாலே ரொம்பவும் சந்தோஷமா இருந்ததுன்னு சொல்லி அருண் வருண் உச்சி முகர்ந்தார். நமக்கு அதானே வேணும். இவங்க ரெண்டு பேரும் தான் பண்டில் ஆஃப் ஜாய் ஆச்சே! எல்லோருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை ஷேர் பண்ண வேண்டாமோ?