Pages

Saturday, September 15, 2018

September days 2

வழக்கமாக எப்போதாவது அழைத்துப் போக வரும் cab டிரைவர்கள் நினைவில் இருப்பதில்லை. அதிகாலை நான்கு மணிக்கே ஃபோன் செய்து ஐந்து மணிக்கு வருவதாக சொல்லி, ஐந்தரைக்கோ ஐந்து நாற்பதுக்கோ வருவார்கள். நாம் கிளம்பி செருப்பெல்லாம் போட்டுக்கொண்டு கீழே காத்துக்கொண்டிருப்போம். சிலர் ஐந்து இருபது என்றுவிட்டு ஐந்து மணிக்கே ஐந்து பேர்களை அழைத்துக்கொண்டு வந்து காத்திருப்பார்கள். நாம் அப்போது தான் இந்த குர்த்தாவின் பேண்ட் எங்கே தொலைந்தது என்று தேடிக்கொண்டிருப்போம்.    அதே மிஸ்டு கால், அதே மத்திய கைலாஷில் திரும்பும் ரோலர் கோஸ்டர் வேகம். யார் என்னவென்று பெரிதாக ஒன்றும் நினைவிருக்காது அவர்களை.

இன்றும் அப்படித்தான். தினேஷ் என்று ட்ரூகாலர் சொல்லியது. சுமார் 24 வயதிருக்கலாம். கண்ட்ரோல்டு ட்ரைவிங் திறன். எவ்வளவு வேகமெடுத்தாலும் சரேலென்று அதிக ஜெர்க்கில்லாமல் பயணிகளையும் துன்புறுத்தாமல் நிறுத்திவிடுவார். தேவைக்கதிகமாக ஒரு வார்த்தை பேச்சு கிடையாது.

தி நகர் உஸ்மான் ரோடு சர்வீஸ் லேனில் நகைக்கடைகள் வழியாக போய் டெர்மினஸ் பின்னால் ஒரு பெண்ணை ஏற்றிக்கொள்ள வேண்டும்.

ஈரத்தலையை க்ளிப் போட்டுக்கொண்டு, பைக்குள் இயர் ஃபோனை தேடிக்கொண்டே வெளியில் பார்த்தேன்.

 இந்த சர்வீஸ் லேன் இருக்கிறதே.. மகா தொந்திரவு. பிக்கப்புகளும், வண்டிகளும், ஆட்டோக்களும் ஆக்கிரமித்துக்கொண்டு அடுத்தவர்களை கஷ்டப்படுத்துவதில் படு திறமை.  இது போறாதென்று பொதுமக்களும் இஷ்டத்துக்கு நடப்பார்கள். இரு சக்கர நாற்சக்கர வண்டிகள் அடுத்தடுத்த சந்துகளின்று சரேல் சரேனென்று திரும்பும். சம்பந்தமேயில்லாமல் கார்கள் நிற்கும். நான் ஓட்டினால் படு கோபமாக ஹார்ன் அடித்துக்கொண்டே தான் மிக அக்ரெஸிவாக போவேன்.

என்ன இது சர்வீஸ் லேனில்  தினேஷ் இவ்வளவு  மெதுவாக ஊர்ந்து செல்கிறாரே என்று பார்த்த போது தான் புரிந்தது.

முன்னால் ஒரு மீன் பாடி வண்டி முழு லோடுடன் ஒருவர் அழுத்த முடியாமல் அழுத்தி சென்று கொண்டிருக்கிறார். தினேஷ் ஹார்ன் அடிக்க கைகளை நகர்த்தி திடீரென்று பின்வாங்கி அமைதி காத்தார். மீன்பாடி மெதுவாக, மிக மெதுவாக சர்வீஸ் லேனிலிருந்து நகர்ந்து மெயின் ரோட்டில் கலந்ததும் சரேலென்று வேகமெடுத்து சில மைக்ரோ நொடிகளில் அடுத்த பாய்ண்ட்டில் நின்றது. ஆச்சர்யபட்டேன்.

கொட்டும் மழையில் கோயம்பேட்டில் சாலையைக் கடக்க நினைத்த அத்தனை பேரும் தொப்பலாக நனைந்திருப்பதை பார்த்தும் சர்ர் சர்ரென்று நிறுத்தாமல் போன வண்டிகளை நினைத்து பார்த்த போது தினேஷ் வித்தியாசமானவராகத்தான் தெரிந்தார்.

சட்டென்று தினேஷ் மேல் மரியாதை அதிகரித்து . நெகிழ்தேன்.

இனி தினேஷை மறக்க மாட்டேன். எல்லோரிடமும் கற்க நிறைய்ய இருக்கிறது. 

September days...1

தி நகர் டெர்மினஸ்ல நின்னுண்டா பஸ் வர்றதுக்குள்ள ஊர்ப்பட்ட வம்பு சேகரிக்கலாம். வேடிக்கை பார்க்கறதுங்கறது எங்க பஸ் பிக்கப் பாய்ண்டு பக்கத்துலேயே உக்காந்து இருக்கற பூக்காரம்மாவுக்கும் எனக்கும் பரம இஷ்டம்.

எனக்கென்ன கடுப்புன்னா பூக்காரம்மா நாள் பூரா அதான் செய்யறா. எனக்கு இப்போ பஸ்சு வந்துடுமே!

அந்த பூக்கார அம்மா வேற  படு அழகு. பெரீய்ய பொட்டு + பளீர்ன்னு பல்வரிசையுடன் கூடிய சிரிப்பு. காரே பூரேன்னு ட்ரெஸ் பண்ணிண்டு ஆபீஸ் போற எனக்கு தினோம் பூ விக்க ட்ரை பண்ணுவா. செல்லிங் ஸ்கில்ஸ் கத்துக்கலாம். "இன்னிக்கு ஆடிபூரம்மா பூ வாங்கிக்கம்மா. இன்னிக்கு கிர்த்தியைம்மா" இப்படி தினோம் எதாவது சொல்லுவா. நானும் "நான் போறது ஆபீஸுக்குங்க" ந்னு சொல்லி சிரிப்பேன். சினேகமா பார்த்து தலையாட்டுவா.

********

கமிங் பேக் டு தி நகர் டெர்மினஸ், சுவாரஸ்யத்துக்கு பஞ்சமேயில்லை. டெர்மினஸ்லேந்து பஸ்ஸை  நகர்த்தி உஸ்மான் ரோடுக்கு நடுவே கொண்டு வந்து  நிறுத்தி எங்கிருந்தோ காளகேயர்களை போல பஸ்ஸை பிடிக்க வெறியுடன்  ஓடி வரும் பயணிகளை அன்புடன் அக்காமடேட் செய்யும் டிரைவர்கள் இருக்கிறார்களே. .அவர்கள் எல்லோருக்கும் என் நமஸ்காரங்கள். அப்படி ஏத்திக்கும் போது, ரோட்டில் கடகடன்னு வண்டிகள் சேர்ந்துடும்.பின்னாடி முப்பது வண்டிகள் நின்னுண்டு இருந்தாலும் வயசான ஆண்களும் பெண்களும் இருபது பேருடன்  பாட்டி & தாத்தா  தம்பதி சமேதரா ஏறும் வரைக்கும் 9M டிரைவர் பொறுமையா வண்டியை நிப்பாட்டி, அவங்களை ஏத்திண்டு போவார். அவங்க ஏறும் வரை பின்னாடி காத்திருக்கும் வண்டிகள் எதுவும் ஹார்ன் அடிச்சு யாரும் கடுப்பேத்தாம இருந்தது பார்த்து எனக்கு மஹா ஆச்சர்யம். இன்னொண்ணு, ,நீ என்னமும் பண்ணு, பப்ளிக் சர்வீஸ் தான் எனக்கு முக்கியம், இவங்களை ஏத்திக்காம நான் கிளம்பறதா இல்லைங்கற அந்த டிரைவரின்  ஆட்டிட்யூடுக்கு நான் பரம ரசிகை.பின்னாடி நிக்கறவங்களுக்கு வேற ரக்ஷையில்லை. பஸ் கிளம்பினாத்தானே இவங்க் போக முடியும்? எல்லாருக்கும் எப்போவும் அவசரம்.

OMRல் பஸ் ஓட்டுறது ஒண்ணும் சாமானியமில்லை. சிக்னல் போட்ருக்கோ இல்லையோ மக்கள் பாட்டுக்க ஜாலியா ரோட்டை கிராஸ் பண்ணுவாங்க. யாருக்கும் அடித்தவங்களை பத்தின அக்கறையோ அவங்க அசெளகர்யத்தை பத்தின ஞாபகமோ இருக்கறதில்லை. பஸ்ஸுக்கு வழி விடாம மெதுவா மத்தியிலேயே டூ வீலர் போயிண்டு இருக்கும்.
இம்மீடியட் ரைட்ல திரும்ப வேண்டியவன் இடது பக்க கடைசி லேனிலிருந்து கண்டுக்காம வலது பக்கம் போவான். நல்ல புத்தியிருந்தா சில சமயம் இண்டிக்கேட்டர் போடுவான். அனேகமா கெட்ட புத்தி தான்.
ஐடி பெண்கள் எல்லாரும் நடு ரோட்டில் காதில் இயர் ஃபோன்ஸ் வைச்சுண்டு கேட் வாக்கிங் தான். எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்ன? அப்புறம் பெங்காலி அஸாமி நேப்பாளி மக்கள் குமார் சானுவை செல்கானில் அலற விட்டுண்டு சோகத்துடன் நடப்பாங்க.  பஸ்ஸில் முன்னாடி உக்காண்டா இவங்க பண்ற அராஜகத்தைல்லாம் பார்த்தா நமக்கு BP எகிறிடும். அதனால பின்னாடியே உக்காண்டுக்கறது.
இவங்க அத்தனை பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி, அமைதியின் திருவுருவாக வாட்ஸப் பார்க்காம பஸ் ஓட்டிண்டு போற அம்மஹானுபாவனின் திருவுள்ளாத்தை என்னன்னு சொல்லி பராட்டுறது?
*****

Related Posts with Thumbnails