Pages

Sunday, March 24, 2013

ஃபேஸ்புக்கோ மேனியா..

இந்த பதிவை ஃபேஸ்புக்கோமேனியா என்பதை விட ஃபேஸ்புக் எட்டிகிட்ன்னு சொல்லி இருக்கலாம். அதாவது ஃபேஸ்புக்கில் உலவும்போது கடைப்பிடிக்கவேண்டிய நாகரீகங்கள்.ஆனா இந்த போஸ்டில்,  அந்தத் தளத்தில்  நடக்கும் காமெடிகளையே நாம் பார்க்கப்போவதினால், அதை மறப்போமாக. இதற்கு முன்னாடி டாஷோபோர்டியா நோயில் இருந்து விடுபட்டு இப்போ அனேகம் பேர் இந்த ஃபேஸ்புக்கோமேனியாவால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

ஃபேஸ்புக்கை முதன் முதலில் நான் பார்த்தது 2007ல்.ரிஸெப்ஷனிஸ்ட் தாறுமாறாக தன் புகைப்படங்களை ஃபோனில் இருந்து  ப்ளூடூத்தில் அப்லோடு செய்ய, அவள் நண்பர்கள் செம்ம கலாய் கலாய்த்திருந்தார்கள். அடடே.. இப்படி ஒண்ணு இருக்கான்னு நினைச்சுண்டேன்.

மெதுவாக நானும் அங்கே போய் எட்டிப்பார்த்தேன். எது இருக்கோ இல்லையோ நான் ஃபார்ம்வில்லில் இணைந்து உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்ற குறளுக்கு ஏற்றார்ப்போல், டேலியா பூ சாகுபடி, பெல்பெப்பர் சாகுபடி, விஜய்காம்ப்ளெக்ஸ் உறங்கள் போடுறது, பூச்சிக்கொல்லி பயன்பாடு, கோஆப்பரேட்டிவ் ஃபார்மிங் etc இப்படி பல இன்றியமையாத விஷயங்களை (???!) தெளிவாக கற்றேன்!

ஃபோட்டோக்களும் போடலாமேன்னு அருண் வருண் ஃபோட்டோஸ் எல்லாம் போட்டேன். நானும் ஃபேஸ்புக்ல இருக்கேன்னு சொல்லி ஐடெண்டிட்டி க்ரைஸிஸில் இருந்து விடுபட்டேன்! காணாமல் போன மனுஷாளை போலிஸுல சொல்லி தேடுவா.. இப்போ ஃபேஸ்புக்லேன்னா தேடுறா?

இதே மாதிரி நானும் என்னுடைய காணாமல் போன தோழி ஸ்வப்னாவை ஃபேஸ்புக்லே தேடி கண்டுபிடிச்ச கதையை இங்கே எழுதி இருக்கேனாக்கும்.காலை மாலை ஃபேஸ்புக்கே கதின்னு இருந்தேன். ஒரு மாதிரி அடிக்‌ஷன் ஆயிடுத்துன்னு கூட சொல்லலாம்.
சரி இப்போ விஷயத்துக்கு வரேன். எதெல்லாம் செய்யக்கூடாதோ அதெல்லாம் செய்யற இடமும் ஃபேஸ்புக் தானே? 

ஃபார் எக்ஸாம்பிள், ஃபோட்டோவில் இருக்கும் ஃப்ரெண்ட் பக்கத்தில் நிற்கும் பெண்ணைப்பற்றிய மட்டமான கமெண்டு போடுறது மோசமான ஃபேஸ்புக் எட்டிகிட். அதே மாதிரி ஒரு உயிரிழப்பு செய்தியையோ அ கஷ்டமான நிகழ்வையோ பத்தி ஒரு நட்பு வட்டம் ஸ்டேட்டஸ் போட்டால் அதற்கு ஸ்மைலி கொண்டு கமெண்டு இடுவது ரொம்பவே மோசமான எட்டிகிட். 

என்னது ரொம்பவே சீரியஸா டாக்குமெண்ட்ரி மாதிரி போகுதுன்னு தானே நினைச்சீங்க? நாம நினைச்சாலும் நமக்கு சீரியஸா எல்லாம் எழுத வராதுங்களே! சும்ம ஒண்ணு ரெண்டு சொல்லிவைப்போமேன்னு தான் ஹிஹி! 

ஃபேஸ்புக்கில் முக்கியமான கமெடி இது. தான் அப்லோடு செய்த ஃபோட்டோவை தானே லைக்கி விட்டு அதற்கு கமெண்டும் போடும் சில ப்ரும்மஹத்தீஸ். இதான் டாப் ஆஃப் தி காமெடி.. இதுகளை பார்த்தால் பாவமாக இருக்கும்.. பாவம்.. யாருமே லைக்கமாட்டேங்கிறாங்க அதான் நானே லைக்கிட்டேன் என்பார்கள். ப்ளஸ் ஸோ க்யூட் நோ என்பது போன்ற தன் ஃபோட்டோக்களில் தானே முதல் கமெண்டும் போட்டுக்கொள்வார்கள். 

யோவ்.. யாருய்யா அது, என் ஃபோட்டோவில் 345வது கமெண்டாக நான் எழுதிய ‘நான் தான் உலக அழகியாக்கும்’ என்ற கமெண்டை நினைவு படுத்துவது.. ப்ளடி ஃபூல்ஸ்! 

நாம் ஒருவரிடமிருந்து ஒரு ஃபோட்டோவையோ ஒரு விஷயத்தையோ ஷேர் செய்தோமானால், அவர்கள் வேகமாக வந்து, அவர்கள் போட்டதையே நாம் ஷேர் செய்துவிட்டோமாம், அதை கண்ணீர் மல்க லைக்கிவிட்டு ’ஆஸம்’ என்று கமெண்டுவார்கள். ”அப்படி போய் லைக்கி + கமெண்ட்டா விட்டால் அது மோசமான எட்டிக்கிட்டாக்கும்” என்று என்னை மாதிரி ஏதோ ஒரு ஏப்ராஸி சொல்லிக்கொடுத்திருக்கும்.

ரெண்டு மூணு நாள் ஃபேஸ்புக் பக்கம் வராமல் போனால் காமெடி மெஸேஜஸ் ஒரு 200 வந்திருக்கும். அதுல முக்கால்வாசி “படைத்தானே... ப்ரும்ம தேவன் உன்னை”ன்னு ஏகத்துக்கு என் திருமுகத்தை வர்ணித்து ஸ்பெஷல் கேரக்டர்ஸை பெயராக வைத்திருக்கும் ’ஸ்பெஷல்’ மனிதர்களிடம் இருந்து  வந்திருக்கும். அதுவும் அதர்ஸ் என்று காட்டும். எப்படியாச்சும் என்னை ஃப்ரெண்டா ஏத்துக்கோன்னு கென்ன்ன்ன்ன்ன்ஞ்சி இருப்பாங்க..


எல்லாருடைய ப்ரொஃபைல் பிக்சர்ஸை பார்ப்பதை விட Tagged picturesஐ பார்த்தால் உண்மை நிலை புரியும். இது மாதிரி! ஹி ஹி.

அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை முழுசா கமெண்டு எழுதினாத்தான் என்ன? ஸ்டெயிலாம். கீழ்க்கண்ட படங்களை பாருங்களேன். 
இங்லீஷ் வராட்டி தமிழ்ல கமெண்டலாமே, இங்கிலீஷுல தான் கமெண்டுவேன்னு பிடிவாதம் பிடிச்சுண்டு பித்துக்குளித்தனமா ஸப்ஜக்ட் வெர்ப் அக்ரீமெண்ட் எதுவுமே இல்லாம தாறுமாறா கமெண்ட்டி பல்பு பலதும் வாங்கும் சில பரதேசிகள்.
ஸோ க்யூட் - குழந்தைக்கு, வெரி ப்யூட்டிஃபுல் - பெண்களுக்கு, க்ரேட் கப்பிள் - ஜோடிகளுக்கு (போனால் போகிறதுன்னு அதில் இருக்கும் ஆண்களுக்கு) நேக்கு வேலை கிடைச்சுடுத்து - கன்கிராட்ஸ், நேக்கு ப்ரமோஷனாக்கும் - கன்கிராட்ஸ் , நேக்கு பேதியாறது - கன்கிராட்ஸ் இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் படு சுவாரஸ்யமாக்கும். முன்னாள் ப்ளாக்கர்ஸ் தான் இன்னாள் ஃபேஸ்புக்கர்ஸ் என்பதால் டெம்ப்ளேட் கமெண்டுக்களுக்கு பஞ்சமேயில்லை. 

ரொம்ப நீ.......ளமான கட்டுரைகளை எல்லாம் ஷேர் செய்தால் அவர் ஃபேஸ்புக் ப்ரஷ்டம் செய்யப்படுவார்கள். சுருக்கமாக நச்சுன்னு ஏதாவது போட்டால் இம்மீடியட்டாக லைக்கப்படுவார்கள். 


90% ஃபேஸ்புக்கில் வரும் செய்திகள் அத்தனையுமே பொய் தான். இதயம் வெளியில் துடிக்கும் குழந்தைக்கு ஃபேஸ்புக் ஒரு ஷேருக்கு எட்டணா தரும் போன்ற செய்திகளை மிகவும் ப்ராம்ப்டாக பரப்பும் பக்கிகளுக்கு என் சிரம் பணிந்த பமஸ்காரங்கள்.. சாரி நமஸ்காரங்கள். 

சில பைத்தியங்கள் தங்கள் டீஃபால்ட் செட்டிங்க்ஸில் எல்லா ஃப்ரெண்டுக்களையும் எல்லா ஃபோட்டோக்களிலும் Tag செய்தே ஆகணும்ன்னு வெச்சுண்டு இருப்பா. அவா டேக் பண்ற ஃபோட்டோக்கள், கட்டுரை, கவிதை எதுவுமே நமக்கு சம்பந்தமே இருக்காது. அந்த ஜென்மங்களுக்கு என்னுடைய அன்பான சாபம் “ எவ்ளோ ரிஃப்ரெஷ் பண்ணினாலும் அவா newsfeed ல ஒரு போஸ்ட் கூட வராது அப்படியே வந்தாலும் அவா ஐடி இம்மீடியட்டா ஹேக் செய்யப்படும்.” பதிவ்ரதா சாபம் பலிக்காம போகாதாக்கும். 

சமீபமா என் ஃப்ரெண்டு ஒருத்தன் இந்தெ டேக் தொல்லை தாங்காமல் எக்ஸ்ப்ளிசிட்டாவே ஸ்டேட்டஸ் போட்டான், ”please என்னை எதுலேயும் ஒருத்தரும் tag பண்ணாதீங்க”ன்னு..கேட்டாத்தானே? பொறுத்துப் பொறுத்து பார்த்தான், கடைசியில அவா எல்லாரையும் unfriend பண்ணிட்டான்! அவனை 100% சப்போர்ட் பண்றேன்! 

சமீபத்தில் எத்தனை பறக்காவட்டிகள் உன் ப்ரொஃபைலை பார்த்தார்கள் என்று தெரிந்து கொள்ளணுமா? உன் ஃப்ரென்ட்ஸ் லிஸ்டில் எத்தை க்ராக்குகள் இருக்காங்கன்னு ஒரு க்ஷணத்துல சொல்லிடுறேன்,ராமர் பச்சைக் கலரில்  உன் ஃபேஸ்புக் இருக்கணுமா(இது எந்தக் கலர்ல இருந்தா நமக்கென்ன?!)  இங்கே வாயேன், வந்து தான் பாரேன்ன்னு பல தரப்பட்ட லூஸுத்தனமான ஆப்கள்(APPS) (ஆப்புக்கள்  என்றும் படிக்கலாம்) உண்டு. அதையெல்லாம் க்ளிக்கித்தொலைக்காம இருக்கணுமே மாரியாத்தான்னு வேண்டிண்டே தான் லாகின் பண்ணணும். 

மாஃபியா வார்க்ளோ, ப்ளாக்பெல் மிஸ்ட்ரியோ.. என்ன எழவை வேணா விளையாடிக்கோயேன்.. அதுக்கென்னத்துக்கு என்னை கூப்பிடுறேங்கறேன்.. இதே மாதிரி ஒரு உன்னதமான நிலையில் நான் இருந்தப்போ, ’ஏ வாப்பா, ஃபார்ம்வில் வெள்ளாடலாம், நல்லாருக்கும்ப்பா ப்ளீஸ்ப்பா..” என்று கூவிக்கூவி நான் அழைத்ததற்கு நட்புவட்டத்திடம் மன்னிப்பு கோறும் பெருந்தன்மையும் எங்களிடம் உண்டு என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 

என்ன தான் இவ்ளோ பிக்கல் பிடுங்கல்கள் இருந்தாலும் நிறைய நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றது. அழகான படங்கள், சரிப்புக்கள், எக்ஸ்பிரஷன் காமெடிகள்,  உடல்நலத்தகவல்கள், வெஜிடபிள் கார்விங், கேக் பேக்கிங் டிஸைன்ஸ்,  வாய்ப்பிளக்க வைக்கும் விடியோக்கள் இதெல்லாம் என்னுடைய ஃபேவரைட்கள்.

சமீபத்தில் நான் பார்த்து வியந்த விடியோவில் “சிசேரியன் தானே?”ன்னு இளக்காரமாகச் சொல்லப்படும் ஆபரேஷன் எவ்வளவு கஷ்டமானது என்பதை விளக்கியது! அதற்கு தரப்பட்ட கேப்ஷன்” தொட்டதுக்கெல்லாம் அம்மாவை எடுத்தெறிஞ்சு பேசறோமே, பாருங்க எவ்ளோ கஷ்டப்பட்டு நம்மளை பெத்தெடுத்து இருக்காங்க”. 100% உண்மை!

Tuesday, March 19, 2013

”ஆளுக்கு ஒரு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும்”

RVS அண்ணாவுடன் பேசிண்டு இருந்தபோது தான் இந்த டாப்பிக் மனசுல உதயமாச்சு. சமீபமா எனக்கும் ரங்குவுக்கும் நடுவுல ரொம்ப மனஸ்தாபம் ஆயிடுத்து.. இருக்காதா பின்னே? இருக்கறது நாங்க ரெண்டு பேரு. இதுல ”ஆளுக்கு ஒரு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும்”ன்னு அவர் சொல்றார்.
ஆஹா இனி மலையாள சேட்டாஸ் ப்ரோக்ராம்ஸ், புரியாத டிஸ்கஷன்ஸ், ஹை டெஸிபெல்லில் பேசும் காமெடியன்கள், கண்ணாடி, விண்ட்ஷீல்டு வைப்பர்(நிகழ்ச்சியின் பெயர்), நகை விளம்பரங்கள் (வீட்டுல சோறு இருக்கான்னு கவுண்டமணி கேட்பாரே அதான் நினைவுக்கு வரும்) எல்லத்துக்கும் முழுக்கு போட்டுட்டு செந்தமிழே சரணம்ன்னு நானும் ஆசை ஆசையா அபுதாபியிலிருந்து  சென்னை வந்தா, இங்கே சர்வம் மொக்கை மயம். போன வருஷம் பூரா நான் கன்ஸிஸ்டெண்டா ரசிச்சுப் பார்த்த ஒரே நிகழ்ச்சி “கல கல மணி” - சிரிப்பொலி - டெய்லி ராத்திரி 9 மணிக்கு போட்டுண்டு இருந்தான். Of course with a 100 advertisements. It was worth the wait.வேற எதுவுமே பார்க்க சகிக்கலை. சானல் சர்ஃப் பண்றச்சே என்னை சுவாரஸ்யப்படுத்தியவர்கள் 1.கமல் 2.கே.பி 3. கவுண்டர்.  ஒரு நிகழ்ச்சிக்கு நடுவில் 200 விளம்பரங்கள். கடுப்பின் உச்சக்கட்டம். சரி செட்டாப்பாக்ஸ் போட்டாலாவது கொஞ்சம் பரவாயில்லாமல் இருக்கும்னு தான் நானும் நினைச்சேன். அது அதை விட கொடுமை. காசு கட்டி ரீச்சார்ஜ் பண்ணி மொக்கைகளை தரிசனம் பண்ணணுமாம். என்னத்த சொல்ல?

3 மலையாள சேனல்களுக்கு மாசம் 25 ரூபாயாம். 7 தெலுங்கு சேனல்களுக்கும் அதே 25 ரூபாய் தான்.. ஆனால் எல்லாமே கை நிறைய கழுதைவிட்டையாய் இருக்கே? ரொம்ம்ம்ம்ப முயற்சி பண்ணினாலும் ஒரு புன்சிரிப்பு கூட வரமாட்டேங்கிறது - ஜெமினி காமெடியாம். எவ்வளவோ திறமை வாய்ந்த சிரிப்பு நடிகர்களை வெச்சுண்டு இருந்தாலும் அவர்களை effective ஆக utilize பண்ணத்தெரியாதது யார் தப்பு? "What is the reason for discarding these channels Mam?" என்று செட்டாப்பாக்ஸ் கம்பெனியிலிருந்து ப்ரின்ஸி கேட்டாள். I simply said " We don't find them either interesting or engaging".

2 மணி நேரம் ஷெட்யூல்டு பவர்கட்டுக்கு பிறகு, செட்டாப்பாக்ஸ் தானா ஆன் ஆறதா? அப்போ பாருங்க, மிகப்பெரிய தொண்டையில் ஒன்லி விளம்பரம்ஸ் வரது ஒரு டிஃபால்ட் சேனலில். ஓ...என்று அலரிண்டு இருக்கும். அந்த நேரம் பார்த்து இந்த ரங்கு ரிமோட்டை எங்கே வெச்சாரோ?(சரி சரி, நான் தான் சில சமயம் ஃப்ரிஜ்ஜுக்குள்ளேயோ, கிச்சன் ஸின்க்லேயோ போட்டிருப்பேன், இருந்தாலும் திட்டறதுக்கு ஒரு ஆள் வேண்டாமோ?) ன்னு தே....டி எடுத்து சானல் மாத்துறதுக்குள்ளே...BP தாறுமாறாக எகிறுகிறது. என்னத்த சொல்ல?

இந்த படம், பாட்டு, முக்கியமான வசனங்கள் ஒரு எழவும் காதுல கேட்டுத்தொலையாது.. சரின்னு டீவீ வால்யூமை 60ல வெச்சா, நாம அலறும் அளவுக்கு விளம்பரங்கள் மட்டும் மஹா சத்தமா கேட்கும்.. இந்த சவுண்டு கேட்டு கேட்டு எனக்கு லேசா காது பிரச்சினை இருக்கோன்னு டவுட்டா இருக்கு. “இனிமே காது, கேக் ‘காது’ன்னு அடிக்கடி செல்லிக்கறேன்.  கொஞ்சம் சத்தத்தை கூட என்னால தாங்கிக்க முடியலை.

நான் என் (தூங்கிண்டு இருக்கும்) நைனாவின் காதில் கத்தி வெறுப்பேத்திய போது அவர் எனக்கு என்ன சாபம் விட்டிருப்பார்ன்னு இப்போத்தான் என்னால யூஹிக்க முடியறது.

விளம்பரங்களாவது இனிமையாக அழகாக இருக்கா? அதுவும் இல்லை. எல்லாத்துலேயும் ஒரே இரைச்சல் மயம். சத்தமயம். அழகான கோக் விளம்பரப்பாட்டு மட்டும் சமீபத்துல ரொம்ப பிடிச்சு இருந்தது.. உடனே போட்டி பானமும் காமா சோமான்னு ஒரே இரைச்சல் மயமா”இப்போவே இப்போ”ன்னு குய்யோ முறையோன்னு கத்தறது. ஹெவி மெட்டல் ஃபுல் வால்யூமில் விளம்பரங்கள் - நாராசத்தின் உச்சக்கட்டம்.
இந்த தொல்லையெல்லாம் வேண்டாம்ன்னு தான் பேசாம காமெடி செண்ட்ரல், ஜீ கஃபே, ஏ.எக்ஸ்.என்(இதுலேயும் அதே விளம்பரக்கஷ்டம் தான் ஆனா ஒன்லி ப்ரைம் டைம்) போன்ற சானல்களை வாங்கினோம். 

இந்த ரங்குவின் பிரச்சினை புதுசு.. என்ன செல்றார்ன்னா, ”நான் படத்தை பார்க்கறதா, இல்லே சப்டைட்டில்ஸ் படிக்கறதா”ன்னு கேக்கறார்.. CSI New York, CSI Miami எல்லாம் பார்த்து நான் "Brilliant,, just brilliant"ன்னு கத்திட்டு இவரை ஆவலா பார்த்தா, இவர் தேமேன்னு லாப்டாப்பை முறைச்சு பார்த்துண்டு  உக்காண்டு இருப்பார். ஒண்ணும் புரியலையாம். அதெல்லாம் ஒண்ணும் இல்லை.. கூர்ந்து கவனிச்சா எல்லாம் இவருக்கு நன்னாவே புரியும்.ஆனா என்ன சொல்றார் தெரியுமோ? “பத்மினி, சரோஜாதேவி, சாவித்திரி பாடல்களில் இந்த பிரச்சினை இல்லை”யாம்.  க்கும் என்னால Black and white பாட்டெல்லாம் பார்க்க முடியாது. சமீபகாலமா இவருக்கு சீரியல் பார்க்கும் ஆசையும் துளிர் விட்டு இருக்கு. அடக்கொடுமையே!

ரங்கு, மெதுவா சொல்றார் “ஒரு வேளை இந்த சானல்களும் புதுப்பொண்டாட்டி மாதிரி தானோ? சப்ஸ்க்ருப்ஷன் பண்ணின உடனே பார்க்கத்தோன்றும்.. போகப்போக போர் அடிச்சுடும்.

அதுக்கு தான் சொன்னார், ஆளுக்கு ஒரு டீ.வீ இருந்தா எத்தனை நன்னா இருக்கும்ன்னு?ஓ...  இருக்குமே.. ஏன் ஏன் ஏன் இருக்காதுங்கறேன்? ”நீங்களே சொல்லுங்க, இதைக்கேட்டுண்டு சும்மா இருக்க முடியுமா? சொல்லுங்கள் டாடி, சொல்லுங்கள்... (நற நற) நான் பூரிக்கட்டையை எடுத்தல் பிழையா?

Sunday, March 17, 2013

சரிகம ’சனி’

அநன்யா எங்கே? எங்கே?ன்னு ஏரி,ஆறு,குளம்,குட்டையில எல்லாம் தேடி அலைஞ்ச அருமை வாசகர்களுக்கு நன்றி! பல ஈமெயில்கள் மூலமா என்னை தொடர்பு கொண்டு,"ப்ளீஸ் நீங்க மறுபடியும் எழுதணும்"ன்னு கெஞ்ஞ்ஞ்ச்சி (சரி.. சரி... கொஞ்சம் எக்ஸாஜரேட் பண்ணியூட்டேன், இதைப்போய் பெரிசு படுத்தாதீங்கேளேன்) கூத்தாடி (இதுவும் அதே, அதே சபாபதே) கேட்டுண்டதாலே, என்னுடைய சொற்ப கற்பனாசக்தியை தீட்டிண்டு ப்ளாக்கருக்குள் மறுபிரவேசம்.

ஜவர்லால்ஜியின் சமீபத்திய சங்கீத பதிவை படித்ததால் தான் இந்த பதிவிடும் ஆசை துளிர்விட்டது அப்படீங்கறதை சொல்லிக்கறதுக்கு என்ன வெட்கம் வேண்டிக்கிடக்கு எனக்கு? அதே மாதிரி நானும் என் தங்கைமணியும்  சங்கீதம் ’கத்தி’க்க.. சாரி கத்துக்க போன நினைவுகளை எழுதலாம்ன்னு தான் வந்தேன்.

அந்தக்காலத்து ‘புஷ்’ டேப்ரிக்காடரில் எம்.எஸ் அம்மாவின் காமாக்ஷி சுப்பிரபாதமும், சங்கராபரணமும் கேட்டிருந்தாலும், சம்பிரதாயமாய் சங்கீதம் அதுவும் வீணையுடன் ஆரம்பித்தது விஜயவாடாவில் தான். 

அடடே... அநன்யாவுக்கு வீணையெல்லாம் தெரியுமான்னு.. நீங்களெல்லாம் தப்பிதாமா நெனைச்சுண்டா நான் என்ன பண்றது? சொல்ல வந்ததை முழுசா படியுங்கோ.. ஸ்கூல் முடிஞ்சு ”5 கண்டக்கு வீண க்ளாஸ் முதலெடுதாம்” என்று பிரமிளா மிஸ் சொல்லி இருந்தா.. ஓஹோ இதான் வீணையான்னு எங்க ரெண்டு பேருக்கும் ஒரே ஆச்சர்யம். சும்மா இருக்காம டொய்ங் டொய்ங்ன்னு கம்பிகளை மீட்டி அந்த இசையென்ற இன்பவெள்ளத்தில் நீந்த ஆரம்பிச்சோம். சும்மா அப்படியே இருந்திருக்கலாமோன்னோ? "இதுல எப்படீண்ணே இசை வரும்"ன்னு ஒரே ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சேன். தங்கை ஜஸ்டு சீயர் லீடர் மாதிரி பண்ணிண்டு இருந்தா. தாளம் போடும் ஓட்டைக்குள் எட்டிப்பார்த்து, மணத்து பார்த்து, கடைசி கம்பியின் ’ஜங் ஜங்’ கை ரசித்து,  கம்பிகளில் ஊடே சின்னச்சின்ன இடைவெளிகளில் சுண்டு விரலை நுழைத்துப்பார்த்து, கடைசியில் வீணையின் நுனியில் இருக்கும் ஸ்ட்ரிங் அட்ஜஸ்மெண்டுக்கு வந்தே விட்டேன்.

 1985களில் டீவியில் ஃப்ரீக்வென்ஸி செட் செய்வதற்க்கு மேனுவலாக ட்யூன் பண்ண வேண்டும். அதற்கு ஒரு சின்ன கேபினட்டுக்குள் ஒரு குச்சி வெச்சிருப்பா..(தெலுங்கில் இதை ’புல்ல’ என்பார்கள். இந்த வினோதமான சாதனத்தை CR TV யின் ஆயுள் முடியும் வரை (1995?) புல்ல என்றே அழைத்தோம்.. ) அதை எடுத்து சானல் ஓட்டையில் வெச்சு திருகிண்டே இருந்தா விஜயவாடாவில் ஞாயித்துக்கிழமை சாயந்திரம் புள்ளி புள்ளியா தமிழ்ப் படம் வரும். இதே மாதிரி ஃப்ளூக்ல வேற  ஏதாவது நிகழ்ச்சி வரதான்னு பார்க்கலாம்ன்னு அந்த குச்சியை வெச்சு திருகிப்பார்த்துண்டே இருக்கறது. அதுல பாருங்கோ நானும் அதே ஞாபகத்துல வீணையோட String adjustment லீவரை திருகி (ஹை, இது சுத்த முடியறதே, இன்னும் திருகலாம் போல இருக்கே? இன்னும்? அட” என்று ரொம்ப பிராயசையுடன் நான் திருக,  அந்த பாவப்பட்ட கம்பியும் கடைசி வரை தன்னை இழுத்துக்கொடுத்து பொட்டுன்னு உயிரை விட்டுடுத்து! ’ஞ்ஞ்ஞை’ன்னு அறுந்துடுத்து.. 

அடுத்து மிஸ்ஸின் கடுங்கோபத்துக்கு ஆளாகி என்னை வீணைக்கிளாசிலிருந்து தள்ளி வைத்து விட்டார்.. நெக்ஸ்டு அம்மா கெஞ்சிக்கேட்டு தங்கைமணியுடன் கொஞ்ச காலம் க்ளாசுக்கு போனேன். இரண்டு குரல்களிலும் அப்படி ஒரு தேஜஸ், Sync. ஆஹா பிற்காலத்தில் நாம ரெண்டு பேரும் போடி சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படலாம் என்று ஊகித்த வாரே வழியெல்லாம் பேசிண்டே போவோம். (எனக்கு வயது 7 அவளுக்கு 4) ஜண்டஸ்வரத்தில் நாலாவது கஷ்டமான (?!) பாடத்தை வெகு அனாயாசத்துடன்(கொஞ்சம் ஓவரா இருக்கோ) நான் பாட, பக்கத்தாத்து ரமா ஆண்ட்டி கூட “மீ அம்மாயிலு சாலா பாக பாடுதுந்நாரண்டி”ன்னு சொன்னா.. இதெல்லாம் யாருக்கு தெரியறது? என்னிக்கி அந்த ஆண்ட்டி சொன்னாளோ அன்னிக்கே எங்க பாட்டுக்கு ஒரு முடிவு வந்தது.  என்ன காரணம்ன்னு சரியா ஞாபகம் இல்லே.. (ரெண்டு பேருக்கும் ஹிந்தி க்ளாஸ்/பாட்டுக்ளாஸ் ஃபீஸ் எல்லாம் பட்ஜட்ல இடிக்குதுன்னு மை நைனா சொல்லி இருப்பார்ன்னு நினைக்கறேன்) ஸ்வாதி முத்யம், சாகர், ஸ்வயம் க்ருஷி, ஆனந்த பைரவி, மிஸ்டர் இண்டியா, புன்னகை மன்னன், மெளனராகம், நாகயன் போன்ற படங்களில் வரும் பாட்டுக்களால் எங்கள் இசை தாகம் தணிந்தது. 

ஹைத்ராபாத்தில் இருந்த போது எங்கள் ஸ்கூலில் 40வது சுதந்திர தினம் வந்தது. அந்த விழாவில் க்ரூப்சாங் பாடினோம். எங்க PT Sir தான் கோச்சிங். ஸ்போர்ட்ஸ் கோச் எப்படிங்காணும் பாட்டு வாத்தியார் ஆகமுடியும்? மிக வினோதனமான் பாட்டை அவர் ஆக்‌ஷனுடன் பாட, நாங்கள் எல்லோரும் சிரி சிரின்னு சிரிச்சுண்டே பாடினோம்.அதென்னமோ அவர் 40த் 40த் என்று ரெண்டு வாட்டி சொல்லச்சொன்னார், கூடவே இண்டிபெண்டன்ஸ் டேயில் வரும் ’ இ’ யை முக்கி எஃபக்ட் சேர்க்கச்சொன்னார். முதலில் 40த் ரெண்டு வாட்டியே அனாவஸ்யம். இதுல முக்க்க்க்கி ‘இ’ சொல்ல வேண்டுமாம். இதென்ன பாட்டா இல்லே ரெசிட்டேஷனான்னு குழம்பினோம். தங்கைமணி மிகவும் promptஆக வீட்டில் அதை அம்மாவிடம் செய்து காட்டி கிண்டல் பண்ணினாள்.என்ன தான் க்ரூப் சாங் ஆனாலும் எங்க சங்கீத திறமையை முழுமையாக பிரதர்சிக்க முடியாதததால் மிகவும் வருந்தினோம்.

ஒரு வழியாக சென்னை வந்தவுடன் it is not too late even now என்ற எண்ணத்துடன் அவ்வாவின் தீவிர முயற்சியினால் புருஷோத்தமநகரில் ஒரு மாமியிடம் அபிராமி அந்தாதியில் சேர்த்து விட்டார்கள். நிற்க, இது பாட்டு க்ளாஸ் இல்லை, சுலோக க்ளாஸ் தான் டீ என்று இரெண்டு பேரும் பெரும் சோகமடைந்தோம். சரி உட்கார்ண்டு முறையாக ராகத்துடன் கத்துக்கலாம்ன்னு தான் நினைச்சோம். பட்..பாருங்கோ அந்த மாமி அந்தாதியை அல்ந்தாதி என்றே பாடுவார்.. ”எல்ல்ல்ல்ல்ல்ல்ல்திரன்” என்று ரஹ்மான் பாடுவாரே அதே மாதிரி. 

ஒரு பாட்டு முடியும் அதே எழுத்தோடு அடுத்த பாட்டு ஆரம்பம் ஆகுமா? என்ன ஆச்சர்யம்ன்னு நினைச்சுண்டோம். மாமி நன்னாத்தான் சொல்லிக்கொடுத்தா.. பட் செல்லவ்வாவும் அம்மாளு அவ்வாவும் ஒரு நாள் சொல்லிக்கொடுத்தவரைக்கும் பாடச்சொன்னா.. நாங்களும் மிக அருமையா அப்படியே பாடினோம். பாடினப்போ “ஒத்து .. ஆ மாமி ஒகே அபஸ்வரம்”ன்னு சர்டிஃபை பண்ணி டிஸ்குவாலிஃபை பண்ணிட்டா.. மாமி தான் அபஸ்வரமாம். நாங்க படு சூப்பர் ஸ்வரமாம். (ஹிஹி) 

ஆசை யாரை விட்டது? நியூகாலனியில் ஒரு மாமியிடம் மறுபடி தஞ்சம் அடைந்தோம். கொலுவுல பாடறதுக்கு நாலு பாட்டு சொல்லித்தாங்கோ மாமின்னு சொல்லிட்டு அலை பாயுதோ, வெங்கடாச்சல நிலையம், போ சம்போ, ரெண்டு மூணு க்ருஷ்ணன் பாட்டு, ரெண்டு மூணு அம்பாள் பாட்டு எல்லாம் கத்துண்டோம். வழக்கம்போல போடி சிஸ்டர்ஸ் கூடிய சீக்கிரமே ஆயிடுவோம்பாருடீன்னு பேசிண்டோம். ரெண்டு பேரும் மேடையில உக்காண்டு பல ஸ்வர ஆராதனையெல்லாம் பண்றமாதிரி கனாக்கள் கண்டோம். கடைசியில் அந்த மாமியும் (எங்க தொல்லை தாங்காமல்) ஊரை காலி பண்ணியூட்டு போயிட்டா.

 சுந்தரவல்லி ஸ்கூலில் பாட்டு டீச்சரிடம் கொஞ்சம் கத்துண்டோம். நாங்க மூணு பேர் இருந்தோம். எங்க கூட ஒரு பொண்ணு சுருதியே சேராம பாடுவா. (எங்க ரெண்டு பேர் சுருதியெல்லாம் பெர்ஃபெக்டாக்கும்) அந்த டீச்சர் ஆத்துக்காரர் அஷ்டக்கோணலா மூஞ்சியை வெச்சுண்டு எங்க க்ளாஸ் பாடுற பாட்டை ரொம்பவே ரசிச்சு கேட்பார்..அவருடைய வேதனையை நாங்க நன்னா புரிஞ்சுண்டோம். அதுனால நாங்களே (வழக்கம்போல மை டியர் நைனாவின் பணத்தை ஃபீஸாக கட்டிவிட்டு) டிஸ்கண்டின்யூ பண்ணிட்டோம். ஒருவேளை நாங்க மட்டும் கண்டின்யூ பண்ணி இருந்தோமானா... இன்னேரம்... சரி விடுங்கோளேன்..

அப்புறம் நோ பாட்டு க்ளாஸ். கல்யாணத்துக்கப்புறம் ரங்குவின் encouragement கிடைக்க, துபாயில் பாட்டு க்ளாஸ் சேர்ந்தேன். ஒரு மலையாளி சார் என்னை பாடச்சொல்லி கேட்டு,”மேடத்தினே ஒரு பாடு அறியும், நம்மள் நேரே ஜண்டஸ்வரத்தின போகாம்”ன்னு சொல்லியூட்டார். நானே ஆச்சரியப்படும் அளவுக்கு கட கடன்னு முன்னேற்றம். ரெண்டு மூணு கீதம் எல்லாம் கூட படிச்சுட்டேன். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்ன்னு சும்மாவா சொன்னா? 

நான் Always simply above the ordinary ஆனதுன்னாலேயோ என்னமோ, எனக்கு எப்போவுமே தனிக்கிளாஸ்தான். அதே சமயம் ரங்குவும் வீணை க்ளாசுக்கு போக, ரெண்டு பேரும் சங்கீதமே சதாஸ்மராமியாக விளங்கினோம். ரங்குவுக்கு 'பாம்பே ஜெயஸ்ரீ' என்றால் கொஞ்சம் ‘இது’ அதே வெறியுடன் ’அபுதாபி அநன்யா’ ஆகியே தீருவேன் என்று வீறுகொண்டு முயற்சியுடன் பாடி ப்ராக்டீஸ் பண்ணிணேன். வெளியில் காரில் போனால் கூட பாட்டு ப்ராக்டிஸ் தான். சதா பாட்டு தான். வெக்கேஷனுக்கு சென்னை வந்த போது என் அம்மா வினோதமா பார்த்தார்.. என்னாச்சு உனக்கு? லூஸாயிட்டியான்னு கேட்டா. பின்னே, ஹாலில் உக்காண்டு பாட்டு புஸ்த்தகத்தை வெச்சுண்டு உரக்க ஸ்லோவாக கீதம் ப்ராக்டிஸ் பண்ணினா வித்தியாசமா இருக்காதா? அவர் வீணை வாசிக்கும் டெம்போவில் பாடிப்பாடி ஸ்டாண்டர்ட் டெம்போவே படு ஸ்லோ ஆயிடுத்து. நான்காவது கீதம் படு கஷ்ஷ்ஷ்ஷ்டமாக இருக்க, சங்கீத ஆசையை துறந்தேன். Related Posts with Thumbnails