மூன்றாம் பிறை மாதிரி சில சமயங்களில் நம்மை அறியாமல் வாழ்கை மிகவும் அழகாகி விடும். ஹய்யா.. நம்ம வாழ்க்கைதான இது நு நம்மளை நாமே கிள்ளி பாக்கறதுக்குள்ள... திரும்பி பழைய படி.. ஊத்தி மூடிக்கும். ஹூம்... அதான் வாழ்க்கையோட நியதி.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் Dell International Services, பெங்களூரில் வேலை கிடைத்த பொழுது , எப்படியோ இந்த சென்னையை விட்டு போனால் போதும் என்று இருந்தது . கொஞ்சம் எதிர்பார்புகளோடு பெரீய கம்பெனி, புதிய இடம், கண்டிப்பாக Hostel லில் தங்க மாட்டேன் அம்மாவோ அப்பாவோ யாரவது வந்து போய்க்கொண்டு இருக்கவேண்டும் என்ற condition நின் பேரில் போனேன். கனி, விஜய் போன்ற நண்பர்கள் வீடு பார்க்க உதவி பண்ணினார்கள். கடைசியில் கேம்பிரிட்ஜ் லே அவுட்டில் ஒரே ஒரு ஸ்டுடியோ penthouse வாடகைக்கு எடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் கால் நீட்டிக்கொண்டு படுத்துக்கொள்ளலாம்
அதுவும் பாலாஜி உயரத்துக்கு சரிப்பட வில்லை.(அவனால் திருப்திகரமாக படுத்துக்கொண்டு WWF பார்க்க முடியவில்லை என்று புலம்பினான்) அவ்வளவு தான் இடம் ஹால் இல. நான் மட்டும் நுழையக்கூடிய ரயில் வண்டித்தனமான சமையலறை . தண்ணீர் வராத சிங்க. அவ்வளவு தான். ஒரு டிவி வாங்கிக்கொண்டேன். தினம்தோறும் ஷிப்ட் முடிந்ததும் அதிகாலை நேரம் சூடான கோதாஸ் காபி குடித்துக்கொண்டே கார்ட்டூன் பார்ப்பேன்.
வேலையில் பயிற்சி தொடங்கியது. அன்றே எனக்கு அந்த பெண் அறிமுகமானாள். பெயர் ஸ்வப்னா என்றாள் . சிரித்த முகம், நல்ல கலகலப்பான சுபாவம், முக்கியமாக மற்றவர்களுக்காக வருத்தப்படும் தன்மை இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்து போக, அவள் எனக்கு பெங்களூரில் பெஸ்ட் பிரண்டு ஆனாள்
நான் மட்டும் தனியே வசித்து வந்த அழகிய குட்டி வீடு, என் பில்ட்டர் காபி, மாடியில் விசாலமான இடம், பூந்தோட்டம், ஓட்டின் மேல் உட்காரும் இடம், இதெல்லாம் முதல் முறை வந்த ஸ்வப்னாவிற்கு பிடித்து போக, ஒரு weekend என்னுடன் வந்து தங்குவதாக கூறினாள். அதுக்கென்ன, தாராளமா வான்னு சொன்னேன். நைட் ஷிப்டு முடித்து விட்டு எனக்கு தூக்கம் கண்ணை சுழற்றும். இது விடாமல் டிவி பார்க்கும். கெக்கே பிக்கே என்று எதாவது பேசிக்கொண்டே இருக்கும். நன்றாக பாடுவாள் கூட. ராத்திரி எல்லாம் மாடியில் வீட்டு வாசலில் பாய் போட்டுக்கொண்டு பாட்டு பாடுவோம். அடுத்த நாள் சாயி கோவிலுக்கு போனோம். நடந்து நடந்து உள்சூர் டு இந்திரா நகர் போனோம். நிறைய்ய்ய பேசினோம். கடுகு தாளித்து காய் கறி போட்டு நான் தயாரித்த noodles ஐ அம்மணி "yummeee" என்று குதூகலித்தாள் . அல்சூர் முழுவதும் சுற்றி திரிந்தோம். சிவாஜி நகரில் கணேஷ் ஜூஸ் கடைக்கு சென்று ஜூஸ் குடித்தோம். இப்படி இரண்டு நாளும் வெளியில் ஊர் சுற்றி, பேசி, சிரித்து, பாடி எனக்கு இவள் தான் எனக்கு சரியான கம்பனி என்று தோன்றி விட்டது. வழக்கமாக வார இறுதியில் பகலில் தூங்கி விடுவேன். சாயந்திரம் டிவி போட்டுக்கொண்டு எதாவது பாடாவதி சமயல் செய்து நானே என்னை திட்டிக்கொண்டே தின்பேன்.ஆறு மணிக்கு மேல் அங்கே உள்ள ஒரு அம்மன் கோவிலுக்கு போய் விடுவேன். அங்கே அடிக்கடி செல்லுமாறு அம்மா சொல்லி இருந்தார். அம்மாவிடம் போன் பேசுவேன். துணி துவைப்பேன். இப்படி என் வார இறுதி கழியும். இந்த பெண் வந்ததால் இது ஒன்றுமே செய்யவில்லை. ஊர் சுற்றிக்கொண்டு இருந்தேன். திங்கள் மாலை மீண்டும் ஷிப்ட். என்னை தூங்க விடு தாயீ என்று குப்புற படுத்து விட்டேன். இவள் டிவி யை அலறவிட்டு கொண்டு உட்கார்ந்து இருந்தாள்.ஒரு பதினொரு மணிக்கு நான் எழுப்பப்பட்டேன். "நிம்மி, lets go to Forum in Kormangla " என்றாள். எனக்கு தலை சுற்றிவிட்டது. முடியவே முடியாது என்று மறுத்து விட்டேன். ஆனால் அவள் விடுவதாக இல்லையே. மூக்கால் அழுதுகொண்டே ஆட்டோ பிடித்து Forum என்ற அந்த மாலுக்குள் நுழைந்தோம். முக்கால்வாசி கடைகளில் விண்டோ ஷாப்பிங் செய்தோம். முதன் முறையாக KFC என்ற கடைக்குள் போனேன் . (அபச்சாரம் அபச்சாரம்.) ஸ்வப்னா சொன்னாள், "இங்கத்த Chocolate fudge icecream ரொம்ப நல்லா இருக்கும். try பண்ணி பாரேன். "இப்படி ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொன்றை புதியதாக எனக்கு அறிமுகப்படுத்தினாள். வாழ்கை மிகவும் சுவையானது என்பதை எனக்கு தெளிவு படுத்தினாள். நான் வீடு திரும்பிய போது மணி நான்கு. எட்டு மணிக்கு ஷிப்ட். மாற்று உடை எடுத்து வராததால் அவள் கிளம்பி விட்டாள். நான் சற்று தூங்கலாம் என்று படுத்தேன். சுத்தமாக தூக்கம் போய் விட்டது. ஒரே Exciting ஆக இருந்தது. இனி இந்த பெண் எல்லா வார இறுதியிலும் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.இரண்டரை நாள் முழுதும் ஒரே பாட்டு, கூத்து, கும்மாளம், ஊர்சுற்றல் தான். ஊரில் இந்த மாதிரி எல்லாம் பண்ண முடியாது. என்ன, என் வழக்கப்படி தூங்க முடியவில்லை. பரவாயில்லை. நாளை காலை தூங்கிக்கலாமே. அதன் பிறகு மொத்தம் ஒரு பத்து பதினைந்து நாட்கள் அவள் என்னுடன் என் வீட்டில் வந்து இருந்தாள். ஆபீசில் கூப்பிட்டு சொல்லி விடுவேன். ஒரு செட் டிரஸ் என் வீட்டில் வைத்து விடு என்று.
ஸ்வப்னா என்றால் அன்பு என்று ஆகிப்போனது. அவள் அம்மா அப்பா எல்லோரும் இங்கே ஷார்ஜாவில் இருந்தார்கள்.
அப்படி தான் ஒரு முறை அவளை போனில் அழைக்க முற்பட்டேன் .என்ன ஆயிற்றோ தெரியாது திடீரென்று இவள் மொபைல் சுவிட்ச் ஆப். 4-5 ஈ மெயில்கள் அனுப்பிப்பார்த்தேன் ம்ஹூம். யோசனையுடன் நகர்ந்தேன். அவள் டீமில் விசாரித்த பொழுது அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக தெரிந்தது. Jaundice என்றார்கள், என்ன ஆஸ்பத்திரி, என்று யாருக்கும் தெரியவில்லை. ச்சே, என்ன ஒரு மடத்தனம் பண்ணி விட்டோம். வேறு எந்த தகவலும் அவளிடம் வாங்கிவைத்துக்கொள்ள வில்லையே என்று நினைத்து வருந்தினேன். ஒரு மாதம் கழித்து மீண்டும் அவள் டீமில் சென்று விசாரித்த போது அவள் பெற்றோருடன் ஷார்ஜா சென்று விட்டாள் என்று கூறி விட்டனர். என் திருமணம் நிச்சயமாயிற்று. அதை காண மிக மிக ஆவலுடன் இருந்தவர்களில் முதன்மையானவள் ஸ்வப்னா. அந்த அளவிற்கு எனக்கு பிரார்த்தித்தாள். அநேகமாக எல்லா தொடர்பும் அறுந்துவிட்ட நிலையில் நான் மட்டும் இங்கே துபாய் ஷார்ஜா வில் மால்களில் போகும்போது அவளை ஆர்வத்துடன் தேடினேன். அவள் இங்கே தான் இருக்க வேண்டும் என்று தீவிரமாக நம்பினேன்.
போன வாரம் இங்கே நாஜ்தா தெருவில் நாங்கள் வாக்கிங் போய் இருந்தோம். ஒரு பெண் நயிட்டீ அணிந்து கொண்டு குழந்தையை கையில் பிடித்த படியே வந்து கொண்டு இருந்தாள். ஜாடையில் இவள் அவளோ என்று யோசித்து நின்றேன். என்னைப்பார்த்தால் அந்த பெண் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. சட்.. இல்லை இவள் இல்லை என்று வருத்தத்துடன் நகர்ந்தேன்.
முந்தாநாள் சனியன்று வயலில் தீவிரமாக உழுது விதை நட்டு, மரங்களில் பழங்கள் அறுவடை செய்து, மாட்டுக்கு பருத்திக்கொட்டை பிள்நாக்கு வைத்து, இந்திரனை மழை பெய்யுமாறு கோரிக்கொண்டு, வெளியில் வந்த பொழுது, face book home இருப்பதை பார்த்தேன். search friends என்று இருந்தது. சும்மா ஸ்வப்னா வர்கீஸ் என்று அடித்தேன். அடியாத்தீ... .இந்த புள்ளை இங்கிட்டு தான்யா இருக்கு என்று அலறினேன். படங்களுடன் ஸ்வப்னா சிரித்துக்கொண்டு இருந்தாள். சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தேன். ஐந்தாண்டுகளாக நான் தேடிக்கொண்டு இருக்கும் தோழி கிடைத்து விட்டாள். ஹய்யா என்று அவளுக்கு என் தொலைபேசி எண்ணுடன் ஒரு personal message அனுப்பினேன். சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஒரு போன் கால் வந்தது. அவள் தான். அவளும் கத்த நானும் கத்த, ரெண்டு பேர் காதும் கிழிந்தது. காடு மேடு எல்லாம் உன்னை தேடினேன் நிம்மி என்றாள் அந்த துரோகி. முதலில் பரஸ்பர அர்ச்சனை செய்துகொண்டோம்.என் தங்கை முன்பு இங்கே இருந்ததால் இங்கே உள்ள லோக்கல் தமிழ் ரேடியோ சக்தி எப் எம் மிற்கு போன் செய்து என் தங்கையின் பெயர் சொல்லி தேடி இருக்கிறாள். உன்னை ரொம்ம்ம்ப மிஸ் பண்ணினேன் என்றாள். அதன் பிறகு அவள் இங்கே துபாயில் வேலை செய்வதாகவும், இங்கே அஜ்மானில் வீடு இருப்பதாகவும் கூறினாள். கண்டிப்பாக அபுதாபி வருவதாக கூறி இருக்கிறாள். மீண்டும் அந்த கனாக்காலம் வருமோ என்னமோ தெரியாது. நான் மட்டும் கொஞ்சம் தூங்கி ரெடி ஆயிக்கறேன். ஸ்வப்னா வந்தா தூங்கவே விட மாட்டா சனியன்.