Pages

Tuesday, July 9, 2013

ரங்குவின் ரொமான்ஸ்கள்

”ஏன்னா, நேக்கு ஒரு முழம் பூ வாங்கிக்கொடுக்கக்கூடாதோன்னு உங்க கேள்ஃப்ரெண்ட்ஸுக்கு தினமும் வாங்கித்தரேளே”ன்னு நான் கேட்டேன்னு வைச்சுக்கோங்களேன், உடனே இவர் சொல்லும் சால்ஜாப்பு இருக்கே, ”அவாள்ளாம் ஒரு கண்ணி பூ தான் வெச்சுக்கறா, நீ மூணு முழம் கேக்கறாய், நூறு ரூபாய் ஆறது.. அதுக்கு நான் ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக்கலாம். சில சமயம் பூ விலை ஜாஸ்த்தியானா, செம்பருத்திப்பூவை செடியில இருந்து பிச்சுக்கொடுத்தாலும் என் கேள்ஃப்ரெண்ட்ஸ் சந்தோஷிக்கறா.. நீ புலம்பறாய்” அப்படீங்கறார்!

தினமும் சாயந்திரம் ஃப்ரெஷ்ஷா குளிச்சுட்டு பட்டையெல்லாம் போட்டுண்டு 6 மணிக்கு ஆசமனீயம் பண்ணிட்டு, இவர் “ஒருத்தரை சந்திக்கணும்”ன்னு கூசாம என்கிட்டே பொய் சொல்லிட்டு போகும் இடம் - அயோத்தியா மண்டபம். அங்கே ஸ்ரீஅண்ணாவின் மஹாபாரத சொற்பொழிவு நடக்கறதில்லையா.. அதுக்கு போகலை.. அங்கே வரும் வயசான மாமிகளை சைட்டடிக்க போறார். வாசல்லேயே நிப்பார்.. ஆட்டோ, டூவீலரில் வரும் மாமிகளை கையை பிடிச்சுண்டு கூட்டிண்டு போய் உள்ளே ( ஏற்கனவே ஆத்துல இருந்து எடுத்துண்டு போன) ஜமுக்காளத்தில் உட்கார வெச்சுட்டு தண்ணி, வென்னியெல்லாம் கேட்டு உபச்சாரம் பண்ணிட்டு மறுபடியும் நெக்ஸ்டு மாமி வேட்டைக்கு ரெடி ஆயிடுவார். இதெல்லாம் போதாதுன்னு அவா முன்னாடி ஸ்ரீ அண்ணாவுக்கு வரும் டவுட்ஸ் க்ளேரிஃபை  பண்ற மாதிரி ஃபிலிம் காட்டுவார்! இந்த சின்ன பசங்க ரெண்டு கையையும் விட்டுட்டு சைக்கிள் ஓட்டுவாங்களே.. சேம் டைப்ஸ்.

அந்த மாமிகளை ரோட் க்ராஸ் பண்ணிவிடுவது, தீர்த்தம் வாங்கிண்டு வந்து அவா பொக்கை வாயில் (ர்ர்ர்ரொமாண்டிக்காக) ஊற்றுவதுமாக இவர் பண்ணும் ரவுஸு தாங்கலையாம்,  அந்த அயோத்தியா மண்டப ஆஃபீஸ்காரா சொல்லி சலிச்சுக்கறா. இவரை உள்ளே விடக்கூடாதுன்னு ஜெனரலா பேசிக்கறா.

சரி இந்தக்கால யூத்ஸ் மாதிரி அப்படி என்னெல்லாம் பண்ணி ரங்ஸ் மாமிகளை மடக்கறார்ன்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணறோமா?

1.யூத்ஸ் எல்லாம் தத்தம் ஃபிகர்களை மடக்க செய்யும் பேஸிக் டெக்னிக் இது
கேள்ஃப்ரெண்ட்: ”ஏதாவது இண்ட்ரெஸ்டிங்கா பேசேண்டா”
பாய்ஃப்ரெண்ட்: ”அனிதா”(அதான் கேள்ஃப்ரெண்டின் பெயர்)
கேள்ஃப்ரெண்ட்: ”ஹி ஹி ஹி” (இது போதாதா? அவள் விழுந்தாச்சே!) 

இப்போ ரங்ஸின் டெக்னிக் பார்க்கலாம்: 
ரங்ஸ்: மாமி ஜடபரதர் உபாக்யானத்தில் வர கதை தெரியுமோ உங்களுக்கு
மாமி: தெரியாதே.. (ஆச்சு அடுத்து ரங்ஸ் அந்த மாமியை இம்ப்ரெஸ் பண்ண ஒரு ஐஞ்சு நிமிஷம் போறுமே!) 
இந்த ஜடபரதர் உபாக்யானம், காஞ்சி வரதராஜர் வைபவம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் இப்படி கைவசம் நிறைய சரக்கு வெச்சுண்டு இருக்கார். தினசரி ஸ்ரீஅண்னாவின் ஆடியோ பிரவசனங்கள் எல்லாம் கேட்டு கிளைக்கதைகள் ஆயிரம் கைவசம் இருக்கே!ஆல் தி மாமீஸ் ஃப்ளாட்டல்லவோ? இதுவே நான் டவுட்டு கேட்டா மட்டும், அதான் டீவில வரதே.. பார்த்தாத்தானே? சதா ஃபேஸ்புக், ஜிடாக்! நீயெல்லாம் எங்கே உருப்படறதுக்கு அப்படீங்கறார்! க்கும்!

2. இப்போ யூத்ஸ் எல்லாம் தத்தம் கேள்ஃப்ரெண்ட்ஸுக்கு டெட்டி பேர், பூ பொக்கே, ஆண்டிக் ஜுவல்லரி,  ஊஸ்மணி, பாஸ்மணி எல்லாம் வாங்கிக்கொடுப்பாங்க இல்லியா.. அதே மாதிரி நம்ம ரங்ஸின் டெடிக்கேஷன் என்ன தெரியுமோ? சுகர் டெஸ்ட் கிட், BP Test கிட், பல்செட்டு, க்ளாஸ் டம்ளர்,  latest prescription two weeks drug sponsorship, அம்ருதாஞ்சனம், மூட்டுவலி வாலினி ஸ்ப்ரே, ஜெல் இப்படியா வாங்கி கொடுத்து மடக்கிடுவார்.நான், “நேக்கெதாவது வாங்கிண்டு வந்தேளான்னா”ன்னு ஆசையா கேட்டா பர்ஃபி ரன்பீர் மாதிரி காலி பாக்கெட்டை வெளியே எடுத்து காட்டுவார்! ஹும்..

3. பாய்ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அவா அவா கேள்ஃப்ரென்ட்ஸை பைக்ல கூட்டிண்டு போய் காலேஜ், ஆஃபீஸ்ல ட்ராப் பண்ணியூட்டு பிக் பண்ணுவாளே.. அதே மாதிரி தான் நம்ம ரங்ஸ் 6 மணிக்கெல்லாம் ஆல் மாமிஸ் பிக்கப்.. அவா அவா ஆத்துல இருந்து.. அப்புறம் நேரே அயோத்தியா மண்டபம் ட்ராப்.. ராத்திரி பிரவசனம் முடிஞ்சுட்டு மறுபடியும் அ.ம பிக்கப் பண்ணிட்டு, மாமிஸை ஆத்துல ட்ராப் பண்ணிடுவாருக்கும்.. இதுல வேல்யூ ஆடட் பேக்கேஜ் என்னன்னா, மாமிகள் நடுவுல் பூ வாங்கணும், காப்பிப்பொடி வாங்கணும், கீரை வாங்கணும்ன்னு சொன்னா, ரங்ஸ் பொறுமையா நிறுத்தி சமர்த்தா ஸ்பான்ஸர் பண்ணி வாங்கிக்கொடுபபார். இதுவே நான் கேட்டா, ஸ்கூட்டி எதுக்கு வெச்சுண்டு இருக்கே? எடுத்துண்டு போய்  வாங்கிக்க வேண்டியது தானேன்னு கலாட்டா பண்ணுவார்.. வெவ்வ்வ்வே!

4. யூத்ஸெல்லாம் கேள்ஃப்ரெண்டுகளின் ஆபத்பாந்தவனாக அனாதரக்ஷகனாக இருக்கா இல்லையா... அப்ளிக்கேஷன் ஃபார்ம் லாஸ்ட் டேட், அர்ஜெண்டா பேங்குக்குப் போய் டீ.டீ எடுக்கறது இந்த மாதிரியான விஷயங்களுக்கு ஹெல்ப் பண்ணுவா இல்லையா.. அதே மாதிரி ரங்ஸை மாமிஸ் கிரி ட்ரேடிங் போறதுக்கு, அபிஷேகப்பால் கோவில்ல கொண்டு குடுக்கறதுக்கு, செருப்பு டோக்கன் பத்திரப்படுத்துறதுக்கு,பிரசாதம் வாங்கிண்டு வந்து கொடுக்கறதுக்கு  இப்படியெல்லாம் யூஸ் பண்ணிப்பா. தாளிக்க எண்ணெய் வெச்சுட்டு “நா கடுகு காலி ஆயிடுத்துன்னா ப்ளீஸ் கொஞ்சம் வாங்கிண்டு வந்துடுறேளான்னு நான் கேட்டா, உடனே இதெல்லாம் முன்னாடியே பார்த்து ரீஃபில் பண்ணி வெச்சுக்கறதுக்கென்ன நோக்கு?”ம்பார். கிர்ர்ர்ர்.. ரொம்ப ஓவர் இது.

5.  யூத்ஸ் அவா கேள்ஃப்ரென்ட்ஸை எல்லாம் ஜாலியா பீச், பப், சினிமா, மால் இப்படி கூட்டிண்டு போவா இல்லையா.. அது மாதிரி இவர் சாரதா பீடம், சங்கர மடம், நவக்கிரக கோவில்ஸ், கும்பகோணம், காஞ்சி கோவில் டூவர் இப்படியா கூட்டிண்டு போவார். என் பர்த்டேன்னா.. கோவிலுக்கு போலாமான்னு கேட்டாக்கூட அவசரமா டைரியை புரட்டி ஷெட்யூல் செக் பண்ணிட்டு , இன்னிக்கி சுலோ மாமியை கூட்டிண்டு மைலாப்பூர் கபாலி கோவில் வரை போயாகணும்ம்மா.. நீ தனியா போயிட்டு வந்துடேங்கறார்..இதெல்லாம் அந்த பகவானுக்கே அடுக்காது. 

இதே ரேஞ்சுல போச்சுன்னா பேசாம இவரையும் ஒரு நல்ல ஓல்டேஜ் ஹோமா பார்த்து சேர்த்து விட்டுடுவேன் நான்! முடியலை!

Sunday, July 7, 2013

வீட்டை மாத்திப்பார்

முன்னாடியெல்லாம் வீட்டைக்கட்டிப்பார் கல்யாணம் பண்ணிப்பார்ன்னு சொல்லுவாங்க.. இப்போ ஜஸ்டு ஒரு சின்ன சேஞ்ச்.. வீட்டை மாத்திப்பார், கல்யாணத்துக்கு போயிப்பார்ன்னு மாத்திக்கலாம். அவ்ளோ கஷ்டமா ஆயிடுத்து வீடு மாத்தறது! 

நான் எப்போவுமே வீடெல்லாம் மாறினா 6 மாசம் எடுத்துப்பேன்.. மெதுவா தான் அரேஞ்ச் பண்ணுவேன்.. நெக்ஸ்டு 6 மாசம் பாக்கிங் பண்ண சரியா இருக்குமே! 

வீடு பார்த்து மாற ரெடியானப்புறமும் நான் ஃபேஸ்புக்லேயும் ரங்ஸ் ஃபோன்கால்ஸிலேயும்(ஆஃபீஸாம்) உட்கார்ந்திருக்க, எங்கம்மா ஓடோடி வந்து கிடுகிடுன்னு குனிஞ்சு நிமிர்ந்து பாக்கிங் எல்லாம் பார்த்துண்டாங்க. அது வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் படு பிஸி! நாங்க கூப்பிட வண்டிக்காரங்க வந்து சேர சுமார் 3 மணி நேரம் தான் லேட்டு. அதுலேயும் ரெண்டு பேர் கத்திண்டே இருந்தாங்க.. "டேய் தூக்கு தூக்கு வுட்ராதே" இப்படி.. ஒருத்தனும் உருப்படியா எதையும் கேரி பண்ணலை.. நாங்க கைல எடுத்துண்டு போக வெச்சிருந்த காப்பிப் பொடி, சர்க்கரை, டம்பளர், வால் பாத்திரம் இதெல்லாம் மொத்தத்துல கலந்து எங்கியோ கொண்டு போயிட்டாங்க! நாளை காலை அரோஹரா தான்னு நினைச்சுண்டோம். நல்ல வேளை புது வீட்டுச்சாவி என்கிட்டே பத்திரமா இருந்தது. தப்பிச்சோம். 

முதல் ரவுண்டு போயிட்டு நான் முன்னின்று(க்கும், நின்னுட்டாலும்) எதை எங்கே வைக்கணும்ன்னு சொல்லிட்டு ரெண்டாவது ரவுண்டு அடிக்கலாம்னு பேச்சு.. நான் மேலே வீட்டுல கோஆர்டினேட் பண்ண, ரங்ஸ் கீழே சாமான் இறக்கறதை சூப்பர்வைஸ் பண்ண போயிட்டார். நடுவுல ஒரு வாட்டி ஏதோ காலி கூடையை எடுத்துண்டு அதுவும் லிஃப்டுல வந்துட்டு போனார்.

இந்த கூலிபெருஸ் (பின்னே எல்லாமே வயசான முசுடூஸ்) எல்லாம் லிஃப்டுல இருந்து வாசல் படியில் பெட்டிகளை எல்லாம் முக்காவாசி காலால் தள்ளிட்டு ஓடிடுத்து. நான் தான் உள்ளே உக்காந்து எல்லாத்தையும் பார்த்துண்டு இருந்தேனாக்கும்.. அப்புறம் அவா நெக்ஸ்ட் டைம் வந்தப்போ சத்தம் போட்டேனா.. அவா அதை ஜஸ்டு படிக்கந்தண்டை வெச்சு குடுத்துட்டு போனா. என்ன எஃபீஷியன்ஸி பாருங்கோளேன்?

கிச்சன் ஐட்டம்ஸ் வெச்ச பெட்டி பில்டிங் ஸ்ட்ராங் தான்னாலும் பேஸ்மெண்ட் கொஞ்ச்ச்சம் வீக்கு.. லிஃப்டில் இருந்து அந்த பெட்டியை முரட்டுத்தனமா எடுத்து வெச்சப்போ பெட்டி பாட்டம் மட்டும் பேதி ஆகும் மனிதன் போல பிச்சுண்டுடுடுத்து! அது பேன்னு ஆகி ஸ்பூன், குக்கர் வெயிட், மிக்ஸீ மூடியின் மேல் இருக்கும் குட்டி மூடி இத்யாதிகள்  எல்லாமே சிதறி கீழே விழுந்துடுத்து.. இந்த அழகுல நாங்க சரியா பேக் பண்ணலையாம் ஒரு முசுடு பயங்கரமா சத்தம் போட்டுத்து..சரின்னு எல்லாத்தையும் வாரி எடுத்துண்டு வந்து உள்ளே போட்டு அரேஞ் பண்ண ஆரம்பிச்சேன்.. அடுத்த லாட் வந்தட்டு ரங்ஸ் என்னை கூட்டிண்டு போவார்ன்னு வெயிட் பண்ணிண்டு இருந்தேனா.. லோடும் வரலை, ரங்குவும் காணோம்!!! 

என்னை மட்டும் புது வீட்டில் விட்டுட்டு ரங்ஸும் வண்டியும் பழைய வீட்டுக்கு போயாச்சு.. ஃபோனும் நான் எடுத்துக்கலையா.. என்ன பண்றதுன்னு ஒரே கோபமா வந்தது.. சுமார் ஒரு மணி நேரம் ஆயிடுத்து ரங்ஸ் என்னை மீட்டுண்டு போக.. அந்த சமயத்தை நான் எவ்ளோ எஃபக்டிவா யூஸ் பண்ணினேன் தெரியுமோ? கோலப்பொடி இருந்ததா, அதை வெச்சு புதுப் புது டிஸைனெல்லாம் போட்டு பார்த்து அழிச்சுண்டு இருந்தேன். அப்புறம்மும் கொஞ்சம் டைம் இருந்ததா, இன்னேரம் ஃபேஸ்புக்ல யார் யார் இருப்பாங்கன்னு யோசிச்சுண்டு இருந்தேன்.(இப்பென்னாச்சுன்னு இப்படி எல்லாரும் என்னை திட்டுறீங்க?)

9 மணிக்கு ப்ரேக் போன மூவர்ஸ் அண்டு பாக்கர்ஸ் அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியலை.. ஒருத்தன் கீழே வாட்ச்மேன் பக்கத்துல தாச்சுண்டு தூங்கிட்டானாம். ஒருத்தன் கீழாத்து 500 ரூபாய் செருப்பைத்தூக்கிண்டு இருட்டுல எஸ்கேப் ஆயிட்டானாம்! இந்த அழகுல இவாளுக்கு ஆளுக்கு 500 ரூபாய் கூலியாம்! 12.30க்கு மேல ரெண்டு பேர் மட்டும் வந்து லிமிட்டெடா பேசி (டாஸ்மாக் உபயம்) ஃப்ரிஜ், வாஷிங் மெஷின் இத்யாதிகளை இறக்கிட்டு ஓட்டம் பிடிச்சாங்க. இல்லியோ பின்னே எல்லாத்தையும் லாஃப்டுல ஏத்தச்சொல்லிடுவோம்னு பயமான பயம் !

ஒரு வழியா அப்படி இப்படீன்னு எல்லாத்தையும் எடுத்துண்டு புது வீட்டுக்கு வந்துட்டோம். இந்த புது வீட்டை க்ளீன் பண்ணி குடுத்தாங்களாம்.. கால் ஃபுல்லா கருப்பா இருந்தது! 3 இன்ச்சுக்கு தூசு படர்ந்து இருந்தது. அதுல பாருங்க கிச்சன்ல மட்டும் அப்படி ஒரு எண்ணெய் பிசுக்கு! சன்ஃப்ளவர் ஆயில் 30 கோட்டிங் போட்டு இருந்தாப்புல கையெல்லாம் டைல்ஸ்ல தொட்டா அப்படியே பச்ச்ச்சக்! அவ்ளோ பிசுக்கு. முதல்லே அதை க்ளீன் பண்ணிடுறேன்னு பார்த்தா சிஃப்ஃபையும் காணோம் ஸ்டீல் ஸ்க்ரப்பரை காணோம். தேடித்தேடி பார்த்து ஒரு பிளாஸ்டிக் ஸ்கரப்பர் தான் கிடைச்சது.. முதல்லே கிடைச்சது லைஸால் தான்.. நல்ல ஃப்ளோர் க்ளீனர் இதை வெச்சு ட்ரை பண்ணி பார்ப்போம்ன்னு லைசால் விட்டு டைல்ஸை துடைச்சுப் பார்த்தேன்.. பிசுக்கு என்னை பார்த்து க்கிக்க்கீன்னு சிரிச்சது. நெக்ஸ்டு, மிஸ்டர் மஸில், என் மிக நம்பகமான லிக்விட் சர்ஃபேஸ் க்ளீனர். பிசுக்கு  என்னை மஹாக்கேவலமாக காலில் போட்டு மிதித்து துப்பியது! மிஸ்டர் மஸிலும் ஃபெயிலா.. இதுக்கெல்லாம் நான் ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேனே.. வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாச்சே! சரின்னு கார்த்தால பால் காய்ச்சறதுக்கு முன்னாடி போட்ட கோலப்பொடியை வெச்சு கொஞ்சம் வாஷிங் டிடர்ஜெட்டையும் சேர்த்து  இருக்கற எல்லா சக்தியையும் போட்டு தேய் தேய்ன்னு தேய்ச்சேனா.. கொஞ்சூண்டு விட்டுக்கொடுத்தது.. 30 கோட்டிங்காச்சே அவ்ளோ ஈஸியா போகுமா? ரொம்ப  முயற்சி பண்ணி தோத்துட்டேன். ஒரு 1 மணி நேரம் கழிச்சு வெளியே வந்தேன்.. வீரத்திலகம் வெச்சுண்டு.. சுவத்தோரமா இருந்த பெட்டியில என்ன இருக்குன்னு திறந்து பார்த்தா, மஞ்சள் சிஃப்! அட நாதாரி உன்னைத்தானே இவ்ளோ நேரம் தேடினேன், பக்கத்துலேயே கள்ளூளிமங்கனாட்டம் ஸ்டீல் ஸ்க்ரப்! கொஞ்சம் முன்னாடி கிடைச்சிருக்ககூடாதோ? 

கொஞ்சம் கொஞ்சமா இன்ஸ்டால்மெண்ட்ல வேலை பண்ணிக்கலாம்ன்னு எடுக்கறது வைக்கறதுமா இருந்தேன். ஒரு அரை மணி வேலை செய்வேன், ஒரு 4 மணி நேரம் ஃபேஸ்புக், ஸ்கைப் இதெல்லாம் பார்ப்பேன்.. ஒரு 2 மணி நேரம் தூக்கம்(அசதி இருக்குமே) :) 

ரங்க்ஸின் காண்ட்ரிப்யூஷன் பத்தி சொல்லியே ஆகணும். என்ன சுறுசுறுப்பு.. ஃபோன் பேசறதும், வெளியில் போறதும், கான்ஃபரன்ஸ் கால்ஸில் இருப்பதும். மெயில் அனுப்புவதும். . ஆஹா.. அப்புடி ஒரு ஹெல்ப் வீடு அரேஞ்ச் பண்ண.. ஏதோ இன்னிக்கி வீடு இப்படி ஜொலிக்கிதுன்னா அது அவர் போட்ட பிச்சை தான். 

 இடம் காலியான உடனே 3 இன்ச் தூசியை க்ளீனா பெருக்கிட்டேன்.. கையோட ஒரு மாப்பை வெச்சுண்டு சுத்த்த்தமா துடைக்கவும் துடைச்சேனா.. வீடு பள பள.. மேடம் ஏஸி இன்ஸ்டால் பண்ண வந்திருக்கோம்ன்னு சொன்னாங்க. 2 மணி நேரத்துக்கெல்லாம் ஏசி அப் & ரன்னிங் ஆயிடுத்து. அவா போனதுக்கப்புறம் பார்த்தா பெட்ரூம் ஃபுல்லா குப்பை போட்டு வெச்சிருக்காங்க! அடக்கஷ்டமே.. மறுபடியும் பெருக்குதல் துடைத்தல்.

நாங்க இங்கே வந்தவுடன் படு பயங்கர லோ வால்டேஜ்! லிஃப்ட் வேலை செய்யலை. அட அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு நினைச்சுண்டேன். நெக்ஸ்டு, தண்ணிக்கஷ்டம்! ஒரு நாள் பூரா தண்ணி இருக்கலை! சென்னையில மழையில்லையோன்னோன்னு நினைச்சுண்டேன். ஒரு நாள் சமயல் இல்லை.. வெளியில போய் சாப்பிட்டோம். நெக்ஸ்ட் டே, என்னமோ லைட் எரியும், பல்ப் எரியும் ஆனா ப்ளக் பாயிண்ட் ஒர்க் பண்ணாது. ஸோ, நெக்ஸ்ட் டேயும் சமைக்கலை. இண்டக்‌ஷன் ரைஸ் குக்கர் இதெல்லாம் இல்லாட்டி என்னால சமைக்க முடியாதே. பயந்து போய் எலக்ட்ரீஷியனை கூப்பிட்டா அவன் வந்த் ஃப்யூஸ் பார்த்துட்டு சரி பண்ணிட்டு போயிட்டான். வாஷிங் மெஷின் ஓவர்லோடு ஆகுதுன்னு சொன்னான். சரி இப்போ என்ன பண்ணலாம்ன்னு கேட்டப்போ, இனி அப்படி ஆகாதுன்னு கூசாம (பொய்) சொல்லிட்டு போயிட்டான்! நான் இண்டக்‌ஷன் ஆன் பண்ணினேனோ இல்லியோ, அது ப்யூம்னு போயிடுத்து மறுபடியும்!


ஆக இனி வேண்டாதவர்களை சபிக்கணும், விரோதிகளுக்கு சூன்யம் வெக்கணும்னு நினைச்சா, பேசாம வீட்டை ஷிஃப்ட் பண்ணச்சொல்லி சாபம் விட்ருங்க! எல்லாம் சரியாயிடும்.. ஆ.. அதுக்குள்ளே 4 மணி நேரம் ஆச்சா? நான் போய் ஒரு அரை மணி பீரோல கொஞ்சம் துணி அடுக்கிட்டு வரேன். டாட்டா!:)





Related Posts with Thumbnails