Pages

Sunday, April 5, 2015

ஹெல்லோ மை டியர் காலியா

”ஏய் என்ன?”
மெளனம்.
”நேத்திக்கு ஏன் வர்ல?”
அதுக்கும் மெளனம்.
”காத்தாலேயே சாதம் போட்டேனே? சாப்பிடலையா?”
அவன் மெளனமா வாணலியையே பார்த்துண்டு இருந்தான்.
”என்ன அப்படி உனக்கு? சாதமே சாப்பிடாதே! எப்போப்பாரு, தோசை, பஜ்ஜி, வடை, மிக்ஸர்ன்னு எண்ணெயிலேயே மிதப்பியா?”
மெளனம். இப்போ இன்னும் உத்து வாணெலியையே பாத்தான்.
”பூரி வேணுமா?”
மீண்டும் மெளனம்.
”சரி கொஞ்சம் வெயிட் பண்ணு, தரேன்.”
சமர்த்தா பக்கத்துல உக்காந்தான்.
வேகமா மாவை திரட்டி அவசர அவசரமாக பண்ணி, பொறிச்சு எடுத்து, ஒரு நிமிஷம் கழிச்சு, அந்தப் பூரியை சுக்கு நூறாய்க் கிழிச்சு அவன் திங்க செளகர்யமா போட்டேன்.
தான் மட்டும் திம்பான்னு பாத்தா, சத்தம் போட்டு ஊரைக்கூட்டி, பூராப்பய புள்ளையையும் கூப்பிட்டு, அப்படி ஒரு அழிச்சாட்டியம்.
தனக்கு வேண்டிய ஒரே ஒரு பீஸ் பூரியை வாய்ல கவ்விண்டு ஏதோ ரொம்ப அர்த்தமா என்னைப் பாத்துட்டு, தலையை சாய்ச்சுட்டு கிளம்பிப் பறந்து போயிட்டான் அவன்.
அவனை எனக்கு இப்போ சமீபமாத்தான் பரிச்சயம். ஜூன்ல வீட்டை மாத்தினோம் இல்லியா? அப்போந்து தான். டெய்லி நான் கிச்சன் ஜன்னலில் வைக்கும் ஐட்டங்களுக்கு முதல் விசிறி- என் டிஃபன் ஐட்டம்ஸ், பட்சணங்கள், மம்மு எல்லாத்தையும் முதலில் அவனுக்கு தான் ஆஃபர் பண்ணுவேன். நான் பேசுறதையெல்லாம் அமைதியா நின்னு கேட்டுப்பான். சில சமயம் திட்டுவேன். சில சமயம் கொஞ்சுவேன். இப்பெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறான். அவனும் என்கிட்டே ஏதோ சொல்ல வராப்ல தோணும். சில சமயம் பறந்து வருவான். ஜன்னலில் ஒண்ணும் இல்லாட்டா ஏமாற்றத்தோட கிளம்பிடுவான். சில சமயம் ஜன்னல் க்ரில் வழியா மூக்கை விட்டு பார்ப்பான். சத்தம் குடுப்பான் எனக்கு. அவன் பசியைப் பொறுத்தது.
மை டியரஸ்ட் காலியா - the crow!

The big robbery

”நாம எல்லாரும் போனா எடுத்துண்டு வந்துடலாம்”
”சரி”
”எப்போ போகணும்?”
”இன்னும் கொஞ்ச நேரத்துல”
”நானும் நீயும் போதுமே”
”இல்லே நிறைய பேர் இருந்தா இந்த ஆப்பரேஷன் ஒரு கேக்வாக்”
”ஓ”
”நீ போய் அவனையும் கூட்டிண்டு வா. நானும் போய் இன்னும் ரெண்டு பேரை கூட்டிண்டு வரேன்”
”சரி”
”மீட்டிங் பாயிண்ட்? மைதிலி ஸ்ட்ரீட் நம்பர் 5, மொட்டை மாடியில”
”நேரம்? ”
”பகல் 12.00 மணிக்கு”
”ஓக்கே”
இடம்: மைதிலி ஸ்ட்ரீட், நம்பர் 5 நேரம் 12.00 மணி
”இதோ பாருங்க, யார் யார் எதை எடுக்கறீங்களோ உங்க செளகரியம். 2 நிமிஷம் தான் ஆப்பரேஷன் டைம். அதுக்கப்புறம் ஒருத்தரும் இந்த ஏரியாவுலேயே இருக்கக்கூடாது. பறந்துடணும். எதுவா இருந்தாலும் நான் கம்யூனிக்கேட் பண்ணுவேன்”
(கோரஸாக) ”யெஸ் பாஸ்”
மொட்டை மாடியின் குட்டிச்சுவரில் உட்கார்ந்திருந்த எல்லாரும் மெதுவாக அந்தப்பக்கம் குதித்து வந்தார்கள். ரங்க நாயகி மாமி வடாம் வற்றல் அரிசி அப்பளம் எல்லாம் இட்டு வாயல் புடவையின் நாற்புறமும் கல் வைத்திருந்தாள்.
நாலா புறமும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரே கவ்வு, மூக்கில் கிடைத்த வற்றல், காலையில் பிழிந்த கருவடாம், பாதி காய்ந்த அரிசி அப்பளம் எல்லாவற்றையும் லாவகமாக கவ்விக்கொண்டு எல்லோரும் பறந்தார்கள்.

சாயங்காலம், ”இந்த காக்காக் கூட்டம் பண்ற ரகளை தாங்கலை!” என்று அங்கலாய்த்தவாறே ரங்க நாயகி மாமி மிச்சமிருந்த வடாம் அப்பளங்களை அள்ளி எடுத்துக்கொண்டு போனாள்.
Related Posts with Thumbnails