மனம் ஒரு குரங்கு வேணும் வேணும்ன்னு கேட்டு கோடானுகோடி ஈமெயில்கள் குவிந்ததினால், (ஹீ ஹீ) இந்த பகுதி இடம் பெறுகிறது என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
போனவாரம் இங்கு நல்ல மழை. அபுதாபியில் மழை வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. ஆனால் சுதா மன்னி ஃபோனில் பேசியபோது, ஷார்ஜாவில் பயங்கர வெள்ளம் என்றார். இப்போது மெதுவாக வெயில்காலம் ஆரம்பித்து விட்டது. இப்போ இங்கு ஒரே பொடிக்காற்று வீசிக்கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி வானிலையில் வீட்டை பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டியது தான். எவ்வளவுதான் கதவு ஜன்னல்களை மூடினாலும் மிக நுண்ணிய மணல் துகள்கள் வீட்டுக்குள் புகுந்து விடும். சதா சர்வ காலமும் மாப்பும் விளக்குமாறும் கையுமாகத்தான் இருக்க வேண்டி இருக்கும்.
நேற்று ரொம்ப நாளைக்கப்புறம் முரூரில் இருக்கும் கார்ரெஃபோர் போய் இருந்தோம். எனக்கென்னமோ கார்ரெஃபோர் அவ்வளவாக பிடிப்பதில்லை. அவ்வப்போது ஒரு சேஞ்சுக்கு வெவ்வேறு கடைகளுக்கு போவது. என்ன தான் ரிசெஷன் இருந்தாலும் கூட்டத்துக்கு குறைவு இருப்பதில்லை. எல்லோருக்கும் பல்க் பயிங்க்(bulk buying) எப்படி சாத்தியப்படுகிறது என்று ஒவ்வொரு முறை இந்த கடைக்கு போகும்போதும் வியக்காமல் இருப்பதில்லை! ஆளுயர ஷாம்பூவை வாங்கிக்கொண்டு போனால் எனக்கெல்லாம் 2 வருடம் வரும்.(இல்லையோ பின்னே, அறுபதடி கூந்தலாச்சே!)அடுத்த வாரமே அடுத்த பாட்டில் வாங்க வந்து விடுகிறார்கள்! இந்த ஷாம்பூக்களை வைத்து தலைமுடி மட்டுமல்லாமல் தினமும் வீடு துடைத்து பாத்திரம் தேய்த்தாலும் சுகமாக 2 மாதம் வருமே! எப்படித்தான் ட்ராலி ட்ராலியாக வாங்குகிறார்களோ தெரியவில்லை!
போன மாதம் துவரம் பருப்பு விலை கன்னாபின்னா என்று ஏறி விட்டது! முதலில் 6 திர்ஹாமாக அடக்கமாக இருந்தது. இப்பொது சமீபமாக தடாலென்று 9 திர்ஹாம் ஆகி விட்டது. இதே துவரம் பருப்பு மற்ற கடைகளில் 9 என்றால் கார்ரெஃபோரில் 9.90!!! டூம்ச்!
காய்கறிகள் எல்லாம் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள். அதிலும் நம்மூர் அயிட்டங்கள் எல்லாம் அவ்வளவாக கிடைக்காது. மொத்தத்தில ஐரோப்பியர்கள் தான் அதிகம் இந்த கடையை விரும்புகிறார்கள். ஏஸர் கம்பியூட்டர்ஸில் வேலை பார்த்த போது, ஒரு கஸ்டமர், இந்தக்கடையில் எலக்ட்ரானிக்ஸெல்லாம் பகல் கொள்ளை என்று கூறினார்.சேல்ஸில் கேட்ட பொழுது, மார்ஜின் அவர்கள் அப்படி வைக்கிறார்கள் என்றனர். அதனால் இங்கு வர ஒரு மோட்டிவேஷன் இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் வேடிக்கை பார்த்து பொழுது போக மிக நல்ல இடமாக காட்சி அளித்தது.
சில மாதங்களாக காயின் ட்ராலி சிஸ்டம் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தி டெர்மினல் என்ற படத்தில் டாம் ஹான்க்ஸ் பண்ணியது போல சில நம்மூர்க்காரர்கள் அந்த ஒரு திராம் காயினுக்காக எங்கேயோ விடப்பட்ட ட்ராலிகளை தள்ளிக்கொண்டு வந்து ஸ்டாண்டில் போட்டு ஒரு திராம் எடுத்துக்கொள்கிரார்கள். நம் வீட்டுப்பக்கத்தில் இருக்கும் பட்டாணிகள் இதைவிட கெட்டிக்காரர்கள். எதற்கு கொண்டு போய் கடையில் விட வேண்டும்? என்று பேசாமல் கம்பியைப்போட்டு நிமிண்டி, அந்த ஒரு திராம் காயினை சாமர்த்தியமாக அபேஸ் செய்து விடுகிறார்கள்.
போன வாரம் ஈ மசாலாவில் இரவு 8 மணி படத்துக்கு காத்திருந்து பார்த்தபோது ஜிலேபியை பிழிந்து போட்டிருந்தார்கள். துள்ளிக்குதித்துக்கொண்டு ஹையா என்று பார்க்க உட்கார்ந்தேன். சூப்பர் குட் வழங்கும் என்று போட்டவுடன் எனக்கு பொறி தட்டி, சானலை மாற்றி இருந்தால் நான் கெட்டிக்காரி! அதான் இல்லையே... அதன் பிறகு எப்படியோ ஒரு மாதிரி குத்துமதிப்பாக தெலுங்கு எழுத்துக்களை படித்தும் விட்டேன். என்னமோ கோரிண்டாக்கு என்றிருந்தது.. ஆஹா.. கோதாவரி மாதிரி ‘கொம்ப்ப தீஸீ’ சேகர் கம்முல படமா இருக்குமோன்னு ஆசையா உட்கார்ந்தா, நம்ம டாக்குடர் ராஜசேகர் (ஓவரா)நடிச்சிருந்தார். வழக்கம்போல அண்ணா தங்கை பாசம். வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் ஏகப்பட்ட மேக்கப்புடன் மெகாசீரியல் டைப்பில் இருந்தார்கள். என்னால முடியல. முதல் 15 நிமிடத்துக்குள் ஏகப்பட்ட லாலாலா கோரஸ்கள், கை காலை (புல்லரித்து) பிறாண்டி, ரத்தம் கொட்ட வைத்த செண்டிமெண்டு காட்சிகள்! விக்ரமன் எஸ் ஏ ராஜ்குமார் கூட்டணியா இருக்குமோ என்னமோ.. யப்பா.. கடுப்ஸ் ஆஃப் இண்டியா. இவங்கல்லாம் எப்போ திருந்துவாங்க?
அப்படியே சானலை மாத்தி சோனிக்கு போனோம். தூமகைன் என்று டைட்டில் பாட்டு ஓடிக்கொண்டு இருந்தது. இவர் தன் லாப்டாப்பை முறைத்துப்பார்த்துக்கொண்டே கிருபானந்த வாரியார் மாதிரி குரலை செருமிக்கொண்டு துமகைனுன்னா என்ன? மறுபடியும் மறுபடியும் எம்பெருமான் முருகனுக்கு தூபம் காட்டணும்ன்னு அர்த்தம். தூம் டூன்னா என்ன? தூமகேது ரெண்டுன்னு அர்த்தம். எம்பெருமானுக்கு வள்ளி தெய்வானைன்னு ரெண்டு தூமகேது இல்லையா? வயிற்றைப்பிடித்துக்கொண்டு ஒரே சிரிப்பு எனக்கு. அதெப்படி இன்ஸ்டண்டா இப்படி எல்லம் இவருக்கு தோணுதோ? சூப்பர்!





