இந்த வார இறுதி ரொம்ப நாள் கழித்து துபாய் செல்ல நேர்ந்தது. சனியன்று மத்தியானம் ஜெயாக்கா சாப்பிட அழைத்திருந்தார். ஜெயாக்கா சமீபமாகத்தான் வீடு மாற்றி இருக்கிறார். இவரும் அத்திம்பேரிடம் இடம் விசாரித்துக்கொண்டு, ஷார்ஜா போஸ்டாபீஸ் பக்கத்தில் இருந்த சந்தில் திரும்பி கார் பார்க்கிவிட்டு பில்டிங் தேடி போனோம்.
இதாத்தான் இருக்கும்ன்னு இவர் சொன்ன ஒரு பில்டிங்ல சுமார் 15 பேர் போகக்கூடிய பெரிய லிஃப்ட். லிஃப்ட் பட்டனை அமிழ்த்திவிட்டு காத்திருந்தோம். கதவு திறந்ததும் ஒரு ஆள் அவசரமாக வெளியே ஓடினார். பெரிய லிஃப்டாச்சே, கதவுக்கு சைடில் ஆள் நிற்கும் அளவுக்கு இடம் இருந்திருக்கிறது. வெளியில் தெரியவில்லை. இவர் வேகமாக லிஃப்டுக்குள் நுழைய, கதவருகே நின்றுகொண்டிருந்த ஒரு (இளம்)பெண் வெளியே வரமுயல, ரெண்டு பேரும் தமிழ் சினிமாவுல வர்ற மாதிரி ஒரு டிங்கு!!! இதைச்சற்றும் எதிர்ப்பார்த்திராத என் கண்வர், மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்டார். அந்தப்பெண் நம்மூர் மாதிரி தான் தெரிந்தது, சற்றே அவமானத்துடன் ஓடிவிட்டாள்.
இவர், லிஃப்டுக்குள் புகுந்து வழிந்துகொண்டு இருந்தார். நான் முறைத்தேன் என்று சொல்லித்தெரியவேண்டாமே. கெக்கே பிக்கே என்று சிரித்துக்கொண்டே, இனி, 1 வாரம் அவள் தூங்கவே மாட்டா, என்னையே நெனைச்சுண்டு இருப்பா என்றாரேப்பார்க்கலாம்! G யிலிருந்து 7வது மாடி போவதற்குள் லிஃப்டிற்குள் டிஷ்,டிப்ஷ்,டுக்ஷ் என்று ஒரெ சத்தம் தான். 7வது மாடியில் வெளியே வந்த போது இவர் தலைக்கு மேலெ கார்ட்டூன் மாதிரி ஒரே நட்சத்திரங்கள். அங்கங்கே முகத்தில் கருப்பு காயங்கள். சரி, ஆச்சு, ஜொள்ளியாச்சு, மறந்து இருக்கலாம் இல்லையா?
சாயந்திரம் கோபாலண்ணா வீட்டில் பூரி பண்ணிக்கொண்டு இருந்தேன். சமயலறையில் வந்து, ஹிக், ஹிக் ஹிக்ன்னு ஒரே விக்கல். அச்சிச்சோ, என்ன இவ்ளோ விக்கல், தண்ணி எடுத்துக்கோங்கோன்னு டம்ளர் எடுக்கப்போன போது, என்னமோ தெரீலம்மா, ஆரோ என்னையே நினைச்சுண்டு இருக்கான்னு ஒரு திருட்டு முழி.. புரீல?அதான் அந்த லிஃப்டு பொண்ணு, இவரையே நினைச்சு நினைச்சு உருகறாளாம், அதான் விக்கலாம்..
இப்போது மீண்டும் சமயலறையில் டிஷ், டுப்ஷ், டஷ்,
சத்தங்கள் கேட்டன. கொஞ்சம் விட்டா பிஷ்க்யூன்,டும்க்யூல், டுமீல்,சரக், சதக்ன்னெல்லாம் சத்தம் கேட்டிருக்கும்!!!