பெயரைப்பார்த்ததும் என் கணவரைப்பற்றிய பதிவு என்று நினைத்தவர்களை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். இவரது லீலைகள் இதே பெயரில் விரைவில் வரும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்று இரவு சோனியில் லட்சத்து பத்தாவது முறையாக லகான் போட்டார்கள். வெள்ளைக்காரி மேல் பொறாமை தாங்கமுடியாமல் கிரேஸி சிங் வாயசைக்கும் ஆஷா போன்ஸ்லே பாடும் ’மதுபன் மே கன்ஹையா கிஸி கோபி ஸே மிலே’ என்ற பாட்டு ஃபுல் சவுண்டில் கேட்டு பார்த்து ரசித்தோம்.'ஙொய் ஙொய்' என்று தூக்ககலக்கத்தில் புலம்பத்தொடங்கி இருந்த இவர், இந்த பாட்டு வந்த உடனே கண்கள் பிரகாசமடைந்து, வந்து உட்கார்ந்து விட்டார். ஒரு வேளை கிரேஸி சிங் மோஹமாக இருக்கலாம். வாய்கிட்டக்க ஒரு சொம்பு வெச்சுண்டு இருந்திருக்கலாம். அநியாய ஜொள்!
நானும் உட்கார்ந்து ரசித்து பார்த்தேன். கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு விருந்தாக இந்த பாடல் இருந்தது என்றால் அது மிகையில்லை. அழகான நடனம், நொடிக்கு 100 தரம் மாறுகின்ற கிரேஸியின் முக பாவம், ஆமிரின் சூட்டிகை, கோபிகைகளின் காஸ்ட்யூம், லைட்டிங் எஃபக்டு, பாட்டு, ஆஷாவின் கமகங்கள், இசை, கொரியோகிராஃபி என்று எல்லாமே மிகச்சிறப்பாக அமைந்து இருந்தது.
”கோபியான் தாரே ஹை சாந்த் ஹை ராதா” என்ற வரி ஏனோ மீண்டும் மீண்டும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதாவது கோபியர் எல்லாம் நட்சத்திரங்கள் என்றால் ராதா சந்திரனைப் போன்றவள். கோபியர்களின் சிறப்பை வேளுக்குடியாரின் ஒரு பிரபாஷணத்தில் கேட்டதுண்டு. நெகிழ்ச்சியான இந்த கதையை பகிரத்தான் இந்த பதிவு.
உத்தவன் என்ற கண்ணனின் தோழன், கோபியரின் மகத்துவம் பற்றி கண்ணனிடம் கேட்டாராம். இதை விளக்கும் நோக்கோடு கண்ணன் தனக்கு தீராத வயிற்றுவலி என்று சொன்னாராம். துடித்து போன உத்தவன், பரமாத்மாவிடம், நான் என்ன செய்ய வேண்டும், நீயே சொல் ஜகத்பதி என்று கேட்டாராம். உடனே கண்ணன், ”உத்தவா, உன் பாத தூலிகை (காலடி மண்) எடுத்து பாலில் கலந்து, நான் அருந்த வேண்டும் அப்போது தான் இந்த வயிற்றுவலி தீரும், கொஞ்சமே கொஞ்சம் உன் பாத தூலிகை தருகிறாயா”என்று ஸ்ரீ ஹரி கேட்டாராம். அதிர்ச்சியில், உத்தவன் மறுத்து விட்டாராம். அதெப்படி தன் காலடி மண்ணை எடுத்து பெருமான் உட்கொள்வதா என்று அவருக்கு ஒரே குழப்பமாம். ”இதுதான் பக்தனின் மகத்துவம். இப்போது கோபியரின் அன்பின் மகத்துவம் பார்க்கிராயா?” என்று அவர்களிடம் அழைத்துப்போனாராம்.கோபியரிடம் கண்ணன் கேட்ட மாத்திரத்தில் மூட்டை மூட்டையாக காலடி மண் கிடைத்ததாம்! உத்தவன் அவர்களிடம் கேட்டாராம், ”உங்களுக்கு அறிவில்லையா? பெருமான் உங்கள் பாத தூலிகை உட்கொள்ளக்கேட்கிறார்.இப்படி மூட்டை மூட்டையாக தருகிறீர்களே? நீங்கள் எல்லோரும் மஹா பாவம் செய்கிறீர்கள்.” என்றாராம். கொஞ்சம் கூட கவலையே படாமல் கோபியர்கள் சொன்னார்களாம், ”எங்களுக்கு பாவம் வந்து சேர்வதைப்பற்றிய கவலை இல்லை, கண்ணனின் வயிற்று வலி தீர்ந்தால் அதுவே போதும், எங்களுக்கு வேறெதுவும் வேண்டாம்” என்றார்களாம். இதல்லவோ உண்மையான மெய் சிலிர்க்கும் அன்பு, தாய்மை! கோபியரின் சிறப்பை உத்தவன் உணர எம்பெருமான் கண்ணன் எடுத்துக்காட்டிய விதம் தான் எத்தனை மதுரம்.
கோபிகா ஜீவனஸ் ஸ்மரணம் கோவிந்தா கோவிந்தா!