Pages

Friday, July 26, 2013

கம்ப்யூட்டர் கன்ஃப்யூஷன்ஸ் - எனக்கும் கம்ப்யூட்டருக்குமான அபூர்வ பந்தம் Part -2 - முற்றும் :)

பாத்தீங்களா.. நான் நினைச்ச மாதிரியே.. இது ரொம்ப நீள்... பதிவா போயிடுத்து.. மன்னிக்கவும்.

இதனுடைய முந்தய பதிவு  பாகம் -1 இங்கே இருக்கு

அப்படியாக ”இவள் கோலப்பொடி விற்கத்தான் லாயக்கு”ங்கற ரீதியில எனக்கு ப்ரில்லியண்ட்ஸ் சர்டிஃபிக்கேட் எல்லாம் கொடுத்தாங்க.. அதான் ஏதோ டிப்ளமா இன் சம்திங் சம்திங்.. அதெல்லாம் எங்கே இருக்கோ.. ஒருத்தருக்கும் தெரியாது. இது வரை ஒரு நாய் கூட அதை சீண்டினதில்லை! இதுக்கு யூனிவர்ஸிட்டி மாதிரி ஒரு சிவப்பு சீல்! அதுக்கு ஒரு வைஸ் சான்ஸில்லர் சிக்னேச்சர் வேற! ஹய்யோ ஹய்யோ! ஒவ்வொரு வாட்டி இண்டர்வ்யூவுக்கு போகும்போதெல்லாம் அப்பா, அந்த சர்டிஃபிகேட் எடுத்துண்டியான்னு மறக்காம கேப்பார்.. ஃபைலெல்லாம் எடுத்துண்டு வேகாத வெயில்ல டி.எம்.எஸ் போய் இறங்கினா.. லேசு பாசா கேள்வியெல்லாம் கேட்டுட்டு ”வீ வில் கெட் பேக் டு யூ”ன்னு கழட்டி விட்ருவாங்க.. நான் தான் படு பயங்கர ப்ரில்லியண்ட்ன்னு எல்லாருக்கும் தெரியுமே!

பைடெக் வந்தப்போ கொஞ்சம் அட்வான்ஸ்ட் கோர்ஸஸ் எல்லாம் படிக்கலாம்ன்னு நினைச்சேன்(க்கும் பேஸிக் கோர்ஸ்ல தான் புலி ஆயிட்டேன்ல?)ஸி++, ஜாவா, விஷுவல் பேஸிக், ஆரக்கிள், பவர் பில்டர், ஹெச்.டி.எம்.எல், ஸி.ஜி.ஐ பேர்ல், இப்படி புரியாத மொழியில் பல கோர்ஸுகளுக்கு சேர்ந்தேன்.24 அவர்ஸ் லேப் உண்டு என்றார்கள், அதுக்கு அட்வான்ஸ் புக்கிங் உண்டாம். இருக்கற செஷனே நான் ஒழுங்கா அட்டெண்ட் பண்ணினதில்லை. இதுல எக்ஸ்ட்ரா செஷன்ஸ் வேறு!  ஒரு எழவும் சத்தியமா என் (மர) மண்டையில் ஏறவே இல்லை! போனாப்போறது.. அப்பா பாவம்ன்னு க்ளாஸுக்கு போயிட்டு வந்தேன். பின்னே என்னவாம், ”இவ பணத்தை கட்டிடு க்ளாசுக்கே போக மாட்டேங்கிறா பீடை”ன்னு அஷ்டோத்திரம் வாசிக்கறார் அவர். இதுக்கு ஒரு சில ரெக்காடுகளை ஃபில்டர் போட்டு புழிஞ்சு எடுத்துட்டு grant/revoke பண்ணும் புரியாத SQL Queryஏ எவ்வளவோ பெட்டராக இருந்தது.

கம்ப்யூட்டர் க்ளாஸுக்கு போகும்போது நடக்கும் ஒரே நல்ல விஷயம் குரோம்பேட்டையிலிருந்து தாம்பரம் வரை சைக்கிளில் ட்ராஃபிக்கே சுத்தமாக இல்லாத ஜி.எஸ்.டி ரோடில் ஜாலியாக போவது. என்ன ஒரு சிம்பிள் வாழ்க்கை அது? அங்கே நடந்த சுவாரஸ்யமான விஷயம் இதான்: அங்கே lab அஸிஸ்டெண்டுகள் இருப்பார்கள்.

லேப் செஷன் முடியும் போது நிச்சியமாக கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணனுமாம். ப்ளீஸ் ஷட்டவுன் தி கம்ப்யூட்டர் வென் யூ லீவ்ன்னு சொல்லி இருந்தார். அவர் பார்க்கும்போது நான் ரொம்ப பெருமையா, நேரா அந்த ஆன்/ஆஃப் சுவிட்சை டப்புன்னு ஆஃப் பண்ணிட்டேன்.. கையெழுத்து போடாதீங்க தம்பீ.....ன்னு அவர் ஓ....டி வருவதற்குள் பாவம் அந்த கம்ப்யூட்டர் சப்த நாடியும் ஒடுங்கி ஆஃப் ஆயிருந்தது. அடுத்த பதினஞ்சு நிமிஷம் அந்த Lab faculty எங்கப்பா மாதிரி ஒரே அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி எனக்கு அர்ச்சனை பண்ணினார்.. ஓஹோ. இதுல இவ்ளோ இருக்கான்னு நினைச்சுண்டேன். அந்த ஒரு வருஷத்தில் எனக்கு பிடிச்ச ஒரே விஷயம் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஜாலியா பஜனை இருக்கும்.. ஃபேக்கல்டியும் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து புதுப்புது டாப்பிகில் ப்ரெஸெண்டேஷன்(யாருக்கு வேணும்?), க்விஸ் (ரெண்டு வருஷம் இந்தமாதிரி இன்ஸ்டிட்யூட்களில் பஜனை பண்ணினதுனால, இதெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சது எனக்கு) அப்புறம் ஆட்ஸாப்(ஹை), டம்ப்சராட்ஸ்(அடெடே, பட் ஒன்ல்லி டெக்னிக்கல் டேர்ம்ஸ் :( )இதெல்லாம் நடந்தது. ஷி இஸ் வெரி ஸ்மார்ட்ன்னு சொல்லிகிட்டாங்க..  பொத்தாம் பொதுவா. ஹி ஹி.. நான் ராம் இன்ஃபோடெக்(வேளச்சேரி)ல போய் ஒரு ப்ரோக்ராமிங் டெஸ்டு எழுதி, அந்த ரிஸல்டப்போ என்னை (மட்டும்) பெர்ஸனலா கூப்பிட்டு..காரித்.. சரி விடுங்க.. அந்தக் கதையெல்லாம் இப்போ எதுக்கு? தோ பாருங்க.. கல்லெல்லாம் விட்டெறிஞ்சீங்கன்னா உங்க மானிட்டர் தான் பாழாகும்! அப்புறம் ரீயெம்பர்ஸ்மெண்ட்டெல்லாம் கேட்கலாது... ஓக்கே? ப்ளீஸ் கூல் டவுன்.

கொஞ்ச நாள்ல ப்ரவுஸிங் செண்டர்ஸ் வந்துடுத்து. மெட்ரோ சிட்டியான குரோம்பேட்டையிலும் அப்படி ஒரு அபூர்வ சாதனமாக சக்திகுமார் சாஃப்ட்னெட் விளங்கித்து. இப்போ நளாஸ்/ பூர்வீக்கா இருக்கும் இடமானது 1998ல் ஒரு ஸ்டோரி பில்டிங்.. சரி சரி.. ஒரு மாதிரி கொட்டகை போட்ட மொட்டை மாடியாக இருந்தது. அங்க தான் சக்திகுமார் சாஃப்ட்னெட்டை ஆப்பரேட் பண்ணிண்டு இருந்தாங்க. எங்களது எல்லா இண்டர்னெட் சேவைகளையும் அந்த கடை தான் பார்த்துண்டது. நானும் தங்கைமணியும் போய் 1998ல் ஹாட்மெயிலில் ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செஞ்சோம். பேரே செம்ம காமெடி.. nirmmalanarmadha@hotmail.com ப்ர்ர்ர்ர்ர்ர்... அதுக்கு பாஸ்வேட் அதை விட காமெடி - மூர்த்தி (எங்கப்பா பேராம்.. என்ன ஒரு அன்பு அர்ச்சனை பண்ணும் நைனாவிடம்?) அங்கே தான் resume அடிக்கறதும் ப்ரிண்டவுட் எடுப்பதும்.. ஏக பிஸியான இடம் அது அப்போ. அப்பெல்லாம் இண்டர்னெட் படு காஸ்ட்லியாக்கும். அரை மணி நேரத்துக்கு 50 ரூபாய் வாங்கிண்டு இருந்தான் தட் பகல் கொள்ளைக்காரன். ஆனாலும் கம்ப்யூட்டர் மோகம்! வாட் டு டூ.. 4000 ரூபாய் சம்பளத்திலும் மாசம் 200 ரூபாய் அங்கே கொண்டு போய் மொய்யெழுதிட்டு வருவேன்.

அப்புறம் சகாய விலையில் படு சூப்பர் இன்ஃப்ராஸ்ட்ரக்சருடன் கூடிய பிரவுஸிங் செண்டர் ஆக்வகாம் வந்தது. அங்கே போய் ஜாலியா தங்கைமணியும் நானும் மெயில் பார்ப்பதும் சாட் செய்வதும்.. ஹய்யோ ஹய்யோ.. அதுக்கும் தி நைனா திட்டோ திட்டுன்னு.. சரி.. வேறென்ன பண்ணுவார்...ஆக்சுவலி அவர் என்ன சொன்னார்னா.. சம்பளத்தையெல்லாம் முழுசா கொண்டு போய் ஆக்வகாம்ல மெம்பர்ஷிப்புக்கு கட்டக்கூடாதாம்.கொஞ்சம் பேங்க்ல போடணுமாம்.. ஏன்ப்பா இவ்ளோ அவுட்டேட்டடா இருக்கீங்கன்னு கேப்பேன். இப்படியாக நான் கம்ப்யூட்டரில் சால சிறந்து விளங்கிண்டு இருந்த அந்த காலகட்டத்தில்... ஹெல்லோ, யாருங்க அது சாணியெல்லாம் விட்டெறிஞ்சுண்டு? வெள்ளை சுரிதார்ல கறை பட்டா நீங்களா ட்ரை க்ளீன் பண்ணித்தருவீங்க?

என்ன சொல்லிண்டு இருந்தேன்.. ஆங்.. அந்த காலகட்டத்தில்.. மை  நைனா.. ஸ்டில் நம்புஃபைட் மீ.. ஆஹா குழந்தை சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யறாளேன்னு (சாஃப்ட்வேர் கம்பெனி தான், என்ன உத்தியோகம்ன்னு அவர் யோசிக்க வாண்டாம்? நான் ரெக்ரூட்மெண்டில் குப்பை கொட்டிண்டு இருந்தேன்!!) எனக்கே எனக்கா ஒரு கம்ப்யூட்டர் வீட்டுலேயே வாங்கலாம்ன்னு டிஸைடு பண்ணினார்.. கம்ப்யூட்டர் வாங்கிய கால கட்டம் 2000 அக்டோபர்.. தீபாவளி ஆஃபர் எல்லாம் பார்த்து.. ஸ்ரீனியை கூட்டிண்டு போய் (விஷயம் தெரிஞ்சவனாம்) மவுஸ் பேட் ஃப்ரீயா கிடைக்குமான்னு 2க்கு 4வாட்டி கேட்டு  ப்ரிண்டர் சகிதம் ஒரு HCL Busy Bee வாங்கிண்டு வந்தோம்.

காலையும் நீ யே.. மாலையும் நீயேன்னு பாடிண்டே... அதை ஒரு குழந்தை போல பாவித்து சிஸ்ருக்ஷை பண்ணிண்டு இருப்போம்.. ஒகே தூசின்னு அவ்வா அதை துடைப்பாங்க.. துணி போட்டு மூடணும்ன்னு அம்மா சொல்லுவாங்க. அதுக்குன்னு ஒரு கவர் கூட தைச்சாங்க. அடுத்த ஆயுத பூஜைக்கு அதுக்கும் குங்குமம் சந்தனம் வெச்சு பூ வெச்சு பாலாஜி நமஸ்கரிச்சான், யாரும் பார்க்காதப்போ கம்ப்யூட்டருக்கு ஒரு கிஸ் கொடுத்தான். அலைபாயுதே.. கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் ஹே ராம் போன்ற பாடல்களை அதில் போட்டு கேட்டால் அந்த சுகம் இருக்கே! ஆஹா.. அற்புதம்.

லோன் எல்லாம் போட்டு க்ம்ப்யூட்டர் வாங்கிக்கொடுத்த எங்கப்பாவை திருப்தி படுத்த நான் அனாயாசமா ராவும் பகலும் உழைச்சேன். மனுஷன் ஆடிப்போயிட்டர். அதாவது அந்த நேரத்துல சி.டி ஆடியோ ஃபார்மெட்ல இருக்கற பாடல்களை எம்.பி.3யா கன்வெர்ட் பண்ற ஒரு ஃப்ரீ சாஃப்ட்வேர் இருந்தது. அதை ஸ்ரீனி தேடி தர, அதை யூஸ் பண்ணி ரெண்டு ஸி.டில இருக்கற பாட்டை எம்.பி3யா கன்வெர்ட் பண்ணி நைனாவிடம் காட்டினப்போ ”இவ ரொம்ப கெட்டிக்காரியா இருக்கா”ன்னு அம்மாவிடம் கிச்சனில் போய் நைனா சொல்லியிருக்கார். (எச்சி துப்பணும்ன்னா ப்ளாக் ல எல்லாம் துப்பக்கூடாது..உங்க ஸ்க்ரீன் தானே பாழாகுது? போய் வாஷ்பேஸின்ல துப்பிட்டு வாங்க)

ஆப்ஜக்ட் ஓரியண்டட் ப்ரோக்கிராமிங்கில் மிகச்சிறந்து விளங்கிய நான்(எனக்கு தெரியாது, உங்க கம்ப்யூட்டர், உங்க மானிட்டர், சதா துப்பறது, உடைக்கறது, சாணி, அழுகல் தக்காளி, அந்து போன செருப்பை  விட்டெறியறது இதெல்லாம் பண்ணாமல், பல்லைக்கடிச்சுண்டு, முஷ்டியை மடக்கிண்டு பேசாம மேல படிங்க) , ஏதோ ஒரு பிரபலமான ஜாவா புஸ்த்தகம் வாங்கி வீட்டுல வெச்சுண்டேன். ஹெலோ வேல்டுன்னு அவுட்புட் வரா மாதிரி ஒரு ப்ரோக்ராம் எழுதி அம்மா, அவ்வா, அப்பா இவாளையெல்லாம் செம்மையா இம்ப்ரெஸ் பண்ணினேன். ஆடிப்போயிட்டாங்க.. அப்புறம் ஓவர்ரைடிங் பத்தி அவாளுக்கு புரியற மாதிரி க்ளாஸெல்லாம் எடுத்தேன்.. பாவம் யாருக்கும் ஒண்ணும் தெரியலை.. ஆனா இவ ஜாவாவுல சூரப்புலின்னு மட்டும் அப்பா நினைச்சுண்டார்.

ஒரு டயல் அப் ஃபோன் லைன் கொடுத்து.. கீ... பூ... ட்ட்ட்ட்ர்... க்கீக்கீ... புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பீஈஈஈஈஈஈஈப்.. இப்படி வினோதமான சத்தங்களுடன் அது ஆத்தண்டிக்கேட் பண்ணி கனெக்ட் பண்ணும் அந்த நிமிடங்கள் படபடப்பாக இருக்கும். ஏன்னா முக்காவாசி அது ஏதாவது சொதப்பி விடும். அப்படி பிரும்ம ப்ரய்த்னம் பண்ணி கனெக்டப் படுகிற கம்ப்யூட்டர்களில் முதன் முதலாய் ஓப்பன் செய்வது ஹாட்மெயிலாகவோ.. ரிடிஃப் மெயிலாகவோ.. USA.net, லைகாஸ்  மெயிலாகவோ தான் இருக்கக்கூடும். ஆனா பாருங்க.. எப்போவும் 0 அன்ரெட் மெஸேஜஸ்ன்னு தான் காட்டும்.. ஏன்னா அப்போ மெயில் அனுப்ப ஆளேயில்லையே! யாருமே இல்லாத டீக்க்டடையில் யாருக்குடா சிங்கு டீ ஆத்துறேன்னு கேட்டுக்குவோம். MSN மெஜஞ்சர் தான் அப்போ படு ஹாட். நேரா அதுல லாகின் பண்ணி USஇல் இருக்கும் நட்பு வட்டத்துடன் பேசுவது..வட்டம்ன்னா

நீங்களா 10-20 பேர்ன்னு நினைச்சுண்டா நான் என்ன பண்றது? ஒண்ணோ ரெண்டோ பேர் அங்கே இருந்தாங்க.. ஜாலி அரட்டை.. ஈமெயில் இதெல்லாம் வீட்டில் இருந்த படியே.. ஆஹா.. என்ன இன்பமயமான நாட்கள் அவை! நைனா மட்டும் ஏதாவது படியேண்டீன்னு திட்டுவார். பாவம். வெட்டி வேலை எதுவானாலும் தான் நான் ரெடியாச்சே.

அதுக்கடுத்தாப்புல ரிடிஃப் சாட் வந்தது.. சகட்டு மேனிக்கி எல்லாரையும் யாஹூவில் சேர்த்துண்டு கும்மி அடிக்க வேண்டியது.. அப்படி கிடைத்த ஒரு அபூர்வ மாணிக்கமான சரத்பாபு இன்னிக்கும் என் மிக நெருங்கிய நட்பு வட்டத்துல இருக்கான்னு சொல்லிக்கறதில பெருமைப் படறேன். 

அதுக்கப்புறம் என்னாச்சா? ஏன் இவ்ளோ ரணகளம் போறாதா? சரி ஆசைப்பட்டுட்டீங்க சொல்றேன்.. நான் அதுக்கப்புறம் மேன்மேலும் சிறப்படைந்து Windows OS, MSWord, Ms Excel,Ms Powerpoint, Notepad, Word pad, MS Paint, Windows Media Player, VLC Player இப்படி பலப்பல புதுப்புது லேட்டஸ்ட் சாஃப்ட்வேர்களை கரைச்சு குடிச்சுட்டேன். சும்மா இதே வேலை உங்களுக்கு.. கல்லால அடிக்கறது.. போங்க எல்லாரும்.. இதுக்கு மேல சொல்ல மாட்டேன்! X-(

ஆக இத்துடன் இந்த பதிவு நிறைவடைகிறது. மேலும் இந்த பதிவை தொடர நான் அழைக்கப்போவது:

1. அப்பாவி தங்கமணி டாலிங்
2.ரேவதி வெங்கட் டாலிங்
3.எல்.கே மை பிரதர் டாலிங்
4.RVS அண்ணா
5.திரு ஜவர்லால் ஜி

இன்னும் யார் யாருக்கு எழுதணும்ன்னு தோணுதோ.. எழுதுங்க.. ஆனா இங்கே லின்க் மட்டும் கொடுத்துடுங்க! :) :)

கம்ப்யூட்டர் கன்ஃப்யூஷன்ஸ் - எனக்கும் கம்ப்யூட்டருக்குமான அபூர்வ பந்தம் Part -1

இந்த மாதிரி ஒரு தொடர்பதிவை எழுதச்சொன்ன ஸ்ரீராம் அண்ணாவுக்கு பல கோடி நன்றீஸ்.. ஏன்னா என்னதான் எழுதறதுன்னு யோசனை பண்ணிண்டே இருந்தேனாக்கும். பஹுத் பஹூத் தான்க்ஸ் ஹை! நெக்ஸ்ட், டைட்டில் மட்டும் என்னிஷ்டத்துக்கு வெச்சிருக்கேன்.. கண்டெண்ட்ஸ் கூட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். என் அனுபவங்களை மட்டும் சொல்லி இருக்கேன்.. செலக்டிவா.. இல்லாட்டா படா பேஜாராயிடும்.. மொக்கைஸ் ஆஃப் இண்டியா.. ஹூ வில் ரீட்? ஹி ஹி இல்லாட்டா மட்டும்??? :)


நான் முதன் முதலா கம்ப்யூட்டரைப் பார்த்தது 1992வில். ”+1ல காமர்ஸ், மேத்ஸ், அக்கவுண்ட்ஸ் கூட கம்ப்யூட்டர் எடுத்திண்டுருக்கா”ன்னு அம்மா எல்லார்கிட்டேயும் ரொம்ம்ம்ப பெருமையா சொல்லிண்டா. கம்ப்யூட்டராம், என்னன்னே தெரியாது.. ஆனா மார்க் ஸ்கோர் பண்ண உபகாரமா இருக்கும். ஏன்னா அதன் ஆல்டர்னேட்டிவான எகனாமிக்ஸ் வெறும் தியரி, மஹா அறுவை, மார்க் ஸ்கோர் பண்றதும் கஷ்ட்டம்ன்னு சொல்லிட்டு நம்ம்ம்ம்பி இறங்கினேன்.

புது மிஸ். பாவம், மலங்க மலங்க விழித்தார். அரித்மெடிக் அண்ட் லாஜிக் யூனிட், பைனரி கன்வர்ஷன், பஸ் இப்படி பல புதுப்புது விஷயங்கள் அதுல இருந்தது. சுத்த்த்த்தமா ஒண்ணுமே புரியலை. ஒரு நாள் அந்த மிஸ்ஸை முடிஞ்ச வரைக்கும் டார்ச்சர் பண்ணி மிஸ் அந்த அரித்மெட்டிக் அண்ட் லாஜிக் யூனிட் எப்படி இருக்கும்? அந்த சி.பி.யூ இருக்கே, அதை ஒரே ஒரு வாட்டி எங்களுக்கு காட்டறீங்களா?, அது ஏன் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் குடுத்தாத்தான் ஒர்க் ஆகுமா? அப்புறம் எப்படி ஆட்டோமேஷன்னு சொல்றோம் என்கிற ரீதியில் ஒருபாடு இன்னொஸெண்டான நான் கேள்விகளை தொடுக்க.. மிஸ் பேஸ்த்தடித்து போயிட்டா. பாவம்.. ஆனா நான் அந்த சி.பி.யூவை மட்டும் விடலை. மிஸ் ப்ளீஸ் மிஸ் அதை எங்களுக்கு பாக்கணும்ன்னு சொல்லிண்டே இருந்தேனா.. அதுக்கு மிஸ்ஸின் பதில் கேட்டு ஆடிப்போயிட்டேன்.. என்ன பதிலா? “அதை நானே பார்த்ததில்லை” அப்படீன்னாங்க.. ஐய்யோ பாவம்.

12வது வகுப்பில் எங்க சார் படு ஸ்ட்ரிக்ட். அதிகம் சிரிக்க மாட்டார். அவருக்கு தினேஷ் ரோபோன்னு செல்லப்பேர் வெச்சிருந்தான். ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது என்ற மெளலி (?) படத்தில் வரும் ராக்கெட் ராமனாதனை நினைவு இருக்கோ? ”ஏண்டா இப்படி விறைப்பா நிக்கறே? அதுவா, துணிக்கு போடற கஞ்சியை எடுத்து கார்த்தால குடிச்சுட்டேன்” அப்படீம்பாரே.. அதே மாதிரி தான் கம்ப்யூட்டர் சர் இருப்பார். நேரே உள்ளே வந்து நீ எழுந்திரு, நீ எழுந்திருன்னு இளையராஜா மாதிரி விரலால் ஜாடை பண்ணுவர்.(அசப்பிலும் சிவப்பு இளையராஜா மாதிரி தான் இருப்பர்) முதல் நாள் நடத்தின பாடத்தை மறுநாள் கேட்டே தீரணும். அதுனால் நோட்ஸ் எல்லாத்தையும் ஒழுங்கா படிச்சுண்டு போயிடுவோம். BASIC அப்படீங்கற லேங்குவேஜ் தான் பாடம். அதில் விதவிதமான ப்ரோக்ராம்கள் - மல்டிப்ளிக்கேஷன் டேபிள் ( ஒரு வாய்ப்பாட்டு புஸ்த்தகம் வாங்கிண்டா போறாதா?) கூட்டல், கழித்தல், பாலினாமியல், அதுக்கு லாஜிக் யோசிக்க வேண்டுமாம். அந்த கண்றாவியை பத்தின புரிதலுக்கு ஒரு ஃப்ளோசார்ட் வேறு.. அதை வரைய விதவிதமான உபகரணங்கள்! நாரயாணா.. எக்கனாமிக்ஸ் எவ்வளவு இனிமையான பாடம்ன்னு நினைச்சுப்பேன். ஒரு எழவும் என் மண்டையில் ஏறாது.

 அப்போத்தான் முதன் முதலாய் கம்ப்யூட்டரை பார்த்தேன். பெரிய வெள்ளை டப்பா, நடுவில் பச்சைத்திரை, கீழே ஒரு பெட்டி அதில் ஃப்ளாப்பி டிஸ்க் போடணுமாம்.  லேப் சூப்பரா இருக்கும். ஜில்ன்னு. ஸ்கூல் ஷூவை கழட்டிட்டு உள்ளே போகணும். ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் 3-4 பேரா உட்காருவோம். 10வது லீவில் ஒரு மாசம் டைப்பிங்  படிக்க போனதால் ஓரளவுக்கு  எழுத்துக்களை தேட வேண்டிய அவசியம் ஏற்படலை. கஷ்ஷ்ஷ்டப்பட்டு ஒரு 8 வரி பேஸிக் ப்ரோக்ராமை டைப்பி, ரன் பண்ணா, அதென்னமோ என்ன மாயமோ சதா சிண்டாக்ஸ் எர்ரர் காட்டும். ரவீந்திரன்ங்கற பையன் தான் அதுல கில்லாடி. சிண்டாக்ஸ் எர்ரரால் வாடும் எல்லாருக்கும் அவன் தான் ஆபத்பாந்தவன் அனாதரக்ஷகன்.”நீ செமி கோலனை விட்டிருக்கே பாரு ”அப்படீம்பான். அதே செமிக்கோலனை அடுத்த வரியில் விட்டிருப்பதை அப்போ கவனிக்கறதில்லை.. மறுபடியும் ப்ரோக்கிராமை ஓட்டி மறுபடியும் அவனை அழைத்து, பல்பு வாங்கி, ஒரு வழியா எல்லாம் சரியாகி ரன் கொடுத்தால், சின்னூண்டாக ராஜா மாதிரி கம்பீரமா பதில் வரும் - அதான் அவுட்புட்.. கர்ஸர் அமைதியாக பக்கத்தில் பணிவாக நிற்கும் அமைச்சர் மாதிரி நின்னுண்டு இருக்கும். இதுக்கா இந்தப்பாடு? யப்பா!

இவளுக்கு கம்ப்யூட்டர் ஒண்ணுமே தெரியலையாம்ன்னு அம்மா, தி நைனாவிடம் சிபாரிசு செய்ய என்னை அவர் பேங்கிலிருக்கும் கம்ப்யூட்டரை பார்க்க குரோம்பேட்டையிலிருந்து மவுண்ட் ரோடில் இருந்த அப்பா பேங்குக்குப்  போனோம் - குடும்ப சஹிதம்!! ஆனா அந்த சிஸ்டம் அட்மின் ஃப்ளாப்பி வேணும்ன்னு சொல்லிட்டார்.. இளையராஜா சர் கிட்டே அந்த பிம்பிளிக்கி பிளேப்பியை.. சாரி ஃப்ளாப்பியை வாங்கிண்டு போய் கொடுத்தா அங்கேயும் பச்சை மானிட்டரில் ஒரே சிண்டாக்ஸ் எரராத்தான் வருது! பேங்கில் ரவீந்திரன் கிடையாதே.. அதுனால அப்பா உங்க ஆபீஸ் கம்ப்யூட்டர் எல்லாம் ஃபால்ட்ட்.. ஹெட்டாஃபீஸுக்கு உடனடியா தகவல் கொடுத்திருங்கன்னு சிபாரிசு பண்ணேன்.. சிஸ் அட்மின் என் கழுத்தை நெறித்துவிடுவது போல பார்த்தான். அம்மா எதிர்ப்பார்த்த மாதிரியே நான் கம்ப்யூட்டர் சயின்ஸில் 196 வாங்கியிருந்தேன்னு நினைக்கறேன்.. எதுக்கும் நாளைக்கி சர்டிஃபிக்கேட்டை செக் பண்ணிடுறேன். 

அடுத்த படியா என்னுடைய ப்ரில்லியன்ஸை பறைசாற்றிய இடம்- ப்ரில்லியண்ட்- 1994ல் ”காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணினப்போவே.. இதையும் படிச்சுட்டேன்னா உனக்கு நல்ல வேலையா கிடைக்கும்”ன்னு நைனா நம்ம்ம்பி கொண்டு போய் சேர்த்து விட்டார். சாயந்திரம் 5.15க்கு காலேஜ் முடியும். நேரா க்ளாஸுக்கு போயிடுவேன். முக்கால் மணி நேரம் லேப் இருக்கும். ஒண்ணும் புரியாது. லோட்டஸ், வேர்ட்ஸ்டார், க்ளிப்பர், டி பேஸ் இதெல்லாம் கத்தீ கத்தீ குடுத்தாங்க.  கோர்ஸ் மெட்டீரியல்ன்னு ஒரு எழவை கொடுப்பாங்க. ஒரு நாள்.. ஒரு நாள் கூட அதை பிரிச்சு பார்த்ததேயில்லை! அவ்ளோ மொக்கையா இருக்கும். ஆனா அதை ஒரு இன்ஸ்டிட்யூட் குடுக்காட்டி மட்டும்.. மல்லுக்கு நின்னும், டேட் போட்டு ஃபாலோ அப் பண்ணி வாங்குறது.  சும்மா போக வேண்டியது.. பஜனை பண்ணிட்டு வர வேண்டியது. இதே வேலையாக இருந்தேன். வேரியபிள், ஸ்டோரேஜ், கான்ஸ்டண்ட், லாஜிக், ஃப்ளோசார்ட், சாஃப்ட்வேர், டேட்டா, ப்ரைமரி, செக்கண்டரி இப்படி பல மொக்கையான வார்த்தைப் பிரயோகங்களை கற்று தேர்ந்தேன். சத்தியமா ஒண்ணுத்துக்கும் அர்த்தம் மட்டும் புரியலை. நான் வேர்ட்ஸ்டார் ரொம்ப நன்னா பண்றேன்னு எங்க ஃபேகல்டி சொன்னார். நான் அந்த இன்ஸ்டிட்யூட்டில் எஞ்சாய் பண்ணின ஒரு நாள்.. ஒரே நாள் - ஆனிவர்ஸரின்னு அவா கொண்டாடின நாள் தான். மாரியோ, பேக்மேன் இப்படி பல கேம்ஸ்களை எங்களை  விளையாட சொன்னாங்க. ஏதோ சில கலை நிகழ்ச்சிகள், பாட்டு, க்விஸ் இப்படி நடத்தினாங்க.. ”மேரி பாத்தேன் சுன்கே தேக்கோ ஹஸ்னா நஹீ”ன்னு ஒரு கோவிந்தாவின் ராப் சாங் ஹிந்தி பாட்டை எஸ்பிபி மாதிரி மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தேன்.. வழக்கம் போல நான் ஃபேமஸ் ஆகிட்டேன்.. இது வெத்து வேட்டு.. பூலோக மட சாம்பிராணின்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடுத்து.

- நாளைக்கி கடைசி பாகம் போடுறேன்.. இதுக்கு மேல இந்தப் பதிவு நீண்டா.. எல்லாரும் கொட்டாவி தான் விடுவீங்க.. ஓக்கே?

Tuesday, July 9, 2013

ரங்குவின் ரொமான்ஸ்கள்

”ஏன்னா, நேக்கு ஒரு முழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதோன்னு உங்க கேள்ஃப்ரெண்ட்ஸுக்கு தினமும் வாங்கித்தரேளே”ன்னு நான் கேட்டேன்னு வைச்சுக்கோங்களேன், உடனே இவர் சொல்லும் சால்ஜாப்பு இருக்கே, ”அவாள்ளாம் ஒரு கண்ணி பூ தான் வெச்சுக்கறா, நீ மூணு முழம் கேக்கறாய், நூறு ரூபாய் ஆறது.. அதுக்கு நான் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கலாம். சில சமயம் பூ விலை ஜாஸ்த்தியானா, செம்பருத்திப்பூவை செடியில இருந்து பிச்சுக்கொடுத்தாலும் என் கேள்ஃப்ரெண்ட்ஸ் சந்தோஷிக்கறா.. நீ புலம்பறாய்” அப்படீங்கறார்!

தினமும் சாயந்திரம் ஃப்ரெஷ்ஷா குளிச்சுட்டு பட்டையெல்லாம் போட்டுண்டு 6 மணிக்கு ஆசமனீயம் பண்ணிட்டு, இவர் “ஒருத்தரை சந்திக்கணும்”ன்னு கூசாம என்கிட்டே பொய் சொல்லிட்டு போகும் இடம் - அயோத்தியா மண்டபம். அங்கே ஸ்ரீஅண்ணாவின் மஹாபாரத சொற்பொழிவு நடக்கறதில்லையா.. அதுக்கு போகலை.. அங்கே வரும் வயசான மாமிகளை சைட்டடிக்க போறார். வாசல்லேயே நிப்பார்.. ஆட்டோ, டூவீலரில் வரும் மாமிகளை கையை பிடிச்சுண்டு கூட்டிண்டு போய் உள்ளே ( ஏற்கனவே ஆத்துல இருந்து எடுத்துண்டு போன) ஜமுக்காளத்தில் உட்கார வெச்சுட்டு தண்ணி, வென்னியெல்லாம் கேட்டு உபச்சாரம் பண்ணிட்டு மறுபடியும் நெக்ஸ்டு மாமி வேட்டைக்கு ரெடி ஆயிடுவார். இதெல்லாம் போதாதுன்னு அவா முன்னாடி ஸ்ரீ அண்ணாவுக்கு வரும் டவுட்ஸ் க்ளேரிஃபை  பண்ற மாதிரி ஃபிலிம் காட்டுவார்! இந்த சின்ன பசங்க ரெண்டு கையையும் விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவாங்களே.. சேம் டைப்ஸ்.

அந்த மாமிகளை ரோட் க்ராஸ் பண்ணிவிடுவது, தீர்த்தம் வாங்கிண்டு வந்து அவா பொக்கை வாயில் (ர்ர்ர்ரொமாண்டிக்காக) ஊற்றுவதுமாக இவர் பண்ணும் ரவுஸு தாங்கலையாம்,  அந்த அயோத்தியா மண்டப ஆஃபீஸ்காரா சொல்லி சலிச்சுக்கறா. இவரை உள்ளே விடக்கூடாதுன்னு ஜெனரலா பேசிக்கறா.

சரி இந்தக்கால யூத்ஸ் மாதிரி அப்படி என்னெல்லாம் பண்ணி ரங்ஸ் மாமிகளை மடக்கறார்ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணறோமா?

1.யூத்ஸ் எல்லாம் தத்தம் ஃபிகர்களை மடக்க செய்யும் பேஸிக் டெக்னிக் இது
கேள்ஃப்ரெண்ட்: ”ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா பேசேண்டா”
பாய்ஃப்ரெண்ட்: ”அனிதா”(அதான் கேள்ஃப்ரெண்டின் பெயர்)
கேள்ஃப்ரெண்ட்: ”ஹி ஹி ஹி” (இது போதாதா? அவள் விழுந்தாச்சே!) 

இப்போ ரங்ஸின் டெக்னிக் பார்க்கலாம்: 
ரங்ஸ்: மாமி ஜடபரதர் உபாக்யானத்தில் வர கதை தெரியுமோ உங்களுக்கு
மாமி: தெரியாதே.. (ஆச்சு அடுத்து ரங்ஸ் அந்த மாமியை இம்ப்ரெஸ் பண்ண ஒரு ஐஞ்சு நிமிஷம் போறுமே!) 
இந்த ஜடபரதர் உபாக்யானம், காஞ்சி வரதராஜர் வைபவம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் இப்படி கைவசம் நிறைய சரக்கு வெச்சுண்டு இருக்கார். தினசரி ஸ்ரீஅண்னாவின் ஆடியோ பிரவசனங்கள் எல்லாம் கேட்டு கிளைக்கதைகள் ஆயிரம் கைவசம் இருக்கே!ஆல் தி மாமீஸ் ஃப்ளாட்டல்லவோ? இதுவே நான் டவுட்டு கேட்டா மட்டும், அதான் டீவில வரதே.. பார்த்தாத்தானே? சதா ஃபேஸ்புக், ஜிடாக்! நீயெல்லாம் எங்கே உருப்படறதுக்கு அப்படீங்கறார்! க்கும்!

2. இப்போ யூத்ஸ் எல்லாம் தத்தம் கேள்ஃப்ரெண்ட்ஸுக்கு டெட்டி பேர், பூ பொக்கே, ஆண்டிக் ஜுவல்லரி,  ஊஸ்மணி, பாஸ்மணி எல்லாம் வாங்கிக்கொடுப்பாங்க இல்லியா.. அதே மாதிரி நம்ம ரங்ஸின் டெடிக்கேஷன் என்ன தெரியுமோ? சுகர் டெஸ்ட் கிட், BP Test கிட், பல்செட்டு, க்ளாஸ் டம்ளர்,  latest prescription two weeks drug sponsorship, அம்ருதாஞ்சனம், மூட்டுவலி வாலினி ஸ்ப்ரே, ஜெல் இப்படியா வாங்கி கொடுத்து மடக்கிடுவார்.நான், “நேக்கெதாவது வாங்கிண்டு வந்தேளான்னா”ன்னு ஆசையா கேட்டா பர்ஃபி ரன்பீர் மாதிரி காலி பாக்கெட்டை வெளியே எடுத்து காட்டுவார்! ஹும்..

3. பாய்ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவா அவா கேள்ஃப்ரென்ட்ஸை பைக்ல கூட்டிண்டு போய் காலேஜ், ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணியூட்டு பிக் பண்ணுவாளே.. அதே மாதிரி தான் நம்ம ரங்ஸ் 6 மணிக்கெல்லாம் ஆல் மாமிஸ் பிக்கப்.. அவா அவா ஆத்துல இருந்து.. அப்புறம் நேரே அயோத்தியா மண்டபம் ட்ராப்.. ராத்திரி பிரவசனம் முடிஞ்சுட்டு மறுபடியும் அ.ம பிக்கப் பண்ணிட்டு, மாமிஸை ஆத்துல ட்ராப் பண்ணிடுவாருக்கும்.. இதுல வேல்யூ ஆடட் பேக்கேஜ் என்னன்னா, மாமிகள் நடுவுல் பூ வாங்கணும், காப்பிப்பொடி வாங்கணும், கீரை வாங்கணும்ன்னு சொன்னா, ரங்ஸ் பொறுமையா நிறுத்தி சமர்த்தா ஸ்பான்ஸர் பண்ணி வாங்கிக்கொடுபபார். இதுவே நான் கேட்டா, ஸ்கூட்டி எதுக்கு வெச்சுண்டு இருக்கே? எடுத்துண்டு போய்  வாங்கிக்க வேண்டியது தானேன்னு கலாட்டா பண்ணுவார்.. வெவ்வ்வ்வே!

4. யூத்ஸெல்லாம் கேள்ஃப்ரெண்டுகளின் ஆபத்பாந்தவனாக அனாதரக்ஷகனாக இருக்கா இல்லையா... அப்ளிக்கேஷன் ஃபார்ம் லாஸ்ட் டேட், அர்ஜெண்டா பேங்குக்குப் போய் டீ.டீ எடுக்கறது இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஹெல்ப் பண்ணுவா இல்லையா.. அதே மாதிரி ரங்ஸை மாமிஸ் கிரி ட்ரேடிங் போறதுக்கு, அபிஷேகப்பால் கோவில்ல கொண்டு குடுக்கறதுக்கு, செருப்பு டோக்கன் பத்திரப்படுத்துறதுக்கு,பிரசாதம் வாங்கிண்டு வந்து கொடுக்கறதுக்கு  இப்படியெல்லாம் யூஸ் பண்ணிப்பா. தாளிக்க எண்ணெய் வெச்சுட்டு “நா கடுகு காலி ஆயிடுத்துன்னா ப்ளீஸ் கொஞ்சம் வாங்கிண்டு வந்துடுறேளான்னு நான் கேட்டா, உடனே இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரீஃபில் பண்ணி வெச்சுக்கறதுக்கென்ன நோக்கு?”ம்பார். கிர்ர்ர்ர்.. ரொம்ப ஓவர் இது.

5.  யூத்ஸ் அவா கேள்ஃப்ரென்ட்ஸை எல்லாம் ஜாலியா பீச், பப், சினிமா, மால் இப்படி கூட்டிண்டு போவா இல்லையா.. அது மாதிரி இவர் சாரதா பீடம், சங்கர மடம், நவக்கிரக கோவில்ஸ், கும்பகோணம், காஞ்சி கோவில் டூவர் இப்படியா கூட்டிண்டு போவார். என் பர்த்டேன்னா.. கோவிலுக்கு போலாமான்னு கேட்டாக்கூட அவசரமா டைரியை புரட்டி ஷெட்யூல் செக் பண்ணிட்டு , இன்னிக்கி சுலோ மாமியை கூட்டிண்டு மைலாப்பூர் கபாலி கோவில் வரை போயாகணும்ம்மா.. நீ தனியா போயிட்டு வந்துடேங்கறார்..இதெல்லாம் அந்த பகவானுக்கே அடுக்காது. 

இதே ரேஞ்சுல போச்சுன்னா பேசாம இவரையும் ஒரு நல்ல ஓல்டேஜ் ஹோமா பார்த்து சேர்த்து விட்டுடுவேன் நான்! முடியலை!

Sunday, July 7, 2013

வீட்டை மாத்திப்பார்

முன்னாடியெல்லாம் வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சொல்லுவாங்க.. இப்போ ஜஸ்டு ஒரு சின்ன சேஞ்ச்.. வீட்டை மாத்திப்பார், கல்யாணத்துக்கு போயிப்பார்ன்னு மாத்திக்கலாம். அவ்ளோ கஷ்டமா ஆயிடுத்து வீடு மாத்தறது! 

நான் எப்போவுமே வீடெல்லாம் மாறினா 6 மாசம் எடுத்துப்பேன்.. மெதுவா தான் அரேஞ்ச் பண்ணுவேன்.. நெக்ஸ்டு 6 மாசம் பாக்கிங் பண்ண சரியா இருக்குமே! 

வீடு பார்த்து மாற ரெடியானப்புறமும் நான் ஃபேஸ்புக்லேயும் ரங்ஸ் ஃபோன்கால்ஸிலேயும்(ஆஃபீஸாம்) உட்கார்ந்திருக்க, எங்கம்மா ஓடோடி வந்து கிடுகிடுன்னு குனிஞ்சு நிமிர்ந்து பாக்கிங் எல்லாம் பார்த்துண்டாங்க. அது வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் படு பிஸி! நாங்க கூப்பிட வண்டிக்காரங்க வந்து சேர சுமார் 3 மணி நேரம் தான் லேட்டு. அதுலேயும் ரெண்டு பேர் கத்திண்டே இருந்தாங்க.. "டேய் தூக்கு தூக்கு வுட்ராதே" இப்படி.. ஒருத்தனும் உருப்படியா எதையும் கேரி பண்ணலை.. நாங்க கைல எடுத்துண்டு போக வெச்சிருந்த காப்பிப் பொடி, சர்க்கரை, டம்பளர், வால் பாத்திரம் இதெல்லாம் மொத்தத்துல கலந்து எங்கியோ கொண்டு போயிட்டாங்க! நாளை காலை அரோஹரா தான்னு நினைச்சுண்டோம். நல்ல வேளை புது வீட்டுச்சாவி என்கிட்டே பத்திரமா இருந்தது. தப்பிச்சோம். 

முதல் ரவுண்டு போயிட்டு நான் முன்னின்று(க்கும், நின்னுட்டாலும்) எதை எங்கே வைக்கணும்ன்னு சொல்லிட்டு ரெண்டாவது ரவுண்டு அடிக்கலாம்னு பேச்சு.. நான் மேலே வீட்டுல கோஆர்டினேட் பண்ண, ரங்ஸ் கீழே சாமான் இறக்கறதை சூப்பர்வைஸ் பண்ண போயிட்டார். நடுவுல ஒரு வாட்டி ஏதோ காலி கூடையை எடுத்துண்டு அதுவும் லிஃப்டுல வந்துட்டு போனார்.

இந்த கூலிபெருஸ் (பின்னே எல்லாமே வயசான முசுடூஸ்) எல்லாம் லிஃப்டுல இருந்து வாசல் படியில் பெட்டிகளை எல்லாம் முக்காவாசி காலால் தள்ளிட்டு ஓடிடுத்து. நான் தான் உள்ளே உக்காந்து எல்லாத்தையும் பார்த்துண்டு இருந்தேனாக்கும்.. அப்புறம் அவா நெக்ஸ்ட் டைம் வந்தப்போ சத்தம் போட்டேனா.. அவா அதை ஜஸ்டு படிக்கந்தண்டை வெச்சு குடுத்துட்டு போனா. என்ன எஃபீஷியன்ஸி பாருங்கோளேன்?

கிச்சன் ஐட்டம்ஸ் வெச்ச பெட்டி பில்டிங் ஸ்ட்ராங் தான்னாலும் பேஸ்மெண்ட் கொஞ்ச்ச்சம் வீக்கு.. லிஃப்டில் இருந்து அந்த பெட்டியை முரட்டுத்தனமா எடுத்து வெச்சப்போ பெட்டி பாட்டம் மட்டும் பேதி ஆகும் மனிதன் போல பிச்சுண்டுடுடுத்து! அது பேன்னு ஆகி ஸ்பூன், குக்கர் வெயிட், மிக்ஸீ மூடியின் மேல் இருக்கும் குட்டி மூடி இத்யாதிகள்  எல்லாமே சிதறி கீழே விழுந்துடுத்து.. இந்த அழகுல நாங்க சரியா பேக் பண்ணலையாம் ஒரு முசுடு பயங்கரமா சத்தம் போட்டுத்து..சரின்னு எல்லாத்தையும் வாரி எடுத்துண்டு வந்து உள்ளே போட்டு அரேஞ் பண்ண ஆரம்பிச்சேன்.. அடுத்த லாட் வந்தட்டு ரங்ஸ் என்னை கூட்டிண்டு போவார்ன்னு வெயிட் பண்ணிண்டு இருந்தேனா.. லோடும் வரலை, ரங்குவும் காணோம்!!! 

என்னை மட்டும் புது வீட்டில் விட்டுட்டு ரங்ஸும் வண்டியும் பழைய வீட்டுக்கு போயாச்சு.. ஃபோனும் நான் எடுத்துக்கலையா.. என்ன பண்றதுன்னு ஒரே கோபமா வந்தது.. சுமார் ஒரு மணி நேரம் ஆயிடுத்து ரங்ஸ் என்னை மீட்டுண்டு போக.. அந்த சமயத்தை நான் எவ்ளோ எஃபக்டிவா யூஸ் பண்ணினேன் தெரியுமோ? கோலப்பொடி இருந்ததா, அதை வெச்சு புதுப் புது டிஸைனெல்லாம் போட்டு பார்த்து அழிச்சுண்டு இருந்தேன். அப்புறம்மும் கொஞ்சம் டைம் இருந்ததா, இன்னேரம் ஃபேஸ்புக்ல யார் யார் இருப்பாங்கன்னு யோசிச்சுண்டு இருந்தேன்.(இப்பென்னாச்சுன்னு இப்படி எல்லாரும் என்னை திட்டுறீங்க?)

9 மணிக்கு ப்ரேக் போன மூவர்ஸ் அண்டு பாக்கர்ஸ் அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியலை.. ஒருத்தன் கீழே வாட்ச்மேன் பக்கத்துல தாச்சுண்டு தூங்கிட்டானாம். ஒருத்தன் கீழாத்து 500 ரூபாய் செருப்பைத்தூக்கிண்டு இருட்டுல எஸ்கேப் ஆயிட்டானாம்! இந்த அழகுல இவாளுக்கு ஆளுக்கு 500 ரூபாய் கூலியாம்! 12.30க்கு மேல ரெண்டு பேர் மட்டும் வந்து லிமிட்டெடா பேசி (டாஸ்மாக் உபயம்) ஃப்ரிஜ், வாஷிங் மெஷின் இத்யாதிகளை இறக்கிட்டு ஓட்டம் பிடிச்சாங்க. இல்லியோ பின்னே எல்லாத்தையும் லாஃப்டுல ஏத்தச்சொல்லிடுவோம்னு பயமான பயம் !

ஒரு வழியா அப்படி இப்படீன்னு எல்லாத்தையும் எடுத்துண்டு புது வீட்டுக்கு வந்துட்டோம். இந்த புது வீட்டை க்ளீன் பண்ணி குடுத்தாங்களாம்.. கால் ஃபுல்லா கருப்பா இருந்தது! 3 இன்ச்சுக்கு தூசு படர்ந்து இருந்தது. அதுல பாருங்க கிச்சன்ல மட்டும் அப்படி ஒரு எண்ணெய் பிசுக்கு! சன்ஃப்ளவர் ஆயில் 30 கோட்டிங் போட்டு இருந்தாப்புல கையெல்லாம் டைல்ஸ்ல தொட்டா அப்படியே பச்ச்ச்சக்! அவ்ளோ பிசுக்கு. முதல்லே அதை க்ளீன் பண்ணிடுறேன்னு பார்த்தா சிஃப்ஃபையும் காணோம் ஸ்டீல் ஸ்க்ரப்பரை காணோம். தேடித்தேடி பார்த்து ஒரு பிளாஸ்டிக் ஸ்கரப்பர் தான் கிடைச்சது.. முதல்லே கிடைச்சது லைஸால் தான்.. நல்ல ஃப்ளோர் க்ளீனர் இதை வெச்சு ட்ரை பண்ணி பார்ப்போம்ன்னு லைசால் விட்டு டைல்ஸை துடைச்சுப் பார்த்தேன்.. பிசுக்கு என்னை பார்த்து க்கிக்க்கீன்னு சிரிச்சது. நெக்ஸ்டு, மிஸ்டர் மஸில், என் மிக நம்பகமான லிக்விட் சர்ஃபேஸ் க்ளீனர். பிசுக்கு  என்னை மஹாக்கேவலமாக காலில் போட்டு மிதித்து துப்பியது! மிஸ்டர் மஸிலும் ஃபெயிலா.. இதுக்கெல்லாம் நான் ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேனே.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாச்சே! சரின்னு கார்த்தால பால் காய்ச்சறதுக்கு முன்னாடி போட்ட கோலப்பொடியை வெச்சு கொஞ்சம் வாஷிங் டிடர்ஜெட்டையும் சேர்த்து  இருக்கற எல்லா சக்தியையும் போட்டு தேய் தேய்ன்னு தேய்ச்சேனா.. கொஞ்சூண்டு விட்டுக்கொடுத்தது.. 30 கோட்டிங்காச்சே அவ்ளோ ஈஸியா போகுமா? ரொம்ப  முயற்சி பண்ணி தோத்துட்டேன். ஒரு 1 மணி நேரம் கழிச்சு வெளியே வந்தேன்.. வீரத்திலகம் வெச்சுண்டு.. சுவத்தோரமா இருந்த பெட்டியில என்ன இருக்குன்னு திறந்து பார்த்தா, மஞ்சள் சிஃப்! அட நாதாரி உன்னைத்தானே இவ்ளோ நேரம் தேடினேன், பக்கத்துலேயே கள்ளூளிமங்கனாட்டம் ஸ்டீல் ஸ்க்ரப்! கொஞ்சம் முன்னாடி கிடைச்சிருக்ககூடாதோ? 

கொஞ்சம் கொஞ்சமா இன்ஸ்டால்மெண்ட்ல வேலை பண்ணிக்கலாம்ன்னு எடுக்கறது வைக்கறதுமா இருந்தேன். ஒரு அரை மணி வேலை செய்வேன், ஒரு 4 மணி நேரம் ஃபேஸ்புக், ஸ்கைப் இதெல்லாம் பார்ப்பேன்.. ஒரு 2 மணி நேரம் தூக்கம்(அசதி இருக்குமே) :) 

ரங்க்ஸின் காண்ட்ரிப்யூஷன் பத்தி சொல்லியே ஆகணும். என்ன சுறுசுறுப்பு.. ஃபோன் பேசறதும், வெளியில் போறதும், கான்ஃபரன்ஸ் கால்ஸில் இருப்பதும். மெயில் அனுப்புவதும். . ஆஹா.. அப்புடி ஒரு ஹெல்ப் வீடு அரேஞ்ச் பண்ண.. ஏதோ இன்னிக்கி வீடு இப்படி ஜொலிக்கிதுன்னா அது அவர் போட்ட பிச்சை தான். 

 இடம் காலியான உடனே 3 இன்ச் தூசியை க்ளீனா பெருக்கிட்டேன்.. கையோட ஒரு மாப்பை வெச்சுண்டு சுத்த்த்தமா துடைக்கவும் துடைச்சேனா.. வீடு பள பள.. மேடம் ஏஸி இன்ஸ்டால் பண்ண வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க. 2 மணி நேரத்துக்கெல்லாம் ஏசி அப் & ரன்னிங் ஆயிடுத்து. அவா போனதுக்கப்புறம் பார்த்தா பெட்ரூம் ஃபுல்லா குப்பை போட்டு வெச்சிருக்காங்க! அடக்கஷ்டமே.. மறுபடியும் பெருக்குதல் துடைத்தல்.

நாங்க இங்கே வந்தவுடன் படு பயங்கர லோ வால்டேஜ்! லிஃப்ட் வேலை செய்யலை. அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு நினைச்சுண்டேன். நெக்ஸ்டு, தண்ணிக்கஷ்டம்! ஒரு நாள் பூரா தண்ணி இருக்கலை! சென்னையில மழையில்லையோன்னோன்னு நினைச்சுண்டேன். ஒரு நாள் சமயல் இல்லை.. வெளியில போய் சாப்பிட்டோம். நெக்ஸ்ட் டே, என்னமோ லைட் எரியும், பல்ப் எரியும் ஆனா ப்ளக் பாயிண்ட் ஒர்க் பண்ணாது. ஸோ, நெக்ஸ்ட் டேயும் சமைக்கலை. இண்டக்‌ஷன் ரைஸ் குக்கர் இதெல்லாம் இல்லாட்டி என்னால சமைக்க முடியாதே. பயந்து போய் எலக்ட்ரீஷியனை கூப்பிட்டா அவன் வந்த் ஃப்யூஸ் பார்த்துட்டு சரி பண்ணிட்டு போயிட்டான். வாஷிங் மெஷின் ஓவர்லோடு ஆகுதுன்னு சொன்னான். சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டப்போ, இனி அப்படி ஆகாதுன்னு கூசாம (பொய்) சொல்லிட்டு போயிட்டான்! நான் இண்டக்‌ஷன் ஆன் பண்ணினேனோ இல்லியோ, அது ப்யூம்னு போயிடுத்து மறுபடியும்!


ஆக இனி வேண்டாதவர்களை சபிக்கணும், விரோதிகளுக்கு சூன்யம் வெக்கணும்னு நினைச்சா, பேசாம வீட்டை ஷிஃப்ட் பண்ணச்சொல்லி சாபம் விட்ருங்க! எல்லாம் சரியாயிடும்.. ஆ.. அதுக்குள்ளே 4 மணி நேரம் ஆச்சா? நான் போய் ஒரு அரை மணி பீரோல கொஞ்சம் துணி அடுக்கிட்டு வரேன். டாட்டா!:)

Related Posts with Thumbnails