Pages

Sunday, June 30, 2013

அப்பாவியுடன் ரெண்டு நிஜ அப்பாவிகள்!

அந்த நிஜ அப்பாவிகள் வேற யாருமில்லீங்க, நானும் கோவிந்த் அண்ணாவும் தான்.. அதான் அப்பாவியின் ரங்ஸ்! ஐய்யோ பாவங்க அவர்! சரி விஷய்த்துக்கு வரேன்.. நேத்திக்கு கோவைக்கு அலுவல் விஷயமா போயிருந்தேனா.. அப்போ இவளை கார்த்தாலேயே கூப்பிட்டு, சாயந்திரம் மீட்டலாம்ன்னு சொல்லி இருந்தேன். இவளும் ரொம்ப துணிகரமா ஓக்கேன்னு சொன்னான்னு சந்தோஷப்பட்டா.. அது இவ்ளோ பெரிய சதியா இருக்கும்ன்னு நான் நினைக்கலை! 

3 மணிக்கு கூப்பிட்டு, நீ நேரா என் ஹோட்டல் ரூமுக்கு வந்திடுன்னு சொன்னேன்.. ”நான் இப்போ புடவை எடுக்க வந்திருக்கேன். எனக்கொண்ணு எங்க அத்தைக்கு ஒண்ணுன்னு ” சொன்னா. சர்த்தான் களுதையை எடுத்துட்டு வரட்டுமேன்னு நானும் 4 மணி வரை பொறும்ம்ம்ம்ம்மையா காத்துண்டு இருந்தேனா.. இவளை ஆளையும் காணோம் ஃபோனையும் காணோம். சென்னை சில்க்ஸ் 2 நிமிஷ நடைதானேன்னு நானே கிளம்பி(மூஞ்சி கூட அலம்பாமல்) போனா.. அம்மணி கிரவுண்ட் ஃப்ளோர்ல தான் இருக்கா. என்னைக்காண பிள்ளையார் சிலை கிட்டே ஓடோடி வந்து, என் பக்கத்துல இருந்த ஹேங்கரில் தொங்கிய புடவை என்ன விலைன்னு பார்த்தா! ”அப்புறம் அநன்ஸ், எப்படி இருக்கே, என்ன வேலை, இந்த புடவை ஓக்கேவா, கார்த்தாலே எத்தனை மணிக்கு வந்தே, இந்த பார்டர் சரியில்லை இல்லே? மத்தியானம் எங்கே சாப்பிட்டே, இது கலர் அடிக்கிதோ?, க்ளையண்ட் ஆபீஸ் எங்கே?, இதெல்லாம் என்னால காலேஜுக்கு கட்டிண்டு போக முடியுமோ?”போன்ற அதி முக்கிய(!) விஷயங்களை பத்தி கேட்டா.நானும் குழம்பிய படியே ரெண்டு மூணு கேள்விகளுக்கு தெரிஞ்ச மட்டுல பதிலைச் சொன்னேன். 

மிக குழப்பமான முக பாவத்துடன் ஆக்சுவலி (pava) பாவத்துடன் அவள் ரங்ஸ் நின்றிருந்தார். கோவிந்தண்ணா ரொம்ப சாது, படு சாஃப்ட் டைப்! இதை கட்டிண்டு என்ன பாடு படுறாரோன்னு நினைக்கும்படி இருக்கார்.

அடுத்ததா நாம சந்திக்க இருக்கும் அதி முக்கியமான கேரக்டர் நம்ம சேல்ஸ்மேன் சிங்காரவேலு(பெயரில் என்னப்பா இருக்கு? ஏதோ ஒரு பையன், விடுங்களேன்) அந்த சிங்காரவேலுவின் முகத்தில அதி பயங்கர குழப்ப ரேகைகள் ஓடின. அது ஏன்னு அப்புறம் சொல்றேன்.  அப்பாவி ரெண்டு ரெண்டு ஹேங்கராக அந்த சி.வேலுவிடம் குடுத்துண்டே வந்தா. அவனும் எல்லாத்தையும் ஒரு இடத்தில் அக்காமடேட் பண்ணிட்டு வந்தான். அவனில்லாத சமயத்தில் கோவிந்தண்ணாவின் பத்து விரல்களில் 300 ஹேங்கர்களை திணித்தாள். ஹேய், இது நல்லா இருக்குல்லே?ன்னு நான் சொன்னா, உடனே அதை எடுத்து அண்ணாவின் காதில் தொங்கவிட்டா, பின்னே கையெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாச்சே! போறபோக்கில் சட்டை பட்டன் ஹோலில் கூட மாட்டிடுவா போல இருக்கேன்னு அண்ணா டென்ஷன் ஆகி சிங்காரவேலா... சிங்கார வேலான்னு கத்திண்டே சேல்ஸ்மேனை நோக்கி ஓடினார்.

இந்தக்கலர் ஏற்கனவே என் கிட்டே இருக்கு, இந்த பார்டர் நல்லா இல்லே, வொயிட் ஃபால் கடையில கிடைக்காது, இந்த மெட்டீரியலை பீக்கோ பண்ண முடியாது, பிளவுஸ் ராமராஜன் மாதிரி இருக்கு, இதே தான் போனவாரம் (!!!) வந்து வாங்கினேன், டல்லா இருக்கு, வெளிச்சத்துல நல்லாயில்லை, வேண்டாம், நல்லாயில்லை, சரியில்லை, துணி உழைக்காது, இழை சரியில்லை, பிஞ்சிருக்கு, இதுல ஒரு லைட் ஷேட் வெச்சிருக்கேன் இப்படி ஷார்ட்லிஸ்ட் பண்ணி வெச்சிருந்த 2478 புடவைகளிலிருந்து எல்ல்ல்ல்லாவற்றையும் நீக்கினாள்.  மீதமிருந்தது ஒரு 4 புடவை தான். அந்த நாலையும் 2 மணிநேரம் திருப்பித் திருப்பி பார்த்தாள். நானும் கோவிந்தண்ணாவும் தேமேன்னு நின்னுண்டு இருந்தோம். அனன்ஸ் நீ என்ன சொல்றே.. ஏங்க, நீங்க?ன்னு ரொம்ப பவ்வியமா ஒரு 550 வாட்டி கேட்டா! எனக்கு வந்த எரிச்சலுக்கு ஓனர்கிட்டே போய் உங்க கடை பேஸ்மெண்ட்ல இவளை வெச்சு பூட்டிடுங்கன்னு சொல்லலாம்ன்னு தோணிச்சு. எனக்கே இப்படி தோணுதே, கோவிந்த் அண்ணாவுக்கு என்னெல்லாம் தோணி இருக்கும்? அந்த சிங்கார வேலு நம்மளை அனுப்பிட்டு ஒரு ஓரமா உக்காண்டு குலுங்கி அழுதிண்டு இருந்தான். யாரு பெத்த புள்ளையோ என்னமோ?

ஒரு வழியா ஓக்கே பண்ணி அந்த 4 புடவைக்கு பில்லை போட்டு பணம் கட்டிட்டு வந்தப்போ தான் எனக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இப்போ சல்வார் பாக்க போகலாம். ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் தான்னு என் தலையில கல்லைத்தூக்கி போட்டா! நானும் அண்ணாவும் அதிர்ச்சியை வெளிக்காட்டிக்காம, ஓ.. போலாமே.. அதுக்கென்னான்னு எச்சில் முழுங்கிட்டு மேல லிஃப்ட்ல போனோம். பின்னே 4 புடவைக்கு 4 மணி நேரம் நின்னிருக்கோமே.. கால் வலி. 

அங்கே போய் இது வாண்டாம், அது வாண்டாம், பூ சரியில்லை(அதான் எங்க காதுல பூ வெச்சாச்சே), துப்பட்டா மோசம் (நான் துப்பட்டா?) , இதே கலர்ல போன வாரம்(!!!) (மறுபடியுமா?)வந்து எடுத்தேன், இப்படியெல்லம பெனாத்திண்டே சுமார் ஒரு மணி நேரம் நடந்தா. நான் பெர்ஸனலா ரெண்டு செலக்ட் பண்ணி ஷார்ட்லிஸ்டிங்க்கு அனுப்பினேன், I kept my fingers crossed. இல்லையோ பின்னே.. இவ இந்த வாட்டி ஷார்ட்லிஸ்ட் பண்ணிது ஒன்லி 5 தான். நான் போன வாரம் எது எடுத்தேன் தெரியுமான்னு அவ கொண்டு வந்து காட்டின ட்ரெஸ் செம்ம்ம்ம சூப்பர். நான் சொன்னேன், ”ATM, இதை போட்டுண்டு ... அப்படியே “ன்னு நான் சொல்லிண்டு இருக்கும்போது அவள், கோவிந்த் அண்ணா, சேல்ஸ்கேள், அங்கே சுடிதார் பார்த்துண்டு இருந்த இளசுகள் எல்லாரும் என்னை கவனிக்க, நான் கண்ட்ன்யூ செய்தேன்” பத்திரமாகவும் மெதுவாகவும் அந்த கரகத்தை தலையில எடுத்து வெச்சுக்கணும்”ன்னு முடிக்கவும் எல்லாரும் ‘கொல்ல்ல்ல்ல்’. மன்ன்ன்ன்ஞ்சள்ன்னா அப்படி ஒரு ம்ன்ன்ன்ன்ஞ்சள்.. பேசாம புரட்டாசி மாசம் போட்டுண்டா செம்ம்மையா உண்டி குலுக்கி பெரியாளா வரலாம்! 

எப்படியோ நானும் அண்ணாவும், குத்துயிரும் கொலையுயிருமாக தப்பிச்சோம் பொழைச்சோம்ன்னு வெளியில வந்ததுக்கப்புறம் தான் தெரிஞ்சுது இவ வாரா வாரம் சென்னை சில்க்ஸுக்கு வந்துடுவாளாம்.. அதான் அந்த சிங்காஅரவேலுவுக்கு வயித்துல அமிலம் சுரந்திருக்கு.. மூஞ்சியே விளக்கெண்ணய் குடிச்சாப்புல அப்படி ஒரு எக்ஸ்பிரஷன். இவங்க கார் பார்க்கிங்ல உள்ளே போனாலே அந்த பார்க்கிங் செக்யூரிட்டி உடனே சென்னை சில்க்ஸுக்கு வொயர்லெஸ் தகவல் குடுத்துடறானாம்.. அவங்க இம்மீடியட்டா ஷட்டரை போட்டுடறாங்களாம். உள்ளே இருக்கற கஸ்டமர்ஸை எல்லாம் பின்புற வேர்ஹவுஸ் எக்ஸிட் வழியாத்தான் விடுறாங்களாம்!. ஐய்யய்யோ கடை லீவான்னு இவ பி.எஸ்.ஆருக்கு போனா, அங்கேயும் கடை அடைப்பு தானாம். பின்னே, என்னதான் காம்பிடேட்டர்ஸானாலும் கடைக்காரர்களுக்குள் இந்த அளவுக்கு நட்பு இருக்க முடியுமான்னு நான் வியந்தேன். செ.சி முதலாளி உடனே PSRக்கு SMS அனுப்பிடுவாராமே! அந்த சிங்காரவேலு அனேகமா ரிஸைன் பண்றதுக்கே இவ தான் காரணமாம்.

 கோவையில இருக்கற ஸ்ரீதேவி சில்க்ஸ், கணபதி சில்க்ஸ், மஹாவீர்ஸ், ஷோபா போன்ற கடைகள் ஏன் விளம்பரம் செய்யறதில்லைன்னு இப்போ உங்களுக்கு நன்னா புரிஞ்சிருக்குமே? 

இந்த ரகளையில எனக்கு வேற அம்மணி ஒரு புடவை வாங்கி பரிசளிச்சா! நான் இவ கூட ஷாப்பிங் போன பாவத்துக்கு இவள் எனக்கு 15000 ரூபாய்க்கு பட்டுப் புடவையும் கோல்டு ஃபேஷியலும் ஸ்பான்ஸர் பண்ணியிருக்கணுமாக்கும். ஆனாலும் அந்த ஒரு புடவைக்கே நான் கண்ணீர் மல்கி பாட்டெல்லாம் பாடினேன். ”கருணை தெய்வமே.... அப்பாவியே.... காண வேண்டும் உன்... கொட்ட்ட்டாவியே”.... அப்படீன்னு.. பின்னே என்னங்க? ஷாப்பிங் போனா ஒருத்தி டயர்டே ஆகமாட்டாளோ? 

திருச்சி சாரதா சில்க்ஸ்ல என் ரங்ஸ் சேல்ஸ்மேனிடம் கேட்ட கேள்வி மறக்கமுடியவில்ல்லை... மறக்க முடியவில்லை! ஏங்க இவங்களுக்கெல்லாம் காலே வலிக்காதா? 

வெளியில் வந்து ஆளுக்கு 1.5 முழம் பூ வாங்கிண்டோம். பூ வெச்சுக்க ஹேர்பின் இல்லை.. சேஃப்டி பின்ல வெச்சுவிடுறேன் வான்னு சொன்னா. எனக்கு பயமான பயம், சேஃப்டி பின்னால பின் மண்டையில குத்திக் குத்தி சீழ்தலை சாத்தனார் மாதிரி ஆக்கியுட போறான்னு.. ச்சே.. அவ ரொம்ப நல்லவ.. அந்த பின்னை அவிழ்க்கவேமுடியாம வெச்சுவிட்டா.. சென்னைவரக்கும் அந்த வாடல் பூவோட ஆட்டோக்காராளெல்லாம் தெரிச்சு ஓடுறாப்புல் அவ எனக்கு வெச்சு விட்டிருந்தா! நீ என்னென்ன செய்தாலும் புதுமை.... அப்பாவி.. 

அப்புறம் லாட்ஸில் ஷூ வாங்கப் போனோமா, அங்கே மெட்டி மாத்தணும், 35 டீ கப்ஸ் வாங்கணும், ஆணி வாங்கணும், ஸ்க்ரூ வாங்கணும், புக் வாங்கணும்ன்னு தெனாலி மாதிரி கண்டினுவஸா சொல்லிண்டு இருந்தா. எதுக்குடீ 35 கப்ஸ்ன்னு கேட்டா, நான் இது வரைக்கும் வீட்டுப்பாத்திரங்கள் ஏதாவது வாங்கி இருக்கேனான்னு கேக்கறா! அதானே, அதுக்கும் சேர்த்து தான் புடவை வாங்கிடுறியேன்னு நான் சொல்ல, ”இனிமே நீ துணி வாங்கினா அதை கிச்சன்ல தான் வைக்கணும்”ன்னு அண்ணா வெச்சாரே ஒரு ஆப்பு! 

அப்புறம் அன்னபூர்னாவுல என் கிச்சடியெல்லாம் எடுத்து சாப்பிட்டுட்டு, தன்னோட பஜ்ஜியை ஒண்ணு கூட எனக்கு குடுக்காம காலி பண்ணிட்டு, சூடான ஃபில்டர் காப்பியை கங்காஜலமாக்கி குடிச்சுட்டு இன்னும் கொஞ்ச நேரம் அளவளாவிட்டு வருத்தத்துடன் பிரிஞ்சோம்.. 

லவ் யூ ATM! You are a rockstar! Best buddy for life! அண்ணா தான் பாவம்! :))))




Saturday, June 1, 2013

ரங்குவின் நவீன சிந்தனைகள்


எனக்கும் ரங்ஸுக்கும் ரசனையில பொருத்தம்ன்னா அப்படி ஒரு பொருத்தம், இதைப்பத்தி ரெண்டு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும் பதிவுல சொல்லி இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் சிலவற்றை இந்தப் பதிவில் பகிரலாமேன்னு நினைக்கிறேன்.

சிந்தனைகள்:

1. பெண்கள் தினமும் மஞ்சள் பூசிக்கொள்ள வேண்டும் : தினமும் காலை ஆஃபீஸ் கிளம்பறதுக்கு முன்னாடி மஞ்சள் தேய்ச்சுண்டியான்னு கேப்பார். துபாய்ல இருந்த வரைக்கும் டப்பா டப்பாவா கோபுரம் பூசு மஞ்சள் தூள் தேய்ச்சு குளிச்சு குளிச்சு எல்லா சுடிதார்லேயும் நிரந்தர மஞ்சள் கரை ஆயாச்சு. துண்டு, தலைகாணி எல்லாத்துலேயும் திட்டு திட்டா மஞ்சள் கறை! இதெல்லாம் நான் யாருகிட்டே சொல்ல?

2. குங்குமம் தான் இட்டுக்கணும்: ஸ்டிக்கர் எல்லாம் இட்டுக்கப்பிடாது. சுமங்கலிகள் குங்குமம் தான் இட்டுக்கணும். வகிட்ல குங்குமம் இட்டுண்டாலே கொஞ்ச நேரத்துல போயே போயிடும். இந்த அழகுல நெத்தியிலேயுமா? இந்த தொல்லை தாங்க முடியாம நான் பெரீய ஸ்டிக்கர் இட்டுண்டு, அது மேல குங்கமத்தை வெச்சுண்டு சில நாள் இவரை ஏமாத்தி பார்த்தேன். இதுனால தலைகாணி எல்லாம் கரையாச்சேயொழிய இவருக்கு திருப்தி ஏற்படலை!

3. நைட்டியா? மூச்! : சதா சர்வகாலமும் புடவை தான் உடுத்திக்கணும்.  மடிசார் உடுத்தியுண்டா அதி ப்ரஸன்ன வதனம். சுடிதார் - சுமாரான எக்ஸ்பிரஷன்.  மத்தபடி நைட்டி பைஜாமா எல்லாம்.. ப்டாதுன்னா ப்டாது தான். இவருடைய எக்ஸ் கேர்ள்பிரண்ட் தேவயானி வேணா பொம்மிஸ் நைட்டீஸ் போட்டுக்கலாம் ஆனா கட்டின பொண்டாட்டி நான், விக்காஸ், ராசாத்தி பத்தி எல்லாம் கனவுல கூட நினைக்கக் கூடாது! வாட் எ கொடுமை சரவணா! வாட் எ கொடுமை ஐ ஸே?

4. நான்ஸ்டிக் கேடு: நான்ஸ்டிக்கெல்லாம் உடம்புக்கு மஹா கேடாக்கும். ஒன்ளி வெண்கலம், இரும்புச் சட்டி / ஹிண்டேலியப் பாத்திரம் தான் நல்லதுன்னு சொல்லுவார். அதுல டெஃப்லான் இருக்காம் அதுனால கேன்ஸர் வருமாம்.. அடைமாவை இரும்புக் கல்லுல போட்டு நாலு கரண்டி எண்ணெயில் பொறித்தெடுத்து சாப்பிட்டா மாட்டும் கொளஸ்ட்ராலே (மலையாள ஆக்ஸண்டில் கொலஸ்ட்ரால் கொளஸ்ட்ரால் ஆயிடுமாக்கும்) வராதோ? இதுக்கு கேன்ஸரே தேவலாம்!

5. இண்டக்‌ஷன் கேடு: இண்டக்‌ஷன் ஸ்டவ்வெல்லாம் ரொம்ப கேடாக்கும். எங்க பாட்டியெல்லாம் பாலக்காட்ல விறகடுப்புல தான் சமைப்பா. என்ன ருஜியாக்கும் தெரியுமோ? க்கும், மெட்றாஸுல விறகு கிடைக்குமா? மோரோவர், அதுல வரும் புகையால என் கண்ணு எரிஞ்சாக்கூட உங்களுக்கு பரம த்ருப்தி தான், ஆல் டீட்டெயில்ஸ் ஐ நோ,  ஆனா வாடகை வீட்டு சமயலறை என்னத்துக்காறது? வீட்டுக்கார மாமி சர்ப்ரைஸ் ஆடிட்டுக்கு வந்தா நம்ம ஆட்டம் க்ளோஸ்!ஸ்டாக் பண்ணி வெச்சுண்டு இருக்கற விறகெல்லாம் நீங்க தோள்ல சுமந்துண்டு நடுத்தெருவுல தான் நிக்கணும்.

6. கேன் வெள்ளம் கேடு: கேன் தண்ணி உடம்புக்கு கெடுதல். பானைத் தண்ணி தான் நல்லது. எனக்கு பானைத்தண்ணியும் வேண்டாம் கேன் தண்ணியும் வேண்டாம். குழாய்த்தண்ணியே போதும்.

7. Melamine கேடு: துபாய்க்கு போனப்போ எல்லார் வீட்டுலேயும் மெலமைன் ப்ளேட்டுக்கள் தான் இருக்கும்.. சாதம் சாப்பிடவே.. நான் சரி டிஃபனுக்கு செளகரியமா இருக்கேன்னு ஒரு டஜன் மெலமைன் ப்ளேட்டுக்களை வாங்கினேன். இவர் ஏதோ சினிமாவை பார்த்துட்டு மெலமைன் கேடு, வேணா தங்கத்தட்டுல சாப்பிடலாம்ன்னு ஆரம்பிச்சுட்டார்.. ஆமா பெரிய நவாப் ஃபேமிலி தங்கத்தட்டு வேணுமாம். அங்கே இருந்த வரை சாதத்தை போட்டு கைல வெச்சுண்டு சாப்பிடற பழக்கம் இருந்தது. அப்போ ஸ்டீல் தட்டுல சுடச்சுட ரசஞ்சாதம் சாப்பிட்டா, சங்கராபரணம் சங்கர சாஸ்திரி பொண்ணு சாரதா மாதிரி கை சுட்டு பொசுங்கிடும்!

8. வாஷிங் மெஷின் கேடு: கைல தோச்சாத்தான் பனியனெல்லாம் பளிச்சுன்னு இருக்கு இல்லையான்னு அடிக்கடி சொல்லி காமிப்பார். இத்துனூண்டு பாத்ரூம்ல நான் நுழைஞ்சு துவைச்சு, அலசி, நீலம் போட்டு, கஞ்சி போட்டு உஸ்ஸ்.. மெஷின்ல அழுக்கு போகாததென்னமோ உண்மை தான். இருந்தாலும் ஒரு செளகரியத்துக்கு தானே? எங்கப்பா எல்லாம் அவர் துணியை அவரே துவைச்சுக்கறார்.. நமக்கு சொல்ல முடியறதோ? 

9. Mop ப்டாது: கையால வீட்டை துடைச்சாத்தான் வ்ருத்தியா இருக்கும். மாப்புல முடி எல்லாம் போகவே போகாதுன்னு பின்னாடியே அஷ்டோத்திரம் வாசிச்சுண்டே வருவார். ஃபானை போடுங்கோன்னு பேச்சை மாத்தினாலும் , “ பாத்தியா, சொன்னேன் இல்லையா? அங்கே துடை, இங்கே துடைன்னு கண்டினுவஸா வெறுப்பேத்திண்டே அர்ச்சனையும் பண்ணுவார்.

10.”வாட்டர் பாட்டில்ஸ் எல்லாம் ரொம்ப நாள் வெச்சுக்கப்டாது. அதெல்லாம் ஃபுட் க்ரேட் இல்லை. 6 மாசத்துக்குள்ளே வங்கின எல்லாத்தையும் களையணும், ஏர் டைட் கண்டெயினர்ஸ்(!) உள்ளே வைக்கறது எல்லாமே டாக்ஸின்ஸா ஆயிடும் அதையும் களைஞ்சுடு” மாதிரியான பேச்சை கேட்டு கேட்டு எனக்கு போதும் போதும்ன்னு ஆயாச்சு. 

இனி போற போக்கை பார்த்தா, தீப்பெட்டி, லைட்டர் எல்லாம் கேடு.. இனிமே நீ சிக்கி முக்கி கல் தான் யூஸ் பண்ணணும்ன்னு சொன்னாலும் சொல்லிடுவார்.. இப்போ சொல்லுங்க.. இவரை கற்காலமனிதன்னு நான் சொன்னது தப்பா?
Related Posts with Thumbnails