Pages

Thursday, January 28, 2010

கேமராவை மீட்ட சுந்தர மாறன்

மாறன் என் தங்கை கணவர் சேகரின் கார் டிரைவர். ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும்போதும் சேகரிடம் இவரைப்பற்றி புகழாமல் இருந்ததில்லை. சென்னையின் கோரமான டிராஃபிக்கில் லாவகமாக வண்டி ஓட்டுவது மட்டுமல்லாமல் வெளியிடங்களுக்கு போகும்போது என் தங்கையின் ரெண்டு வாலுகளையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பான ஊழியர்.என் மிக மிக முக்கியமான நண்பன் சரத் என் திருமணத்தில் தந்த பரிசுப்பொருள் என் அன்பான கேனன் டிஜிடல் கேமரா. அது லிக்விட் ஸ்பில்லேஜினால் வேலை செய்யாமல் போகவே, தங்கை அதை சரி செய்து தருவதாக கூறி இருந்தாள். இப்போது அந்த கேமராவின் கதை தான் நான் சொல்லப்போவது.ரிப்பேர் செண்டருக்கு எடுத்துகொண்டு போக நேரம் பார்த்துக்கொண்டிருந்த என் தங்கை, அதை அலமாரியின் ஓரத்தில் இந்த அருண் வருண் கையில் கிடைக்காதபடி வைத்திருந்தாள். சில நாட்களில் அது காணவில்லை. அம்மா என்னிடம் தேடி எடுப்பதாக கூறினார். ஏனோ அது கிடைக்கவில்லை. நானும் இந்த விஷயத்தை மறந்துவிட்டேன். இன்று என் தங்கை வாய்ஸ் சாட்டில் உனக்கு ஒரு சஸ்பன்ஸ் திரில்லர் கதை சொல்லப்போறேன் என்ற பீடிகையோடு தான் ஆரம்பித்தாள். வழக்கம்போல இந்த முன்னுரையினால் நான் பதற சிரித்துக்கொண்டே அவள் சொன்ன கதை இது தான்.வீடு பூரா தேடியும் அந்த கேமரா காணவில்லையாம். எங்கே போனது என்று குழம்பியவாறே இவர்கள் இருந்த போது, குழந்தைகளின் பிறந்தநாள் பார்ட்டியின் போது படம் எடுத்த ஃபோட்டோகிராஃபர் (நிஜம்மாவே இந்த இடம் சினிமா மாதிரி தான் இருக்கு!!!!) வந்தாராம். மேடம், சார் நம்பர் தர்றீங்களா என்று கேட்டு வாங்கிக்கொண்டு போனாராம். ஃபோட்டோ எடுத்தாச்சே, சீடீயும் கொடுத்தாச்சு, இன்னும் இவருக்கு சார் நம்பர் எதுக்கு என்று நினைத்திருக்கிறாள் தங்கை. அன்று இரவு சேகர் வந்த போது விஷயம் தெரிந்திருக்கிறது. எவனோ ஒருத்தன் ஒரு கேமராவைக்கொண்டு வந்து நம்ம ஃபோட்டோகிராஃபரிடம் கொடுத்து இருக்கிறான். அதை சரிசெய்யும்படி கேட்டிருக்கிறான். மெமரி கார்டை ஸ்கான் செய்து பார்த்த போது அதில் குழந்தைகள் படமும் மற்ற படங்களும் இருக்க, அவருக்கு என்னமோ சந்தேஹம் வந்திருக்கிறது. அதைக்கூற தான் சேகரின் நம்பர் கேட்டிருக்கிறார். மஹானுபாவன் சேகரிடம் உங்க வீட்டுல எதாவது கேமரா தொலைந்து போயிருக்கிறதா என்று கேட்டிருக்கிறார். ஆச்சிர்யப்பட்டு சேகர் விஷயத்தை அவரிடம் கூற, அவர் தான் தகவல் சொல்லி இருக்கிறார். சேகரும் கேமரா கொண்டு வந்த ஆள் எப்படி இருந்தான் என்று கேட்க, மூக்கில் பெரிய மச்சம் (!!!!) இருந்ததாக கூறி இருக்கிறார். இந்த இடத்தில் தான் டிபிகல் சினிமா டச். ஒருவேளை அந்த ஆளுக்கு மூக்கில் மச்சம் இல்லாமல் போயிருந்தால்? கேமராவுக்கு எள்ளு தான். சரி மேலே போவோம். மூக்கில் மச்சம் என்றவுடன் என் அதிசூட்சும தங்கை சரியாக கண்டுபிடித்து விட்டாள். அது இவர்கள் வீட்டில் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருந்த லதா என்ற பெண்ணின் கணவனாம்!!!அப்போ அவள் தான் காமெரா திருடி இருக்கிறாள். அவர்கள் சொந்தக்காரர்கள் எல்லாரும் பெரும் அரசியல் செல்வாக்கு உடையவர்களாம். அதனால் போலீஸுக்கு போனால் நமக்கு தான் பிரச்சினை வரும். வேண்டாம் என்றிருந்திருக்கிறார்கள். என் தங்கைமட்டும் கொதித்திருக்கிறாள்.மறுநாள் ஏதோ பேச்சுவாக்கில் விஷயத்தை மாறனிடம் சொல்லி இருக்கிறாள். மேடம், இதை நான் ஹாண்டில் பண்ணட்டுமா? என்றிருக்கிறார். இவளும் பெரிய நம்பிக்கை வைக்காமல் சரி என்றாளாம். ஒரு ரவுண்டு எங்கோ போய்விட்டு திரும்பிய மாறனின் கையில் என் கேமரா இருந்ததாம்!!!மாறன் செய்தது இது தான். அந்தப்பெண் வீட்டிற்கு சென்று, சாதாரணமாக பேசி இருக்கிறார். அவளும் என்ன எப்படி இருக்கிறாய் என்றெல்லாம் கேட்க, ”ஒரே பிரச்சினைக்கா. அவுங்க வீட்டுல போலீஸ் காரா வந்துகினு கீது. அவுங்க வீட்டுல ஹிட்டன்(!!!!) காமெரா செட் செஞ்சிருக்காங்க. என்னமோ பொருள் எல்லாம் காணாமபோச்சாம். அதெல்லாம் காமெரால ரெக்கார்டு ஆயிருக்காம்.  போலீஸ் வந்து ஒவ்வொருத்தரையா விசாரிக்கறாங்கக்கா. என்னையும் கேட்டாங்க, நான் உள்ளேயே வர்ல மேடம்ன்னிட்டேன்க்கா. அந்த திருடன் எட்த்த காமெராவ எதோ போட்டோ கடையில கொண்டுபோயிருக்கான் போலகுது, அது கம்பியூட்டர்ல போட்டவொடனே சார்க்கு எஸ்.எம்.எஸ் (!!!!!!) போய்கிது. அந்த எஸ்.எம்.எஸ் வந்த லொக்காலிட்டிய வெச்சு(!!!) , போட்டோ கடையையும் கண்டுபுட்ச்சிட்டாங்களாம்”.இப்படி அவர் சொல்லிக்கொண்டே இருக்கும்போது, திருதிரு என்று விழித்த அந்த பெண் வேகமாக உள்ளே போய், அந்த காமெராவை கொண்டு வந்து மாறனிடம் கொடுத்து, புத்தி கெட்டுபோய் எடுத்துட்டேன்ப்பா, மன்னிச்சுக்கோப்பா என்றாளாம். இது மட்டும் தான் நான் எடுத்தேன், என் புள்ள மேல சத்தியமா வேறேதுவும் எடுக்கலப்பா என்றும் சொன்னாளாம்.இந்த விஷயத்தை என் தங்கை சொன்ன போது என்ன இவள் ஏதாவது கதை எழுதுகிறாளோ என்று தோன்றியது. என்ன தான் சாதாரண டிரைவராக இருந்தாலும் மாறன் டெக்னிகலாக எவ்வளவு அட்வான்ஸ்டு பாருங்கள்? கொஞ்சம் கூட லாஜிக் பிசகாமல் ஒரு கதையைச்சொல்லி அழகாக என் கேமராவை மீட்டு வந்துள்ளார்.(சில இயக்குனர்களும் இருக்காங்களே- நான் செல்வாவை சொல்லவில்லை-அதுக்கும் சண்டக்கு வருவாய்ங்க) மாறன் ஒரு தீரன். நன்றி மாறன் - எனக்கு மிகவும் நெருங்கிய பொருளை மீட்டுக்கொடுத்ததற்கு.

எனக்கோசரம் இல்லாட்டியும் மாறனின் மதிநுட்பத்துக்கு தமிலிஷில் வோட்டு போடவும்.

13 comments:

Priya said...

Anansss - என்னால இன்னும் நம்ப முடியல , இது நிசமா நடந்த கதை என்று ... Very Interesting... and Maaran is very smart.. Nice catch .. அதீத கற்பனை உடன் யாரோ எழுதிய கதை மாதிரி இருக்கு ... You should give Maaran a big treat for bringing your camera back... உன் கேமரா lucky மட்டும் இல்லை ஸ்மார்ட் 'உம்ம கூட .. குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் அந்த பெண்ணின் உண்மையான முகத்தை படம் பிடித்து காட்டி விட்டது

pudugaithendral said...

சமயோசிதமான புத்தியுள்ளவர் போல,

பாராட்டுக்கள் அவருக்கு

Ananya Mahadevan said...

நன்றி தென்றல், அவர் நிறைய தமிழ் போப்பர் படிப்பார்.அதான் ஜுவி மாதிரி ஒரு கதைய சட்டுன்னு டெவெலப் பண்ணி சொல்லி இருக்கார்.:)

Ananya Mahadevan said...

நன்றி பிரியா,
ஆமாம், என் கேமரா அதிர்ஷ்டக்கேமரா தான். பாவம் என் நண்பன் அதீத பணக்கஷ்டத்தில் இருந்த போது எனக்கு வாங்கிக்கொடுத்தது. அதனால்தானோ என்னமோ அது என்னிடம் நிலைக்கிறது. இந்த ரிப்பேர் கூட முதல் முறைதான். மிக நல்ல கேமரா.
///குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் அந்த பெண்ணின் உண்மையான முகத்தை படம் பிடித்து காட்டி விட்டது// எப்படி பிரியா இப்படி எல்லாம்? கலக்குறே? :)

அண்ணாமலையான் said...

அந்த நல்ல மனிதருக்கு நல்ல மரியாதை கொடுங்கள்....

Ananya Mahadevan said...

கண்டிப்பா, பின்னூட்டத்திற்கு நன்றி அண்ணாமலையான்.

துபாய் ராஜா said...

மாறன் 'மதி' மாறன்.

Ananya Mahadevan said...

ஆமாம் துபாய் ராஜா மதிசூட்சும மாறன் தான். தங்கள் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் நன்றி.

Annamalai Swamy said...

புத்திசாலிதனமாக கேமராவை மீட்ட மாறனுக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

மாறன் கிட்டே நான் நிறைய கத்துக்கனும் போல இருக்கு... சாதுரியமும், அலட்டிக்காம காய் நகர்த்தின லாவகமும்... படிப்புக்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் மாறன்..

Sri said...

மிக சுவாரசியமான சம்பவம், நல்ல விவரிப்பு :)

Srini

Ananya Mahadevan said...

நன்றி ஸ்ரீ, வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

settaikkaran said...

மாறன் இதுக்கு முன்னாடி விஜயகாந்த் கிட்டே இருந்தாரா? இவருக்கு ஷெர்லக் ஹோம்ஸ் விருது கொடுங்க!

Related Posts with Thumbnails