இந்த பதிவை ஃபேஸ்புக்கோமேனியா என்பதை விட ஃபேஸ்புக் எட்டிகிட்ன்னு சொல்லி இருக்கலாம். அதாவது ஃபேஸ்புக்கில் உலவும்போது கடைப்பிடிக்கவேண்டிய நாகரீகங்கள்.ஆனா இந்த போஸ்டில், அந்தத் தளத்தில் நடக்கும் காமெடிகளையே நாம் பார்க்கப்போவதினால், அதை மறப்போமாக. இதற்கு முன்னாடி டாஷோபோர்டியா நோயில் இருந்து விடுபட்டு இப்போ அனேகம் பேர் இந்த ஃபேஸ்புக்கோமேனியாவால் தாக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
ஃபேஸ்புக்கை முதன் முதலில் நான் பார்த்தது 2007ல்.ரிஸெப்ஷனிஸ்ட் தாறுமாறாக தன் புகைப்படங்களை ஃபோனில் இருந்து ப்ளூடூத்தில் அப்லோடு செய்ய, அவள் நண்பர்கள் செம்ம கலாய் கலாய்த்திருந்தார்கள். அடடே.. இப்படி ஒண்ணு இருக்கான்னு நினைச்சுண்டேன்.
மெதுவாக நானும் அங்கே போய் எட்டிப்பார்த்தேன். எது இருக்கோ இல்லையோ நான் ஃபார்ம்வில்லில் இணைந்து உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்ற குறளுக்கு ஏற்றார்ப்போல், டேலியா பூ சாகுபடி, பெல்பெப்பர் சாகுபடி, விஜய்காம்ப்ளெக்ஸ் உறங்கள் போடுறது, பூச்சிக்கொல்லி பயன்பாடு, கோஆப்பரேட்டிவ் ஃபார்மிங் etc இப்படி பல இன்றியமையாத விஷயங்களை (???!) தெளிவாக கற்றேன்!
ஃபோட்டோக்களும் போடலாமேன்னு அருண் வருண் ஃபோட்டோஸ் எல்லாம் போட்டேன். நானும் ஃபேஸ்புக்ல இருக்கேன்னு சொல்லி ஐடெண்டிட்டி க்ரைஸிஸில் இருந்து விடுபட்டேன்! காணாமல் போன மனுஷாளை போலிஸுல சொல்லி தேடுவா.. இப்போ ஃபேஸ்புக்லேன்னா தேடுறா?
இதே மாதிரி நானும் என்னுடைய காணாமல் போன தோழி ஸ்வப்னாவை ஃபேஸ்புக்லே தேடி கண்டுபிடிச்ச கதையை இங்கே எழுதி இருக்கேனாக்கும்.காலை மாலை ஃபேஸ்புக்கே கதின்னு இருந்தேன். ஒரு மாதிரி அடிக்ஷன் ஆயிடுத்துன்னு கூட சொல்லலாம்.
சரி இப்போ விஷயத்துக்கு வரேன். எதெல்லாம் செய்யக்கூடாதோ அதெல்லாம் செய்யற இடமும் ஃபேஸ்புக் தானே?
ஃபார் எக்ஸாம்பிள், ஃபோட்டோவில் இருக்கும் ஃப்ரெண்ட் பக்கத்தில் நிற்கும் பெண்ணைப்பற்றிய மட்டமான கமெண்டு போடுறது மோசமான ஃபேஸ்புக் எட்டிகிட். அதே மாதிரி ஒரு உயிரிழப்பு செய்தியையோ அ கஷ்டமான நிகழ்வையோ பத்தி ஒரு நட்பு வட்டம் ஸ்டேட்டஸ் போட்டால் அதற்கு ஸ்மைலி கொண்டு கமெண்டு இடுவது ரொம்பவே மோசமான எட்டிகிட்.
என்னது ரொம்பவே சீரியஸா டாக்குமெண்ட்ரி மாதிரி போகுதுன்னு தானே நினைச்சீங்க? நாம நினைச்சாலும் நமக்கு சீரியஸா எல்லாம் எழுத வராதுங்களே! சும்ம ஒண்ணு ரெண்டு சொல்லிவைப்போமேன்னு தான் ஹிஹி!
ஃபேஸ்புக்கில் முக்கியமான கமெடி இது. தான் அப்லோடு செய்த ஃபோட்டோவை தானே லைக்கி விட்டு அதற்கு கமெண்டும் போடும் சில ப்ரும்மஹத்தீஸ். இதான் டாப் ஆஃப் தி காமெடி.. இதுகளை பார்த்தால் பாவமாக இருக்கும்.. பாவம்.. யாருமே லைக்கமாட்டேங்கிறாங்க அதான் நானே லைக்கிட்டேன் என்பார்கள். ப்ளஸ் ஸோ க்யூட் நோ என்பது போன்ற தன் ஃபோட்டோக்களில் தானே முதல் கமெண்டும் போட்டுக்கொள்வார்கள்.
யோவ்.. யாருய்யா அது, என் ஃபோட்டோவில் 345வது கமெண்டாக நான் எழுதிய ‘நான் தான் உலக அழகியாக்கும்’ என்ற கமெண்டை நினைவு படுத்துவது.. ப்ளடி ஃபூல்ஸ்!
நாம் ஒருவரிடமிருந்து ஒரு ஃபோட்டோவையோ ஒரு விஷயத்தையோ ஷேர் செய்தோமானால், அவர்கள் வேகமாக வந்து, அவர்கள் போட்டதையே நாம் ஷேர் செய்துவிட்டோமாம், அதை கண்ணீர் மல்க லைக்கிவிட்டு ’ஆஸம்’ என்று கமெண்டுவார்கள். ”அப்படி போய் லைக்கி + கமெண்ட்டா விட்டால் அது மோசமான எட்டிக்கிட்டாக்கும்” என்று என்னை மாதிரி ஏதோ ஒரு ஏப்ராஸி சொல்லிக்கொடுத்திருக்கும்.
ரெண்டு மூணு நாள் ஃபேஸ்புக் பக்கம் வராமல் போனால் காமெடி மெஸேஜஸ் ஒரு 200 வந்திருக்கும். அதுல முக்கால்வாசி “படைத்தானே... ப்ரும்ம தேவன் உன்னை”ன்னு ஏகத்துக்கு என் திருமுகத்தை வர்ணித்து ஸ்பெஷல் கேரக்டர்ஸை பெயராக வைத்திருக்கும் ’ஸ்பெஷல்’ மனிதர்களிடம் இருந்து வந்திருக்கும். அதுவும் அதர்ஸ் என்று காட்டும். எப்படியாச்சும் என்னை ஃப்ரெண்டா ஏத்துக்கோன்னு கென்ன்ன்ன்ன்ன்ஞ்சி இருப்பாங்க..
எல்லாருடைய ப்ரொஃபைல் பிக்சர்ஸை பார்ப்பதை விட Tagged picturesஐ பார்த்தால் உண்மை நிலை புரியும். இது மாதிரி! ஹி ஹி.
அதென்னமோ தெரியலை என்ன மாயமோ தெரியலை முழுசா கமெண்டு எழுதினாத்தான் என்ன? ஸ்டெயிலாம். கீழ்க்கண்ட படங்களை பாருங்களேன்.
இங்லீஷ் வராட்டி தமிழ்ல கமெண்டலாமே, இங்கிலீஷுல தான் கமெண்டுவேன்னு பிடிவாதம் பிடிச்சுண்டு பித்துக்குளித்தனமா ஸப்ஜக்ட் வெர்ப் அக்ரீமெண்ட் எதுவுமே இல்லாம தாறுமாறா கமெண்ட்டி பல்பு பலதும் வாங்கும் சில பரதேசிகள்.
ஸோ க்யூட் - குழந்தைக்கு, வெரி ப்யூட்டிஃபுல் - பெண்களுக்கு, க்ரேட் கப்பிள் - ஜோடிகளுக்கு (போனால் போகிறதுன்னு அதில் இருக்கும் ஆண்களுக்கு) நேக்கு வேலை கிடைச்சுடுத்து - கன்கிராட்ஸ், நேக்கு ப்ரமோஷனாக்கும் - கன்கிராட்ஸ் , நேக்கு பேதியாறது - கன்கிராட்ஸ் இப்படி டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் படு சுவாரஸ்யமாக்கும். முன்னாள் ப்ளாக்கர்ஸ் தான் இன்னாள் ஃபேஸ்புக்கர்ஸ் என்பதால் டெம்ப்ளேட் கமெண்டுக்களுக்கு பஞ்சமேயில்லை.
ரொம்ப நீ.......ளமான கட்டுரைகளை எல்லாம் ஷேர் செய்தால் அவர் ஃபேஸ்புக் ப்ரஷ்டம் செய்யப்படுவார்கள். சுருக்கமாக நச்சுன்னு ஏதாவது போட்டால் இம்மீடியட்டாக லைக்கப்படுவார்கள்.
90% ஃபேஸ்புக்கில் வரும் செய்திகள் அத்தனையுமே பொய் தான். இதயம் வெளியில் துடிக்கும் குழந்தைக்கு ஃபேஸ்புக் ஒரு ஷேருக்கு எட்டணா தரும் போன்ற செய்திகளை மிகவும் ப்ராம்ப்டாக பரப்பும் பக்கிகளுக்கு என் சிரம் பணிந்த பமஸ்காரங்கள்.. சாரி நமஸ்காரங்கள்.
சில பைத்தியங்கள் தங்கள் டீஃபால்ட் செட்டிங்க்ஸில் எல்லா ஃப்ரெண்டுக்களையும் எல்லா ஃபோட்டோக்களிலும் Tag செய்தே ஆகணும்ன்னு வெச்சுண்டு இருப்பா. அவா டேக் பண்ற ஃபோட்டோக்கள், கட்டுரை, கவிதை எதுவுமே நமக்கு சம்பந்தமே இருக்காது. அந்த ஜென்மங்களுக்கு என்னுடைய அன்பான சாபம் “ எவ்ளோ ரிஃப்ரெஷ் பண்ணினாலும் அவா newsfeed ல ஒரு போஸ்ட் கூட வராது அப்படியே வந்தாலும் அவா ஐடி இம்மீடியட்டா ஹேக் செய்யப்படும்.” பதிவ்ரதா சாபம் பலிக்காம போகாதாக்கும்.
சமீபமா என் ஃப்ரெண்டு ஒருத்தன் இந்தெ டேக் தொல்லை தாங்காமல் எக்ஸ்ப்ளிசிட்டாவே ஸ்டேட்டஸ் போட்டான், ”please என்னை எதுலேயும் ஒருத்தரும் tag பண்ணாதீங்க”ன்னு..கேட்டாத்தானே? பொறுத்துப் பொறுத்து பார்த்தான், கடைசியில அவா எல்லாரையும் unfriend பண்ணிட்டான்! அவனை 100% சப்போர்ட் பண்றேன்!
சமீபத்தில் எத்தனை பறக்காவட்டிகள் உன் ப்ரொஃபைலை பார்த்தார்கள் என்று தெரிந்து கொள்ளணுமா? உன் ஃப்ரென்ட்ஸ் லிஸ்டில் எத்தை க்ராக்குகள் இருக்காங்கன்னு ஒரு க்ஷணத்துல சொல்லிடுறேன்,ராமர் பச்சைக் கலரில் உன் ஃபேஸ்புக் இருக்கணுமா(இது எந்தக் கலர்ல இருந்தா நமக்கென்ன?!) இங்கே வாயேன், வந்து தான் பாரேன்ன்னு பல தரப்பட்ட லூஸுத்தனமான ஆப்கள்(APPS) (ஆப்புக்கள் என்றும் படிக்கலாம்) உண்டு. அதையெல்லாம் க்ளிக்கித்தொலைக்காம இருக்கணுமே மாரியாத்தான்னு வேண்டிண்டே தான் லாகின் பண்ணணும்.
மாஃபியா வார்க்ளோ, ப்ளாக்பெல் மிஸ்ட்ரியோ.. என்ன எழவை வேணா விளையாடிக்கோயேன்.. அதுக்கென்னத்துக்கு என்னை கூப்பிடுறேங்கறேன்.. இதே மாதிரி ஒரு உன்னதமான நிலையில் நான் இருந்தப்போ, ’ஏ வாப்பா, ஃபார்ம்வில் வெள்ளாடலாம், நல்லாருக்கும்ப்பா ப்ளீஸ்ப்பா..” என்று கூவிக்கூவி நான் அழைத்ததற்கு நட்புவட்டத்திடம் மன்னிப்பு கோறும் பெருந்தன்மையும் எங்களிடம் உண்டு என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
என்ன தான் இவ்ளோ பிக்கல் பிடுங்கல்கள் இருந்தாலும் நிறைய நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றது. அழகான படங்கள், சரிப்புக்கள், எக்ஸ்பிரஷன் காமெடிகள், உடல்நலத்தகவல்கள், வெஜிடபிள் கார்விங், கேக் பேக்கிங் டிஸைன்ஸ், வாய்ப்பிளக்க வைக்கும் விடியோக்கள் இதெல்லாம் என்னுடைய ஃபேவரைட்கள்.
சமீபத்தில் நான் பார்த்து வியந்த விடியோவில் “சிசேரியன் தானே?”ன்னு இளக்காரமாகச் சொல்லப்படும் ஆபரேஷன் எவ்வளவு கஷ்டமானது என்பதை விளக்கியது! அதற்கு தரப்பட்ட கேப்ஷன்” தொட்டதுக்கெல்லாம் அம்மாவை எடுத்தெறிஞ்சு பேசறோமே, பாருங்க எவ்ளோ கஷ்டப்பட்டு நம்மளை பெத்தெடுத்து இருக்காங்க”. 100% உண்மை!