Pages

Showing posts with label words. Show all posts
Showing posts with label words. Show all posts

Tuesday, April 20, 2010

நூறாவது பதிவு-பாலக்காட்டுத்தமிழ் ஒரு அறிமுகம்

நானும் ப்ளாக் எழுத ஆரம்பிச்சு அம்பிகாபதி மாதிரி 99 கண்ணி எழுதியாச்சு. இது நூறாவது கண்ணி. வில்லன் நம்பியார், அந்த படத்துல சிவாஜி கிட்டே போங்காட்டம் ஆடி, “கடவுள் வாழ்த்து கணக்குல வராதுன்னு சொல்லுவாரே,  அதே மாதிரி ’ஹலோ வேர்ல்டு’ன்னு ஜாவா புரோக்ராம் அவுட்புட் மாதிரி நான் முதன் முதலா எழுதின போஸ்டை ”செல்லாது செல்லாது ”ன்னு நாட்டாமை மாதிரி சவுண்டு விடுறவங்க போடுற பின்னூட்டத்தை பிரசுரிக்க மாட்டேனாக்கும். சரி இப்போ பதிவுக்கு போகலாம். பாலக்காட்டுத்தமிழ்.

இந்த பதிவு யாரையும் புண்படுத்த எழுதியது அல்ல. என் பார்வையில் இந்த மொழியைப்பற்றிய கருத்து அவ்வளவே

எல்லோரை மாதிரி நானும் பாலக்காட்டு தமிழை முதன் முறையா ரசிச்சது மைக்கல் மதன காமராஜன்ல தான். அப்புறம் நியூகாலனில குடியிருந்த போது ஒரு பாலக்காட்டு மாமி வீட்டுல தான் குடியிருந்தோம். அப்போ கொஞ்சம் அந்த மொழி பரிச்சயம். மத்தபடி ஆராய்ச்சி எல்லாம் பண்ணினதில்லை!

கல்யாணத்துக்கு அப்புறம் தான் இந்த மொழியின் ’சிறப்பு’ கொஞ்சம் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சது. எதைச் சொன்னாலும் புரியாம நான் ரெண்டு ரெண்டு வாட்டி கேட்டப்போ ரங்க்ஸ் நொந்து போயிட்டார். இருந்தாலும் பொறுமையா இந்த மொழியை எனக்கு விளக்கினார். இப்போ பாருங்க, பாலக்காட்டு மாமியா ஆயிட்டேன்! இதுக்கு முழு க்ரெடிட்டும் ரங்குவையே சாரும்! கீதா மாமி சொல்வது போல.. தாங்கீஸ்ஸ்ஸ்ஸ் ரங்கு டார்லிங்!

முதலில் எதை எடுப்பது எதை விடுப்பதுன்னு தெரிய மாட்டேங்கிறது! அவ்வளவு விஷயங்கள்!

1.கல்யாணமான புதிதில் நான் கவனிச்சது, சொல்லின் இடையில் வரும் ச வை இவர்கள் ஷ என்கிறார்கள். நாம் பேசறா என்பதை பேஸறா என்றும் அசடு என்பதை அஸடு என்றும் சொல்கிறோமே, இவர்கள் ’பேஷரா, அஷடு’ என்கிறார்கள்.

2.ஆரம்பத்தில் வரும் ச வை நாம் ஸ என்போம். இவர்கள் அழுத்தி ச்ச்ச்ச என்கிறார்கள்.நாம்: ஸொல்லி இருக்கா, இவர்கள் : ச்சொல்லி இருக்கா,

3.தக்குடு மாதிரி ஆட்களுக்கு தெரியாத ற் போன்ற எழுத்துக்களை இவர்கள் கமலஹாசனை விட அழுத்தியே உபயோகிக்கிறார்கள். கறி என்று சொல்லும்போது நாபிக்கமலத்தில் இருந்து ஆக்ரோஷமாக வரும் இ சத்தம் நாக்கை பல்லில் அ|ளவுக்கதிகமாக் உரசி பலத்த மரத்தை ரம்பத்தால் அறுக்கும் அளவுக்கு இடற வேண்டும். அப்போத்தான் ற்ற்ற் சரியாக வரும். இப்போ மறுபடியும் சொல்லிப்பாருங்க.. சரியா வரும். கறி. இந்த சொல்லின் பயன்பாடு என்னவென்றால் வதக்கி,  வேகவைத்து, அரைத்து, கொதித்து, இப்படி எந்த ப்ரொசீஜரில் செய்த காயாக இருந்தாலும் அது கறி என்றே அழைக்கப்படும். குர்மா, கூட்டு, கிரேவி இப்படி எது செஞ்சாலும் அது கறியே ஆகும்!

4. எந்த சொல் சொன்னாலும் அத்துடன் ’ஆக்கும்’ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். சொல்வதற்கு ஒன்றுமே இல்லாவிட்டாலும் சும்மாங்காச்சுக்கும் ’அதாக்கும்’ என்று சொல்ல வேண்டும். அப்போ தான் ஒரு வரி முடிவடையும். மை.ம.கா படத்தில் அப்பாவிக்கமல் ”அதுல போட்றுக்குமாக்கும் எனவும்”, நாகேஷ் சொல்வாரே,”ஆமா, எல்லாத்துக்கும் ஒரு ஆக்கும் சேர்த்துக்கோ..” என்பாரே.. 100/100 உண்மை!

5. இந்த மொழியின் சிறப்பம்சமே வாயில் காற்றை நிரப்பிக்கொண்டு பேசவேண்டும். அதாவது வார்த்தைகளை அழுத்தாமல் பூப்போல ஃப்ரீயாக பேசுதல். நன்றாக கவனித்தீர்கள் என்றால், மை.ம.கா படத்தில் கமல் வாயை திறந்தபடியே தான் படம் முழுவதும் பேசுவார். வாய், மூடவே மூடாது. ”அவா தாஞ்சொன்னா, வரணுங்கிட்டியா” போன்ற சொற்றொடர்களில் ம் என்ற ஒற்றெழுத்து திரிந்து ஞ், ங் ஆகி வருவது முறையாகும்.

6.அடுத்ததாக கேட்டியா, கேட்டேளா இல்லாமல் எந்த ஒரு வாக்கியமும் நிறைவடையாது. எல்லா வரிகளும் கேட்டியா அ கேட்டேளா என்ற சொல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். யேட்டையா என்பது தவறான உச்சரிப்பாகும். ட்டியா என்பதே மிகத்துல்லியமான உச்சரிப்பு அ பேச்சுவழக்கு என்பது எனது நான்காண்டு  கால ஆப்ஸர்வேஷனின் ரிசல்டு

7.இந்த பாலக்காட்டு பாஷையில் ஒரு க்ளோஸ் எண்டெட் கேள்வி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ”நாளைக்கு நேரத்தே ஏந்திருக்கணுமா?” அதாவது விடிகாலையில் எழுந்திருக்கணுமான்னு கேட்டால் இவர் ‘ ஏ....ய்’ என்பார். எனக்கு எரிச்சலாக வரும். ஒண்ணு ஆமாம்ன்னு சொல்லட்டும். இல்லே, இல்லைன்னு சொல்லட்டும். அதென்ன ஏ...ய்ன்னு ஒரு பதில்? அப்புறம் தான் தெரிஞ்சது ஏய்ன்னா இல்லைன்னு அர்த்தமாம்! தெலுங்குல ”அபே, அபெபே” மாதிரி மலையாளத்துல ”ஏ...ய்”ன்னு சொல்றது இல்லைன்னு பொருள் படுமாம்! நீங்க பாட்டுக்கு தப்பு தப்பா ஏய்ன்னு சுருக்கிச்சொல்லிட்டு அவாளுக்கு புரியலைன்னு சொன்னா கொம்பேனி பொறுப்பேற்க முடியாது!

8. சில வார்த்தைகள் தமிழிலும் இருக்காது, மலையாளத்திலும் இருக்காது, சமஸ்க்ருதத்துலேயும் இருக்காதாம். ஆனா பாலக்காட்டு தமிழ்ல இருக்குமாம்! உ:அம்படத்தான். தமிழில் அவ்வளவுதான் என்று பொருள்படும்.

9. சில தமிழ்ச்சொற்கள் வேறு அர்த்தத்தில் வழங்கி வருகின்றன. உ: பனி- நமக்கு பனின்னா ஐஸ்கட்டி. இங்கே இவர்களுக்கு பனின்னா ஜூரமாம். மடின்னு நாம் ஆச்சரமா குளிச்சு தனியாக்காயப்போட்ட துணிகளை உடுத்திண்டு சுவாமி கார்யங்கள் செய்வதை சொல்லுவோம்.இங்கே மடின்னா சோம்பேறித்தனம். நான் மடியா இருந்து நிவேத்யம் பண்ணினேன்னு சொன்னா இவங்களுக்கு தப்பர்த்தமாயிடுமே.

10. வரலை, போகலை, இல்லை இந்த வார்த்தயெல்லாம் சாதாரணத்தமிழில் வரல, போகல, இல்ல என்று நாம் கூறுகிறோமே, இவர்கள் வரலைஐஐ, போகலைஐஐ , இல்லைஐஐ என்று அதிகப்படி கர்வேச்சர் கொடுப்பார்கள். அப்படி ரவுண்டாக முடிக்காவிடில் அது பாலக்காட்டு மொழி அல்ல என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது!

 11.ஒண்ணு என்று நாம் பேச்சு வழக்கில் சொல்ற ஒன்றுங்கற வார்த்தையை இவங்க எல்லாம் ஒந்நுன்னு தான் சொல்லுவாங்க. அதுவும் ந் சொல்லும்போது இரண்டு பல்வரிசைக்கும் நடுவில் நாக்கை மாட்ட வைத்து, மூக்கை சுருக்கி, முக்கினால் தான் அந்த சவுண்டு எஃபெக்டு வரும். எங்கே இப்போ சொல்லுங்க பார்க்கலாம். ஒந்நு.. சபாஷ்.. குட் கோயிங் கேட்டேளா?
Related Posts with Thumbnails