Pages

Monday, June 27, 2011

ரங்குவின் வழி கேட்கும் யுக்திகள்

இந்த ரங்கு இருக்காரே..... ஒரு இடத்துக்கு போகணும்னா 1008 டவுட்டு வரும். கிளம்பினோம், யாராவது தெரிஞ்சவா கிட்டே வழி கேட்டுக்கலாம்ன்னு வந்தா தேவலை.. எதிர்ல வரவா எல்லார் கிட்டேயும் கேட்டுண்டே வருவார்.. 

அதுவும் மாயவரம்ன்னா கேட்கவே வேண்டாம். பஸ்ஸ்டாண்டுலே இறங்கினா கடைத்தெரு, எதிர்லே மணிக்கூண்டு. எதிர்லே இருக்கற மணிக்கூண்டுக்கு எப்படி சார் போறதுன்னு ஒரு கடைக்காரன் விடாம கேட்கறார். நேக்கே மானம் போறது! ஒரு கடைக்குள்ளே போய் வழி கேட்டுட்டு வெளியே வந்து, ரொம்ப தூரம் வந்துட்டோமே.. இன்னும் மணிக்கூண்டு வரலையேன்னு அடுத்த கடைக்குள்ளே போறார்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சரி முதல் வாட்டி தான் அப்படி கேட்டாரா, எல்லாரும் சளைக்காம தோ... இதான் சார் மணிக்கூண்டுன்னு சொல்லிண்டே இருந்தா. மாயவரம் ‘சிட்டி’யில் இருக்கறதே ஒரேயொரு ஹிஸ்டாரிக்கல் லேண்டு மார்க் அந்த மணிக்கூண்டு தான். அதைச்சுற்றித்தான் ஊர் விரியும்.. சுற்றும் 2கிமீ ரேடியஸில் வீடுகள் ரோடுகள் எக்ஸட்ரா... 

இதுல டவுட்டு வருது பாருங்க.. உஸ்ஸ்ஸ்... 

சரி முதல் வாட்டி எல்லாக்கடையிலும் ஏறி டவுட்டு கேட்டு மணிக்கூண்டை கண்டு பிடிச்சு காளியாக்குடியில் கொட்டிண்டு கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சோல்லியோ... அடுத்த வாட்டியாவது தானா போகலாம் இல்லே? பஸ்டாப்புலே இறங்கின உடனே ஆரம்பிச்சுட்டார்.. மறுபடியும் அதே கேள்வி , ”மணிக்கூண்டுக்கு எப்படி போறது சார்?” அந்த ஊர்க்காராளை சம்மதிக்கணுங்கேட்டேளா... அவ்ளோ எக்ஸைட்மெண்டு அவாளுக்கு.. இதோ.. இப்படி மெயின்ரோடுல திரும்பினீங்கன்னா...ன்னு அவாளும் சொல்ல ஆரம்பிச்சுடுவா.. நேக்கு தான்ப்ளட் பிரஷர் கூடும்.

“அது ஏன்னா தெரிஞ்ச இடத்துக்கே வழி கேக்கறேள்?”ன்னு கேட்டா எல்லாம் ஒரு கன்ஃபர்மேஷன் தாண்டீன்னு ஒரு சப்பைக்கட்டு.. நான்ஸன்ஸ்... இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... 

சில முக்கியமான நேரங்கள்லே ரங்கு கேனத்தனமா.. அதாவது எப்போவும் போலவே...வழி கேப்பாரா... அங்கே சொல்லிவெச்சமாதிரி ஒரு பதில் வரும். அது என்ன போன ஜென்மத்து பாவமோ எதிரிங்களோட சாபமோ தெரியாது.. ரங்குவோட அஜாக்கிரதை தான். சரியாக ஒரு மாங்கா மண்டையனை செலக்டு பண்ணி வண்டியை நிறுத்தி, வணக்கம் வெச்சு”சார்.... மேடவாக்கம் எப்படி போறது?” ன்னு ஒரு மில்லியன் டாலர் கேள்வி கேட்டா .. நடுமண்டையில நச்சுன்னு அடிச்சாப்புலே ”தெரியாதுங்க.. நான் ஊருக்கு புதுசு.“ ன்னு கூலா சொல்லிட்டுப் அவா அவா வேலையப்பார்த்துண்டு போயிடுறா.. 

பாலச்சந்தர் படத்துல புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ஜெயசித்ரா ஒரு சிரிப்பு சிரிப்பாளே... அதே மாதிரி சிரிச்சுடுவேன். 

அன்னிக்கி ஃப்ரைடே.. இளம் கணவன் மனைவிக்கு (அட நாங்க தேன்)வீக்கெண்டு மூடு.சரி மாயாஜால் போய் ஆரண்ய காண்டம் பார்க்கலாம்ன்னு சொன்னார். நேக்கு மாயாஜால், கீயாஜால் எல்லாம் எங்கே இருக்குன்னு தெரியாதுன்னு சொல்லிட்டேன்.இடம் தெரியாட்டி ரங்கு பண்ணும் ஹோம்வொர்க் இருக்கு பாருங்கோ.. ஜஸ்டு டயல் கூப்பிட்டு மணிக்கணக்கா லேண்டு மார்க் லேட்டிட்யூட் லாஞ்சிட்யூட் எல்லாம் கேட்டுண்டு இருப்பார். இது போறாதுன்னு கூகிள் எர்த்தில் தேடி கண்டிபிடித்து நோட்ஸ் எடுத்துக்கொண்டு ஒரு பழம்பொருள் ஆராய்ச்சியாளர் தோர்த்துப்போகும் ரேஞ்சுக்கு பில்டப்பு கொடுப்பார்.கண்ல கண்ணாடி,முதுகுல பை, தலையிலே க்ளிண்ட் ஈஸ்டுவுட் தொப்பி எல்லாம் போட்டுண்டு தான் கிளம்புவார்ன்னா பார்த்துக்கோங்களேன்.

  நேக்கு எல்லாம் தெரியும்ன்னு ரங்கு சொன்னப்போவே நான் சுதாரிச்சு இருந்தேன்னா கெட்டிக்காரி.. அதான் இல்லையே.. அப்புறம் புலம்பி என்னத்த ப்ரயோஜனம்? வண்டியை எடுத்துண்டு ஈஸீஆர்ல போனோம்.. போனோம்.. போயிண்டே இருக்கோம்... வாழ்க்கையின் ஓரத்துக்கே போனோம்.. ஆனா இந்த பிரும்மஹத்தி மாயாஜால் எங்கே போய் உக்காண்டிருக்குன்னு ஒரு ஐடியாவும் இல்லை.நடுக்காட்டில் ஒரு சில சம்பந்தமேயில்லாத ரெஸ்டாரண்டுக்கள், பேக்கரிகள், துணிக்கடைகள்(யாரு வருவாங்க இங்கெல்லாம்ன்னு மனசுக்குள்ளே ஒரு கேள்வி!) அங்கே இடம் பார்த்து பல்பு வாங்க ரங்கு காத்துக்கொண்டு இருந்தார். இப்போ பாருங்கோ டெம்ப்ளேட் பதில் தான் வரப்போறது.. ”தெரியாதுங்க நாங்க ஊருக்கு புதுசு”ன்னு சொல்லி கேலி பண்ணீண்டே வந்தேனா.. ரங்கு ரெண்டு யூத்து பாய்ஸ் கிட்டே நிறுத்தி, இவாளுக்கு கட்டாயம் தெரிஞ்சுருக்கும். ஏங்க மாயாஜால் எங்கே இருக்குன்னு தைரியமா கேட்க, அவர்களும் வழக்கமாக,”தெரியாதுங்க, நாங்க இங்கே புதுசா வந்திருக்கோம்”ன்னு சொல்லிட்டாங்க! நான் மறுபடியும் ஜெயசித்ரா ஸ்டையில் கிக்கீ...புர்ர்ர்ர்ர்ர்ர்ர்... கொஞ்சம் வண்டியை தள்ளி நிறுத்திவிட்டு இந்த வாட்டி ரங்குவும் சிரிச்சுட்டார்.

என் கிட்டே என்ன ஒரு பிரச்சினைன்னா... அளவுக்கு அதிமான சூட்சுமம் நேக்கு.. ஸோ.. ஈவென் சின்னச்சின்ன கடைகள் கூட பளிச்சுன்னு என் நினைவுல நிக்கும் பார்த்துக்கோங்கோ.. என்னை பிக் பண்ணுவதுக்கு ரங்ஸ் ஃபோன் பண்ணி,”நீ எங்கே நிக்கறாய்”ன்னு ஒரு வேளை கேட்கிறார்ன்னு வெச்சுக்கோங்களேன்.. நானும் ரொம்ப பெரிய போர்டு இருக்கும் ”பாஷாபாய் பேக் ஒர்க்ஸ்”, ”மெஜஸ்டிக் ஜூஸ் கடை”, ”ராம் தையலகம்”, ”பத்ரினாத் பாதாம் மில்க்” , ” பேரூனாத் குல்ஃபி”, சாய்பாபா வண்டி, ”பனாரஸ் பான் ஸ்டால்”,  இப்படி மல்டி நேஷனல் ப்ராண்டு நேம்ஸ் இருக்கும்படியா கடைகளைத்தான் லேண்டு மார்க்காக சொல்லுவேன்.. காரணம் அவ்ளோ கவனம். எல்லாத்தையும் பார்த்து வெச்சுப்பேனாக்கும். அது இவரோட மரமண்டைக்கு தெரியாது.

ஆனா இவருக்கோ ஐஸி ஐ ஸி ஐ பேங்க்,ஷெல் பெட்ரோல் பங்க், ஹோண்டா ஷோரூம், வோடாஃபோன் ஸ்டோர் இப்படி துக்கடா லேண்டு மார்க் தான் பிடிக்கும்.

அன்னிக்கி அப்படித்தான்,”அந்த அஜித் ரசிகர் மன்றம் இருக்குமேன்னா அந்த வழியா போயிடுங்கோ”ன்னு சொன்னேனா.. ரங்கு செம்ம டென்ஷன்.. சரின்னு இடப்பக்கம் வலப்பக்கம்ன்னு வழி காட்டினா.. ”எங்கேடீ ரசிகர் மன்றம்”ன்னு கேட்கறார்.உடனே நான் அந்த போர்டை காட்டினேன்.. திட்டோ திட்டுன்னு வண்டியை நிறுத்திட்டு அரை மணி நேரம் திட்டினார்ன்னா பார்த்துக்கோங்களேன்.அதென்னன்னா, நல்லையா தெருன்னு மஞ்ச போர்டு எழுதியிருப்பாளே.. அப்படி சின்னதா தான் எழுதியிருக்காம். இதையெல்லாம் அடையாளமா சொல்லக்கூடாதாம்.. நான்ஸன்ஸ்! இந்த ஆம்பளைங்களே இப்படித்தான் பா... வெரி ஆஃப் தி மோசம்!


Monday, June 13, 2011

திருச்சி திக் திக் விஜயம்.

எனக்கும் பஸ்ஸுக்கும் இருக்கும் ராசியை பத்தி ஒரு பழைய பஜிவு எழுதியிருக்கேன்னு உங்களுக்கு நினைவிருக்கலாம். இதை வேணா அதன் ரெண்டாவது பார்ட்ன்னு வெச்சுக்கலாமே?

போன வாரம் ஸ்ரீரங்கம் போகலாம்ன்னு ஒரு திடீர் திட்டம் போட்டோம். (தேவை இருக்கலை தான், இருந்தாலும் விதி யாரை விட்டது?) மத்தியானம் ஆஃபீஸில் இருந்த போது ரங்குவின் எஸ்.எம்.எஸ். ராக்ஃபோர்ட்டில் ஏஸி கோச்சில் டிக்கெட் கிடைச்சதுன்னு. என்ன தான் ஏஸியெல்லாம் டாம்பீகம்ன்னு நினைச்சாலும் மனசுக்குள்ளே ஒரு சின்ன அல்ப சந்தோஷம். சரி இருக்கட்டும். நாள் பூரா உழைக்கறோமே.. ஒரு வாட்டி ஏஸி கோச்ல போனாத்தான் என்னன்னு தோணித்து. சாயந்திரம் வீட்டுக்கு வந்து அரக்கப்பறக்க தோசை வார்த்து டிஃபன் முடித்து, 2 செட் துணிகளை அள்ளி திணித்துக்கொண்டு ஏஸி கோச் பிரயாணத்துக்காக ஆசையுடன் காத்திருந்தேன். கடைசியா எப்போ ஏஸி கோச்ல போனோம்ன்னு யோசிச்சேன்..  நொய்டாவுல இருந்து திரும்பி வந்தப்போ சுகமான ஜில் ஜில் ஏசியிலே கம்பெனி செலவில் 2 நாளும் தின்னுண்டு, போர்த்திண்டு தூங்கிண்டே வந்தேனே அதான் நினைவுக்கு வந்தது.

ஹை ஜாலின்னு மனசுக்கு பிடிச்ச ஒரு பாட்டை பாடிண்டே சோப்பு, சீப்பு இத்யாதிகளை பேக் பண்ணியாச்சு. பேக்கிங் எல்லாம் ஆச்சு. ரங்க்ஸ் 8 மணிக்கி வந்தார். ஒரு அதிர்ச்சி குண்டை தூக்கி போட்டார். ஏஸி கோச் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்டாம்! அதை ஏன் எஸ்.எம்.எஸ்ஸில் நீங்க சொல்லலைன்னு கேட்டா, கிடைச்சுடும்ன்னு அந்த பிரும்மஹத்தி ஏஜெண்டு சொல்லியிருக்கான்னு சொல்றார்!

 என்ன தான் இருந்தாலும் இவ்ளோ அப்பாவியா ரங்கு இருக்காரேன்னு நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். சாதா கோச் வெயிட்டிங் லிஸ்டு கிடைச்சாலும் கிடைக்குமேயொழிய, ஏசி கோச்ல எல்லாம் கேன்ஸலேஷன் சான்ஸஸ் கம்மி! அதுவும் பெட்டிகளும் கம்மி!

ரங்குவும் ஜஸ்டு டயல் ஃபோன் பண்ணி, கே.பி.என்/பர்வீன்/ஷர்மான்னு பலப்பல ப்ரைவேட்டு பஸ் எல்லாத்துலேயும் கேட்டு பார்த்தாச்சு. எதுலேயும் கிடைக்கலை.

சரி அப்போ ஸ்ரீ ரங்கனை அடுத்த வாட்டி பார்த்துக்கலாம்ன்னு மனசை தேத்தினா, மனசு கேக்கவே மாட்டேங்கிறது! இல்லை, நான் கோவில் பிரகாரத்துல எப்படி எல்லாம் கற்பனை பண்ணினேன்? ஸ்ரீரங்கனின் கண் தரிசனத்தையும் அவன் பாத தரிசனத்தையும் எவ்ளோ ஆவலுடன் எதிர்பார்த்தேன்னு மனசு புலம்பி தீர்க்க ஆரம்பிச்சுடுத்து.

பெரிய பெரிய தோல்விகளையெல்லாம் தாங்கின மனசு, இந்த சின்ன ஏமாற்றத்தை ஏற்க மறுத்தது. அதுனால செமத்தியாக ஜகா வாங்கிய ரங்குவை பயங்கரமா தாஜா பண்ணி கிளம்ப வைச்சாச்சு.

ரங்குவும் மிகவும் சுறுசுறுப்பாக, மெயில் செக் பண்ணி, ஒரு 10 மெயில்களை அனுப்பி, ஒரு நாலு ஃபோன்கால்களை நிதானமாக பேசி, தோசை சாப்பிட்டு, மாம்பழம் வேணும்ன்னு கேட்டு வாங்கி சாப்பிட்டு, காஃபி கேட்டு குடிச்சுட்டு, விளக்கெண்ணெய் குடிச்ச மாதிரி ஒரு எஃபெக்ட்டுடன் கிளம்பினார். அதுக்குள்ள இந்த நேரத்துக்கு என்ன அவசரமோ, 9.30 மணியாயிடுத்து.

கழுதை பரதேசம் போன மாதிரி அடையார் டிப்போ போய், மத்ய கைலாஷ் போய், கிண்டி போய், தாம்பரம் ட்ரெயினில் போறதுக்கு 11 மணி!

உஸ்ஸ்ஸ்! தாம்பரத்திலே கடல் போல மக்கள் வெள்ளம். நான் என்னமோ எனக்கு ரொம்ப பஸ் கிடைச்சுட்டாப்புல ஒரு இறுமாப்பில், ஹய்யோ இவங்கள்ல்லாம் ரொம்ப பாவம். என்னிக்கி பஸ் கிடைச்சு என்னிக்கி ஊர் போய் சேரப்போறாங்களோன்னு அனாவஸ்யமா கவலைப்பட்டேன்.

நான் எதிர்ப்பார்த்த மாதிரியே திருச்சிக்கி ஒரு பஸ் முன்னாடி நின்னுண்டு இருந்தது. ரெண்டு டிக்கெட் இருக்காம், போயிடலாமான்னு கேட்டார். நான் தான் ”நிறைய ஆப்ஷன்ஸ் இருக்கும்ன்னா, உங்களுக்கு சாமர்த்தியம் போறாது”ன்னு இவரை தரதரன்னு இழுத்துண்டு வந்தேன். பின்னாடி வந்து பார்த்தா, ஒரேயொரு பஸ் இருந்தது. அதுவும் மதுர மதுரன்னு கத்திண்டு இருந்தான். குடுகுடுன்னு ஓடிப்போய் அந்த திருச்சி வண்டியிலே கேட்டா அவன் டிக்கெட் இல்லைன்னு சொல்லிட்டான். நான்ஸென்ஸ்!

10 மணிக்கி கோயம்பேட்டிலிருந்து கிளம்பின ‘அதி வேக’ வால்வோ பஸ்ஸெல்லாம் 11 மணிக்கித்தான் தாம்பரத்துக்கு ஒவ்வொண்ணா வந்திண்டு இருந்தது. ஒரு நாலு பஸ்ல பல்பு தான்.

சரின்னு ஐஞ்சாவதா ஒரு பஸ்ல கேட்டப்போ சீட் இருக்கறதா ஒரு புண்ணியவான் காதுல தேன் வார்த்தான். அதோட வயித்துல பால் வார்த்தான். ”எப்படி பார்த்தேளா, சாமர்த்தியமா சீட் வாங்கிட்டேன். கேட்டாத்தான் கிடைக்கும். இதெல்லாம் நீங்க எப்போத்தான் கத்துக்கப்போறேளோ?”ன்னு அலுத்துண்டே பஸ்ஸுக்குள்ளே ஏறினா, கட்டக்கடைசி சீட்டு மட்டும் தான் காலியா இருந்தது!

எல்லாரையும் தாண்டிப் போய் கடைசி சீட்டைப் பிடிச்சு ஜன்னலோரத்தில் உக்காண்டப்போ ஹைட்டெக் பஸ் தான். கடைசி சீட்டானாலும் ஜெர்க் அதிகம் இருக்காதுன்னு ரங்கு சமாதானம் சொன்னார்.

எங்களுக்கு முன்னாடி ஒரு அங்கிளும் ஒரு 30 வயசு ஆசாமியும் ஒரு குழந்தையுடன் உக்காண்டிருந்தாங்க. இதை எதுக்கு சம்மந்தமேயில்லாம இங்கே சொல்றேன்னா, அந்த பஸ்ஸின் அருமை பெருமைகளை விவரிக்கும்போது இந்த உபரித்தகவல் ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்குமே, அதுக்குத்தான்.

பஸ் கிளம்பித்து. தாம்பரம் தாண்டும்போது ஜில்லுன்னு காத்து வந்து மூஞ்சில வருட, இது போறும், தூங்கிண்டே திருச்சி போயிடலாம்ன்னு நம்பினேன்.

கொஞ்ச நேரத்துல விஷயம் புரிஞ்சுடுத்து. முன்னாடி உக்காந்திருந்த அந்த பையன் குழந்தையோட சீட்டோட என் முட்டி மேல படுத்துண்டு இருந்தான். விஷயம் என்னன்னா, அந்த சீட்டுக்கு புஷ்பேக் அட்ஜெஸ்டுமெண்ட் எதுவும் இல்லை. பை டீஃபால்டு, அது பின்னாடி சீட்டின் மேல தான் இருக்கும்ன்னு. ஹைட்டு கம்மியானதுனால அது என் முட்டியில் சாய்ஞ்சுண்டு இருக்கு.
பக்கத்தில் இருந்த ரங்குவின் நிலமை இன்னும் மோசம். அந்த குண்டு அங்கிள் மொத்த பார்த்தையும் ரங்குவின் முட்டியில் போட்டுவிட்டு அக்கடான்னு குறட்டை விட்டுண்டு தூங்கிண்டு இருக்கார்!!!

உக்காரவும் முடியாமல், எனக்கு வந்த கோபத்தில் போய் நடுவில் கீழே உக்காந்துக்கலாமான்னு இருந்தது. ரங்குவுக்கு தர்மசங்கடமாக போயிடுத்து. எத்தனை வாட்டி தான் குண்டு அங்கிளை எழுப்ப முடியும்? அவரும் எழுந்து பார்த்துவிட்டு மறுபடியும் குறட்டை விட்டுண்டு தூங்கறார்!

நயம் ராஹு காலத்துலேயா புறப்பட்டோம்ன்னு நினைக்கும் |அளவுக்கு எங்கள் நிலமை  கொடுமையா இருந்தது. ரங்குவும் கொஞ்ச நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துட்டு, த்ரிவிக்ரமஅவதாரம் மாதிரி ரெண்டு காலையும்  தூக்கி, அங்கிளின் சீட்டுக்கு அந்தண்டை போட்டுண்டு தூங்க ஆரம்பிச்சார்.

ரங்கா, உன் ரகளைக்கு அளவே இல்லையா?ன்னு நினைச்ச படியே காற்றில் அப்படியே கண்ணசந்தா, அந்தப்பையன் குழந்தையை இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் மாற்றி போட்டுண்டு கொஞ்சம் சீட்டின் மேலே அட்ஜெஸ்டு பண்ணிண்டு படுத்துக்கறான்!எனக்கு முட்டியில் மரண வலி!  உலுக்கி விழுந்து எழுந்தாச்சு. ஒரு பத்து நிமிஷம் தூங்கினோமான்னு மணியை பார்த்தா ஒரு ரெண்டு நிமிஷம் தான் ஆயிருக்கு! சந்தோஸமா???

 மொத்தத்துலே சுத்தமா தூங்க முடியாம அந்த பையன் குழந்தையும் வெச்சுண்டு என்னை படுத்தி எடுத்துட்டான்.

ரங்கு பக்கத்துல ஒரு இளசு விடிய விடிய கேள்பிரண்டு கூட கடலை போட்ட வண்ணம் வந்திருக்கான். ரங்குவுக்கு கொஞ்சம் நற நற.

இது போறாதுன்னு அந்த இளசுக்கு அந்தப்பக்கம் உக்காண்டிருந்த ஒரு பிரும்மஹத்தி அர்த்த ராத்திரி 1 மணிக்கி செல்ஃபோன்ல பாட்டை பெரூசா போட்டு எல்லாரையும் எழுப்பியூடுத்து. ஏதாவது ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா இருந்தாலும் யாரும் ஒண்ணும் சொல்லியிருக்க மாட்டா. ஏதோ ஒரு அசுரக்குரல்லே நாட்டுப்பாட்டாம். கேட்டாலே நாராசம்! இருந்தாலும் அர்த்த ராத்திரியிலும் அவன் இசையார்வத்தை என்னால் ரசிக்காமல் இருக்க முடியலை. அந்த அளவுக்கு வால்யூம் ஹை! எல்லாரும் முறைக்க ஒரு வழியா தேடி(அவனுக்கே அவன் ஃபோனை ஆப்பரேட் பண்ண தெரியலை) ஏதோ ஒரு சுவிட்சை அமுக்கி காதில் அந்த இன்னிசையை வெச்சுண்டு கேட்க ஆரம்பிச்சுட்டான். மறுபடியும் மூணு மணிக்கி அதே பாட்டு, அதே குரல், அதே சவுண்டு. தூங்க முயற்சித்துக்கொண்டிருந்த எனக்கு வந்த கோபத்தில் “ சவுண்டு ரொம்ப தொந்திரவா இருக்கு ஆஃப் பண்ணுங்க”ன்னு சொல்லவே சொல்லிட்டேன். எல்லாரும் அதை ஆமோதிப்பதுபோல பார்த்தாங்க.
முட்டி வலி ஒரு புறம், தூக்கமின்மை மறு புறம்.. ரங்குவும் த்ரிவிக்ரம அவதாரம் ஒரு புறம்.. ரொம்ப கஷ்டம்!

இந்த அழகுல ஏஸி கோச், தலைகாணி, வெள்ளை போர்வை, அமைதியான உறக்கம், திருச்சியில ஃப்ரெஷ்ஷா போய் இறங்கலாம்ன்னு என்னெல்லாம் நினைச்சுண்டோம்? நமக்கு? ஏஸி கோச்? இதெல்லாம் நடக்குமா என்ன? ஹைய்யோ ஹய்யோ!வசதி இருந்தாலுமே திண்டாடி தெருப்பொறுக்கி கஷ்டப்பட்டு அடிவாங்கின வடிவேலு மாதிரி தான் ஊர் போய்ச்சேரணும்ன்னு என் தலையிலே உளியால பிரும்மா செதுக்கியிருக்காரே? என்ன பண்ண?

கடவுள் புண்ணியத்துல ஒரு வழியா 5 மணிக்கு திருச்சில கொண்டு விட்டுட்டான். அப்பப்பா.. என்ன ஒரு நைட்மேர் ஜர்னின்னு புலம்பிண்டே நடந்தோம். யப்பா இனிமே ப்ரை’வேட்டு’ பஸ்ஸா? வேணாஞ்சாமீயோவ்!!!


நேரா குளிச்சு ரங்கனை தரிசனம் பண்ணினப்போ அலுப்பும் சலிப்பும் ஒரே நேரத்துல போயே போச்சு.. பட்ட கஷ்டமெல்லாம் மாயமா மறைஞ்சுடுத்து.


  

Friday, April 22, 2011

வாட் ஆஃப் எ பல்பு டே!!!

ஹாய் ஹாய் ஹாய்... நான் தான்.. மறுபடியும் வந்துட்டேன். ஹய்யான்னு சொல்றவங்களுக்கு நன்றி! அய்யய்யோன்னு கதறி தன் வருத்தத்தை தெரிவிப்பவங்களுக்கு ஒரு சின்ன ஐடியா - மூக்கு சிந்த கர்ச்சீப் உபயோகிக்கவும். :)) I am back guys!

எல்லாரும் சுகமா? ரொம்ப நாளாச்சு இல்லையா? நேக்கும் எழுத நேரமும் ரசனையும் இல்லாம போயிடுத்து. (எளுதிட்டா மட்டும்!!) இன் தி மீன் டைம், எழுதுங்க எழுதுங்கன்னு வந்த பல்லாயிரக்கணக்கான மடல்களுக்கு நன்றி ஹை! அதெல்லாம் எண்ணிப்பார்க்க கூடாது (ஒரு ரெண்டு மெயில் தானே இருந்துச்சுன்னு யாருங்க அங்கே சவுண்டு விடுறது?)

சென்னை வந்து சுமார் நாலு மாசம் ஆச்சு. இன்னும் முழுசா செட்டில் ஆகலை. நிறைய வேலைகள் இருக்கு. இருந்தாலும் இந்தப்பதிவு எழுத என்ன காரணம்?

நமக்கு ஒரு நேரம் பல்பு கிடைக்கலாம். சில சமயம் ஆஃபீஸ் சில பல பல்புகள் கிடைக்கலாம்.. சரி சரி... மேக்ஸிமம் ஒரு நூறு? சரி விடுங்க கரெக்டாவே சொல்லிடுறேன்.. நூத்தம்பது பல்பு அதான் எக்ஸாக்டு கவுண்ட்.(நம்பிட்டாங்களோ?) ஆனா... ஒரு நாள் பூரா பல்பா... கடவுளே.. என்ன  சோதனை?

டூவீலரில் ஆஃபீஸ் போகும் நான்,தினப்படி 100 ரூபாய்க்கு பெட்ரோலை முழுங்கும் அந்த வண்டியை தட்டிக்கொடுத்து ஓட்டுவதுக்குள்ளே பொன்னர் சங்கர் படத்துக்கு பத்து வாட்டி போயிட்டு வந்தாப்புல ஒரே சலிப்பு. ஒவ்வொரு வாட்டியும் எஞ்ஜின் ட்யூன் பண்றேன்னு சொல்லிட்டு 600 ரூபாய் பில் கொடுக்கும் மெக்கானிக் அப்படி என்னதான் பண்ணுவானோ தெரியாது.. இதுக்கு போடும் பெட்ரோல் எல்லாம் மெட்ரோ வாட்டர் லாரியில் இருந்து ஒழுகும் தண்ணி மாதிரி எங்கே தான் போகுமோன்னு ஆச்சர்யப்பட வைக்கும்.

சரின்னு இன்னிக்கி மனசைத்தேத்திண்டு,  (ஊழ்வினை தூண்ட), ஒரு நாளைக்கி பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்ல போய்த்தான் பார்ப்போமேன்னு தோணித்து. பஸ்டாப்புல போய் நின்னா ஒரு பஸ்.... ஒரு பஸ் இல்லை. நஞ்சுபுரம் ஓடும் தியேட்டர் மாதிரி பாஸஞ்சர் வறட்சியா ஒரே ஒரு ஷேர் ஆட்டோ நின்னுண்டு இருந்தது. நேக்கு தான் ஷேர் ஆட்டோவைக்கண்டா டாம் அண்டு ஜெர்ரில வர்றா மாதிரி தோளுக்கு பின்னாடி ரெண்டு இறக்கை முளைச்சுடுமே! என்ன ஒரு செளக்ர்யம்ன்னு பல்லிளிச்சுண்டே ஒரு சுபயோக சுபமுஹூர்த்தத்துலே போய் அதுல ஏறி உக்காந்தேன், அவ்ளோதான்.


அவன் என்னடான்னா வொய்ட் போர்டு பஸ்ஸை விட மஹாக்கேவலமா ஓரஞ்சாரம், இண்டு இடுக்குல இருந்து பாஸஞ்சர் வெள்ளம் வந்து இவன் ஆட்டோவுல ஏறுவான்னு மைண்டு மில்க் குடிச்சுண்டே 10ல ஓட்டிண்டு வந்திருக்கான். மஹாபாவி, கடங்காரா, வேகமா போடான்னு உறக்க, மனசுக்குள்ளேயே திட்டிண்டு வந்தேன். என் BP ஏத்தறதுக்குன்னே மூணு சிக்னல், ஒரு ட்ராஃபிக் மாமா வேற கடக்க யாருமே இல்லாத ரோட்டை க்ராஸ் பண்றதுக்காக கைகாட்டி எங்களை நிக்க வெச்சார். சார், உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையான்னு கேட்கலாமான்னு தோணித்து.

வழக்கமா 10 நிமிஷத்துல போய்ச்சேரவேண்டிய கிண்டியானது சுமார் 25 நிமிஷமாச்சு. இருக்காதா பின்னே..

சரி அசட்டுத்தனம் பண்ணிட்டோம், எப்படியோ, பாதி தூரம் வந்தாச்சே இனி சீக்கிரம் போயிடலாம்ன்னு மனசை தேத்திண்டேன்.


PP21 போன்ற பல்லாயிரக்கணக்கான பஸ்கள் இருக்கும்போது “ ஏ அட்யார் அட்யார் அட்யார்”ன்னு காட்டுக்கூய்ச்சல் போட்டுண்டே ஒரு ஷேர் கார்(ச்சே ச்சே.. இவன் நல்லவன்.. ஷேர் ஆட்டோ தான் ஸ்லோன்னு என் உள்மனசு சொல்ல ஆரம்பிச்சுடுத்து)மூணு பேர் உட்கார்ந்திருக்க, நான் நாலாவதா போய் ஜாயின் பண்ணிண்டேன்.

என்ன கொடுமையோ, கஷ்டகாலமோ தெரியலை, அவன் அட்யார் அட்யார்ன்னு சவுண்டு கொடுத்த அளவுக்கு ஆட்கள் வந்து ஏறலை. அதுனால, தேர் கிளம்பலை பார்த்துக்கோங்க..10 நிமிஷம் நான் கிளம்பிடும்ன்னு பாசிட்டிவ்வா சிரிச்ச முகத்தோட உட்கார்ந்திருந்த சுப மூஹூர்த்தத்தில் 5 பஸ் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு வந்துட்டு போயாச்சு.. இஞ்சி தின்ன குறங்கு மாதிரி என் முகம் மாற ஒரு ரெண்டு மூணு நாலு ஐஞ்சு ஆறு வாட்டி வாட்சு பார்க்க ஆரம்பிச்சேன். (அப்புடி ட்ரைவருக்கு ஹிண்ட் கொடுக்கறேனாம்) அவன் எதையும் கண்டுண்டதா தெரியலை.
ஒரு நொடிப்பொழுதில் மனம் வெறுத்து, மெதுவாக யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும்ன்னு விருட்டுன்னு இறங்கி வந்துட்டேன். அதான் சில நிமிஷங்களிலேயே 5 பஸ் வந்ததே.. இதோ இப்போ ஆறாவதும் வந்துடும் பாருன்னு என் உள்மனசு சொல்லிண்டே இருந்ததா... பார்த்தா ...வழக்கம் போல  வேற ஏதேதோ பஸ்கள் வந்துட்டு போயிடுத்து.

ஒரு மாதிரி பதபதைப்பா இருந்த என் மனசு, ஷேர்கார் இருக்கான்னு ஒரு செக்கண்டு செக் பண்ணிண்டது.. ஏன்னா இதுவும் இல்லாம, அதுவும் இல்லாம ஒரு மாதிரி ரெண்டுங்கெட்டானா போயிடுமே!

ச்சே.. என்ன ஒரு தப்பு பண்ணிட்டோம்ன்னு நினைச்சுண்டே இருந்தேனா.. 21G வந்தது. ஆஹான்னு அந்த ஷேர்காரை இளக்காரமா பார்த்துண்டே ஏறிட்டேன். ஒரு மிக முக்கியமான செய்தி, சின்னமலை போனப்போதான் உதயமாச்சு. 21G மத்யகைலாஷ் போகாதே. அவன் தான் கோட்டூர்புரத்துக்கு லெஃப்டு கட் பண்ணிடுவானே! என்ன ஒரு முட்டாள்தனம்! (இதுல நான் விட்டுட்டு வந்த ஷேர்கார்க்கு இளக்கார லுக்கு வேற) . கண்டக்டரிடம் கேவலமா திட்டு வாங்க மனசில்லாம ஒரு காந்தி மண்டபம்ன்னு டீஸெண்டா கேட்டு வாங்கிண்டேன். வண்டி மட்டும் இருந்தான் இன்னேரம் பார்க் பண்ணிட்டு ஆஃபீஸ் எண்டர் பண்ணியிருக்கலாமேன்னு வருந்திண்டே காந்தி மண்டபத்துல இறங்கினேன்.

பின்னாடியே 23ஸீ வந்ததா.. ஹைய்யான்னு குதிச்சு ஏறிட்டேன். மத்யகைலாஷூக்கு 2.50 ரூபாதானான்னு உச்சி குளுந்தேனோயில்லையோ... பஸ் நான் இறங்க வேண்டிய மத்யகைலாஷ் சிக்னல் தாண்டி (!!!) கொஞ்சம் தள்ளி ஒரு ஸ்டாப்பிங்கில் இறக்கி விட்டுடுத்து.

ஷேராட்டோ, ஷேர் கார், ரெண்டு பஸ், இப்போ நடராஜா சர்வீஸான்னு நினைச்சுண்டே திரும்பவும் மெகா பல்புடன் வந்த வழியே ரோடு க்ராஸ் பண்ணி நடந்து வந்து கஸ்தூர்பா ஸ்டேஷன் வாசல்ல நின்னா, வழக்கம்போல என் ராஜயோக ஜாதக மஹிமை, ஒரு பஸ் இல்லை.

இந்த 5C பஸ் இருக்கே அது, “ வரும். ஆனா வராது”  டைப்பு பஸ். கூட பணிபுரியும் தோழி ”நிறைய ஷேர் ஆட்டோ இருக்குங்க”ன்னு சொன்னதுமேல நேக்கென்னமோ அப்படி ஒரு அபார நம்பிக்கை! ஒரு ஷேர் ஆட்டோ எனக்கே எனக்கா காத்திண்டு இருந்ததா.. அதுல அசுர வேகத்துல ஏறி உக்காந்துட்டேன். (இன்னுமா நீ திருந்தலைன்னு நீங்க கேக்கறது எனக்கு தெரியுது) என் கூட இன்னும் ரெண்டு பெண்களும் அதுல வந்து உக்காண்டா.

ஆனா, அந்த ட்ரைவர் ப்ரும்மஹத்தி, வண்டி இன்னும் 5 பாஸெஞ்சர் இல்லாம போவாது மேடம்ன்னு சொல்லிப்புட்டாய்ன். எனக்கா செம்ம காண்டு. ஏ முட்டாப்பலே.. மணியாச்சுடா.. போகணும்டா.. வண்டி எடுறான்னு சத்தம் போட்டு மறுபடியும் மனசுக்குள்ளேயே திட்டிண்டேன்.

அப்புறம் ஒரு வழியா ரெண்டு எக்ஸ்ட்ரா பேஜஞ்சர் வந்தாங்களா, ஹப்பாடி எடுப்பான்னு ஒரு நம்பிக்கை பிறந்தது. திடீர்ன்னு பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பெண்கள் ஏய் இறங்குடீன்னு கத்திண்டே இறங்கிட்டாங்க.
எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.

இன்னும் இதை நம்பிண்டு உட்கார்ந்திருந்தா ஷிஃப்டு முடியுற சமயத்துல தான் ஆஃபீஸ் போய்ச்சேர முடியும்ன்னு தெரிஞ்சு நானும் அசுர வேகத்துல ஷேர் ஆட்டோவில இருந்து இறங்கிப்பார்த்தா 5T மெஜெஸ்டிக்கா வந்து நிக்கறது. ஓடிப்போய் அதுல ஏறிட்டேன்.

”இத்தனை நாள் நாம ஆஃபீஸ் வந்திருக்கோமே, என்னிக்காவது இந்த 5T யை பார்த்திருக்கோமோ? அடக்கடவுளே, இது வேளச்சேரி வழியா போயிடுமோ? அய்யய்யோ, இன்னிக்கி ஆஃபீஸ் போகவே முடியாதா? ”ன்னு கவலைப்பட்டுண்டே, பின்னாடி ஒரு க்ளான்ஸ் திரும்பிப்பார்க்கறேன்.. 5C!!!! ”சார் ப்ளீஸ் நெக்ஸ்டு ஸ்டாப்புக்கு அர்ஜெண்டா ஒரு டிக்கெட் குடுங்க”ன்னு கேட்டு அவசரமா டிக்கெட் வாங்கி ஸ்டாப்புல இறங்கி ஓடி வந்து அந்த பஸ்லே ஏறிண்டேன். ஹப்பாடி.. என்ன ஒரு நிம்மதி!

ஒரு வழியா ஆஃபீஸ் வந்து சேர்ந்தேன்.

” எப்படி விஜி நீங்க தினசரி நம்ம ஏரியாவுல இருந்து இங்கே வர்றீங்க?சரவணபவனில் சொத்து முழுவதும் கொடுத்து மினி மீல்ஸ் சாப்பிட்ட மாதிரின்னா வயத்தெரிச்சலா இருக்கு?”ன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் சொன்னேன். சிரிச்சுண்டே கேட்டுட்டு மெதுவா சொல்றா,” 5T இங்கே நிக்குமே!!!!!!” அப்போ நான் தான் கேக்கலையா? கேன மாதிரி ஒரே ரூட்டுக்கு போற ரெண்டு பஸ்ஸுல அதி தீவிர வீர ஸாஹஸம் எல்லாம் பண்ணி .. ச்சே.. என்ன ஒரு பல்பு! ரெண்டு ரூபாயில போக வேண்டிய டிக்கெட்டுக்கு 4 ரூபாய்.

ஆச்சா.. இன்னும் முடியலை. இருங்க. மதியம் சாப்பிடலையா.. செம்ம பசி. சாயந்திரம் வீட்டுக்கு வரும்போது வெற்றிக்கொக்கரிப்போட 5Cயை பிடிச்சு, மத்யகைலாஷ் வந்து இறங்கி, CIT நகர் போகலாம்ன்னு நினைச்சு 5S - சைதை தி நகர்ன்னு போட்ட ஒரு பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தேன். இது எப்படியும் தப்பாதுன்னு மனசுக்குள்ளே ஒரு பரிஹாஸ சந்தோஷம் கொப்பளித்தது.
கோட்டூர்புரம் வரையில் நல்லாத்தானே போயிகிட்டு இருந்துச்சு. திடீர்ன்னு பஸ் கோட்டூரில் திரும்பிடுத்து. அய்யய்யோ.. இன்னும் கொஞ்சூண்டு முன்னாடி போய் வலது பக்கம் திரும்பினா சைதாப்பேட்டை.. இவன் எங்கே போறான்ன்னு ஒரே யோசனை. இங்கே திரும்பிடுவானா இருக்கும், அங்கே திரும்புவான்னு பார்த்துண்டே இருக்கேன்.. கழுதை பரதேசம் போனாப்புல பஸ் காந்தி மண்டபம் ரோடு முழுவனும் போய், ஊரெல்லாம் சுத்தி கடைசியில் நந்தனம் சேமியர்ஸ் ரோடு வந்து, சைதை வந்து சீஐடி நகர் வந்தது! ஸ்ஸ்ஸபா.. ஒரு நாலு நிமிஷத்துல வரவேண்டிய CIT நகர், சுமார் 25 நிமிஷம் கழிச்சு வந்தது! என்னே ஒரு அதிநவீன ரூட்டு. இதை அப்படியே மெயிடயின் பண்ணிக்கோங்கப்பான்னு சொல்லலாம் போல வந்தது.


ஆக மொத்தம்.. ரெண்டாயிரத்தி முன்னூறு பல்பு. வாட் ஆஃப் எ பல்பு டே!



இதுல இருந்து நாம கத்துக்கும் பாடம் என்னான்னா, கேட்டாலும் பல்பு, விவரம் தெரிஞ்சவங்க  கிட்டே விஷயம் கேட்காட்டாலும் பல்பு தான். 

Related Posts with Thumbnails