சில சுவையான மனிதர்கள்.
எங்கள் சொந்த ஊர் மதுரை மாவட்டம் போடிநாயக்கனூர். நான் அங்கு அதிகம் இல்லாவிட்டாலும் அம்மாவும் மாமாக்களும், செல்லவ்வாவும்,GK தாத்தாவும் சரோஜி அத்தையும், சுப்பி அவ்வாவும் அங்கே தான் பல ஆண்டுகள் வாழ்ந்தார்கள் .
எனக்கு 7 - 8 வயதிருக்கும்போது நாங்கள் அப்பாவுடன் விஜயவாடா சென்று விட்டோம். போடியின் தொடர்புகள் அறுந்து போயினும், அங்கு வாழ்ந்த சுவையான மனிதர்களை மட்டும் மறக்க முடியாது.
இப்போது நான் எழுதும் மனிதர்களை நான் பார்த்ததோ பேசியதோ இல்லை. எங்கள் அப்பா வழி பாட்டி சுப்பி அவ்வாவிற்கு உவமை சொல்லாமல் பேசத்தெரியாது. வரிக்கு வரி அவனை போல இவனைப்போல என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படி அவர் மிக அதிகமாக உவமை கூறியது இங்கே கூறப்பட்டுள்ள இவர்களைத்தான்.
குட்டியம்மா
இவர் ஒரு மூதாட்டி. வறுமையுடன் முதுமை எய்திய குட்டியம்மா மிகவும் சுவாரஸ்யமான பாட்டி. கையில் காசு இருக்காது. ஆனால் சினிமா மோகம் அதிகம். அந்தக்காலத்தில் போடி பொன்னு சினிமாவில் எந்தப்படம் எத்தனை வாட்டி போட்டாலும் குட்டியம்மா பாட்டி சென்று விடுவாளாம். காசு தான் இருக்காதே எப்படி படம் பார்த்து இருப்பாள்? குட்டியம்மா பாட்டியிடம் ஒரு தங்கச்சங்கிலி இருந்தது. அதில் ஒவ்வொரு கண்ணியாக எடுத்து விற்று வந்தாள். ஒவ்வொரு முறையும் விற்ற பணத்தில் காப்பிப்பொடி வாங்குவாள் டிகாஷன் போட்டு காபி குடித்து விட்டு ஒரு சினிமாவும் பார்த்து விடுவாளாம் . இப்படியே தன்னிடம் உள்ள மொத்த சங்கிலியும் விற்று சினிமாக்கள் பார்த்தே தீர்த்தாளாம்.ஒரே படத்தை பலமுறை பார்த்தும், பற்பல படங்களை பலமுறை பார்த்தும் ஒரு சினிமா encyclopedia ஆகிவிட்டாள், இந்த பாட்டி. இந்த காரணத்தினால் அந்த பாட்டிக்கு எந்த படத்தில், எந்த சீனில், என்ன டயலாக், என்ன பாட்டு என்ற information எல்லாம் finger tips இல் இருக்கும் . இதனால் போடி அக்கிரகாரத்தில் யாருக்கு என்ன சந்தேகம் என்றாலும் இவளிடம் தான் போவார்களாம் . பாட்டி bulls eye போல பதில் சொல்லுவாளம் .
இந்த பாட்டியின் புகழ் காரணமாக சினிமா பார்க்கும் அதிக ஆர்வலர்களுக்கு குட்டியம்மா என்ற நாமகரணம் ஆயிற்று . குட்டியம்மா மாதிரி எப்போ பாரு சினிமா பாக்கறான் , குட்டியம்மா மாதிரி எந்த படம் எப்போ ரிலீஸ் னு ,கரக்டா சொல்ரா என்றெல்லாம் எங்கள் குடும்பத்தில் பேசுவது சர்வ சாதாரணம் .
இதே ரேஞ்சில் மித மிஞ்சிய குட்டியாம்மாத்தனம் உடையவர்களானால் அவர்களை ஒரு படி மேலே போயி குட்டிக்கு அடுத்த adjective மினியம்மா என்றும், அதைவிட அதிகமான சினிமா பைத்தியங்களுக்கு micromma என்றும் நானும் என் தங்கைமணியும் வழங்கி வந்தோம். அடுத்த லெவல் என்ன தங்கைமணி? 'நாநோ'ம்மா ('Nano'ma) வா?
பாலாமணி
போடியில் தமிழ்பண்டிதர் வீட்டு பையன் இவர். வாத்தியார் புள்ளை மக்கு என்ற பழமொழியை பொய்யாக்காமல் தன் பணியை செவ்வனே ஆற்றிய சிகாமணி. இவருக்கு சுத்தமாக படிப்பில் ஆர்வமே இல்லை. இருந்தாலும் பெற்றோர் தொல்லை தாங்காமல் பல இம்சைகளுக்கு ஆளானார். படிக்காமல் எப்படி நேரத்தை கடத்துவது என்ற டாபிக்கில் இவர் PHD வாங்கி இருக்கிறார் அந்த அளவுக்கு இவருடைய நொண்டிச்சாக்குகள் பிரபலம். "பாலாமணி, படிடா" என்று சொன்னால் உடனே பேனாவை ரிப்பேர் பண்ண ஆரம்பித்து விடுவாராம் . அதும் ink பேனா . nib, கழுத்து, உடம்பு எல்லாவற்றையும் தனித்தனியா அவிழ்த்து, கழுவி, ink fill பண்ணி, nib மாற்றி எழுதுகிறதா, என்று test பண்ணி பொழுதைக்கடத்துவதில் வல்லவராம் . படி படி என்று தொல்லை பண்ணினால் அவர் அம்மாவிடம் சென்று "அம்மா நான் வேணும்னா கடைக்கு போயிட்டு வரட்டுமா. மளிகை எதாவது வாங்கணுமாம்மா?" என்று கேட்பாராம். இவர் "படிக்காமல் டபாயிப்பதற்கு 1008 வழிகள்" என்று ஒரு புஸ்தகம் போட்டு இருந்தால் எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று நாமும் அறிந்து வாழ்க்கையில் படிப்பிற்கு டிமிக்கி கொடுத்து இருக்கலாம். எங்கள் குடும்பத்தில் இவரை தீவிரமாக பின்பற்றியது நான் மட்டுமே. பாலாஜி கூட நெக்ஸ்ட் தான். அந்த அளவுக்கு சிறப்புடன் டிமிக்கி கொடுத்து வந்தேன். பாலாமணியாவது பள்ளிக்கு சென்று கொண்டு படிக்காமல் இருந்தார். நானோ காலேஜ் போறதுக்கே 1008 சாக்கு சொல்லுவேன். சைகிள்ளை எடுக்கும்போதே முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு அம்மாவிடம் கேட்பேன். அம்மா , are you sure? நான் போய்த்தான் ஆகணுமா ? னு. அடிங்.. னு அம்மா கல்ல எடுத்துண்டு அடிக்க வர்ற வரைக்கும் சைக்கிளில் ஏற மாட்டேன். அதுக்கப்றம் தான் ஒரே அழுதது அழுத்திண்டு காலேஜ் போவேன். .