Pages

Wednesday, April 24, 2019

பிக் சேவிங்ஸ் டே

லாங் வீக்கெண்டா போன வாரம்? செம்ம போர். ஒரு பெரீய்ய்ய்ய துணிக்கடைக்கு போய் சுத்திப் பார்த்துண்டு இருந்தேன். எதாவது கோணங்கித்தனம் பண்ணாட்டா தூக்கமே வராதே!

முதல்ல ப்ரிண்டட் லெக்கிங்ஸ்...ஆஹா இதே தான் அம்மு வைச்சுண்ட்ருக்கா.
மைண்ட் வாய்ஸ் : ஸோ? நீயும் வாங்கணுமா? எதுக்கு?
இல்லே, அவ தான் வாங்கசொன்னா.
மைண்ட் வாய்ஸ்: ஆஹ்ஹாங்
அதை மதிக்காம அந்த வெள்ளை ப்ரிண்டட் லெக்கிங்ஸை எடுத்து தோள்ள போட்டுண்டேன்

அப்புறம் அந்த காட்டன் ஸ்கர்ட்...
மைண்ட் வாய்ஸ்: உன்கிட்ட தான் ரெண்டு ஸ்கர்ட் இருக்கே? அதெல்லாம் எங்கே?
ஆமால்ல? காணோம்.. ஷெல்ஃப்ல இருக்கும். ஒழிச்சா கண்டிப்பா கிடைக்கும்.
மைண்ட் வாய்ஸ்: அப்போ இன்னைக்கு வீட்டுக்கு போய் ஷெல்ஃபை சுத்தப்படுத்து. இதை கீழே வை.
ஆஹ்ஹான்.. அதெல்லாம் முடியாது. இந்த லெமென் யெல்லோ கிடைக்கவே கிடைக்காது
அடுத்த க்ஷணம், அந்த லெமன் யெல்லோ ஸ்கர்ட் என் தோளில் மாலையாக தொங்கியது

ஆஹ்ஹா.. இந்த மாதிரி பேட்சு வொர்க் பண்ணினாப்புல என்கிட்ட ஒரு சல்வார் இல்லை.
மைண்ட் வாய்ஸ்: எடுத்துக்கப்போறே இல்லியா?
ஸைஸ் தெரியலை. ட்ரயல் பார்ப்பேன், சரியார்ந்தா கண்டிப்பா வாங்குவேன். 799/-.. டேக்கவே ப்ரைஸ்.. கிடைக்கவே கிடைக்காது

ஆஹா.. ரேயான் நைட் ஃப்ராக்..
மைண்ட் வாய்ஸ்: முண்டம், இதெல்லாம் போட்டுனா உன் உடம்புக்கு எரியும்
பரால்ல.. எனக்கு பிடிச்சிருக்கு. சூப்பர் ப்ளாக் ப்ரிண்ட். கிடைக்கவே கிடைக்காது

ஆஹ்ஹா ஆஹ்ஹா.. ரெண்டு ஷார்ட் குர்தா 500 ரூபாயா.. எப்பிடி கட்டுப்படி ஆகறது? என்னுடைய வெள்ளை குர்த்தா மஞ்சளாகி பத்து பைஞ்சு மாசமாச்சு. இதை வாங்கியே தீருவேன். அந்த கனகாம்பரக்கலரும் வெள்ளையும் என்னுது. எனக்கே எனக்கு.. ஆமா சைஸ்? எதுக்கும் ரெண்டு சைஸ் எடுத்துக்கறேன். போட்டுப்பார்த்துட்டு வாங்கலாமே?

இப்படியா ஒவ்வொண்ணா எடுத்துண்டே வந்தேன். மொத்தம் 13 உருப்படி ஆயிடுத்து. என்னமோ காவடி எடுக்கறாப்புல தோள் பூரா துணி மாலை. சேல்ஸ் கேள் வினோதமாய் என்னை பார்த்தா. கடையில் ஷாப்பிங் பண்ணீண்டு இருந்த சில கஸ்டமர்ஸ் இவ ஏதோ வண்ணாத்தி போல்ருக்குன்னு நினைச்சிருக்கலாம்.

டூ யூ வாண்ட் எ bag மேம் என்று கேட்ட சேல்ஸ் கேளை மதிக்காமல் ட்ரயல் ரூமை நோக்கி றெக்கையை கட்டிண்டு பறந்தேன்.

”எப்படியும் ஐயாயிரம் ரூபாய் எள்! துணி வாங்காதே.. சொன்னாக்கேளு, வேண்டாம். சமர்த்தோல்லியோ.. பீரோல வைக்கவே இடமில்லை”

இந்த மைண்ட்வாய்ஸை ஒழிச்சுக்கட்ட என்ன தான் வழின்னே தெரியலையே?

பெண்கள் ட்ரயல் ரூம் வாசல்லே ஒரு 56 லேடீஸ் கையில் பைஞ்சு உருப்படிகளை வைச்சுண்டு தேவுடு காத்துண்டு இருந்தாங்க. விசேஷம். மணி இரவு 8:45. இந்த கூட்டம் ட்ரயல் பார்த்து வெளில வர எப்படியும் மூணு நாளாகும்.

ஏமாற்றத்தின் உச்சகட்டத்தில் அழுதுண்டே மாலை `சாத்தினாள்`ன்னு பாடிண்டே தோளின் மாலைகளை எடுத்து அங்கிருந்த ஏதோ ஒரு ஹாங்கரில் போட்டேன்.
அந்த (போட்டுக்கவே போட்டுக்காத) பலாசோ பேண்ட், லெமன் யெல்லோ, கனகாம்பரம், வெள்ளை, கருப்பு இத்யாதியை களைஞ்சுட்டேன். அப்பறம் இன்னும் மூணு நாலு அத்தியாவசிய ஐட்டங்களை மட்டும் ஷ்யூரா ஷ்யூரான்னு என்னையே நான் கேட்டுண்டு மைண்ட் வாய்ஸ் கதறக் கதற எடுத்துண்டு பில்லிங்கை நோக்கி நடந்தேன்.

திருப்பதி தேவஸ்தானத்துல ஸ்வாமியை பார்க்க நிலைப்படி கிட்டக்க ரெண்டு மூணு க்யூவை ஒண்ணா விடுவாங்களே, அப்படி ஒரு கூட்டம் அலைமோதுது. அப்போத்தான் புரிஞ்சுண்டேன், அது தான் பில்லிங்காமா. மணி ஒன்பது. சத்தியமா கடையெல்லாம் சாத்த மிடியாது. எனக்கோ நடந்து நடந்து ஓய்ஞ்சு போச்சு. இனி நம்மாலாகாது சாமி! இன்னைக்கு லீவு. அது தான் காட்டுக்கூட்டம். பேசாம நாளைக்கி வந்து வாங்கிக்கலாம்ன்னு எல்லாத்தையும் வைச்சுட்டு ஓடியாந்துட்டேன்.

நாளைக்கா? அது எந்நாளைக்கோ, தெரியாது.. ஏதோ அல்ப்ப சந்தோஷம்.

கடையை விட்டு வெளீல வரும்போது யதேச்சையா என் கண்ல பட்ட வாசகம் : பிக் சேவிங்ஸ் டே

😉😉😉😉

மை மைண்ட் வாய்ஸ் இஸ் வெறி வெறி ஹேப்பி மச்சி!
🤩🤩🤩🤩🤩

Saturday, September 15, 2018

September days 2

வழக்கமாக எப்போதாவது அழைத்துப் போக வரும் cab டிரைவர்கள் நினைவில் இருப்பதில்லை. அதிகாலை நான்கு மணிக்கே ஃபோன் செய்து ஐந்து மணிக்கு வருவதாக சொல்லி, ஐந்தரைக்கோ ஐந்து நாற்பதுக்கோ வருவார்கள். நாம் கிளம்பி செருப்பெல்லாம் போட்டுக்கொண்டு கீழே காத்துக்கொண்டிருப்போம். சிலர் ஐந்து இருபது என்றுவிட்டு ஐந்து மணிக்கே ஐந்து பேர்களை அழைத்துக்கொண்டு வந்து காத்திருப்பார்கள். நாம் அப்போது தான் இந்த குர்த்தாவின் பேண்ட் எங்கே தொலைந்தது என்று தேடிக்கொண்டிருப்போம்.    அதே மிஸ்டு கால், அதே மத்திய கைலாஷில் திரும்பும் ரோலர் கோஸ்டர் வேகம். யார் என்னவென்று பெரிதாக ஒன்றும் நினைவிருக்காது அவர்களை.

இன்றும் அப்படித்தான். தினேஷ் என்று ட்ரூகாலர் சொல்லியது. சுமார் 24 வயதிருக்கலாம். கண்ட்ரோல்டு ட்ரைவிங் திறன். எவ்வளவு வேகமெடுத்தாலும் சரேலென்று அதிக ஜெர்க்கில்லாமல் பயணிகளையும் துன்புறுத்தாமல் நிறுத்திவிடுவார். தேவைக்கதிகமாக ஒரு வார்த்தை பேச்சு கிடையாது.

தி நகர் உஸ்மான் ரோடு சர்வீஸ் லேனில் நகைக்கடைகள் வழியாக போய் டெர்மினஸ் பின்னால் ஒரு பெண்ணை ஏற்றிக்கொள்ள வேண்டும்.

ஈரத்தலையை க்ளிப் போட்டுக்கொண்டு, பைக்குள் இயர் ஃபோனை தேடிக்கொண்டே வெளியில் பார்த்தேன்.

 இந்த சர்வீஸ் லேன் இருக்கிறதே.. மகா தொந்திரவு. பிக்கப்புகளும், வண்டிகளும், ஆட்டோக்களும் ஆக்கிரமித்துக்கொண்டு அடுத்தவர்களை கஷ்டப்படுத்துவதில் படு திறமை.  இது போறாதென்று பொதுமக்களும் இஷ்டத்துக்கு நடப்பார்கள். இரு சக்கர நாற்சக்கர வண்டிகள் அடுத்தடுத்த சந்துகளின்று சரேல் சரேனென்று திரும்பும். சம்பந்தமேயில்லாமல் கார்கள் நிற்கும். நான் ஓட்டினால் படு கோபமாக ஹார்ன் அடித்துக்கொண்டே தான் மிக அக்ரெஸிவாக போவேன்.

என்ன இது சர்வீஸ் லேனில்  தினேஷ் இவ்வளவு  மெதுவாக ஊர்ந்து செல்கிறாரே என்று பார்த்த போது தான் புரிந்தது.

முன்னால் ஒரு மீன் பாடி வண்டி முழு லோடுடன் ஒருவர் அழுத்த முடியாமல் அழுத்தி சென்று கொண்டிருக்கிறார். தினேஷ் ஹார்ன் அடிக்க கைகளை நகர்த்தி திடீரென்று பின்வாங்கி அமைதி காத்தார். மீன்பாடி மெதுவாக, மிக மெதுவாக சர்வீஸ் லேனிலிருந்து நகர்ந்து மெயின் ரோட்டில் கலந்ததும் சரேலென்று வேகமெடுத்து சில மைக்ரோ நொடிகளில் அடுத்த பாய்ண்ட்டில் நின்றது. ஆச்சர்யபட்டேன்.

கொட்டும் மழையில் கோயம்பேட்டில் சாலையைக் கடக்க நினைத்த அத்தனை பேரும் தொப்பலாக நனைந்திருப்பதை பார்த்தும் சர்ர் சர்ரென்று நிறுத்தாமல் போன வண்டிகளை நினைத்து பார்த்த போது தினேஷ் வித்தியாசமானவராகத்தான் தெரிந்தார்.

சட்டென்று தினேஷ் மேல் மரியாதை அதிகரித்து . நெகிழ்தேன்.

இனி தினேஷை மறக்க மாட்டேன். எல்லோரிடமும் கற்க நிறைய்ய இருக்கிறது. 
Related Posts with Thumbnails