Pages

Friday, June 14, 2019

A crazy genius creator

உம்புருஷன் மாது இருக்கறவரை எனக்கு கல்யாணம் நடக்காதும்மா.

ஏன் அண்ணா?

இதான் மாப்பிள்ளை பையனா?ன்னு பொண்ணாத்துல கேட்டா. இவர் உடனே  இல்லை, மாப்பிள்ளை பெரியவர்ன்னு சொல்றார்மா

அந்த பொண்ணோட ஃப்ளாட் மாம்பலத்துல ஆறாவது மாடி. உங்கண்ணனுக்கு மூணாவது மாடி ஏறும்போதே வாய்ல நுரை தட்டி கீழே உக்காந்துடுத்து. அந்த பொண்ணோட ஃப்ளாட்டுக்கு போகறதுக்குள்ள உங்கண்ணன் ஃப்ளாட்

பர்னால் சிங்கா? என்னய்யா பேரே பொய்யா இருக்கே?
சைபால் சிங்க்ன்னு ஒரு மந்திரி இருந்தாரே?
(மீசையானாலும் மனைவி)

*******************

என்னுடைய ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான், பெரீய்ய கேடி, செல்வராஜ்ன்னு பேர். போன வாரம் அவன் மாறுவேஷம் போட்டுண்டு, ஒரு பேங்க்கை கொள்ளையடிச்சுட்டான். பதினைஞ்சு ரூபா.. பாவம் அவன் மேக்கப்புக்கே இருபது ரூபா செலவாம். அது புதுசா ஆரம்பிச்ச பேங்காம். இது தெரியாம கொள்ளையடிச்சுட்டான். ( ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது)

******************

பார்ரீ மைதிலி, உன் புள்ளை இண்டர்வ்யூ அட்டெண்ட் பண்ணியே ரிட்டயர் ஆயிடப்போறான்

நம்ம கோழியூர் கோவிந்தாச்சாரி சொல்லியிருக்கார், இன்னும் ரெண்டே வருஷத்துல நம்ப மாதுவை பிடிக்க முடியாதாம். ஆமாண்டி மைதிலி, உம்புள்ளை மாது ஆத்துலேயே உக்காண்டு தெண்டச்சோறு தின்னு தின்னு கட்டிப்பிடிக்க முடியாம குண்டாகப்போறான்( அலாவுதீனும் ஹண்ட்ரட் வாட்ஸ் பல்பும்)

aircrash at delhi airport, 200 feared dead - டெல்லியில் விமான விபத்தில் 200  பேர் பயத்திலே செத்தார்கள்

(அலாவுதீனும் ஹண்ட்ரட் வாட்ஸ் பல்பும்)

*********************

ஸ்டெல்லா ஜானகி : மாதுவை இந்த வருஷம் படிக்க வைச்சு பாஸ் பண்ன வைக்கறேனா இல்லியா பாருங்களேன்!
தாத்தா : அதெப்படிம்மா அவ்ளோ ஸ்ட்ராங்கா உன்னால சொல்ல முடியும்?
ஸ்டெல்லா: எனக்கு நம்பிக்கை இருக்கு, பிகாஸ் ஜீஸஸ் நெவர் ஃபெய்ல்ஸ்
தாத்தா : பட் யுவர் மாது ஆல்வேஸ் ஃபெயில்ஸ்
(ரிட்டன் ஆஃப் க்ரேஸி தீவ்ஸ்)
**********
வீடு கட்டணும், உஷாக்கு கல்யாணம் நடத்தணும்..
அய்யீய்யோ...
என்னடா உப்பிலி..
அய்யிய்யோ..
சொல்லு
எல்லாரும் ஒண்ணை மறந்துட்டேளே?
என்ன?
எனக்கெப்போ கல்யாணம்
மூதேவி, உனக்கு பூணூல் போட்டதே வேஸ்டு!

(கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்)
*******
திருட்டுத்தொழில் கத்துண்டு முதல் வாட்டியா ஒரு அடையார்ல ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு திருடப்போனேன்
அம்ருத்தாஞ்சனம் இருக்கான்னு கேட்டேன்
இருக்குன்னான்.
எவ்வளோன்னேன்
ஆறு ரூபான்னான்.
பத்து ரூபாயை கொடுத்தேன்
அம்ருதாஞ்சனத்தை டேபிள்ள வைச்சுட்டு பில்லை போட்டுண்டு  வான்னேன். அவன் பில்லை போட்டுண்டு வர்றதுக்குள்ள நான் அம்ருத்தாஞ்சனத்தை திருடிண்டு ஓடி வந்துட்டனே

திருடன்: என் பேரென்னன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம்! எவ்வளோ யோசிச்சாலும் இந்த மருதுவோட பேரை உங்களால கண்டு பிடிக்கவே முடியாது
மாது: உன் பேரு என்ன மருதுவா?
திருடன்: ஐ.. புத்சாலியா நீ.. எப்பிடிய்யா கண்டு பிடிச்ச?
மாது: கஷ்டம்.. இவனுக்கு எருதுன்னே வைச்சிருக்கலாம்! அறிவுல ஆடு மாடை விட மோசமா இருக்காண்டா!

ஏன்யா மருது, இந்த பேங்குக்கு சுரங்கம் தோண்டப்போறேன்னு சொல்லிண்டு இருக்கியே, கடப்பாரை மம்பட்டி எல்லாம் வைச்சு தோண்டினா சத்தம் வருமேய்யா.. போலீஸ்ல மாட்டிக்கப்போறே!
இதெல்லாம் யோசிக்காமலா சுரங்கம் தோண்டுவோம்? காதுல பஞ்சை வைச்சுண்டு தோண்டுவோம்!

அப்பண்ணா சாஸ்திரிகள் : நான் பத்து சாவு சவுண்டி கருமாதி காரியத்க்கெல்லாம் தான் வழக்கமா போறது. நடூவுல ஒரு சேஞ்சுக்கு கல்யாணம் சீமந்தம்ன்னு போவேன். சீனு எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட பையன், தட்ட முடியலை வந்துட்டேன்.
குப்புசாமி ஐங்கார் தாத்தா : நல்ல மங்களகரமான சாஸ்திரிகள் தான். வீடெங்கே உங்களுக்கு?
அப்பண்ணா சாஸ்திரிகள்: கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு பக்கத்துல
அதாவது இந்த நிச்சியதார்த்தம் இருக்கே.. மஹா அனாவஸ்யமான ஃபங்ஷன். எழவெடுத்த மாதிரி இழுத்துண்டே போகும்னேன்.
 சீக்கிரம் ஃபங்ஷனை முடிச்சு என்னை சீக்ரம் அனுப்புச்சு விட்ரு. நீ பாட்டுல டிலே பண்ணி என் தாலி அறுத்துடாதேப்பா..  இன்னைக்கு ஜட்ஜ் பரமேஸ்வரன் ஆத்துக்கு நான் போயாகணும்.
எதுக்கு?
அவன் மண்டையை போட்டு இன்னைக்கு எட்டாம் நாள். நான் போய் தான் எல்லாம் பண்ணியாகணும்
மாது, இந்த சாஸ்திரிகள் வாண்டாம்டா.. நீ தாலி கட்ற சமயத்துல கைல அட்சதைக்கு பதிலா எள்ளை கொடுத்தாலும் கொடுப்பான்
இந்த கல்யாணம் சவுண்டிக்கெல்லாம் மந்திரம் ஒண்ணே தான்.. என்ன கொஞ்சம் ட்யூனை ஏத்தி இறக்கி மாத்தி மாத்தி சொல்லணும். அவ்ளோ தான். நீ கவலையே படாதே.. கல்யாணத்தை பொணப்புரட்டு புரட்டிப்புடறேன்.
மாது, இந்த வாத்தியார் வேண்டாம்டா..வாயதிறந்தா கோவிந்தா எழவுன்னு அபசகுனமா பேசறதுக்கே அவதாரம் எடுத்திருப்பான் போல்ருக்கே டா..
(ரிட்டன் ஆஃப் க்ரேஸி தீவ்ஸ்)

கல்யாணத்துக்கு என்ன ஸ்வீட் தெரியுமா?
திரட்டிப்பால்...
பாலுக்கு என்ன பண்றது இப்போ?
கவலையே படாதேப்பா.. நான் திருவான்மியூர் பூத்லேந்து திருடிண்டு வந்துர்ரேன்
ஆஹா.. தெரட்டிப்பால் பண்றதுக்கு திருட்டுப்பாலா? ஓஹோ!

A droplet in an ocean - எத்தனை சொன்னாலும் போறாது. எத்தனை சிரிச்சாலும் இனிமே அதுல ஒரு சோகம் இழையோடும். என்ன அவசரம் அதுக்குள்ள உங்களுக்கு?

Fig gigs

கேஃபிட்டீரியாவில் உட்கார்ந்துண்டு என்னிக்குமில்லாம இன்னிக்கி அத்திப்பழ ஐக்கீம் சாப்பிடலாம்ன்னு சபலம். அது அத்திப்பழ குல்ஃபி. குச்சியை கைல பிடிச்சுண்டு ஆ....னன்.....தமா சாப்பிட்டுண்டு இருந்தேன். நம்ம ஆவின் திரட்டிப்பால் இருக்கோன்னோ? அதுல கொஞ்சம் அத்திப்பழத்தை நறுக்கிப் போட்டு நடுல நடுல வந்துண்டு இருந்தது. செம டேஸ்ட்.

சாப்பிடும்போது ஒண்ணு ஃபோன் பாக்கணும். இல்லே, டீவி. ஃபோன் இன்னிக்கி ஓவரா களைச்சு போய் , பேட்டரி பிராணனை விட்டுடுத்து.

சரின்னு ஃபாக்ஸ் லைஃப் டீவி பார்த்துண்டே குல்ஃபியை உறிஞ்சினேன். அது ஊர் ஊராப் போய் அவா சமயலை சாப்பிட்டுப் பார்த்து சமயல் கற்கும் ஸ்பெஷல் நிகழ்ச்சி. குபுஸ் எப்படி பண்றதுன்னு காமிச்சுட்டு, இப்போ இதுக்கு தொட்டுக்க என்ன பண்ணலாம்ன்னு கேட்டாளா? நம்ம கஷ்டகாலம், மாமிஸத்தை அப்படியே நறுக்கி, கொத்தி, மலை மாதிரி கூட்டி, பரோட்டா மாவு மாதிரி பிசைஞ்சு,  சேமியா மாதிரி பிழிஞ்சு, அதுல என்னென்னமோ சம்பந்தமேயில்லாம தக்காளி, கோதுமை ரவை(?) கொத்தமல்லி (50 கட்டு)  கடைசி வரை உப்பே போடாம, நத்தை ஓடு இருக்குல்ல? அதுல அந்த ஃபில்லிங்கை நிரப்பி ஓவன்ல வைச்சு அதை எடுத்து, அதை ஃபோர்க்கால குத்தி குத்தி.. சரி வுடுவொம்.

இப்படி மூளையின் ரிஸப்டார்களை இந்த காட்சிக்கோவையிலேந்து டெலிப்பரேட்டா முடக்கிட்டு, நாக்கை பிரதானமா வைச்சுண்டு ரசிச்சு ருசிச்சு அத்திப்பழ ஐக்கீமை முடிக்கறச்சே கேஃபிட்டீரியா கேர் டேக்கர் ஒருத்தர் என்கிட்ட வந்து, ”மேடம், பிக் தானே சாப்பிடறீங்க?”

தூக்கி வாரிப்போட்டது எனக்கு!

என்னது? pig ஆ?ன்னேன் அதிர்ந்து.

உடனே, ஆமா மேடம், இது பிக் தான்.

அடராமா, ஜெல்லி, சாக்கலேட்ல அனிமல் ஃபேட் போடற மாதிரி இப்போ ஐக்கீம்லையும் பன்னிக்கறியா? ஆவின் திரட்டுப்பால் இல்லியா இது? வாய்ல ஒண்ணும் சேமியா தட்டுப்படலியே! கடவுளே, என்ன பண்ணுவேன்! ஐய்யோ ஐய்யோன்னு  பதறினேன்.

அதுக்குள்ள அவர், அத்திப்பழம் மேடம்ன்னார்.
அத்தி...ப்பழமா.. ஓ ஃபிக்... fig ஐ சொல்றீங்களா?
நிம்மதிப் பெருமூச்சு.

ஷப்பா! ஏண்டா இப்பிடி பீதியைக் கிளப்பறீங்க?

Thursday, June 13, 2019

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

மருத மல்லி மருத மல்லி

நமக்கு தான் பூ கட்ட வராதே, இப்போ ஜூன் மாசம் பூ மலிவா இருக்கேன்னு பத்து ரூபாய்க்கி, (ஆமா, கொஞ்சம் அதிகம் தான், நான் கட்டுற அழகுக்கு) கட்டி பளகுவோமேன்னு சொல்லிட்டு உதிரிமல்லி வாங்கினேன்

அதுல பாருங்க, பூ வாங்கினேனேயொழிய பூ கட்ட நல்ல நூல் இல்லை வீட்டுல. அம்மாவோட ஒய்ட் டப்பாவுக்குள்ள இன்னும் பேரே கண்டுபிடிக்கப்படாத கலர்களில கோடிக்கணக்கான நூல்கண்டுகளும் பாபின்களும் இருக்கும். இருந்தாலும் நான் பூ கட்டி பழக ஒரு நூல் கூட ஸ்லாக்கியமா கிடைக்கலை! இதுவே வாழை நாரா இருந்தா அந்த ஃப்ரிக்‌ஷனுக்கு ஜோரா கட்டமுடியும்ங்கற பேஸிக் திங்க்கிங் இருக்கா இந்த பூ விக்கறவாளுக்கு? கும்மோணத்துல எல்லாம் என்னா சவரணை? அவாளே நூலும் கொடுத்துடறா.
இந்த ஒரு காரணத்துனால தான் என்னால  பூ சரியா கட்ட முடியலை.

(ஏய், யாரது ஆடதெரியாதவளுக்குன்னு கிகீக்கீன்னு சிரிச்சிண்டு? ஐ ஸீ யூ கெட்டவூட், ப்ளடி பிட்பாக்கேட்ஸ்)

இப்போ புதுசா என்ன பிரச்சினைன்னா நூல்கண்டு டப்பாவையே காணும். நம்மாத்துல ஒரு கரும்பச்சை பூ கட்டற நூல்கண்டு உண்டு. ஆனா அது வருஷா வருஷம் வீடு ஷிஃப்ட் பண்ணும்போது மட்டும் தான் கிடைக்கும். அப்பறம் அந்த மெஷின் ட்ராவுல த்ரெட் கட்டர், தையல் பிரிச்சிட்டர் (நானே சிந்திச்சு பேர் சூட்டினேன்) இதெல்லாம் கூட ஒரு கருப்பு நூல் இருந்தது. அதை யூஸ் பண்ணிண்டேன்.

பூ கட்டும் வைபவம் ஆரம்பிச்சேன்.ஸ்ட்ராஜிக் திங்கிங் முக்கியம் முதல்ல. அப்பறம் ப்ளானிங். தொராயமா எவ்வளோ பூ இருக்கலாம்ன்னு யோசிச்சேன். மேத்ஸ்ல ரொம்ப வீக் நான். அதுனால நூல் நீளம் ப்ளான் பண்ணிண்டு கட் பண்ணி மூணா மடிச்சு ரெடி பண்ணிண்டேன்.
அதென்னவோ நூலை வைச்சு கட்ட ஆரம்பிச்சப்போவே நாலு மணி நேரம் நான் ஏஸி காரில் நானூறு குலோமீட்டர் வேகத்தில்  பயணிச்சு ஹோட்டலுக்குள் லஞ்ச் சாப்பிட நுழையும் லேடீஸ் மாதிரி ஒரே குருவிச்சிக்கு.

பூவை மெள்ளமாவும் ஃபர்ம்மாவும் பிடிச்சுண்டு மேல்கீழா முதல்ல அரேஞ்ச் பண்ணி கெட்டி பண்ணிண்டேன். நூலை ஒரு சுழற்று சுழற்றி இன்னும் டைட் பண்ணிண்டு ஒரு நாட் போடணும். அவ்வளவ்தான். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் இல்லியோ?இதென்ன பிரமாதம்? எல்லாம் வந்துரும்.

முதல் ரெண்டு பூவை மேலும் கீழுமா வைச்சுண்டு ஒரு சுத்து சுத்தி, டைட் பண்ணினேனோ இல்லியோ, ரெண்டு பூவும் பாவம் நூலால் கழுத்து சரக்ன்னு  அறுக்கப்பட்டு, கில்லட்டீன்(Guillotine) பனிஷ்மெண்ட் கொடுத்தாப்புல இறந்து என் மடியில விழுந்துடுத்து. வேகமா அதை எடுத்து உச்சி மண்டையில தொராயமா சொருகி வைச்சுண்டேன். பின்னாடி வைச்சுக்க முடியில்லை, ஹேர்பின் தேடமுடியாது.

”இப்போ learn from your mistakes. Don’t overdo. மெதுவா சுத்தினாப்போறும். டைட்டா சுத்தினா கில்லட்டீன்
பனிஷ்மெண்ட் பூவுக்கு. அதுக்கு நீயே தொங்கேன்”னு மைண்ட்வாய்ஸ் பேட்வேட்ஸ்ல திட்டித்து.

சரி. இப்போ மெதுவா சுத்தி சர்வ ஜாக்கிரதையா பூவை பேலன்ஸ் பண்ணி நாட் போட்டேன். சக்க்ன்னு நின்னது பூ.”ஆஹ்ஹா.. தட்ஸிட். ஸோ ஸிம்பிள். ஆயிரம் பேரைக்கொன்னாத்தான் அரை வைத்தியன் ஆகமுடியும். அப்படித்தான் ரெண்டு பூவை தூக்குல போட்டாலும் சமர்த்தா கத்துண்டாச்சே நீ? வெல் டன். உன்னாலாகாததுமுண்டோ?” ன்னு சித்த முன்னாடி கழுவி ஊத்தின மைண்ட்வாய்ஸ் புகழாரம் சூட்ட,  உச்சி குளுந்தேன். எதுக்கும் உச்சி மண்டையில தொட்டுப்பார்த்துண்டேன். ரெண்டு மல்லியும் கரகம் மாதிரி ஏதோ நின்னுண்டு இருந்தது.

”இனி தினமும் ஒவ்வொரு பூ வாங்கிண்டு வந்து கட்டி பழகிடு. ஒரு நாள் சம்பங்கி, ஒரு நாள் சாமந்தி, ஒரு நாள் முல்லை, ஒரு நாள் ஜாதி, ஒரு நாள் ரோஜா, ஒரு நாள் வாழைப்பூ... தேவைப்பட்டா கோயம்பேடு கூட போய் வாங்கிக்கலாம். நோ பிராப்ளம். ஆனா தினமும் கட்டணும். எவ்ளோ தெரப்யூட்டிக் பாரேன்? நல்லது, கிறுக்கெல்லாம் தெளிஞ்சிரும். உனக்கு நட்டு டைட் ஆயிடும் ”அப்படீன்னெல்லாம் மைண்ட் வாய்ஸ் ஏகப்பட்ட லெக்சர். ”ச்சை! கேட்டனா இப்போ உன்னைய? ஒரு ஜதை பூவை பாலன்ஸ் பண்ணி நிக்க வைச்சிருக்கேன். அதுக்குள்ள கோயம்பேடா? சம்பங்கியா? சாமந்தியா? முதல்ல கிளம்பு நீய்யி! ”

அடுத்த ரெண்டு பூவை பக்கத்துல நிக்க வைச்சு பாலன்ஸ் பண்ணி நூல் சுத்தி கொண்டு வர்லாம்ன்னா நூல் சுத்த இடமில்லை. சரி பழைய ஃப்ரென்ட்ஸ் ரெண்டு பேரையும் அல்லேக்கா சேர்த்து நாலு பூவுக்கும் சேர்த்து நூல் சுத்தி நாட் போட்டேன். திக்கா அழகா இருந்தது. நடுவுல இடம் விட்டா சென்னையில பூ வியாபாரிகள் கட்டின மாதிரி ஆயிடும். மூணாவது ஜதை பூவை அட்ஜஸ்ட் பண்ணி நிக்க வைச்சேன். கொஞ்சூன்ன்ன்ண்டு இடம் விட்டு  நூலை சுத்தி மெதுவா நாட்ட் போட்டுண்டே இருக்கேன்.... அதுக்குள்ள என்ன தோணித்தோ, உணர்ச்சி வசப்பட்டு ஃபர்ஸ்ட் கட்டினேனோல்லியோ அந்த ரெண்டு பூவும் ஆண்டிக்ளாக்வைஸ் அன்வைண்ட் ஆகி, ரிவர்ஸ் கியர்ல தானா திரும்பி மேலேந்து தொபுக்கடீர்ன்னு கீழ குதிச்சு தற்கொலை பண்ணிண்டுடுத்து.

அட ராமா.. நாட் டைட்டா போட்டா கில்லடைன் பனிஷ்மெண்ட். நாட்டை கொஞ்சம் நிதானமா போட்டா தானா  குதிச்சு தற்கொலை! எப்படி இருந்தாலும் இந்த மல்லிப்பூவின் நான் கோஆப்பரேஷன் மூவ்மெண்ட் என்னை ரொம்பவே பாதிச்சது. ஒரு வேளை ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு மிருகம் இருக்கறாப்புல ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு பூ இருக்குமோ? ஒரு வேளை என் ராசிக்குரிய பூவைக் கண்டுபிடிச்சு கட்டத்தான் என்னால முடியுமோ? ஒரு வேளை என் ராசிக்குரிய பூ காலிஃபிளவரானால்? ஓ மை காட்! ஏன் எதுவுமே ஒர்க்கவுட் ஆகறதில்லை?

குத்து மதிப்பா ஒரு எட்டு  பூ கட்டிப் பார்த்தேன். நவக்கிரஹம் மாதிரி ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு திசையில இருந்தது. (பார்க்க படம்)

நாட் பேட் ஆக்சுவலி!

அடப்போங்கைய்யா..

மரியாதையா டிராவை குடாய்ஞ்சு பெரிய ஊசி எடுத்தேன். அதே நூலை போட்டு கடகடன்னு கோர்த்துட்டேன். செண்டு மல்லி ரெடி. ”போறும்போ. தினமும் நாலு பூ மட்டும் கட்டு. உன்னால எல்லாம் எதுவும் முடியாது. நீ ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லை” - மறுபடியும் மைண்ட் வாய்ஸின் கழுவி ஊத்தல்!

Tuesday, June 4, 2019

தையல் நாயகி

புதுசா இப்பெல்லாம் தையல் மெஷின்ல மோட்டர் வைச்சுண்டு தைக்க ஆரம்பிச்சிருக்கேன். அது தான் எம்ப்ராய்டரி, க்ராஃப்ட்ஸ் வொர்க், க்வில்லிங் எல்லாத்துலேயும் கோல்டு மெடல் வாங்கிருக்கோமே, இதெல்லாம் ஜுஜுபிம்மான்னு இறங்கிட்டேன்.  எங்க மன்னிட்டேந்து ஒரு மெஷின் (ஃப்ரீயாத்தான்) சுட்டுண்டு வந்துட்டேன்.

முதல்ல புடவைக்கு ஃபால் தைக்கலாம்ன்னு எடுத்தேன். கடையில கேட்டா, 200 ரூபாயாம். ஃபால் தைச்சு ஓரம் அடிச்சு கொடுக்க. நானோ ஏழை.. என்கிட்ட இருக்கறதோ இருனூத்தி சொச்ச புடவைகள் தான்! இதையெல்லாம் ஓரம் தைச்சு ஃபால் வைக்க  பேங்கைத்தான் கொள்ளையடிக்கணும் போல்ருக்கே?  யாருகிட்டே? விடுவமா நாங்க?

முதல்ல மெஷின்ல ஊசியில் பத்திரமா நூலை கோர்த்துண்டேன். அப்புறம் தான் புரிஞ்சது பாபின்னு ஒண்ணு இருக்காம். அதுலேயும் சேம் கலர் நூல் தான் போடணுமாம். இல்லாட்டா தையல் கலர்க்கலரா கச்சாமுச்சான்னு இருக்குமாம்.

பாபின்ல வேற கலர் நூல். :-|  இப்போ ஊசிலேந்து நூலை உருவிட்டு பாபின் கோர்த்தல் பணி.  மூணு நிமிஷம் மோட்டரை அழுத்திட்டு பார்க்கறேன் பாபின் காலியா தான் இருக்கி! நூல்கண்டு என்னமோ டயட்ல இருந்தாப்புல இளைச்சிடுத்து! அந்த பக்கி மெஷின், பாபின்ல நூலை சுத்துன்னா மூதேவி அந்த பாபின் வைப்போமே, அந்த rodல படு வேகமா நூலை சுத்திண்டு இருந்திருக்கு. இது தெரியாம நான் பாதி நூல்கண்டை இஹிஹின்னு இளிச்சுண்டு சுத்த விட்ருக்கேன். மறுபடியும் unwind பண்ணி பாபினை சுத்தவுட்டு.. ஷப்பா.. ரீவொர்க்!

இப்போ பாபின் ரெடி. ஆனா நூல் கோர்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுத்து!  என்னமோ ஒரே இருட்டாவே இருக்கேன்னு கஷ்டப்பட்டு அரை மணி தைச்சுட்டு பார்த்தா சந்தி சமயம் மசங்கிருக்கு. கவனிக்கலை. எழுந்து போய் லைட்டை போட்டேன். ஆஹா.. பளீர்ன்னு வெளிச்சம். இதை முன்னமே போட்டிருக்கலாம்! சரி இனி ஆனந்தமா தைக்கலாம்ன்னு மைண்ட் மில்க் குடிச்சுண்டேன்.

அப்போவும் என்னமோ சிக்கல். தையல் விழறதா என்னன்னே தெரியமாட்டேங்கறதே? சரின்னு மறுபடியும் எழுந்து போய் ரீடிங் க்ளாஸ் எடுத்து போட்டுண்டு வந்தேன். ஆஹ்ஹா.. என்ன துல்லியம்! இனி பரமானந்தமா தைக்கலாம்.  நூல் கோர்த்தாச்சு. நூல் கோர்க்கறதை பத்தி ஒரு அத்தியாயமே எழுதலாம். இந்த மெஷின் என்னமோ இடது பக்கம் கோர்க்கர டிஸைன். முதல்ல அதுவே வாகு இல்லை. யாருய்யா அது? எல்லா மெஷின்லேயும் அப்பிடித்தான் டிஸைன்னு சவிண்டு கொடுக்கறது? எனக்கு இப்புறம் தான் வாகுன்னு உஷா காராளுக்கு யாராவது எடுத்து சொல்லுங்கய்யா! ப்ளடி பிட்பாக்கேட்ஸ்!

முதல்ல thread takerல நூலை போடணுமா tension regulatorல போடணுமான்னு ஏக குழப்பம். தோராயமா ஒவ்வொரு வாட்டியும் போட்டுண்டு தைக்கறது. தைச்சும் பார்க்க வேண்டிது. தைச்சா ஓக்கே.. அல்லது tension regulatorன்னால tension எகிறி BP shoot up ஆகி நூலை பிய்ச்செறிஞ்சுட்டு கிச்சனுக்கு போய் ஆசுவாசப்படுத்திண்டு இன்னொரு நாள் தைச்சுக்கலாம்ன்னு மெஷினை கடாசிட வேண்டீது. இது நாள் வரைக்கும் ட்ரயல் & எர்ரர் தான். இன்னும் பெஸ்டு மெத்தட் என்னன்னு முடிவாகலை. அல்லது எனக்கு தெரியலை!

ஒரு சுயம்புவுக்கு இதான் லக்ஷணம்.

ஆச்சு. இப்படி கோச்சுண்டு அடிச்சு திட்டி எல்லாம் பண்ணினாலும், ஃப்ரெஷ்ஷா சனிக்கிழமை ஆறரைக்கு மெஷினை எடுத்துண்டு உக்காண்டா சமர்த்தா தைக்கும் அந்த குட்டிக்குஞ்சலம்.
சில சமயம் மட்டும் அந்த ரூம்லேந்து இந்த ரூம்க்கு ஷிஃப்ட் பண்ணினா தேமேன்னு ப்ரெய்ன் டெட் மாதிரி பாவ்லா காட்டும். மோட்டரை மாத்தி 1500 ரூபா எள்ளு வைச்சுட்டு மறுபடியும் முதல்லேந்து ஆரம்பிச்சேன் சமீபமா. காசு சேமிக்கற மஹா திட்டம்

முதல் வாரமே கடைக்கு போய் ஃபால், மேட்சிங் நூல்க்கண்டு(ம்ம்க்கும், இதுல ஒண்ணும் குறைச்சலே இல்லை) எல்லாம் வாங்கியாச்சு. தைக்க ஆரம்பிச்சா வழக்கம் போல எதாவது கோணங்கித்தனம் பண்ணியாகணுமே. மதர் தெரஸா நூறுவட்டம் சொன்னா, ஆனாலும் ஃபாலை மாத்தி தைச்சு வைச்சுட்டேன். அதென்னடான்னா பக்கித்தனமா வெளிப்பக்கம் முந்தானைலேந்து ஆரம்பிச்சு பல்லிளிக்கறது.

உக்காந்து பிரி பிரின்னு பிரிச்சு, மறுபடியும் சாக்ல மார்க் பண்ணி வைச்சுண்டு ஓரமாவே தைச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சு எதுக்கும் இருக்கட்டும்ன்னு தைச்சதை செக் பண்ணி பார்க்கலாம்ன்னு பார்த்தா, ஆரம்பத்துலேந்தே தையல் விழலை.

ப்ரோக்கிராமிங்ல sub procedureன்னு சொல்வாளே அப்படி இந்த இடத்துல மேல ஒரு பாராவை ரிஃபர் பண்ணிக்க வேண்டீதான். நூல் பிரச்சினை, பாபின் பிரச்சினை, த்ரெட் ரெகுலேட்டர், டென்ஷன் ரெகுலேட்டர் இன்ன பிற ஐட்டங்களை சரிபார்த்துண்டு மூணே நாள்ல ஒரு பக்க ஃபாலை தைச்சு முடிச்சு வெற்றி வாகை சூடினேன். இப்போ கரை பாகம் தைச்சாச்சு. மேலையும் தைச்சாத்தான் ஃபால் கம்ப்ளீட் ஆகுமாம். கரை தைக்கறதுக்குள்ளேயே எனக்கு மாசிகம் வந்துரும், இப்போ இன்னொரு பக்கமும் தைக்கணுமாம். இதெல்லாம் யாரு கண்டுபிடிச்சா? ஒரு பக்கம் தைச்சு பாருங்க அப்போ தெரியும்.. எத்தனை வாட்டி நூல் கோர்க்கணும், எத்தனைவாட்டி ஃபோன் பார்க்கணும்.. (ரகுவரன் வாய்ஸ்)

எனக்கு பர்ஃபக்க்ஷன் ரொம்ப முக்யம். அதுனால ஹெம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி, சமர்த்தா ஒரு குட்டி ஸ்டூலை முன்னாடி போட்டுண்டு ஹெம் பண்ண ஆரம்பிச்சேன். வடிவேல் வெ. ஆ மூர்த்திக்கு சைக்கிள் சொல்லிக்கொடுத்தாப்புல அவ்வளோ துல்லியமான ஹெம்மிங் தையல்ன்னா பார்த்துக்கோங்களேன்! அற்புதம்! ஃபோட்டோ எடுத்து அம்மாவுக்கு அனுப்பிச்சேன். மதர் தெரஸா கண்ல ஜலம் வைச்சுண்டுட்டா! அவ்ளோ அருமைங்கறதுக்காக இல்லியாம், இப்படி ஒரு தையலை வாழ்க்கையில பார்த்ததே இல்லியாம்!

இப்படீ கோணங்கித்தனம் பண்ணிப்பண்ணீ ரெண்டு புடவைக்கு ஃபால் தைச்சு வெற்றி வாகை சூடியாச்சு. நானூறு ரூபாய் சம்பாதிச்ச வெற்றிக்கொக்கரிப்பு.. யாரு கிட்டே? ஏதோ ஒப்பேத்தினேனா இல்லியா? ஹ! எப்பூடீ?

இந்த சந்தோஷத்துல தூக்கமே வல்லேன்னா பாருங்களேன்?

நானூறு நானூறுன்னு பினாத்திண்டே இருந்தேன். கார்த்தால பார்த்தா இயர்ஃபோனை காணோம்! Sony MDR! சல்லடை போட்டு தேடியாச்சு. காணமே காணோம்.

ஆக, தி ஃபார்முலா இஸ் : நெட் ரெவன்யூ = 400, நெட் லாஸ்- 700 . 300 ரூபிஸ் ஊ ஊ ஊ
Related Posts with Thumbnails