Pages

Thursday, June 5, 2014

டிஸ்டன்ஸ் டாட்டா மஹாத்மியம்

டிஸ்டன்ஸ் டாட்டா
முந்தியெல்லாம் யார் நம்மாத்துக்கு வந்தாலும் நாம வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புவோம். கொஞ்சம் ஒரு படி மேலே போய் முக்கு திரும்பும் வரையும் நின்னு டாட்டா காட்டுவோம். இதுக்கு பேர் தான் டிஸ்டன்ஸ் டாட்டா. இந்த வார்த்தையை காயின் பண்ணினது முரளி மாமா தான். பளிச்சுன்னு நினைவுல வெச்சுண்டது சாட்சாத் நானே தான்.
போடியில் கொல்லைப்புறக் கதவைத் திறந்து வெச்சுண்டு வயித்தைக் குமட்டும் சாக்கடை நாத்தத்தையும் மீறி வீரபாண்டித் திருவிளா கொட்டு மேளம் பார்ப்போம். மெயின் ரோடு தெரியும். சிவாஜி எம்ஜார் எல்லாம் வருவது தெரியும்். எண்பதுகளில் எலக்‌ஷன் பிரச்சாரத்துக்கு வந்த ஜிவாஜியின் பிங்க்க்க் உள்ளங்கை தூரக்கே பார்த்து அசந்தோமென்றால் அது எங்காத்து கொல்லைப்புற அமைப்பின் மாயமன்றோ?
அஞ்சு லாந்தர் ஜங்ஷனில் பஸ் நிற்கும். யாராவது பஸ் ஸ்டாண்டுக்கு போறான்னா அவா நிச்சியம் டிரைவருக்கு பின்னாடி எங்கியாவது உக்காண்டு நாங்க கொல்லையில கப்புல நிப்போம்ன்னு முன்னமே தெரிஞ்சு வெச்சுண்டு டாட்டா காட்டிண்டே போவா. இதை டிஸ்டன்ஸ் டாட்டாவின் எக்ஸ்டெண்டட் வெர்ஷன்னு வேணா சொல்லிக்கலாம்.
ஃப்ளாட் வந்தாலும் பால்கனியில் இருந்து டாட்டா சொல்லுவது ஒரு வழக்கமாக தொண்ணூறுகளில் இருந்தது.
போடியில் யாருக்காவது அக்கிரஹாரத்து டிஸ்டன்ஸ் டாட்டா காட்டியாச்சுன்னா, கரெக்டா பதினைஞ்சாவது நிமிஷம் கொல்லைக்கதவு திறக்கப்படும். ”அவா இப்போ மதுர பஸ்ஸுல போவா“ன்னு ஒரு கூக்குரல் கேட்கும்.. எல்லாரும் திமுதிமுவென்று ரயில்பொட்டி வீடு பூரா ஓடுவோம். கொல்லைப்புற நாற்றத்தில் நிற்போம். டாட்டா காட்டுவோம். கதவு மூடப்படும். இது ஒரு சம்பிரதாயமாகவே நாங்கள் போடியை விட்டு வரும்வரை கடைப்பிடிக்கப்பட்டது.
ஒரு வாட்டி திருச்சியில் மை அத்தை வீட்டுக்கு ஹாலிடேக்கு போயிருந்தோம். அத்தை கடைக்குட்டி திவ்யாவின் பொம்மை வாட்சு எங்க ஏர்பேக்(அப்பெல்லாம் அது ஒண்ணு எல்லா ஊருக்கும் எங்க கூட வரும்) சைடு ஜிப்பில் இருந்தது. எங்களுக்குத்தான் தெரியுமே.. வெளியூர் பஸ் எக்ஸிட் பாயிண்ட் விசுவனாதபுரம் சுப்பையா ஸ்கூல் ஸ்டாப்பில், நிச்சியம் டாட்டா காட்ட திவ்யாவும் குமார் மாமாவும் நிப்பான்னு. அதே மாதிரி அவா நின்னா.. மை நைனா பொம்மை வாட்சை தூக்கிப் போட்டார். லபக்ன்னு காட்ச் பிடிச்சுட்டார் குமார் மாமா தற்செயலா. வாட்ச் கிடைச்சதாக ஜெயா அத்தை ப்ளூ இன்லண்ட் கவரில் எழுதினா.
நாங்க எந்தூருக்கு போனாலும் பஸ்டாண்டில் ஏத்தி விட்டு, டாட்டா காட்ட நம்ம சுற்றமும் நட்பும் வராமல் இருந்ததேயில்லை. ஏதோ ஒரு பாதுகாப்பான ஃபீலிங் இருக்கும். நிறைஞ்சு வழியும் அன்பு அவங்க வாங்கித்தரும் பிஸ்கட்டிலும் பஸ்டாண்டு கலரிலும் சேர்ந்து சுவை கூட்டுறது மாதிரி தோணும்.
முந்தா நாள் அத்தை செண்ட்ரல் போனார். 18K பஸ்ஸில் போய் பையை வைச்சுட்டு சீட்டு பார்த்து உட்கார வெச்சுட்டு பஸ் கிளம்பட்டும் என்று நின்றேன். “நீ போ.. வெயில் வெயில்”ன்னு சொல்லிண்டே இருந்தாளேன்னு நான் கிளம்பி பஸ் போற ரூட்ல எங்க ஃப்ளாட் வாசல்ல நின்னுண்டேன் (நிழலா பார்த்து தான்) மதியானம் ஒரு வேலை இருந்ததுனால செண்ட்ரல் போகலை. மாமாவும் அத்தையுடன் போறார்.நீ வேண்டாம்ன்னு சொல்லிட்டா. 15 நிமிஷம் ஆச்சு. வெயில். நெத்திலேந்து வேர்வை வெள்ளமாக பொங்கி மூக்கு நுனியில் சொட்டியது. விடுவோமா நாங்க? மெதுவா பஸ் திரும்பித்தோ இல்லியோ.. இடம் மாறி உக்காந்திருந்த அத்தையும் மாமாவும் என்னை எதிர்ப்பார்த்துண்டு வேகமா கையாட்டினாங்க!
எவ்வளோ sophistication இருந்தாலும் நாமெல்லாம் அடிப்படையில கிராமத்துக் காரங்க - போடிக்காரைங்க தான்! மாறவே முடியாதுன்னேன்! இன்னிக்கும் யாராவது சென்னைக்காரங்க வீட்டில் சொல்லிண்டு கிளம்பும்போது, RVS அண்ணா மாதிரி எழுந்து வாசல் வரைக்கும் வர யத்தனிச்சா அவா நிச்சியம் கிராமத்துக்காரான்னு புரிஞ்சுண்டுடலாம்.

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

டிஸ்டன்ஸ் டாட்டா -- டைட்டில் சூப்பர்...

வெங்கட் நாகராஜ் said...

:)))))))

Related Posts with Thumbnails