Pages

Sunday, November 22, 2009

துபாய் அல் கூசில் அய்யப்ப இலட்சார்ச்சனை



துபாய் அல் கூசில் அய்யப்ப இலட்சார்ச்சனை

இன்று விடிகாலை ஐந்து மணிக்கே எழுந்து நாங்கள் துபாயில் அய்யப்ப லட்சார்ச்சனைக்கு புறப்பட்டு விட்டோம். சுமார் ஆறு மணிநேரம், அர்ச்சனையும் வேதங்களும் ஓதி, பாடல்கள் பாடி முடித்தார்கள். மிக சிறப்பாக இருந்தது. ஐயப்பனின் ஆயிரம் நாமங்கள் கூறி அர்ச்சனை செய்தார்கள். கூட்டம் அலைமோதியது. சிற்றுண்டி, தேநீர், பிஸ்கட்டுகள், மதிய உணவு எல்லாம் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். இவை எல்லாவற்றிற்கும் அடித்தளமாக பணியாற்றியது திரு பிரகாஷ் என்ற தனி மனிதரும் அவர் ஆரம்பித்த 'for B' என்ற அமைப்பு தான் காரணம் என்று தெரியவருகிறது. அவரும் அவருடைய குழுவும் மிகவும் பாடுபட்டு உழைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது.அவர்கள் உழைப்பும் கூட்டு முயற்சியும் நிகழ்ச்சி முழுவதும் பளிச்சிட்டது.

ஜெ எஸ் எஸ் என்ற பள்ளியில் அல் கூஸ் துபாயில் இது நடந்தேறியது. வழக்கம் போல பட்டு பாவாடை சரசரக்கும் பெண் குழந்தைகள்,குட்டியாக அவரவர் சைஸ் இல் ஜிப்பா வேஷ்டி அணிந்த சிறுவர்கள், ஒரு புறம் பட்டு புடவை அணிந்த பெருமை மிகு பெண்கள் என்றால் மறுபுறம், தன நகைகளைக்காட்டி சதா சர்வகாலமும் பீற்றிக்கொள்ளும் பெண்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஐயப்பனையே தியானம் செய்யும் வயோதிகர்கள், எப்போதும் அலுவலகத்தை மட்டும் பற்றி பேசும் ஆண்களும் இதில் அடக்கம்.


ஐயப்பனின் ஆயிரம் நாமங்களை நூறு பேர் சொல்லுவது தான் இலட்சார்ச்சனை - இந்த நிகழ்ச்சி சுமார் பத்து மணிக்கு ஆரம்பம் ஆகியது. காலை ஐந்து மணிக்கு எழுந்த எனக்கு கண்ணை சுழற்றி விட்டது. நல்லவேளை என்னிடம் அந்த நாமங்களின் லிஸ்ட் இருந்தது. பிழைத்தேன். என்னை போலவே நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வந்திருந்த மாமி பாவம் நாமங்கள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே. தூக்கம் சொக்கி உறங்கி விட்டிருந்தார். அவர் கஷ்டகாலம் என் உறவினர் ஒருவர் பார்த்து அதை எனக்கு சுட்டி காட்டி, எனக்கு பயங்கர distraction. நிறைய பெண்கள் இது போல தான். கடவுளின் நாமத்தை சொல்லும்போது கூட இங்கே அங்கே மனதை அலைபாய விட்டு விடுகிறார்கள். ஒரு இரண்டு நிமிடம் நிம்மதியாக கடவுளை நினைத்திருப்பார்களா என்று எனக்கு சந்தேகம் தான். நான் உட்கார்ந்திருந்த இடத்தில் நிறைய பெண்கள் சள சள என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். இதில் ஒரு மாமி," என்ன அனன்யா பேசவே மாட்டேங்கற என்று என்னிடம் மிகவும் குறைப்பட்டு கொண்டு இருந்தார்". எல்லாம் என் நேரம் தான்.நறநற




இங்கே ஒரு interesting  டான்ஸ் வாத்தியார் இருக்கிறார். இருந்தா என்ன னு கேக்கறீங்களா? இவர் நன்கு டான்ஸ் ஆடத்தெரிந்த ஒரு வைதீக குருக்கள். நமக்கு அவர்கள் குழு சொல்லும் மந்திரங்கள், பாடல்கள், வேற்றுமொழி சொற்கள் எல்லாம் புரியவில்லை என்றால்  இந்த டான்ஸ் வாத்தியாரை பார்த்தல் மட்டும் போதுமானது. அவருடைய கைகளும், கண்களும், தோள்களும், பற்பல அபிநயங்கள் பிடித்து காட்டி நமக்கு புரியாதவற்றை எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக சொல்லி புரிய வைத்து விடும்.(பார்க்க படம்.)உடனுக்குடன் படங்கள் தந்துதவிய கோபால் அண்ணாவிற்கு நன்றிகள் பல.


பலரையும் பார்த்து பேசுவதால் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி எதை எடுப்பது எதை விடுப்பது range இல் நமக்கு யாரிடம் பேசினோம் பேசவில்லை என்று நினைவு இருக்காது. இவருக்கு ஊரெல்லாம் நண்பர்கள். அதிலும் இவர் சொந்த ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் இங்கே தான் இருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவிற்கு இவரைதெரிந்தவர்கள் இவரை நோக்கிஅலை மோதுவார்கள். நான்கு வருடங்கள் ஆனாலும் இன்னும் எனக்கு பலரை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். பாதி பேர் முகம் மறந்து விடும், மீதி நினைவிருக்கும், ஆனால் பாருங்கள், யார் இவர்?எங்கே பார்த்தோம் போன்ற இன்ன பிற கேள்விகளுக்கிடையில் சிக்கிக்கொண்டு, அவர் பெயர் தெரியாமல் விழிப்பேன். கஷ்டகாலம். அவர்கள் மட்டும் " என்னை தெரியறதா அனன்யா? சுதா ஆத்து பகவத்சேவைக்கு வந்திருந்தேனே "என்று தெளிவாக குழப்புவார்கள் மன்னிக்கவும் விளக்குவார்கள். நானும் பாலசந்தர் பட ஹீரோயின் போல "ஆங், என்று உரக்க கூறிவிட்டு  மண்டையை முதலில் மேலும் கீழும் ஆட்டிவிட்டு பிறகு பக்கவாட்டில் ஆட்டுவேன் இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை. ஓரளவிற்கு மனிதர்களை அடையாளம் தெரிந்து கொண்டிருந்தேன்

மேலார்கோடு வைத்தி அண்ணா மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பாகவதாள்.அவர் பாட ஆரம்பித்தால் அரங்கமே பக்தி பரவசத்தில் மூழ்குமாம். இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான். யாருமே எதிர்பாராத ஒரு தருணத்தில் காலமாகிவிட்டார். அவருடைய இரண்டு சிறிய பெண்களும் அசாதாரணமாக பாடி அசத்தி விட்டனர்.சிறிய குழந்தைகள் தான் என்றாலும் குரலில் நல்ல வளம். பெரிய பெண்ணின் மைக் வாய் அருகில் வைக்கப்பட்டதால் அவள் குரல் தான் அரங்கமெங்கும் எதிரொலித்தது. சற்றே ஒலி குறைந்தாலும் சிறிய பெண்ணின் குரலில் அந்த supporting vocals  எல்லாம் ஹப்பப்பா... amazing!

இந்த குழந்தைகள் பாடிக்கொண்டிருக்கும்போது ஐயப்பனின் கதையை நினைவுபடுத்தும் ஒரு பாடல் பாடப்பட்டது. பக்கத்திலேயே அரங்கில் ஒரு ஸ்கிட் ஏற்பாடு பண்ணி இருந்தார்கள். ஐயப்பனாக நடித்த சிறுவன் ஜம்மென்று புலிவேடமிட்ட ஒரு ஆளின் மேல் ஏறி  வந்து அசத்தினான்.ஐயப்பனை போல உட்கார முடியாமல் அந்த குழந்தையை ஒரு chair ரில் அமர வைத்திருந்தார்கள். ரொம்ப நேரம் போராடிய பிறகு நல்லவேளையாக பாடல் முடிவு பெற்றது. குழந்தை நாற்காலியிலிருந்து ஒரு வழியாக இறங்கினான் 

பூஜை அரங்கில் உள்ளே நுழைந்ததும் சுற்றி பார்த்தபொழுது, ஓவியங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழே ஓவியம் வரைந்தவர்களின் பெயர் போட்டு இருந்தார்கள். எங்கள் உறவுக்கார சிறுமி கிருபா ஜெயராம் கூட மிகச்சிறப்பாக சில படைப்புகளை வரைந்திருந்தாள். பார்ப்பதற்கே எனக்கு மிகப்பெருமையாக  இருந்தது. வித்யா பிரசாத் என்ற பெண் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் வரைந்த ஓவியங்களைப்போய் பார்க்குமாறு கூறினார். வரிசையாக வித விதமான ஓவியங்களை பார்த்த பொழுது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்களே அது போல அப்பெண்ணின் திறமை பளிச்சிட்டது. மகேஷ் போன்ற கலைஞர்களை நினைத்துக்கொண்டே எல்லா வகையான ஓவியங்களை பார்த்து ரசித்தேன். கலம்காரி, மதுபனி,ராஜஸ்தானி, தங்க(THANGKA), தாந்த்றிக்(Tantric), தஞ்சாவூர்,பதிக்,வரளி, இன்னும் என்னென்னமோ விதமான படங்களை வரைந்து தள்ளி இருக்கிறார் .இவர் துபாய் ஜுமேயிராவில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் வரைகலை  கற்றுத்தருகிராராம். துபாயில் வசிக்கும் வரைகலை ஆர்வலர்கள் vidyaprasad2@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். இவரைப்போன்ற கலைஞர்களை என் வலைதளத்தில் அறிமுகப்படுத்துவது எனக்கு பெருமை தான்.

4 comments:

Unknown said...

அக்கா... உன்னோட கம்ப்யூட்டரில் மீண்டும் NHM போட்டிட்டே போல... மீண்டும் உன்னோட தமிழ் பதிவுகளை படிப்பது சந்தோஷம்.. இந்த வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு - சென்னை தக்‌ஷிணசித்ராவில் கேரளா murals வகுப்புகளுக்கு போயிருந்தேன். ஆசிரியர் - மதுபானி க்ளாஸ் எடுத்த அதே வாசுகி மேடம், அதனால் பயங்கர comfort level... அவங்க ‘தாங்கா’ என்னும் திபெத்திய murals பத்தி சொன்னாங்க.. நான் பெங்களூருக்கு மாறுவதற்கு முன்பு வந்து ‘தாங்கா’வையும் முடிச்சிட்டு போகனும்னு சொல்லி இருக்காங்க... உன்னோட பதிவை படிச்சா மகேஷ், தாங்கா என இரண்டுமே ஒன்றாக வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது!!!

Ananya Mahadevan said...

நன்றி மகேஷ், இன்னும் NHM Writer போடவில்லை.திருமதி வித்யாவிடம் பேசுகையில் நீ மட்டும் இங்கே துபாயில் இருந்திருந்தால் அவரது வகுப்பில் சேர்ந்து பயனடைந்திருப்பாய் என்று கூறினேன்.

Unknown said...

Ananya.. give me ur email id- mittu

Ananya Mahadevan said...

ananya.mahadevan@gmail.com

Related Posts with Thumbnails